என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் காரில் தவற விட்ட 25 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த டிரைவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்காக குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டுகள், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட மனுதாரர்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் மற்றும் போலீசார் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். இதனிடையே முகாமின் போது, ரேவதி என்ற பெண் குன்றத்தூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு வாடகை காரில் சென்ற போது தவற விட்ட 25 பவுன் நகையை மீட்ட கார் ஓட்டுநர் நவீன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இந்நிலையில் முகாம் நடைபெற்ற போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரியவர்களிடம் 25 பவுன் நகையை ஒப்படைத்தார். மேலும் கார் டிரைவரை அவர் பாராட்டினார்.
    பம்மல், நீலாங்கரை, குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த காமராஜபுரத்தில் பம்மல்-திருநீர்மலை பிரதான சாலையில் பம்மல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பம்மல், அனகாபுத்தூர் மற்றும் பொழிச்சலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது வீட்டுமனைகளை விற்பனை செய்வதற்கும், புதிதாக இடம் வாங்குபவர்கள் பத்திரம் பதிவு செய்வதற்கும் வருவது வழக்கம்.

    அவ்வாறு வருகை தரும் பொதுமக்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணங்களைவிட கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு, முறையான ஆவணங்கள் இல்லாத இடத்திற்கும் கூட பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருவதாக, பரங்கிமலையில் செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    அதன் அடிப்படையில் நேற்று டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், பம்மல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் அலுவலக கதவுகளை பூட்டினர். இதனால் உள்ளே இருந்து ஊழியர்கள் வெளியேறவும், வெளியில் இருந்து பொதுமக்கள் அலுவலகத்தின் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது.

    இரவு வரை சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.12 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையை அடுத்த நீலாங்கரை கஜீரா கார்டன் 2-வது தெருவில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு சார்-பதிவாளராக கண்ணன் உள்ளார்.

    இங்கு நில பத்திரப்பதிவு செய்பவர்களிடம் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புதுறை துணை சூப்பிரண்டு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்.

    அப்போது கணக்கில் வராத பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் குன்றத்தூர் சம்பந்தம் நகரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி, 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அலுவலக முன்பக்க கதவை மூடி உள்ளே இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் தீவிரமாக சோதனை செய்தனர்.

    ஒவ்வொருவரும் தீவிர சோதனைக்கு பிறகே வெளியே அனுப்பப்பட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு உள்ளே வந்தபோது சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்கப்போவது முன்கூட்டியே அறிந்த அதிகாரிகள் மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள ஜன்னல் ஓரங்களில் ஊழியர்கள் பணம் ஏதாவது தூக்கி எறிந்து உள்ளார்களா? என்பது குறித்தும் சோதனை செய்தனர். சோதனை முடிவில்தான் என்ன என்ன கைப்பற்றப்பட்டது என்பது தெரியவரும்.
    கிளாம்பாக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகர், காந்தி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 43). வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பாலமுருகன் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர் பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலமுருகன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காரணைப்புதுச்சேரி, வாலாஜாபாத், பள்ளிப்பட்டில் நடமாடும் ரேஷன்கடைகள் தொடங்கப்பட்டன.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள கோகுலம் காலனி விரிவு பகுதியில் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமை தாங்கி நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆராமுதன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், காரணைப்புதுச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன், கிளை செயலாளர் எஸ்.என்.ஆர்.விநாயகம், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல அ.தி.மு.க. சார்பில் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் நடமாடும் ரேஷன் கடை தொடக்கவிழா நடைபெற்றது. இதற்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வேங்கடமங்கலம் எம்.கஜா என்கிற கஜேந்திரன் தலைமை தாங்கி நடமாடும் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காரணை சண்முகம், ஒன்றிய மாணவரணி செயலாளர் காட்டூர் கன்னியப்பன், ஊராட்சி மன்ற செயலர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாலாஜாபாத் தாலுகாவில் நாயக்கன் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம், வாலாஜாபாத் பேரூராட்சி முன்சீப் தெரு, தம்மனூர், ஊராட்சி போன்ற பகுதிகளில் நடமாடும் ரேஷன்கடைகளை முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.

