search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறைவிலாத வாழ்வருளும் குன்றக்குடி
    X
    குறைவிலாத வாழ்வருளும் குன்றக்குடி

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - குறைவிலாத வாழ்வருளும் குன்றக்குடி

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி முருகன் கோயில். முருகனின் பிரார்த்தனைத் தலங்களில் முதன்மையானது குன்றக்குடி.
    சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே 
    ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப் 
    பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதிநின் 
    றாடும் பழுது பரமாயிருக்கு மதீதத்திலே    - கந்தரலங்காரம்

    தூய்மையே இன்பம் தருவது.
    தூயமனம் உடையவர்கள் உலகம் முழுவதும் எல்லையற்ற பரம்பொருளின் அம்சமே நிறைந்திருக்கிறது என்று அனைத்திலும் பேரின்ப வடிவையே காண்பர்.அவனின் பாதார விந்தங்களைப் பற்றினால் மனதிலுள்ள அழுக்குகள் நீங்கும். அதற்கு ஒரே வழி இறைவனின் நாமத்தை எந்நேரமும் சொல்லிக் கொண்டே இருப்பதுதான்.அருணகிரியார் முருகனிடம், :அப்பா, நான் கர்மவினையின் காரணமாக உன்னை மறந்து மாயையில் சிக்கித் தத்தளிக்கிறேன். செய்ய வேண்டியதைச் செய்யாமல் தவிக்கிறேன். அரை நிமிஷ நேரம் மட்டும் சரண கமலாலயத்தை நினைக்க முடியாத மூடன், மட்டி நான்” என்கிறார். இறைவனை நினைக்க, தவம் செய்யக் காட்டுக்குப் போக வேண்டியதில்லை.

    சீவனொடுக்கம் பூதனொடுக்கம் தேற உதிக்கும் பரஞான 
    தீபவிளக்கம் காண எனக்குன் சீதள பத்மம் அருள்வாயே “ என்று வேண்டுகிறார் அருணகிரியார். ஐம்புலன்களும் ஒடுங்கும் இடத்தில் ஞானஒளி தோன்றும். அது ஒடுங்கும் இடம் முருகனின் பாதார விந்தமே. உணவை யும், உடலையும் ஒதுக் குவதால் பலனில்லை. மனதை முருகனின் பாதங்களில் நிலை பெறச் செய்ய வேண்டும். அப்படி இருந்தால் பழவினைகள் நம்மைத் தீண்டாது. உலகத் துன்பங்கள் அண்டாது. கர்ம வினைகளைத் அனுபவித்துத் தீர்க்க வேண்டும். ஆனால் முருகா என்றால் அந்த வினை நம்மை அதிகம் துன்புறுத்தாது. 

    முருகனைத் தேடி அலைய வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே கந்தா என்று அழைத்தால் கடிது ஓடி வருவான் கார்த்திகேயன். தன் பக்தர்களின் இதயத்தில் வாசம் செய்யும் முருகன் குடி இருப்பது கோயிலில் அல்ல. அழைத்தவர் குரலுக்கு அவர் இருக்கும் இடம் தேடி ஓடி வருவேன் என்று மயில் மீதேறி வருகிறான் குமரன். காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரரை தன் குலதெய்வமாகக் கொண்டு வாழ்ந்த மருது பாண்டியரை தன் வசம் ஈர்க்க அவர் இருக்கும்  இடம் தேடி வந்தான் குன்றக்குடி குமரன்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி முருகன் கோயில். முருகனின் பிரார்த்தனைத் தலங்களில் முதன்மையானது குன்றக்குடி. மலையே மயிலாகக் காட்சி அளிப்பது இதன் சிறப்பு.
    முருகனின் வாகனமான மயில் அவரின் சாபத்தின் காரணமாக மலையானதாக புராணங்கள் கூறுகிறது. ஒருமுறை அசுரர்கள், பிரம்மாவின் வாகனமான அன்னமும், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனுமே வேகமாகப் பறக்கக் கூடிய வர்கள், மயிலைவிடச் சக்தி படைத்தவர்கள்  என்று பெருமை பேசியதாக மயிலிடம் போய்க் கூற கோபமடைந்த மயில் பிரமாண்ட ரூபம் எடுத்து அன்னத்தையும், கருடனையும் விழுங்கி விட்டது. 

