என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மதுராந்தகம் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மதுராந்தகம் அடுத்த தேவாதூர் கிராமம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் சேகர் வீட்டில் உள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இவருக்கு விஜயா என்ற மனைவியும் சாமிளா, சீலா என்ற மகள்களும், மணிபாரதி என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கல்பாக்கம்:

    கல்பாக்கத்தை அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 30) ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் வடபட்டினம் கிராமத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் - மதுராந்தகம் சாலையில் பவுஞ்சூர் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அந்த ஆட்டோவில் ஆக்கிணாம்பட்டு கிராமம் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தணிகைவேல் (33), ஏழுமலை (35), பிரகாஷ் (28), பிளஸ்- 2 மாணவி ராஜலட்சுமி (16) மற்றும் பவுஞ்சூர் கிராமத்தை சேர்ந்த திலக் சாம்ராஜ் (32) ஆகியோர் பயணம் செய்தனர். தட்டாம்பட்டு கிராமத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து சென்ற போது எதிரே வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

    இதில் ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆட்டோ டிரைவர் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

    லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தணிகைவேல் உயிரிழந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை நெல்வாய்பாளையம் சந்திப்பில் சாலையில் குறுக்கே மரக்கட்டைகளை போட்டும் சாலையில் அமர்ந்தும் திடீர் மறிலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவலறிந்த மதுராந்தகம் ஆர்.டி.ஓ. லட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு் மகேந்திரன், செய்யூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் தாசில்தார் உள்பட அதிகாரிகள் விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இந்த பகுதியில் 4 கல்குவாரிகள் உள்ளன. இவற்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை மூட வேண்டும் என்று தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் கடையடைப்பும் நடந்தது.
    பரனூரில் சூறையாடப்பட்ட சுங்கச்சாவடியில் ஒரு மாதமாக வாகனங்கள் இலவச பயணம் செய்த நிலையில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த ஜனவரி 25-ந் தேதி இரவு அரசு பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது அங்கு காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகளும், பஸ் டிரைவர், கண்டக்டருக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

    இந்த மோதலில் சுங்கச்சாவடியில் இருந்த 12 பூத்துகளும் உடைத்து சூறையாடப்பட்டது. அங்கிருந்த பொருட்கள், கம்ப்யூட்டர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தன.

    இது தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது அங்கிருந்த ரூ18 லட்சம் மாயமானதாகவும் கூறப்பட்டது. பின்னர் அந்த பணம் மீட்கப்பட்டது.

    தாக்குதல் நடந்த போது சுங்கச்சாவடி ஊழியர்கள் பணத்தை எடுத்து சென்றது அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சுங்கச்சாவடி முழுவதும் சேதம் அடைந்ததால் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து இலவசமாக வாகனங்கள் சென்று வருகின்றன. இன்று 30-வது நாளாக வாகனங்கள் கட்டணமின்றி சென்றன.

    சுங்கச் சாவடியை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்துகளாக சரி செய்து கேபிள்களை பதித்து வருகிறார்கள். சுங்கச்சாவடி முழுமையாக பயன்பாட்டிற்கு வர இன்று 20 நாட்களுக்கு மேலாகும் என்று தெரிகிறது.
    கேளம்பாக்கம் அருகே கொசுவர்த்தி தீயால் இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் அருகே உள்ள பனங்காட்டுபாக்கம், எம்.ஜி.ஆர். நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் இளங்கோ. இவரது மனைவி சாந்தி (வயது 27). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு சாந்தி கொசு வர்த்தி சுருளை ஏற்றி வைத்துவிட்டு தூங்கினார். அப்போது அவரது சேலையில் கொசுவர்த்தி சுருளின் தீ பட்டது. இதில் புடவையில் தீ பற்றியது. உடல் கருகிய சாந்தி அலறி துடித்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளங்கோ மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் 2 பேரும் உடல் கருகினர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். சம்பவ இடத்திலேயே சாந்தி பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இளங்கோ செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி விரிவு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் கோபித்துக் கொண்ட அவரது மனைவி திருக்கழுக்குன்றம் அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன விரக்தியில் இருந்த ரமேஷ் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு பஜார் வீதியில் ஒரே நாளில் 7 கடைகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நெல்லு மண்டி அருகே உள்ள பஜார் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன.

    நேற்று இரவு இங்கு உள்ள கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்தனர்.

    அப்போது 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது.

    பூட்டுகள் உடைக்கப்பட்ட கடைகளில் ஒன்றில் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். மற்ற கடைகளில் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். ஒரே நாள் இரவில் நடந்த இந்த கொள்ளை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாவலூர் அருகே 5-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அப்பாத்துரை. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகள் ஊர்மிளா (23). சாட்வேர் என்ஜினீயர்.

    நாவலூரில் இருக்கும் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் ஊர்மிளாவுக்கு வேலை கிடைத்தது. சோழிங்கநல்லூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி இருந்து அவர் வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மதியம் ஊர்மிளா அவரது கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு போன் வந்தது. அதில் வந்த தகவலை கேட்டு பதட்டம் அடைந்தார்.