    தொடக்க விழாவில் ஒன்றிய செயலாளர்கள் அக்ரி நாகராஜன், ஜீவானந்தம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னேரி வரதராஜுலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கீதாபழனி, அஞ்சாலாட்சி பிள்ளையார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கரிம்பேடு, பள்ளிப்பட்டு, ராமாபுரம் போன்ற பகுதிகளில் அம்மா நடமாடும் ரேஷன் கடைகளை எம்.எல்.ஏ. நரசிம்மன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளிப்பட்டு ஒன்றியக்குழு தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் உமாபதி, ஜெகன்நாதன், ரவி பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜெயவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காஞ்சிபுரத்தில் 6 மாதங்களாக சட்டவிரோதமாக பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    இலங்கையில் நடந்த பல்வேறு கொலை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய கட்டகாமினி என்கிற பொன்சேகா அழாகாப்பெரும்மக சுனில் ஜெமினி என்பவரை அந்த நாட்டு போலீசாரும், தமிழக போலீசாரும் தேடி வந்தனர். இவரது பின்னணியிலேயே நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும், பல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. எனவே இலங்கையில் இருந்து தப்பிய கட்டகாமினி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 6 மாதங்களாக சட்டவிரோதமாக பதுங்கி இருந்துள்ளார்.

    இங்கிருந்தபடியே இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுடன் கட்ட காமினி நேரடி தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவருடைய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதனை அறிந்த அவர் காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தப்பி சென்றுவிட்டார்.

    இதனை அறிந்த காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸ் தனிப்படையினர் தப்பிச்சென்ற கட்டகாமினியை பெங்களூருவில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னார் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள என்.ஜி.ஓ. காலனி குப்புசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராம்சுந்தர் (வயது 27) , இவர் கடந்த 3-ந்தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் ராமநாதபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து ராம்சுந்தர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் நேரில் சென்று அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூரை அடுத்த புங்கத்தூர் செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (37). இவரது மனைவி வரலட்சுமி. ராகேஷ் பெங்களூருவில் கட்டிட பணியில் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி செவிலியர் பயிற்சி படித்து வருகிறார். நேற்று காலை ராகேஷ் வங்கிக்கு சென்றார். அவரது மனைவி செவிலியர் பயிற்சிக்காக சென்றார். பகல் 11 மணி அளவில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வீட்டுக்கு வந்த அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம், 42 இன்ச் டி.வி. போன்றவை மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து ராகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    நெல் அறுவடை செய்த எந்திரத்தின் வாடகை பாக்கி பணத்தை தராததால் ஆத்திரம் அடைந்த ஒருவர், விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்தார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள கொண்டமங்கலம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 46). விவசாயியான இவர், தனது நிலத்தில் விவசாயமும் செய்து கொண்டு கொத்தனார் வேலையும் செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் எந்திரம் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் நெல்லை அறுவடை செய்துள்ளார். அதற்கு உண்டான வாடகை பாக்கி தொகையான ரூ.3 ஆயிரத்து 500 பணம் தராமல் ராஜகோபால் நீண்ட காலமாக இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெருமாள் நேற்று முன்தினம் காலை ராஜகோபால் வீட்டிற்கு சென்று பாக்கி பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜகோபால் இன்னும் சில வாரங்களில் தந்துவிடுகிறேன் என்று கூறி சமாதானம் செய்துள்ளார்.

    இதனால் சமாதானம் ஆகாத பெருமாள், தன்னுடைய வீட்டின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை செய்து கொடுத்துவிட்டு தரவேண்டிய பாக்கி தொகையை கழித்து கொள்ளுமாறு ராஜகோபாலிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் ராஜகோபால் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பெருமாள் வீட்டிற்கு போகவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள் நேற்று மாலை டிராக்டர் வாகனத்தில் வந்து ராஜகோபாலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த பவர் டில்லர் எந்திரத்தை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராஜகோபால், ‘ஏன் என்னுடைய விவசாய எந்திரத்தை டிராக்டரில் கட்டி இழுத்துச் செல்கிறாய்’ என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள் டிராக்டர் முன்பு நின்று கொண்டிருந்த ராஜகோபால் மீது டிராக்டரை வேகமாக மோதி ஏற்றி இறக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் ராஜகோபால் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜகோபாலை மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி ராஜகோபால் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து ராஜகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி ராஜகோபாலை டிராக்டரை ஏற்றி கொலை செய்த கொண்டமங்கலம் பெரிய தெருவை சேர்ந்த பெருமாளை (44), கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    மாமல்லபுரம் அருகே கோவிலுக்கு சென்றபோது வேன்-கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    மாமல்லபுரம்:

