என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 193 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 648 ஆக உயர்ந்தது. 1,515 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 170 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 36 ஆயிரத்து 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34 ஆயிரத்து 732 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,314 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 611 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்துள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஆண், சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்த 31 வயது ஆண், காவனூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஆண், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண், ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 23 ஆயிரத்து 772 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

    இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்தது. 630 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவொற்றியூர்:

    ஆவடி சிறப்பு ஆயுதப்படை போலீசில் பெண் போலீசாக பணியாற்றி வந்தவர் பாக்யஸ்ரீ (வயது 28). இவருடைய கணவர் முரளி. இவர், தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கவுசிக்(5), நவ்சிக்(2½) என 2 மகன்கள் உள்ளனர்.திருவொற்றியூர் மதுரா நகரில் வசித்து வந்த முரளியின் தந்தை கடந்த 2 நாட்களுக்கு இறந்து விட்டார். 

    இதனால் முரளி, தனது மனைவி பாக்யஸ்ரீ மற்றும் மகன்களுடன் திருவொற்றியூர் மதுரா நகரில் வந்து தங்கி இருந்தார்.நேற்று காலை பெண் போலீஸ் பாக்யஸ்ரீ, வீட்டின் மாடிக்கு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த முரளி, மாடிக்கு சென்று பார்த்தார். 

    அங்கு தனது மனைவி பாக்யஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் அவரது செல்போன் இருந்தது. அதில் பாக்யஸ்ரீ, தற்கொலை செய்வதற்கு முன்பாக, “எனக்கு முதுகுவலி, வயிற்று வலி இருப்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. 

    இதுபற்றி சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த பாக்யஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொத்தேரியில் ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    சென்னையை அடுத்த குரோம்பேட்டை வள்ளுவர் தெரு, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர், குரோம்பேட்டையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் பொத்தேரி ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    பலியான ராஜேஷ் உடலை பல மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர். இதுபற்றி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையிலேயே ராஜேஷ் ஏரியில் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாராவது அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
    திருப்போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்துள்ள செம்பாக்கம், சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி காவேரி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அதிகாலை 3 மணியளவில் ராஜசேகரனின் மனைவி காவேரி தனது கணவரை எழுப்பி வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதாக கூறினார். இதையடுத்து எழுந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த மேலச்சேரி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 35 வயது பெண் தனது ஒரே மகனோடு வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள சத்துணவு மையத்தில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 3 மாதத்திற்கு முன்பு கார்த்திக் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று நான் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறேன். உங்கள் மகனை என்னுடைய வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் நான் அவனுக்கு ஆன்லைன் வகுப்பு சொல்லி தருகிறேன் என்று கூறியிருக் கிறார்.

    அதை ஏற்றுக்கொண்ட அந்த பெண் செங்கல்பட்டில் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தன்னுடைய மகனுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் கார்த்திக் வீட்டுக்கு ஆன்லைன் வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.

    கடந்த 3 மாதங்களாக ஆன்லைன் வகுப்புக்கு சென்ற மகன் சில நாட்களாகவே வீட்டில் சகஜமான நிலையில் இல்லாமல் சோர்வுடன் காணப்பட்டான். அடிக்கடி வாந்தியெடுத்து கொண்டு இருப்பதை பார்த்த அந்த பெண் தன்னுடைய மகனிடம் இது குறித்து விசாரித்தார்.

    கார்த்திக் தனது உடல் ஆசைக்காக 13 வயது சிறுவன் என்றும் பாராமல் கடுமையாக தாக்கி வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அதை புகைப்படம் எடுத்து மிரட்டியது தெரியவந்தது. இதனால் பதறிபோன அந்த பெண் கார்த்திக்கின் வீட்டுக்கு சென்றார். அங்கு கார்த்திக் குளித்து கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி அவரது செல்போனை சோதனை செய்தார். தன்னுடைய மகன் சம்பந்தமாக இருந்த அனைத்து புகைப்படங்களையும் தனது செல்போனுக்கு அனுப்பி வைத்து சாமர்த்தியமாக அனைத்து ஆதாரங்களுடன் பாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 241 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமப்பகுதியில் 4 பேர் உள்பட நேற்று ஒரே நாளில் 241 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 427-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 634 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 699 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 23, 20, 28 வயதுடைய ஆண், 62 வயதுடைய முதியவர், நாவலூர் பகுதியை சேர்ந்த 78 வயது முதியவர், ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 473 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 23 ஆயிரத்து 372 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

    இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக உயர்ந்தது. 739 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி செல்வி (வயது 27). இவர் கடந்த சில நாட்களாக மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி தூக்கத்தில் எழுந்து எங்கேயாவது சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு செல்வி சென்றார். இந்தநிலையில் அவர் அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி பலியானார். தலை, கை, கால்கள் துண்டு துண்டாகி அவரது உடல் சிதறி கிடந்தது.

    இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசாருக்கும், செங்கல்பட்டு ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் சுபம் நகர், சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 23). இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா (23) என்பவரை சுமார் 3 வருடங்களாக காதலித்து வந்தார்.

    இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. பின்னர் இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். வெங்கடேசன் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

    ஸ்டெல்லாவுக்கு அடிக்கடி தீராத தலைவலி ஏற்பட்டு வந்ததாகவும், இதற்காக மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சமீப காலமாக அவர் தீராத மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    நேற்று காலையும் அவருக்கு தலைவலி ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஸ்டெல்லா, தனது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்டெல்லாவுக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
    பல்லாவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த குரோம்பேட்டை நியூ காலனி 2-வது மெயின் ரோட்டில் பல்லாவரம் நகராட்சி அலுவலகம் அருகே பல்லாவரம் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு எந்த பணிகளாக இருந்தாலும் லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் பணிகளை செய்து தருவதாகவும், தரகர்கள் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது வந்தது.

    இந்தநிலையில் நேற்று மதியம் 2.40 மணியளவில் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பல்லாவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை குறித்து முன்னரே தகவல் அறிந்த சார்பதிவாளர் அலாவுதீன் சுல்தான் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    ஆனால் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினரை கண்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த தரகர்கள் மற்றும் சில ஊழியர்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

    மேலும் தொடர்ந்து பல மணிநேரம் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெரும் தொகை பிடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
    செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில், 33 ஏக்கர் பரப்பளவில் 500 பாரம்பரிய மரவகைகள் கொண்ட இயற்கை தோட்டம் அமைக்கும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 33.30 ஏக்கர் இடத்தில் பாரம்பரிய வகை மரக்கன்றுகளை கொண்டு இயற்கைத் தோட்டம் அமைக்கும் பணியினை கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில், 33.30 ஏக்கர் இடத்தில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கடந்த 2016-ம் ஆண்டு தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் மீதமுள்ள இடத்தை பாதுகாப்புடன் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பாரம்பரிய மர வகைகளான மா, பலா, வாழை, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, மாதுளை, சீதா, நாவல், அத்தி, வில்வம், இலந்தை, கொடுக்காபுளி, பப்பாளி, முருங்கை, தென்னை, பனை மரங்கள், அழகு தாவரங்கள் என சுமார் 10 ஆயிரம் மரங்கள் கொண்டு ரூ.40 லட்சம் மதிப்பில் இயற்கைத் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    சென்னையில் ஏற்கனவே மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்ப்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் அடையாறு மண்டலத்தின் கோட்டூர்புரத்தில் 20 ஆயிரத்து 724 சதுர அடியில் ரூ.20 லட்சம் மதிப்பில் 40 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், வளசரவாக்கம் மண்டலத்தின் ராயலா நகர் 2-வது பிரதான சாலையில் 6 ஆயிரம் சதுர அடியில் ரூ.8.72 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு அடர் வனம் அமைக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற காடுகளினால், அங்குள்ள பொதுமக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மையை மேம்படுத்தும் சூழ்நிலையும், நகரங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவை மற்றும் பூச்சி இனங்கள் விருத்தியடையக்கூடிய சூழ்நிலையும் உருவாக உதவும்.

    தற்போது மாடம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் இயற்கை தோட்டத்தில் முதற்கட்டமாக 500 பாரம்பரிய மரவகைகள் நடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்போரூர் அருகே தனது அண்ணனின் நண்பரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த காயார் அருகே உள்ள மேல்கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் தேவா(வயது 25). இவர், கடந்த 2 மாதத்துக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் உள்பட சில நண்பர்களுடன் தனது காரில் சென்றார்.

    காரை தினேஷ்குமார் ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. தானே காரை ஓட்டி சேதப்படுத்தியதால் அதற்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம் தருவதாக தினேஷ்குமார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று தேவா, தனக்கு தருவதாக கூறிய பணத்தை வாங்குவதற்காக தினேஷ்குமார் வீட்டுக்கு சென்றார். ஆனால் வீட்டில் அவர் இல்லை. இதனால் அவரது தாயாரிடம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார்.இதில் ஆத்திரம் அடைந்த தேவா, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார். இதனால் தேவாவுக்கும், தினேஷ்குமாரின் தம்பி மோகன்ராஜ்(22) என்பவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ், இரும்பு கம்பியால் தேவாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தேவா, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    மறைமலைநகர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள 14 விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் திருடர்களை பிடிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நெடுமாறன், சசிக்குமார், ஆனந்தஜோதி, செல்வம், ஏட்டு பட்டாபி ஆகியோர் தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்களை திருடும் திருடர்களை கடந்த சில நாட்களாக வலைவீசி தேடிவந்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது 3 வாலிபர்களும், போலீசாரிடம் முன்னுக்கு முரணான தகவல்களை அளித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது 3 பேரும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 14 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதனையடுத்து மறைமலைநகர் போலீசார் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அப்பு என்ற திருநாவுக்கரசு (வயது 20), தெள்ளிமேடு கிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் (23), ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 14 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர் இதனையடுத்து 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×