search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    X
    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    பம்மல், நீலாங்கரை, குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த காமராஜபுரத்தில் பம்மல்-திருநீர்மலை பிரதான சாலையில் பம்மல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பம்மல், அனகாபுத்தூர் மற்றும் பொழிச்சலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது வீட்டுமனைகளை விற்பனை செய்வதற்கும், புதிதாக இடம் வாங்குபவர்கள் பத்திரம் பதிவு செய்வதற்கும் வருவது வழக்கம்.

    அவ்வாறு வருகை தரும் பொதுமக்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணங்களைவிட கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு, முறையான ஆவணங்கள் இல்லாத இடத்திற்கும் கூட பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருவதாக, பரங்கிமலையில் செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    அதன் அடிப்படையில் நேற்று டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், பம்மல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் அலுவலக கதவுகளை பூட்டினர். இதனால் உள்ளே இருந்து ஊழியர்கள் வெளியேறவும், வெளியில் இருந்து பொதுமக்கள் அலுவலகத்தின் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது.

    இரவு வரை சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.12 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையை அடுத்த நீலாங்கரை கஜீரா கார்டன் 2-வது தெருவில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு சார்-பதிவாளராக கண்ணன் உள்ளார்.

    இங்கு நில பத்திரப்பதிவு செய்பவர்களிடம் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புதுறை துணை சூப்பிரண்டு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்.

    அப்போது கணக்கில் வராத பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் குன்றத்தூர் சம்பந்தம் நகரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி, 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அலுவலக முன்பக்க கதவை மூடி உள்ளே இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் தீவிரமாக சோதனை செய்தனர்.

    ஒவ்வொருவரும் தீவிர சோதனைக்கு பிறகே வெளியே அனுப்பப்பட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு உள்ளே வந்தபோது சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்கப்போவது முன்கூட்டியே அறிந்த அதிகாரிகள் மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள ஜன்னல் ஓரங்களில் ஊழியர்கள் பணம் ஏதாவது தூக்கி எறிந்து உள்ளார்களா? என்பது குறித்தும் சோதனை செய்தனர். சோதனை முடிவில்தான் என்ன என்ன கைப்பற்றப்பட்டது என்பது தெரியவரும்.
    Next Story
    ×