என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    13 ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, முடிச்சூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 13 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    அத்துடன் ஆரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் இருந்தும் உபரி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    தொடர்ந்து அதிக மழை பெய்து கொண்டிருப்பதால் முடிச்சூர், வரதராஜபுரம், திருநீர்மலை, அனகாபுத்தூர், பொழிச்சலூர் கவுல் பஜார் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    முடிச்சூர் அமுதம் நகர் பகுதியில் அடையாறு ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் தண்ணீர் செல்லும் வேகம் தடைபட்டது. இதையடுத்து ஊராட்சி செயலர் வாசுதேவன் தலைமையில் உள்ளாட்சி அமைப்பினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அடையாறு ஆற்றில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினர்.

    செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நிரம்பி வருவதால் ஓரிரு நாளில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். பழைய ஏரிகள் நிரம்பி உபரிநீர் அதிக அளவு வந்து கொண்டிருப்பதால் கரையைத் தாண்டி பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது.

    கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் அதிகளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் மீண்டும் பாதிப்பு ஏற்படுமோ? என மக்கள் பீதியில் உள்ளனர்.
    பலத்த மழை காரணமாக பப்பாளி மரம் முறிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பையனூர் கிராமத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது பையனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நீலா (வயது 51) என்பவர் தனது இரு பேத்திகளுடன் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வீசிய பலத்த காற்றில் சாலையோரம் நின்றிருந்த பப்பாளி மரம் ஒன்று காற்றில் முறிந்து நீலா மீது விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக 10 அடி தூரத்தில் அவரது இரு பேத்திகளும் சென்றுவிட்டதால் நல்லவேளையாக இந்த விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பப்பாளி மரம் விழுந்துபெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    அனகாபுத்தூரில் மது பாட்டிலால் தலையில் அடித்து நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அருள் நகர், வைகை தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 60). இவர், தங்கச்சாலை பகுதியில் டி.வி. பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். அப்போது தங்கச்சாலை வள்ளலார் நகரை சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (45), கோபி (45) மற்றும் சுரேஷ் (40) ஆகியோர் நண்பர்களாக பழகி வந்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மணிகண்டன் உள்பட 3 பேரும் அனகாபுத்தூரில் உள்ள வாசுதேவன் வீட்டுக்கு வந்தனர். அங்கு தீபாவளியை கொண்டாடினர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் மது அருந்தினர். பின்னர் கோபி, மதுபோதையில் வாசுதேவனின் மகன் நவீன் (32) என்பவரது படுக்கை அறைக்கு சென்று தூங்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நவீன், தனது தந்தையை கெடுத்ததோடு இல்லாமல், தனது அறையில் படுத்து தூங்குவதா? என கோபியை கண்டித்தார். உடனே அறையில் இருந்து வெளியே வந்த கோபி, அங்கு படுத்திருந்த மணிகண்டனிடம், ‘இதற்கெல்லாம் நீ தான் காரணம்’ என்று கூறி, அங்கிருந்த மதுபாட்டிலால் மணிகண்டனின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில், படுகாயமடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பலி எண்ணிகை 700-ஐ நெருங்கிறது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 123 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 44 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 695 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 908 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 89 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 136 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 643 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 840 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 412 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 492 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடற்கரை பகுதி களைகட்டியது.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள திரண்டனர். குறிப்பாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையிலேயே பொழுதை கழித்தனர். இதனால் கடற்கரை பகுதி களைகட்டியது.

    நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆகவே சுற்றுலா பயணிகள் கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். கரைப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கடலில் இறங்காத வாறு சுற்றுலா பயணிகளை அவ்வப்போது அறிவுறுத்தினர்.

    கடற்கரைக்கு வந்த வாலிபர்களும், காதல் ஜோடிகளும் கடற்கரை கோவிலுக்கு பின்புறம் உள்ள பாறைகளின் மேல் ஏறி நின்று செல்பி மோகத்தில் கொஞ்சம் கூட ஆபத்தை உணராமல் அலட்சியமாக செல்பி, புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். ஆபத்தான பகுதி அங்கு செல்ல வேண்டாம் என போலீசார் பலமுறை எச்சரித்தும் யாரும் அதை பொருட்படுத்தாமல் கூட்டம், கூட்டமாக பாறைகளின் மேல் ஏறி புகைப்படம் எடுத்து விட்டு சென்றதை காண முடிந்தது.

    தவறி விழுந்தால் பாறையில் விழுந்து மரணம் ஏற்படும் என்று சற்றுகூட சிந்திக்காமல் கரடுமுரடாக, கூர்மையான கத்தி போன்ற வடிவமைப்பில் இருந்த பாறையில் நின்று கொண்டிருந்தனர். இவர்களின் இதுபோன்ற செயல் குடும்பத்துடன் உல்லாச பயணம் வந்திருந்த சுற்றுலா பயணிகளிடையே முக சுழிப்பை ஏற்படுத்தியது.

