என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    கொரோனா நோய் பரவலை தடுக்க காய்கறி கடைகளை பிரித்து மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளி மைதானங்களில் அமைக்கப்பட்டது.
    தாம்பரம்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனினும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் கூடியதால் கொரோனா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் காய்கறி மார்க்கெட்டை போலீசார் மூடஉத்தரவிட்டனர். இதனால் 2 நாட்களாக மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள் இயங்கவில்லை.

    இதையடுத்து நோய் பரவலை தடுக்க காய்கறி கடைகளை பிரித்து மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளி மைதானங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டது.

    தாம்பரம் காந்தி சாலையில் உள்ள பள்ளி மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளை தாம்பரம் நகராட்சி கமிஷனர் கருப்பையா ராஜா ஆய்வு செய்தார். அப்போது அவர், அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை தாம்பரத்தில் காய்கறி கடைகள் திறந்த வெளியில் பள்ளி மைதானத்தில் செயல்படும் என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக செங்கல்பட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை மீறியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
    செங்கல்பட்டு:

    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும்போது, பிறரிடமிருந்து ஒரு மீட்டர் முதல் 3 மீட்டர் தூரம்வரை தள்ளியிருக்க வேண்டும். 5 பேருக்கு மேல் எந்த பொது இடத்திலும் கூடக்கூடாது எனவும் பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதன் அடிப்படையில் நேற்று காலை முதலே செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவேண்டும் என்று போலீஸ் தரப்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் அவசியமற்ற முறையில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் தடுத்து எச்சரிக்கை செய்ததுடன், கேட்க மறுப்பவர்கள் மீது தடியடி நடத்தி வீட்டுக்கு திருப்பி அனுப்பினர்.

    மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் இருசக்கர வாகனங்களில் வருவோரை தடுத்து நிறுத்திய போலீசார் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.
    லத்தூர் ஒன்றியத்தில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கல்பாக்கம்:

    லத்தூர் ஒன்றியம் தச்சூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி உள்பட போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர்.

    அதன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மறைமலைநகர் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள சின்ன செங்குன்றம் அன்னை மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கேளியப்பன் (வயது 70). இவர் தமிழக அரசு கருவூல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்வராணி (68). இவரது பேரன் ஆகிய 3 பேரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து முகமூடி, கைகளில் கையுறை அணிந்து, உடலில் மேலாடைகள் அணியாமல் திடீரென உள்ளே நுழைந்த 3 கொள்ளையர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த வயதான தம்பதி மற்றும் அவர்களது பேரனை எழுப்பி கத்தியை காட்டி மிரட்டினர்.

    பின்னர் கயிறு மூலம் 3 பேரையும் கட்டி போட்டுவிட்டு, வீட்டின் பூஜை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 17 பவுன் நகை 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் மறைமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் நடந்த சம்பவத்தை பற்றி கேளியப்பனிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் விசாரணை நடத்தினார்.

    இதனையடுத்து காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. மோப்பநாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு முகமூடி கொள்ளையர்களை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    செங்கல்பட்டு புறவழிச்சாலையில் மது போதையில் பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வாசு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் மதுபோதையில் இருப்பது தெரிந்தது.

    விசாரணையில் அவர் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சுரேஷ் என்பதும், பிளம்பராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. மது அருந்திவிட்டு அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து இருந்தார்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதி மன்றம் உத்தர விட்டிருந்தது.

    அதன்படி போதையில் இருந்த சுரேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுரேசை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் அச்சரப்பாக்கம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்த பொதுமக்களையும் அச்சுறுத்தும்படி நடந்து கொண்டனர்.


