என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    டிராக்டர் ஏற்றி விவசாயியை கொலை செய்தவர் கைது

    நெல் அறுவடை செய்த எந்திரத்தின் வாடகை பாக்கி பணத்தை தராததால் ஆத்திரம் அடைந்த ஒருவர், விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்தார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள கொண்டமங்கலம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 46). விவசாயியான இவர், தனது நிலத்தில் விவசாயமும் செய்து கொண்டு கொத்தனார் வேலையும் செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் எந்திரம் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் நெல்லை அறுவடை செய்துள்ளார். அதற்கு உண்டான வாடகை பாக்கி தொகையான ரூ.3 ஆயிரத்து 500 பணம் தராமல் ராஜகோபால் நீண்ட காலமாக இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெருமாள் நேற்று முன்தினம் காலை ராஜகோபால் வீட்டிற்கு சென்று பாக்கி பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜகோபால் இன்னும் சில வாரங்களில் தந்துவிடுகிறேன் என்று கூறி சமாதானம் செய்துள்ளார்.

    இதனால் சமாதானம் ஆகாத பெருமாள், தன்னுடைய வீட்டின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை செய்து கொடுத்துவிட்டு தரவேண்டிய பாக்கி தொகையை கழித்து கொள்ளுமாறு ராஜகோபாலிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் ராஜகோபால் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பெருமாள் வீட்டிற்கு போகவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள் நேற்று மாலை டிராக்டர் வாகனத்தில் வந்து ராஜகோபாலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த பவர் டில்லர் எந்திரத்தை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராஜகோபால், ‘ஏன் என்னுடைய விவசாய எந்திரத்தை டிராக்டரில் கட்டி இழுத்துச் செல்கிறாய்’ என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள் டிராக்டர் முன்பு நின்று கொண்டிருந்த ராஜகோபால் மீது டிராக்டரை வேகமாக மோதி ஏற்றி இறக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் ராஜகோபால் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜகோபாலை மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி ராஜகோபால் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து ராஜகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி ராஜகோபாலை டிராக்டரை ஏற்றி கொலை செய்த கொண்டமங்கலம் பெரிய தெருவை சேர்ந்த பெருமாளை (44), கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×