    பிரம்மாவும், மகா விஷ்ணுவும் முருகனிடம் முறை யிட, கோபமடைந்த குமரன் மயிலிடமிருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்து, மயிலின் கர்வத்தை அடக்க, மலையாகப் போகும்படி சாபம் இட்டார். தன் தவறை உணர்ந்து மயிலும், குன்றக்குடி வந்து மலையாக மாறி முருகனை நினைத்துத் தவம் இருந்தது. தவறை உணர்ந்து, வருந்துபவர்களை மன்னித்து அருள்வது இறைவனின் இயல்பு அல்லவா? முருகனும் மயிலின் தூய்மையான தவத்தில் மகிழ்ந்து அதற்குச் சாப விமோசனம் அளித்தார். இந்த மலையின் மீதே எழுந்தருளி அருள் புரிந்தார். தன் நோயைத் தீர்த்த குன்றக்குடி முருகனின் ஆலயத்தை பெரிய மருதுவே செப்பனிட்டுக் கொடுத்தார். திருப்பணிகளைக் கவனிக்க இங்கே ஒரு அரண்மனையையும் நிறுவினார். 

    “வீர மருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே!
    ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே”- என்று குன்றக்குடி பாமாலை புகழ்கிறது. தீர்த்தக் குலத்தைச் செப்பனிட்டு, நான்கு புறமும் படித்துறைகள் கட்டினார். அது மருதாவூரணி என்று அழைக்கப் படுகிறது. பெரிய ராஜகோபுரம் பெரிய மருதுவால் கட்டப்பட்டதே. மூலவர் சன்னதியில் மயில் மண்டபம், உற்சவர் சன்னதியில் அலங்கார மண்டபம் கட்டி சுற்றுச் சுவர் எழுப்பினார்.
    உற்சவ மூர்த்திக்கு தங்கக் கவசம், தைப்பூச விழாவிற்கு தேர், காடன் செட்டியார் பெயரில் அன்னதான சத்திரமும் கட்டினார் பெரிய மருது. முருகனிடம் அளவில்லாத அன்பு செலுத்திய மருது சகோதரர்கள் உற்சவமூர்த்திக்கு எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தில் இரு தூண்களில் கை கூப்பியபடி சிலை வடிவாக நிற்பது என்றும் அழியாத கலைச் சின்னமாகும்.

    புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படும் குன்றக்குடி, மலைக்கோயில், கீழ்க்கோயில் என்று இருபகுதிகளாக உள்ளது.  மலைக்கோயிலின் நுழைவாசல் மயிலின் தோகைபோல் தோன்றுவதால் அங்குள்ள பிள்ளையார் தோகையடி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். படி ஏறும்போது இடும்பன் சன்னதி, வல்லப கணபதி சன்னதிகள் உள்ளது. மலைக் கோயில் வாசலில் முருகனின் படைத்தளபதி வீரபாகு காட்சி அளிக்கிறார். தெற்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மலி மீது வெளிப் பிரகாரம் மட்டும்தான் உள்ளது. அதில் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் சோமஸ்கந்தர், விசாலாட்சி சன்னதிகளும், வடகிழக்கில் நவக்கிரக சன்னதிகளும் உள்ளது.

    கருவறையில் சண்முகநாதர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார் முருகன். ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன், சுகாசன நிலையில்,வலதுகாலை மடித்து, இடதுகாலை தொங்கவிட்டு மயில் மீது அமர்ந்திருக்கும் காட்சி கண்ணுக்கு விருந்து.
    இங்கு தேவியர் இருவரும், முருகனின் இருபுறமும் தனித்தனியே மயில்கள் மீது வீற்றிருப்பது இத்தலத்திற்கே உள்ள சிறப்பு.  எனவே இங்கு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் இணைபிரியாமல் வாழ்வார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது. பல குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்குகிறான் குன்றக்குடி முருகன். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இங்கு வந்து காவடி எடுத்து நன்றி செலுத்துகிறார்கள்.

    வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்றவை இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து “முருகா, நீயே காப்பு” என்று தத்து கொடுக்கும் வழக்கம் இங்கு நிலவுகிறது.
    தவள மதிய மெறிக்குந் தணலாலே 
    சரச மதனன் விடுக்குங் கணையாலே
    திவளு மணிகள் கிடக்குந் திருமார்பா 
    திகழு மயிலின் மலைக்கண் -- - - - -பெருமாளே 
    என்று பாடுகிறார் அருணகிரியார்.

    சந்திரனின் ஒளியாலும், மதனன் விடுக்கும் கணையாலும் நான் மயக்கமடையலாமா? ஒளி வீசும் அழகிய மணி மாலைகளை அணிந்து மயூரகிரி மலை மீது வாழும் பெருமாளே உன்னை நினைப்பதே எனக்கு இன்பம் என்று பாடுகிறார். 
    “சாடும் சமரத் தனிவேல்” என்னும் பாடலில் மனமானது கண்டபடி சுற்றித் திரியும் இயல்புடையது, அப்படிப் பட்டவர்கள் தங்கள் மனதை முருகப்பெருமானின் திருவடி களில் நிலை பெறச் செய்ய வேண்டும். அறநெறிகளிலிருந்து மாறுபட்டவர்களையும், தீய வினைகள் புரிபவர்களையும் அழிக்கும் வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனை நினைப்பவர்கள், அனைத்து யுகங்களும், உலகமும், முடிவுற்ற பின்னரும்,ஆடல் வல்லான் ஆனந்தத் தாண்டவம் நடத்தும் இறுதிக் காலத்திலும் மேன்மையுடன் விளங்குவார்கள் என்கிறார்.

    “சாடும் தனிவேல் முருகன் சரணம் 
    சூடும்படி தந்தது சொல்லுமதோ 
    வீடும் சார்மாமுடி வேதமும் வெங் 
    காடும் புனமும் கமழும் கழலே” என்கிறார் கந்தர் அனுபூதியில்.
    பரம்பொருளின் இலக்கணத்துடன், உருவம் இன்றியும், உருவமுடனும், இதுதான் என்று கூற இயலாத தனிப்பொருள் முருகன். தேவர்களால் துதிக்கப்பட்ட நின் சரணார விந்தங்களை என் தலைமேல் வைத்து அருளிய நின் கருணைக்கு நான் எப்படி நன்றி செலுத்துவேன் என்று உருகுகிறார்.

    குன்றக்குடி முருகனை நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், அவன் எந்நேரமும் நம்மைக் காக்கும் எண்ணத்துடன் இருக்கிறான். தன் அடியவர்கள் மூலம் நம்மை ஆட்கொள்ள தன்னிடம் இழுக்கிறான். பெரிய மருதுவை தன்னிடம் ஈர்த்தது போல் நம்மையும் அவனிடம் இழுத்துக் கொள்கிறான்.

    அவனின் கருணையை நாம் உணராதிருந்தாலும், கந்தனே நமக்கு அதைக் காட்டி அருளுகிறான். அவனின் சரணம் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. உயிர்க் காற்றாய் அவனின் நாமமே எங்கும் நிறைந்திருக்கிறது. காற்று இல்லாமல் சுவாசிக்க முடியாது என்பதைப் போல் முருகனின் நாமம் இல்லாவிட்டால் நாமும் இல்லை. உலக இயக்கமும் இல்லை. குன்றக்குடி முருகன், நோய் தீர்க்கிறான். கல்யாணத் தடையை நீக்குகிறான். நம் அனைத்து வினைகளையும் நீக்கி தன் கரங்களுக்குள் நம்மை வைத்துக் காக்கிறான்.

    ஒருமுறை சிவகங்கை சீமையை அரசாண்ட மருது சகோதரர்களில் பெரிய மருதுவுக்கு முதுகில் ராஜபிளவை என்ற கட்டி வந்தது. எத்தனை வைத்தியம் செய்தும் பலனில்லை. அப்போது, முருக பக்தர் ஒருவர் வந்து நீறு பூசினால் சரியாகும் என்று கூற, காடன் செட்டியார் என்பவர் வந்து குன்றக்குடி முருகனை நினைத்து நீறு பூச, பிளவை சரியானது. சுற்றிலும், புதர் மண்டிக் கிடந்த கோயிலை நன்றியுடன் பெரிய மருதுவே செப்பனிட்டு, திருப்பணிகள் செய்து கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

    Next Story
    ×