    புதுச்சேரியில் இருந்து 6 பேர் சென்னை தியாகராயநகரில் ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது அதிவேகத்தில் வந்த பார்சல் வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் காரில் இருந்த செந்தில் (வயது 40), முருகன் (53), ஜெயராமன் (70) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உருக்குலைந்த காரில் மேலும் 3 பேர் சிக்கி உயிருக்கு போராடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், தீயணைப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் போலீசார், அங்கு சென்று காரில் சிக்கி உயிருக்கு போராடிய ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி (60) பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் காரில் பயணம் செய்து படுகாயம் அடைந்த சுபா (40), சுந்தரவரதன் (52) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    கல்பாக்கம் அருகே டாக்டரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்தது தொடர்பாக துப்பாக்கி முனையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிராமம் பஜார் வீதியில் குமார் என்பவர் தனியாக தங்கியிருந்து கிளினிக் நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 33). இவர் குமாரின் கிளினிக்கில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். மூர்த்தி அதே கிராமத்தை சேர்ந்த தன்னுடைய நண்பர்களான சரவணன் (29) கிருபாகரன் (27) ஆகியோருடன் குமாரின் கிளினிக்குக்கு சென்று அவரை அவ்வப்போது மிரட்டி பணம் கேட்டு பெற்றார்.

    கடந்த ஆண்டு டாக்டர் குமாரை மிரட்டி தலா 10 சென்ட் நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கியுள்ளனர். கிருபாகரன் டாக்டரை மிரட்டி ரூ.3 லட்சம் மற்றும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது. அடிக்கடி இவர்கள் 3 பேரும் டாக்டரை மிரட்டி பணம் பறித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் டாக்டர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளார். இருப்பினும் மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 7-ந்தேதி டாக்டரை மிரட்டி ரூ.50 ஆயிரம் வாங்கியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக பல முறை மிரட்டி ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனையடைந்த டாக்டர் குமார் இது குறித்து கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அசோக் சக்ரவர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோர் ஆலோசனைப்படி கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் சக்ரவர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் மூர்த்தி மற்றும் சரவணன் இருவரும் புதுச்சேரியில் இருந்து கூவத்தூரை அடுத்த பரமன் கேணி கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து நிற்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் இருவரும் 2 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை கிராமத்தை நோக்கி ஓடினர்.

    அவர்களை பின் தொடர்ந்து போலீசாரும் ஓடினர். குப்பத்துக்கு சென்ற இருவரும் ஒரு ஆட்டுக் கொட்டைகைக்குள் பதுங்கினர். அவர்களை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு அவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்து மதுராந்தகம் கிளைச்சிறையில் அடைத்தனர். சரவணன் மீது ஒரு கொலை வழக்கு, மற்றும் கொலை முயற்சி, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. தலைமறைவாக உள்ள கிருபாகரன் மீது இரட்டைகொலை வழக்கு, ஆள்கடத்தல் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாகவும் அவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    ஊனமாஞ்சேரியில் கல் அரைக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    புதுச்சேரி திருக்கானூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள கல் உடைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் வேலை செய்து கொண்டிருக்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கல் அரைக்கும் எந்திரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த சக தொழிலாளிகள் உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை மேலாளரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்ற கணவர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் நாராயணன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மனோன்மணி (48). இவர்கள் தங்கள் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை அவர்களது மகன் மற்றும் மகள் வெளியில் சென்று விட்டனர்.

    பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர், நாராயணன் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார்.

    அங்கே நாராயணன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அவரது மனைவி மனோன்மணி தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். குடும்பத்தகராறில் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற நாராயணன் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் அடையாறு காவல் துணை கமிஷனர் விக்ரமன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காட்டாங்கொளத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 26) , இவர் பல்லாவரத்தில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் மது குடித்து விட்டு காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள ஒரு கிணற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றில் மூழ்கினார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இது குறித்து உடனடியாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்துபோன எல்லப்பனின் உடலை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்லப்பன் குடிபோதையில் குளிக்கும் போது கிணற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாராவது அவரை கிணற்றில் தள்ளிவிட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
    ×