என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.15 கோடிசெலவில் நடைபெற்று வரும் புரனமைப்பு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் மாமல்லபுரம் பஸ் நிலையம், கடற்கரை சாலை மற்றும் கடலோர பகுதிகளை பார்வையிட்டு தொடங்க இருக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உணவுத்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பல இடங்களில் அடாவடியாக வாகனங்களை நிறுத்தி வசூலிப்பதாக புகார் எழுந்து உள்ளது. நுழைவு கட்டணம் வசூலிப்பதில் அடாவடி நடந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.

    • "தமிழர் எழுச்சி நாள்" எனும் தலைப்பில் நடைபெறுகிறது.
    • பூவன் பிரதாப், வீரத்தமிழர் வேதநாயகம் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி சார்பில் சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பம்மல் எல்.சி.திருமண மண்டபத்தில் நாளை (26-ந் தேதி) காலை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா "தமிழர் எழுச்சி நாள்" எனும் தலைப்பில் நடை பெறுகிறது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விழாவில் பங்கேற்று பேசுகிறார்.

    மண்டல செயலாளர் ஈரா.மகேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இனியன் ஜான், மாவட்டச் செயலாளர்நாகநாதன், மாவட்டத் தலைவர் மகேந்திரவர்மன், பொருளாளர் மாரிமுத்து, ஆறுமுகம், சந்திரபோஸ், முரளி, பல்லாவரம் சட்ட மன்றத் தொகுதிச் செயலாளர் கோபி.தேவா, தென்றல் அரசு, அனகை இரா.பாலாஜி, கரு.அருண்குமார், ஆ.சிராஜ், செல்வகணபதி, ராஜேஷ், ராம.செல்வம், மார்க் ஆல்பர்ட், ப.மகேந்திரன். பம்மல் பகுதிச் செய லாளர் ரவி, சார்லஸ், வெற்றிவேல், பிரவீன், பிரபு, தயாளன், அறிவுமதி, பாஸ்கர், திருநீர்மலை ரமேஷ். அனகாபுத்தூர் பகுதித் தலைவர் செல்வம், ராஜா, பொன்ராஜ், மகளிர் அணி நேசமணிஅம்மாள், சரளா, இளைஞர் அணி ராம்குமார், ராஜா விநாயக், பூவன் பிரதாப், வீரத்தமிழர் வேதநாயகம் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    தாம்பரம், ஆலந்தூர் மதுரவாயல், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களும் பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றகிறார்கள்.

    காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

    • கூடுதல் விலைக்கு மது விற்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், சிலர் மொத்தமாக டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 53), இ.சி.ஆர் மணிகண்டன் (24) ஆகிய இருவரும் கூடுதல் விலைக்கு மது விற்றபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புயல், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிபெருக்கி அனைத்தும் தயாராக பயன்படுத்தும் நிலையில் இயங்கி வருகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட புயல் எச்சரிக்கை பிரகடன ஒலிப்பான் கருவிகள் பயன்பாட்டில் தயாராக இருக்கிறதா? அதில் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் உள்ளதா என அந்தந்த பகுதி தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழகத்தில் இன்றும், நாளையும் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
    • ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் (26-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ஒருநாள் தாமதமாக 27-ந்தேதி உருவாகிறது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 29-ந்தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    • கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக சதீஷ்வர்மா வேலை பார்த்தார்.
    • அணுபுரம் பகுதியில் உள்ள கடைக்கு வந்தபோது திடீரென சதீஷ்வர்மா இறந்தார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த அணுபுரம் பகுதியில் அணுசக்திதுறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வந்தவர் சதீஷ்வர்மா (வயது41). இவர் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்தார். அணுபுரம் பகுதியில் உள்ள கடைக்கு வந்தபோது திடீரென சதீஷ்வர்மா இறந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மத்திய சுகாதார செயலாளர் கதன்ஷ் பந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநர் பரணிதரன் கலந்து கொண்டனர்.

    நந்திவரம் கூடுவாஞ்சேரியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பெருவிழா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார். மத்திய சுகாதார செயலாளர் கதன்ஷ் பந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீடு அட்டை, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்ட பயனாளிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம், கண்ணொளி காப்போம் திட்ட பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகள், ரத்த தானம் முகாமில் ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை மத்திய சுகாதார செயலாளர் சுதன்ஷ் பந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கூடுதல் இயக்குநர் சேகர், செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநர் பரணிதரன் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ஏராளமான குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ஏராளமான குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    விசாரணையில் சித்தாமூரில் மளிகை கடை நடத்தி வரும் வசந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மகன் மோகன் ஆகியோர் அங்குள்ள வீட்டில் புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சீனிவாசன், மோகன் ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    வண்டலூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் குட்கா பதுக்கி விற்ற கேரளாவை சேர்ந்த முகமது உசேனை ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெருமாட்டுநல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் (47) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    • கடந்த 2020-ம் ஆண்டு தொழிலாளி 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார்.
    • வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    செங்கல்பட்டு:

    உத்திரமேரூர் அருகே உள்ள ஒழுகரை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது58). தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அப்போது குற்றவாளி குணசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • அதிகாலை அஸ்வின் எழுந்தபோது வீடு முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
    • அஸ்வினும், அல்லியும் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சேலையூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் அல்லி(60). இவர் நேற்று இரவு தனது பேரன் அஸ்வினுடன் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை அஸ்வின் எழுந்தபோது வீடு முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. மேலும் சமையல் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் பற்றி எரிந்தன. இதையடுத்து அஸ்வினும், அல்லியும் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    வீட்டில் தீப்பற்றியதும் அல்லியும், அவரது பேரன் அஸ்வினும் வெளியே வந்ததால் உயிர் தப்பினர். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.
    • கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் வெல்கம் ஓட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் ராமு ஜிஜேந்திரன் (ஜி ஜி), தனது தொழில் முதலீட்டாளர் ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். நிகழ்ச்சியில் எம். எல். ஏ.க்கள்

    வரலட்சுமி மதுசூதனன், மு.பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங் மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், உதவி இயக்குனர் கார்த்திக், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மாவட்ட பிரதிநிதி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
    • ராட்சத அலையில் சிக்கி மீனவர் நரேந்தர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சின்ன குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் நரேந்தர் (வயது 21). மீனவர். இவர் உறவினர்களான நரேஷ், சுரேந்தர் ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார்.

    கடந்த சில நாட்களாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கடலில் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ராட்சத அலையில் சிக்கி மீனவர் நரேந்தர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. இதில் நரேந்தரின் தலையில் படகின் என்ஜின் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடன் இருந்தவர்கள் மீண்டும் படகை இயக்கி உயிருக்கு போராடிய நரேந்தரை மீட்டு கரைக்கு வந்தனர். பின்னர் நரேந்தரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×