என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் நிலையில் ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் ஏரிக்கு வரும் மழைநீர் உபரிநீராக கலிங்கல் மூலம் கிளியாற்றில் வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், நீலமங்கலம், முருக்கஞ்சேரி, குன்னத்தூர், கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர் கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் நிலையில்  ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்மழையால் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் பொதுப்பணித்துறை வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
    கல்பாக்கம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரம் பகுதி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 33) கார் டிரைவரான இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரம் அடைந்த குமார் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 90 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 518 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்தது. 846 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 73 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் நோய் தாக்குதலால் பலியானார். சிகிச்சை பெற்ற 103 பேர் குணம் அடைந்தனர். இதுவரை இந்த மாவட்டத்தில் மொத்தம் 40 ஆயிரத்து 501 பேர் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.

    மொத்தம் 39 ஆயிரத்து 287 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தனர். மொத்தம் 650 பேர் இறந்துள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 73 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 375 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 589 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 419 பேர் உயிரிழந்துள்ளனர். 367 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கேளம்பாக்கம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த ஜோதி நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ்ராம் (வயது 33). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் சவுமியா (வயது 27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சில ஆண்டுகளாக சவுமியாவை அவரது கணவர் தினேஷ் ராம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து கடந்த மாதம் சவுமியாவின் தந்தை ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் கணவர் தினேஷ்ராம், சவுமியாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தினேஷ்ராம், சவுமியாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர் இறந்து விட்டதாக கூறி போனை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த சவுமியாவின் பெற்றோர் கேளம்பாக்கத்திற்கு வந்தனர். சவுமியாவின் இடது கையில் கத்தியால் வெட்டப்பட்ட தழும்பு இருந்தது. இதையடுத்து சவுமியாவின் பெற்றோர் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அந்த புகாரில், தனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

    போலீசார் சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் தினேஷ்ராம், மாமனார் பாலச்சந்தர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் விமல் என்ற குள்ள விமல் (வயது 38). ரவுடியான இவர் மீது செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே வந்த விமலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதை பார்த்து கூச்சலிட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விமலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக பட்ரவாக்கம் சிவா (40) செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விமல், பட்ரவாக்கம் சிவாவை தரக்குறைவாக பேசியதால் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் போலீசார் கொலையில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்
    வடமாநில வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சிவராம் பஸ்வால் (வயது 29). இவர் நல்லம்பாக்கம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிவராம் பஸ்வாலை வழிமறித்து அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2500-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து சிவராம் பஸ்வால் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து ஒடிசா வாலிபரிடம் வழிப்பறி செய்த பெருமாட்டுநல்லூர் கிராமத்தை சேர்ந்த கலைவாணன் (27), கன்னிவாக்கம் அண்ணா நகரை சேர்ந்த பாபு (31) ஆகியோரை கைது செய்தனர்.
    நடிகர் வடிவேலு நடித்த சினிமா படபாணியில் நடுரோட்டில் மாநகர பஸ்சை வழிமறித்து போதை ஆசாமி ரகளை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அவரை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பினர்.
    தாம்பரம்:

    நடிகர் வடிவேலு நடித்த ‘மாயி’ என்ற படத்தில் மதுபோதையில் நிற்கும் அவர், பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபடுவார். அதேபோன்று சென்னையை அடுத்த குரோம்பேட்டையிலும் போதை ஆசாமி ஒருவர், மாநகர பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை குரோம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஜி.எஸ்.டி. சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர், நடுரோட்டில் படுத்து கூச்சலிட்டார்.

    பின்னர் எழுந்த அவர், நடுரோட்டில் தள்ளாடியபடியே வேகமாக நடந்து சென்று, எதிரே வந்த மாநகர பஸ்சை தனது கைகளால் மறித்து நிறுத்த முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாநகர பஸ் டிரைவர், உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார்.

    ஆனால் போதை ஆசாமி, தானே கையால் பஸ்சை தடுத்து நிறுத்தியதுபோல் உற்சாகத்தில் மீண்டும் கூச்சலிட்டார். பின்னர் டிரைவரிடமும் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நடுவழியில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போதை ஆசாமியே அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்த சிலர், அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகிறார்கள். இதை பார்த்த குரோம்பேட்டை போலீசார், போதை ஆசாமியை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நாகல்கேணி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 42) என்ற அந்த போதை ஆசாமியை கைது செய்த போலீசார், பொது இடத்தில் இடையூறு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினர்.
    மதுராந்தகம் அருகே தொழிலாளி மரணமடைந்த சம்பவம் குறித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு உறவினர்கள போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன் (வயது 31). இவர் மதுராந்தகத்தை அடுத்த வையாவூரில் உள்ள தனியார் மதுபான ஆலைக்கு அட்டை பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனியில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு அவர் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்தார். அவரை ஊழியர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மனைவி ஈஸ்வரி படாளம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டனின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இறந்த மணிகண்டனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சிங்கப்பெருமாள் கோவிலில் ஓட்டல் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு என்கிற குண்டு பாபு (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இவருக்கும் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பரணி என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சிங்கப்பெருமாள் கோவில் எம்.ஜி.ஆர். தெருவில் பாபு நடந்து செல்லும்போது பரணி தலைமையில் காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பாபுவை வழி மறித்தது. அவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக பாபு ஓடும்போது விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி தலை உள்ளிட்ட இடங்களில் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பிச்சென்று விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பாபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பரணி என்கிற பரணிதரன் (40), கார்த்திக் என்கிற சொரி கார்த்திக் (31), சரத் என்கிற சரத்குமார் (25), ஒட்ட கார்த்தி (24), அனீஷ் (25) ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    முருகன் அருளால்தான் உயிர் பிழைத்ததாகவும் தனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் தன்னை காப்பாற்றி உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்தில் உயிர் தப்பியது பற்றி குஷ்பு உருக்கமான பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கடலூர் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டு சென்றபோது எனது கார் மீது கண்டெய்னர் லாரி மோதியது.

