என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி அணைக்கு செந்துறை மற்றும் அரியலூர் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் அணையின் மொத்த உயரமான 4.75 மீட்டர் உயரத்தில் 4.47 மீட்டர் உயரத்திற்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் சுத்தமல்லி அணையின் முழு கொள்ளளவான 226.8 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 365 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து ஏற்கனவே ஸ்ரீபுரந்தான் பெரிய ஏரி, கோவை தட்டை ஏரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஏரிகள் நிறைந்து விட்டன. எனவே உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 175 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பொன்னார் பிரதான கால்வாயில் இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிந்தாமணி ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு வருகிறது. குறிச்சி மதகில் பொன்னர் தண்ணீரும், சிந்தாமணி ஓடை தண்ணீரும் ஒன்றாக கலந்து குறிச்சி கலிங்கு வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது.
தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளான காசுடையான் ஏரி, அணைக்குடி ஏரி, சித்தேரி, சுக்கிரன் ஏரி மற்றும் பூவோடை ஆகிய ஏரிகள் அதன் முழு கொள்ளளவில் 85 முதல் 90 சதவீத அளவிற்கு நிரம்பி உபரி நீர் செங்கால் ஓடை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது.
தா.பழூர் ஒன்றியம் முழுவதும் சிறுசிறு குளங்கள் மற்றும் ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூரை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 20). இவர் ஆசை வார்த்தை கூறி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் செல்போனில் சிறுமியின் புகைப்படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செல்வகணபதியிடம் கேட்டதற்கு, அவர் சிறுமியின் செல்போன் படங்களை வைத்து கொண்டு மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகணபதியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்....
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், அய்யலூரை சேர்ந்தவர் விஜயன் (35). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதற்காக சென்றபோது, அங்கு ஒரு சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுத்து வந்த சிறுமியை விஜயன் பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, விஜயனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் செல்வகணபதி, விஜயன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று செல்வகணபதி, விஜயன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த செல்வகணபதி, விஜயனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் வழங்கினர்.
சென்னை:
பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசு பணமும் அரசு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
பொங்கல் விழாவை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம்.
ஆனால் தி.மு.க. அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பிறகு உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால் பொங்கல் தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை.

அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் எனறு தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...முதல்-அமைச்சரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
அரியலூர் மாவட்டம் தா.பழூர் மேலத்தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இந்த தெருவை கடந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும் தா.பழூர் பகுதிக்கான ரேஷன் கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மின்வாரிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் விஸ்வநாதர் கோவில் ஆகியவையும் இந்தப் பகுதியிலேயே உள்ளன. இதனால் அலுவலகங்கள் மற்றும் கோவிலுக்கு இந்த பாதையை கடந்து செல்லும்போது முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.
மேலும் தண்ணீர் வடிவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் மேலத்தெருவில் உள்ள தார் சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன்பாடற்ற சாலையாக மாறிவிட்டது. குண்டும், குழியுமாக இருக்கும் இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று அச்சத்தால் பிள்ளைகளை பெற்றோர்கள் தயக்கத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் அருகில் மழைநீர் தேங்கி, டெங்கு போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளதால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி செல்லும் பாதையில் நீர் தேங்காமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள வசிஷ்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அழகம்மாள் (வயது 75). தற்போது இவர்கள் வசிஷ்டபுரம் ஊராட்சியை சேர்ந்த ரெட்டிகுடிக்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை அழகம்மாள், விறகுகள் சேகரிக்க வெள்ளாற்றுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொழுதூர் அணைக்கட்டில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் அகரம்சிகூர் வெள்ளாற்றின் இரு கரையிலும் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அழகம்மாள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்.
இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன் ஆகியோர் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் வசந்தராஜன், சிறப்பு நிலை அலுவலர் நடராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், கலைஅமுது, பாட்ஷா ஜான் ஆகியோர் ஆற்றில் இறங்கி, ரப்பர் டியூப் போன்றவற்றை பயன்படுத்தி நடு ஆற்றில் தவித்த அழகம்மாளை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அழகம்மாள் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(வயது 49). இவர் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீட்ைடயொட்டி மளிகைக்கடை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் அடகு கடையில் கவரிங் நகைகளை வைத்தும் அவர் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டில் தூங்க சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவசர, அவசரமாக அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த கவரிங் நகைகள் அனைத்தையும் தங்க நகைகள் என நினைத்த அவர்கள், தங்களுக்கு சரியான வேட்டை என்ற மகிழ்ச்சியில் அவற்றை திருடியுள்ளனர். பின்னர் நகைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு, அவற்றுடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேசன், வெளியே வந்து பார்த்தபோது அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கவரிங் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் கடை மற்றும் வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடி மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களுக்கு, அவை தங்கமில்லை கவரிங் என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த அவர்கள் ஆத்திரத்தில் அங்குள்ள முந்திரி காட்டுப்பகுதியில் கவரிங் நகைகளை வீசிச்சென்றது, போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தூக்கி வீசப்பட்ட கவரிங் நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