    மேலும் நேற்று சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி மற்றும் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
    செங்கல்பட்டில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு டவுன் சின்னம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் மனோஜ் (வயது 14). செங்கல்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி மதியம் 2 மணியளவில் மனோஜ் நண்பர்களுடன் செட்டி புண்ணியம் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றான். தண்ணீரில் மூழ்கிய மனோஜ் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் உடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் மனோஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் இரவு நேரம் ஆனதால் மனோஜை மீட்க முடியவில்லை. நேற்று அதிகாலை மீண்டும் மாணவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் காலை 5 மணியளவில் மனோஜை பிணமாக மீட்டனர். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஜெய்பீம்நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45). பெயிண்டர். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெயக்குமார் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கல்பாக்கத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு பள்ளி மாணவி பிரதமர் மோடியின் பாராட்டை பெற்றுள்ளார்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் வசித்து வருபவர் அர்ச்சுனன் பிரதீப். இவர் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். கேரளாவை சேர்ந்த இவருக்கு அபர்ணா என்ற மனைவியும் இந்திராஅர்ஜூன் (9) என்ற மகளும் உள்ளனர். இந்திரா அர்ஜூன் கல்பாக்கம் நகரியத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று விடுமுறையானதால் தனது வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பு மூலம் தொடர்ந்து படித்து வருகிறார்.

    மேலும் இவர் விலங்கியல், வேதியியல் உள்பட பாடங்களை அனிமேஷன் முறையில் தத்ரூபமாக விளக்கி காணொலி காட்சி பதிவு மூலம் டுவிட்டர், முக நூல் என சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    இந்த பகிர்வை ஏராளமான மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் பார்த்துள்ளனர். மேலும் சிறப்பான சிந்தனைத்திறன், ஞாபக சக்தியுடன் உரிய விளக்கத்துடன் பாடம் நடத்தி வருகிறார். புலி, சிங்கம், யானை, பாம்பு, கரடி, சிறுத்தை, நரி உள்பட பல்வேறு மிருகங்களின் தன்மை பற்றியும் அவற்றின் வாழ்விடம் பற்றியும் அனிமேஷன் முறையில் விளக்கி கூறுகிறார்.

    இது தவிர மனித உடல் உறுப்புகளின் தனித்தனி செயல்பாடுகள் பற்றியும் அனிமேஷன் முறையில் தெளிவாக விளக்கி கூறுகிறார். இந்த தகவல்களை தனது பள்ளி தோழிகளுக்கும் பகிர்ந்து கொரோனா ஊரடங்கு விடுமுறையை பயன் உள்ள வகையில் செயல்படுத்தி வருவதை அவரது பெற்றோர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை பிரதமர் நரேந்திரமோடி பார்த்துள்ளார்.

    இதையடுத்து அவர் தனது டுவிட்டர் பதிவில் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் இணைய தளத்திலும் அனிமேஷன் பாட திட்ட வீடியோ வெளியாகியுள்ள நிலையில் மாணவியின் அசாத்திய திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    பள்ளிப்படிப்பு தவிர ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி, பாட்டுபோட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா என அனைத்து போட்டிகளில் இவர் கலந்து கொண்டு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
    பா.ஜ.க. பொறுப்பாளரை கைது செய்ய கோரி கோவளத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ஸ்ரீதர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
    திருப்போரூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறாக பேசிய படூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பொறுப்பாளர் புருஷோத்தமன், இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா கட்சி தலைவர் ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோவளத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயர உயர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுசேரி சிப்காட் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஸ்ரீதரை மீட்க முயன்றனர். அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஸ்ரீதர் கீழே இறங்கி வந்தார்.
    மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை திறக்க அனுமதிக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தொல்லியல் துறை கடிதம் அனுப்பி உள்ளது.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்புவதால் இவற்றை திறக்க மத்திய அரசு, ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற பாரம்பரிய நினைவு சின்னமான தாஜ்மகால் ஏற்கனவே திறக்கப்பட்டு பார்வையாளர்கள் கண்டு களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக இங்கு தமிழக அரசின் உத்தரவால் பார்வையாளர் களுக்கான தடை நீட்டிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மாநில அரசின் சுற்றுலா தடை நீட்டிப்பால் இவை தற்போதும் மூடப்பட்டே உள்ளன. சுற்றுலாவை நம்பியே இந்த ஊர் தொழில்கள் உள்ள நிலையில் சுற்றுலா முடக்கத்தால் இந்த பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்தில் சுற்றுலா தடை, புராதன சின்னங்கள் மூடல் என அமலில் இருப்பினும் சென்னை புறநகர் மற்றும் வெளிமாவட்ட பயணிகள் வார இறுதி நாட்களில் இங்கு குவிகின்றனர். சாலையோரம் நின்று வெளியில் இருந்தே கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை கண்டு பொழுதை போக்குகின்றனர். மூடப்பட்டுள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன சின்னங்களுக்குள் சென்று புகைப்படம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

    இந்தநிலையில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சுற்றுலா பயணிகள் இங்குள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை சார்பில் புராதன சின்னங்களை திறக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
    கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் பிணமாக மிதந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த ஆமைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்னன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதா. ஒரு மகன் உள்ளார். மகள்கள் பிரியங்கா (13), செண்பகவல்லி (11). இவர்களில் பிரியங்கா நெய்குப்பி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். செண்பகவல்லி கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அரிகிருஷ்ணன், கீதா இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பிற்பகல் 3 மணி முதல் சகோதரிகளான பிரியங்கா, செண்பகவல்லி இருவரும் மாயமாகி விட்டனர்.

    பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் நேற்று அதிகாலை அருகில் உள்ள கிணற்றில் 2 சிறுமிகளின் உடல்கள் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களது உடல்களை மீட்டனர்.

    அவர்கள் மாயமான சகோதரிகளான பிரியங்கா, செண்பகவல்லி என்பது தெரியவந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படடது. அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா 7 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் சொற்ப அளவிலேயே பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
    வண்டலூர்:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவும் மூடப்பட்டது. பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் வந்து தங்களுடைய பொழுதை கழிப்பதில் இந்த பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் இருந்ததால் அவை திறக்கப்படாமலே இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அந்த தளர்வில் செங்கல்பட்டில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவும், சென்னை கிண்டி சிறுவர் பூங்காவும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த 2 பூங்காக்களும் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டு இருக்கின்றன.

    கொரோனா தொற்று முழுமையாக மறையாததால், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பூங்காக்களுக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அதனை பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர். அதன்படி, முக கவசம் கண்டிப்பாக அணிந்து வருவதோடு, பூங்காக்களின் நுழைவுவாயில் பகுதிகளில் கைகளை கிருமிநாசினி திரவம் கொண்டு கழுவுவதற்கும், அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கும் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. மேலும் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டன.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் பகுதிகளுக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல், மீன், பாம்பு உள்பட சிலவற்றை பார்ப்பதற்கான இடங்கள் குறுகலாக இருக்கும் காரணத்தால், அங்கு மக்கள் அதிகம் கூடிவிடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர மற்ற விலங்குகள், பறவைகளை வழக்கம்போல சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் விலங்குகள் இருக்கும் பகுதிகளை சுற்றி அடைக்கப்பட்டு இருக்கும் கைப்பிடி பகுதிகளை யாரும் தொட்டுவிடாமல் இருப்பதற்கு சுமார் 2 மீட்டர் தூரம் தள்ளி வட்டகுறி இடப்பட்டு இருந்தது. அதில் நின்று பார்வையாளர்கள் விலங்குகளை பார்வையிட அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி பார்வையாளர்கள் விலங்குகளை பார்த்து, செல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் 4 குட்டிகளை ஈன்ற வெள்ளைப்புலி பூங்காவுக்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்கனவே இருந்த கட்டணத்தைவிட சற்று கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அதாவது, பெரியவர்களுக்கான கட்டணத்தில் ரூ.15-ஐ உயர்த்தி ரூ.90 என்ற நிலையிலும், சிறியவர்களுக்கான கட்டணத்திலும் ரூ.15 அதிகரித்து, ரூ.50 என்ற நிலையிலும் நிர்ணயித்து இருந்தனர். இதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட பூங்கா அதிகாரிகளிடம் கேட்டபோது, பூங்கா வளாகத்துக்கு உள்ளேயே குடிநீர், கழிவறை வசதிகளை இலவசமாக வழங்குவதற்காகவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றனர்.

    7 மாதங்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா காரணமாக குறைவான பார்வையாளர்களே வந்திருந்தனர். இனி வரக்கூடிய நாட்களில் பார்வையாளர்கள் அதிகளவில் வருவார்கள் என்று பூங்கா நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. நேரடியாக கவுண்ட்டர்களில் டிக்கெட் எடுப்பதை தவிர, ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் பதிவு செய்து பார்வையாளர்கள் வரலாம் என்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியிருக்கிறது.

    அதேபோல், கிண்டி சிறுவர் பூங்காவிலும் மிகவும் சொற்ப அளவிலேயே பார்வையாளர்கள் நேற்று வந்தனர். அங்கும் சிறுவர்கள் விளையாடும் பகுதிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, உபகரணங்கள் துணியை கொண்டு மூடிவைக்கப்பட்டுள்ளது.

    பூங்காவை பார்வையிட 10 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களும், கர்ப்பிணிகளும் வருவதை தவிர்க்கவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் சிலர் பூங்காவை பார்வையிட வந்திருந்ததை பார்க்கமுடிந்தது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகளில் அடைப்பட்டு கிடந்த பொதுமக்களுக்கு பூங்கா திறப்பு ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. பூங்காவை பார்வையிட வந்திருந்தவர்களும் இதே கருத்தை தெரிவித்ததோடு, புதிய உற்சாகத்தை உணர்ந்ததாகவும் கூறினர். அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என்று பூங்கா நிர்வாகங்கள் கூறுகின்றன.
    ×