    இந்த விபத்தில் எனது கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. முருகன் அருளால்தான் நான் உயிர் பிழைத்து உள்ளேன். எனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் என்னை காப்பாற்றி உள்ளது.

    அந்த முருகனே என்னை வேல் யாத்திரைக்கு வரச் சொல்லி அழைத்து உள்ளது போலவே உணர்கிறேன். எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

    விபத்து நடந்த போதிலும் வேல் யாத்திரையில் திட்டமிட்டபடி நான் கலந்து கொள்கிறேன்.

    இவ்வாறு குஷ்பு கூறினார்.
    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளானது.
    மதுராந்தகம்:

    தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முருகன் கடந்த 6-ந்தேதி முதல் வேல் யாத்திரை நடத்தி வருகிறார்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அவரது வேல் யாத்திரை தொடங்கியது. தமிழக அரசு இந்த யாத்திரைக்கு தடை விதித்துள்ள போதிலும் பா.ஜ.க.வினர் தடையை மீறி யாத்திரை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளி தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று அவர் திருவண்ணாமலையில் நடந்த வேல் யாத்திரையில் பங்கேற்றார்.

    அடுத்த மாதம் 7-ந்தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரையை நிறைவு செய்யும் வகையில் ஒவ்வொரு ஊர்களிலும் யாத்திரை நடைபெற்று வருகிறது. இன்று (புதன்கிழமை) கடலூரில் யாத்திரை நடைபெறுகிறது.

    நடிகை குஷ்பு இந்த வேல் யாத்திரையில் கலந்து கொள்வது என முடிவு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனது காரில் புறப்பட்டு சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி அவரது கார் சென்று கொண்டிருந்தது.

    மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் சென்ற போது முன்னால் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த கண்டெய்னர் லாரியை குஷ்புவின் கார் முந்தி சென்றது.

    அப்போது எதிர்பாராத விதமாக கண் இமைக்கும் நேரத்துக்குள் காரில் இடது பக்கத்தில் கண்டெய்னர் லாரி வேகமாக இடித்தது. இதில் காரின் பின் இருக்கை பகுதி பலத்த சேதமடைந்தது. சிறிது தூரம் கண்டெய்னர் லாரியில் உரசியபடியே குஷ்புவின் கார் சென்றது.

    காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த குஷ்பு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். உடனடியாக குஷ்புவின் கார் டிரைவர் முருகன் சாமர்த்தியமாக காரை திருப்பி ஓரமாக நிறுத்தினார்.

    இதன் காரணமாக குஷ்பு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    கண்டெய்னர் லாரி டிரைவரிடம் விபத்து பற்றி விசாரணை நடத்தப்பட்டது. குஷ்புவிடமும் விபத்து பற்றி போலீசார் விவரங்களை கேட்டு அறிந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தமிழக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குஷ்புவிடம் போனில் தொடர்பு கொண்டு அவர்கள் விபத்து பற்றி விசாரித்தனர்.

    சமீபத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்த குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த சிதம்பரம் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார். கடந்த 6-ந்தேதி முதல் பாரதிய ஜனதா வேல் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் இதுவரை அந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.

    கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் முதல் முறையாக பங்கேற்பதற்காக இன்று சென்ற போதுதான் அவரது கார் விபத்தில் சிக்கி உள்ளது.

    இந்த விபத்து பற்றி குஷ்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து உள்ளார். தன்னை கொல்ல சதி நடந்திருப்பதாகவும், இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக குஷ்பு அளித்த பேட்டி வருமாறு:-

    விபத்து நடைபெற்ற விதத்தை பார்க்கும் போது என் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் போலவே தெரிகிறது. என்னை கொல்வதற்கு சதி நடந்திருப்பதாகவே நான் உணருகிறேன்.

    விபத்து பற்றி போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விபத்தில் சிக்கிய போதிலும் குஷ்பு தனது பயண திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி கடலூரில் நடக்கும் வேல் யாத்திரையில் கலந்து கொள்ள அவர் முடிவு செய்தார்.

    இதையடுத்து மாற்று கார் வரவழைக்கப்பட்டது. குஷ்பு அதில் ஏறி கடலூருக்கு சென்றார்.
    சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் புதுமண தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
    வண்டலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டுசெல்லூர் கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 25), எலக்ட்ரீசியன். இவரது மனைவி நதியா (வயது 24). இவர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராமர் தனது மனைவியுடன் தாம்பரத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ராமர் தனது மனைவி நதியாவுடன் சொந்த ஊரான காட்டு செல்லூர் கிராமத்திற்கு சென்றார்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே வரும்போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமர், நதியா இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமர், நதியா ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×