    இதனால் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (வயது24), திண்டிவனம் தாலுகா வேட்டவலம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி (20), மனோஜ் (22) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் சென்னையில் சிலருடன் சேர்ந்து கொண்டு பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். 
    தாய், மனைவி, 2 குழந்தைகளை கொன்ற ஜவுளி வியாபாரிக்கு தூக்குத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    செங்கல்பட்டு:

    சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் திருவள்ளுவர் நகர் நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 38). இவர், அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் தாய் சரஸ்வதி (62), மனைவி தீபா (36), மகன் ரோஷன் (7), மகள் மீனாட்சி (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    தாமோதரன், பம்மல் ஏழுமலை தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். ரோஷன், மீனாட்சி இருவரும் மீனம்பாக்கம் மற்றும் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முறையே 2-ம் வகுப்பு மற்றும் யு.கே.ஜி., படித்து வந்தனர். தீபா, வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.

    தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதுடன், 5 வங்கிகளில் வீட்டுக் கடன், நகை கடனும் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மைத்துனர் ராஜாவிடம் செல்போனில் பேசிய தாமோதரன் “எனக்கு வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, தன் பெற்றோரை தாமோதரன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அங்கு சென்றபோது, கதவு வெறுமனே சாத்தப்பட்டு இருந்தது. தாமோதரனின் மாமனார் மற்றும் மாமியார் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

    அங்கு மகள் தீபா, பேரன் ரோஷன், பேத்தி மீனாட்சி மற்றும் தாமோதரனின் தாய் சரஸ்வதி ஆகியோர், கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

    தாமோதரனும், கழுத்து மற்றும் கையை அறுத்த நிலையில், சுவரில் சாய்ந்து கிடந்தார். உடனடியாக அவர்கள் 5 பேரும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    டாக்டர்கள் பரிசோதனையில் தீபா, சரஸ்வதி, ரோஷன், மீனாட்சி ஆகியோர் இறந்து போனது தெரியவந்தது. தாமோதரன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிகிச்சைக்கு பிறகு தாமோதரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    தாமோதரன், தனது குடும்பத்தினரை கொலை செய்வதற்கு முன்பு பண மதிப்பிழப்பால் தன் தொழில் பாதித்ததால் கடன் அதிகமானதாக எழுதிய கடிதம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் சீதாலட்சுமி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், நேற்று முன்தினம் தாமோதரன் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்

    இந்த வழக்கில் நேற்று அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி, குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்ததற்காக தாமோதரனை சாகும் வரை தூக்கிலிடவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து தாமோதரன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    நெடுங்குன்றம் கிராமத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை கைவிடக்கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
    செங்கல்பட்டு:

    நெடுங்குன்றம் கிராமத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை கைவிடக்கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வண்டலூர் வட்டம் நெடுங்குன்றம் கிராமம் அசோக் நகர் என்ற மனைப்பிரிவு 1882-ம் ஆண்டு 450 மனை பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டது. பின்னர் பல நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மனைப்பிரிவில் உட்பிரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பல நபர்களிடம் கைமாறி இன்றைய சந்தை விலையாக 2400 சதுர அடி மனையின் விலையானது ரூ.60 லட்சம் வரை விற்பனையாகிறது.

    மேலும் மனைப்பிரிவில் அமைந்துள்ள வீட்டு மனைகள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தி கொண்டு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம். வங்கியின் மூலமாக கடன் பெற்று 20 ஆண்டுகளாக மாதத்தவணை செலுத்தி வருகிறோம்.

    இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எங்களுடைய மனையான 82 மற்றும் 83 மனைகளில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

    மனைப்பிரிவில் 90 மனையின் மீது நேரடியாக உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லுகிறது. இதனை சுற்றியுள்ள மனைப்பிரிவில் 250 மனைகளும் பாதிக்கப்படுகிறது.

    எனவே எங்களுக்கு சொந்தமான அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உயர் மின்அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகளை நிரந்தரமாக கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 
    மாமல்லபுரம் கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் திரண்ட பழங்குடிகளான இருளர் இன மக்கள் குடில்கள் அமைத்து தங்கி குலதெய்வத்தை வணங்கி மகிழ்ந்து கொண்டாடினர்.
    மாமல்லபுரம்:

    மாசி மாதத்தில் வரும் மாசிமகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பழங்குடி இருளர் இன மக்கள் ஆண்டு்தோறும் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு வருவது உண்டு. அங்கு தங்கள் குலதெய்வமான கன்னியம்மன் மாசிமக பவுர்ணமி அன்று கடற்கரையில் அருள்பாலிப்பதாக நம்புகின்றனர். அப்போது, அவர்கள் அங்கு அமைந்துள்ள தங்கள் குல தெய்வமான கன்னியம்மனை வணங்கி தங்கள் உறவு முறைக்குள் திருமணம் மற்றும் நிச்சயத்தார்த்தம் போன்ற சடங்குகளை செய்வது வழக்கம்.

    இதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் மாசிமகத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடுகின்றனர்.

    அப்போது, தாங்கள் கொண்டு வந்த தென்னங்கீற்று மற்றும் துணிகளால் ஆன குடில்கள் அமைத்து அங்கு தங்கி சமைத்தும் சாப்பிடுகின்றனர். இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி மகிழ்கின்றனர்.

    மறுநாள் காலையில் கடற்கரையில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனுக்கு மணலில் 7 படி அமைத்து தேங்காய், பூ, பழம் வைத்து வழிபாடு செய்து, காது குத்தல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

    மேலும், மாசிமக தினத்தன்று நிச்சயம் செய்த ஜோடிகளுக்கு எளிமையாக திருமணம் செய்கின்றனர். அப்போது மணமகன் வேட்டி-சட்டை அணிந்தும், மணமகள் கூரைப்புடவை அணிந்தும் காணப்படுகின்றனர்.

    இதையடுத்து, நிகழ்ச்சியின் போது, தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடியும் மணமக்களை மகிழ்விக்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இருளர் இன ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. தங்கள் பாரம்பரியங்களை விட்டுக்கொடுக்காமல் ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று திரண்டு எளிமையாக வழிபாடு நடத்தியும், திருமணம் செய்தும் தங்கள் பாரம்பரிய கலாசாரத்தை நிலை நிறுத்துகின்றனர்.

    இதற்காக மாமல்லபுரம் தெற்கு பக்க கடற்கரையில் பழங்குடி இருளர்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டிருந்தனர்.
    சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஊரப்பாக்கம் வரை கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்து மற்றும் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ஆங்காங்கே தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதில் குறிப்பாக அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதிகளான பரனூர் மேம்பாலம், மகேந்திரா வேல்டு சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் போன்ற பகுதிகளாகும். இவை அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளாகும். இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் போதிய போலீசாரும் பணியில் இருப்பது இல்லை. இதனால் போக்குவரத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

    அப்படியே சிங்கப்பெருமாள் கோவில் ஜங்ஷனில் பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்தும் விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஊரப்பாக்கம் வரை பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களும் பழுதாகி உள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்களும் வாகனத்தின் பதிவு எண்ணை கேட்டு ரசீது வழங்காமல் அன்றைய தேதியில் ரசீது வழங்கி தங்களது பணிச்சுமையை குறைத்து கொள்கின்றனர். இந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    செங்கல்பட்டு அருகே துணி துவைப்பதற்காக சென்ற சிறுமிகள் உள்பட 3 பேர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்தகளத்தூர் பகுதியில் உள்ள ஏரியில் வைகுந்த நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (27). இவர் இன்று காலை துணி துவைப்பதற்காக மகள் சுபாசினி (10), உறவினர் மகளான தேவதர்சினி ஆகியோருடன் ஏரிக்கு சென்றார்.

    நீண்ட நேரமாக துணி துவைக்க சென்றவர்கள் வீட்டுக்கு திரும்பாததால் உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். அங்கு துணிதுவைக்க எடுத்த சென்ற துணிகள் அப்படியே இருந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஏரியில் இறங்கி தேடிப்பார்த்த போது 3 பேரும் ஏரியில் மூழ்கி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
    மதுராந்தகம் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மதுராந்தகம் அடுத்த தேவாதூர் கிராமம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் சேகர் வீட்டில் உள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இவருக்கு விஜயா என்ற மனைவியும் சாமிளா, சீலா என்ற மகள்களும், மணிபாரதி என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×