என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனை மையம் சுமார் 1500 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளமுடியும்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று கண்டறியும் ஆர்.ஐ. பி.சி.ஆர். பரிசோதனை மையம் சுமார் 1500 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
    இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளமுடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் கூட்டு ரோட்டில் புகையிலைப் பொருட்களை மூட்டைகளில் சிலர் பதுக்கி வைத்திருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, அங்கு 6 பிளாஸ்டிக் கோணி பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து, புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (வயது 40), சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (35), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட 1,200 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு கவச பொருட்கள் தொகுப்பை கலெக்டர் ஜான் லூயிஸ் வழங்கினார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஊரடங்கு காலத்தில் விடுதிகள், பராமரிப்பு இல்லங்களில் தங்கி இருக்கும் மாற்றுத்திறனாளிகள் தரையில் தவழ்ந்து செல்லும் போது நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க கையுறைகள், கால்களுக்கு கால் உறைகள், முட்டிப் பட்டைகள், முககவசங்கள், கிருமி நாசினிகள் ஆகிய பாதுகாப்பு கவசங்கள் அடங்கிய தொகுப்பு பைகளை செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று வழங்கினார்.

    மேலும் வீடுகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த தொகுப்பினை, நடமாடும் சிகிச்சை ஊர்தி மூலமாக வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் உடனிருந்தார்.
    கூடுவாஞ்சேரியில் மனைவியை அடித்துகொன்று பார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீவல்சன்(52). பார் உரிமையாளர். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவரது 3-வது மனைவி உமா(38). நேற்று இரவு ஸ்ரீவல்சன் 3- வது மனைவி வீட்டில் இருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவி உமாவை சுத்தியலால் அடித்து கொன்று விட்டு ஸ்ரீவல்சன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 150க்கு 100 அடி அளவிலான பிரம்மாண்டமான கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.
    செங்கல்பட்டு:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர அனாவசியமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியும் அதையும் மீறி மோட்டார் சைக்கிள்களில் சிலர் சாலையில் சுற்றித்திரிகிறார்கள்.

    இவர்களை எச்சரிக்கும் விதமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 150க்கு 100 அடி அளவிலான பிரம்மாண்டமான கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்ட ஓவியர்கள் நலச்சங்க நிர்வாகிகள், மாவட்ட போலீசார், பாரதி சேவா சங்கத்தினர் மற்றும் அனைத்து ஓவியர்கள் ஒன்றிணைந்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழகத்திலேயே மிக பிரம்மாண்டமான அளவில் இந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து, அதன் கீழ் தனித்திரு... விழித்திரு... வீட்டிலிரு... என்ற வாசகத்தை எழுதி உள்ளனர்.

    ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் பார்க்கும்போது இந்த ஓவியம் பிரம்மாண்டமாக உள்ளது. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நோற்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. 498 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மவாட்டத்தில் இதுவரை 1417 பேரிடம் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி, வெங்கம்பாக்கம் மற்றும் பூஞ்சேரியில் உள்ள 2 இடங்களிலும் சுங்ககட்டணம் வசூல் செய்யப்படவில்லை.

    செங்கல்பட்டு:

    சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்து உள்ளது. ஆனால் இன்று செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், அச்சரப்பாக்கம்அருகே உள்ளஆத்தூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படவில்லை. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி, வெங்கம்பாக்கம் மற்றும் பூஞ்சேரியில் உள்ள 2 இடங்களிலும் சுங்ககட்டணம் வசூல் செய்யப்படவில்லை.

    விவசாயிகளுக்கு நஷ்டம் தர்பூசணி பழங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. எம்.பி., எம் எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிசை தி.மு.க. எம்.பி., க.செல்வம், செய்யூர் எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசு, திருப்போரூர் எம்.எல்.ஏ., எல். இதயவர்மன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    அதில், செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட தர்பூசணி பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வியாபாரிகள் யாரும் வாங்க முன்வராமல் வீணாகி வருவதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே தர்பூசணி பழங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யவேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

    மேலும் திருப்போரூர், செய்யூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல நாட்களாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேங்கியுள்ளது.

    எனவே தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து அரசு குடோனுக்கு அனுப்ப வேண்டும்.

    ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    கொரோனா பாதிப்புடன் தப்பி ஓடிய டெல்லி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    செங்கல்பட்டு:

    நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் புதுச்சேரி வந்த டெல்லியை சேர்ந்த இளைஞர் நிதின்ஷர்மா விழுப்புரத்தில் தங்கியிருந்தார். 