    இருக்கையில் இருந்து எழுந்த ஊர்மிளா கம்பெனியின் 5-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து திடீரென கீழே குதித்தார்.

    படுகாயம் அடைந்த ஊர்மிளா, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாழம்பூர் போலீசார் அங்கு சென்று பெண் என்ஜினீயர் ஊர்மிளா உடலை செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் ஊர்மிளாவுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. மாப்பிள்ளை பிடிக்கவில்லையா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    மாமல்லபுரம் அருகே பைக்கில் வந்தவரிடம் பெட்ரோல் கேட்டு தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரம்:

    கானாத்தூரை சேர்ந்தவர் தனசேகரன், சமையல் காண்டிராக்டர். நேற்று மாலை அவர் கூவத்தூர் அடுத்த கோட்டைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் தள்ளிக்கொண்டு வந்த 2 வாலிபர்கள் தனசேகரனை நிறுத்தினர்.

    அவர்கள் தனசேகரனிடம் ‘நாங்கள் வந்த பைக் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. வண்டியில் உள்ள பெட்ரோலை கொடுக்க வேண்டும் அல்லது பங்க் எங்கே உள்ளது என்று உடன் வந்து காட்ட வேண்டும்’ என்று மிரட்டும் வகையில் கூறினர்.

    இதனால் தனசேகரனுக்கும் வாலிபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    உடனே 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும் ஆத்திரம் அடங்காத தனசேகரன் அந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தன சேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தினேஷ், சூர்யா என்பது தெரிந்தது.

    தினேஷ் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். எரிக்கப்பட்டது அவரது மோட்டார் சைக்கிள் ஆகும்.

    இதுபற்றி இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்தனர். போலீசார் கல்லூரி மாணவர் தினேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    செங்கல்பட்டு மாவட்ட வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் வருகிற 15-ந் தேதி காலை 10 மணி அளவில் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 நகராட்சி வார்டுகள், 12 பேரூராட்சி வார்டுகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றி வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் வரைவு மறுவரையறை விவரங்கள் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது.

    இதன் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கடந்த 8-ந்தேதி வரை மனுக்கள்பெறப்பட்டது. இக்கருத்துகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்பு கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில் வருகிற 15-ந் தேதி காலை 10 மணி அளவில் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
    சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் காந்திநகர், துர்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 46). இவருடைய மனைவி பாத்திமா (42). இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். இவருடைய மகள் சுகன்யா (19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்த வேளாங்கண்ணி தன்னுடைய மகள் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை-ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுகன்யாவின் பெற்றோர் செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்துள்ளனர். அந்த புகாரில் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. சுகன்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், வருகிற ஞாயிற்றுக்கிழமை மாப்பிள்ளை முடிவு செய்ய இருந்ததாகவும் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழத்தில் நேற்று முன்தினம் மாலை எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.

    பட்டாக்கத்தி, துப்பாக்கியுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாரிகார்த்திக், ஆதித்யன், மவுலானா அலி, ராகேஷ், விஷ்ணு, லலித்பிராத், ராஜீ உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே மோதலின்போது மாணவர் ஒருவர் வைத்திருந்தது. கைத்துப்பாக்கி அல்ல அது ‘சிகரெட் லைட்டர்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஆலந்தூர் அருகே ஏ.சி போடாத தகராறில் கால் டாக்சி டிரைவரை தாக்கியதாக வக்கீல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பரங்கிமலை துளசிங்கபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 31). தனியார் கால் டாக்சி டிரைவர். இவர் கடந்த 1-ந் தேதி இரவு கிண்டியில் உள்ள ஓட்டலில் இருந்து தனது காரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு கோவிலம்பாக்கம் நோக்கி சென்றனர்.

    ஆலந்தூர் கோர்ட்டு அருகே வந்தபோது, குடிபோதையில் இருந்த 3 பேரும் காரில் ஏ.சி. போடாததாக கூறி வாக்குவாதத்தில் ஈடு்பட்டனர்.

    அதன் பின்னர், காரை விட்டு கீழே இறங்கி லோகநாதனை 3 பேரும் சேர்ந்து சராமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த ரோந்து போலீசாரைக் கண்டதும் அந்த 3 பேரும் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லோகநாதனுக்கு தலையில் 12 தையல் போடப்பட்டது. இதையடுத்து லோகநாதனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பரங்கிமலை போலீஸ் நிலையத்தை கால் டாக்சி டிரைவர்கள் முற்றுகையிட்டனர். இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கால் டாக்சி டிரைவர் லோகநாதனை தாக்கியதாக செங்கல்பட்டை சேர்ந்த வக்கீலான பிரதீவ்(35), பழவந்தாங்கலை சேர்ந்த ரஞ்சித்(43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருன்றனர்.
    ×