என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட மனைவி குழந்தைகளுடன் ஜவுளி வியாபாரி தாமோதரன்
    X
    கொலை செய்யப்பட்ட மனைவி குழந்தைகளுடன் ஜவுளி வியாபாரி தாமோதரன்

    தாய், மனைவி, 2 குழந்தைகளை கொன்ற ஜவுளி வியாபாரிக்கு தூக்குத்தண்டனை

    தாய், மனைவி, 2 குழந்தைகளை கொன்ற ஜவுளி வியாபாரிக்கு தூக்குத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    செங்கல்பட்டு:

    சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் திருவள்ளுவர் நகர் நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 38). இவர், அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் தாய் சரஸ்வதி (62), மனைவி தீபா (36), மகன் ரோஷன் (7), மகள் மீனாட்சி (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    தாமோதரன், பம்மல் ஏழுமலை தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். ரோஷன், மீனாட்சி இருவரும் மீனம்பாக்கம் மற்றும் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முறையே 2-ம் வகுப்பு மற்றும் யு.கே.ஜி., படித்து வந்தனர். தீபா, வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.

    தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதுடன், 5 வங்கிகளில் வீட்டுக் கடன், நகை கடனும் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மைத்துனர் ராஜாவிடம் செல்போனில் பேசிய தாமோதரன் “எனக்கு வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, தன் பெற்றோரை தாமோதரன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அங்கு சென்றபோது, கதவு வெறுமனே சாத்தப்பட்டு இருந்தது. தாமோதரனின் மாமனார் மற்றும் மாமியார் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

    அங்கு மகள் தீபா, பேரன் ரோஷன், பேத்தி மீனாட்சி மற்றும் தாமோதரனின் தாய் சரஸ்வதி ஆகியோர், கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

    தாமோதரனும், கழுத்து மற்றும் கையை அறுத்த நிலையில், சுவரில் சாய்ந்து கிடந்தார். உடனடியாக அவர்கள் 5 பேரும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    டாக்டர்கள் பரிசோதனையில் தீபா, சரஸ்வதி, ரோஷன், மீனாட்சி ஆகியோர் இறந்து போனது தெரியவந்தது. தாமோதரன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிகிச்சைக்கு பிறகு தாமோதரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    தாமோதரன், தனது குடும்பத்தினரை கொலை செய்வதற்கு முன்பு பண மதிப்பிழப்பால் தன் தொழில் பாதித்ததால் கடன் அதிகமானதாக எழுதிய கடிதம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் சீதாலட்சுமி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், நேற்று முன்தினம் தாமோதரன் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்

    இந்த வழக்கில் நேற்று அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி, குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்ததற்காக தாமோதரனை சாகும் வரை தூக்கிலிடவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து தாமோதரன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    Next Story
    ×