    இந்நிலையில், கொரோனா அறிகுறி இருந்ததால், அங்குள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பபட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

    அத்துடன், அவரிடம் இருந்து ரத்த மாதிரி பெறப்பட்ட நிலையில், கடந்த 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து தப்பியோடினர். பின்னர், ஆய்வு முடிவில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 

    3 தனிப்படை அமைத்து போலீசார் புதுச்சேரி, விழுப்புரத்தில் தீவிரமாக அந்த இளைஞரை தேடி வந்தனர். செங்கல்பட்டு அருகே உள்ள படாலம் பகுதியில் போலீசார் அவரை கைது செய்தனர். 
    செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகள் இன்று முதல் அடைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 28 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் பரவல் காக்கப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை மூலம் தனித்தனி குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து செல்வதாக புகார்கள் வந்துள்ளதால், மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று (சனிக்கிழமை) முதல் மூடப்படும்.

    அந்த பகுதி மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பழம், காய்கறிகள் அடங்கிய பை ஒன்று ரூ.100 வீதம் வாகனங்கள் மூலம் அவர்களது வீட்டுக்கே சென்று வினியோகம் செய்யப்படும். மளிகை சாமான் மற்றும் மருந்து, மாத்திரைகளும் தேவைப்படும் வீட்டுக்கே நேரடியாக சென்று வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

    ஒவ்வொரு முறையும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் இந்த பகுதிக்கு உள்ளே செல்லும்போதும், வெளியே வரும் போதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் வசித்த வீடுகளில் தினம் 5 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    பால் வினியோகம் செய்யும் வெளி நபர்கள் எவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் செல்லாத வண்ணம் அப்பகுதி தன்னார்வலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செங்கல்பட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற பெண்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனன் தலைமையில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட போலீசார் திருக்கழுக்குன்றம் சரகத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நேற்று காலை ரோந்து சென்றனர்.

    அப்போது ஈசூர் கிராமம் அடுத்த வல்லிபுரம் பாலாற்று பகுதியில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த லட்சுமி(56) என்பவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் குன்னப்பட்டு கிராமம் ரைஸ்மில் அருகே மது விற்ற அதே பகுதியைச் சேர்ந்த இந்திரா(60) என்பவரையும், வெண்பாக்கம் அருகே சுடுகாடு ஓரத்தில் மது விற்பனைக்கு வைத்திருந்த பூபாலன்(28) என்பவரையும், ஆனூர் கிராமம் பாலாற்றின் ஓரம் மது விற்ற ருத்திரகோட்டி(29) மற்றும் கோரப்பட்டு கிராம ஏரிக்கரையில் மது விற்ற அஞ்சலை(50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷ் குடித்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பிரதீப்(வயது 32), சிவசங்கரன்(35) மற்றும் சிவராமன்(31). இவர்களில் சென்னை போரூரைச் சேர்ந்தவரான பிரதீப், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பாரேரியைச் சேர்ந்தவரான சிவசங்கரன் இருவரும் செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கத்தில் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வந்தனர். சிவராமன் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நண்பர்களான இவர்கள் 3 பேரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது.

    தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் இவர்கள் 3 பேரும் மதுகுடிக்க முடியாமல் பரிதவித்தனர்.

    நேற்று முன்தினம் நண்பர்கள் 3 பேரும் ஒன்று சேர்ந்து போதைக்காக பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் வார்ஷினில் எலுமிச்சை பழம் சாறை கலந்து குடித்தனர். சிறிதுநேரத்தில் 3 பேரும் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரெயில்வே ஊழியர்களான பிரதீப் நேற்று முன்தினம் இரவும், சிவசங்கரன் நேற்று அதிகாலையிலும் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யாமலேயே இவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து மயக்க நிலையில் இருந்த சிவராமனிடம் டாக்டர்கள் விசாரித்தனர். அதில் அவர், 3 பேரும் போதைக்காக வார்னிஷில் எலுமிச்சை பழம் சாறை கலந்து குடித்ததாக தெரிவித்தார். அதன்பிறகு அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்கல்பட்டு டவுன் போலீசார், சிவராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போதைக்காக வார்ஷினில் எலுமிச்சை பழம் சாறு கலந்து குடித்த ரெயில்வே ஊழியர்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×