என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கத்தில் மீன்வளத்துறை சார்பில் விழா நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதியில் கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இருமாநில அரசுகளும் பேச்சு வார்த்தை மூலம் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.
42 கி.மீ. கடற்கரையை நீல பொருளாதார மண்டலமாக மாற்ற புதுவையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அந்தளவு மத்திய அரசு புதுவை மீது அக்கறையும், பாசமும் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கவர்னர் தமிழிசை பேசும்போது, முட்டை அசைவமா? சைவமா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது.
அதேபோல மீனை சாப்பிடாதோர் அசைவம் என்றும், சாப்பிடுவோர் சைவம் என்றும் சொல்கின்றனர். எனக்கு பிடித்த உணவு மீன். என்னை பொருத்த வரை மீனை சைவத்தில் சேர்க்கலாம். இதனால் மீனவர்களின் வாழ்வு மேம்படும் என்றார்.
- மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபிஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.
இவர் தனது மனைவி சுஷ்மிதா மற்றும் குடும்பத்தினர்-உறவினர்கள் 10 பேருடன் புதுவைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார்.
இவர்கள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பகுதியில் தனி வீடு எடுத்து தங்கி புதுவையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தனர். நேற்று மாலை அவர்கள் தங்களது 2 கார்களில் புதுவை அருகே பூ.புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.
கடற்கரையில் அபிஷேக் தனியாக நடைபயிற்சி சென்றார். மற்றவர்கள் கடல் அலையில் காலை நனைத்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அபிஷேக் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சுருண்டு விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபிஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும்.
- இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் , காரைக்கால் மதகடியில் அமைந்துள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட அமைச்சர், ஒரு சிலர் காலதாமத்துடன் வருகை தருவதாக கூறப்படுகிறது. இனி, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும். காலதாமதத்துடன் வந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
மேலும், அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பொதுமக்கள் சிலர் நிற்பதை பார்த்த அமைச்சர், அவர்கள் ஏன் காத்துகிடக்கிறார்கள்? அவர்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து உடனுக்குடன் அவர்களை அனுப்பி வைக்கவேண்டும். இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது. முக்கியமாக, பொதுமக்களிடமிருந்து எனக்கு எந்தவித குறைகளும் வராத வண்ணம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும் என்றார்.
- குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்கள் கடற்கரை மற்றும் சாலையோரம் இளநீர், சோளம், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3 வயதில் பெண் குழந்தையும், 2½ மாதங்களே ஆதித்யா என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இவர்கள் மிஷின் வீதியில் உள்ள ஜென்மராகினி கோவில் அருகே சாலையோர உள்ள பைக் வாடகை விடும் கடை வாசலில் படுத்து தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு தனது குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கினர். ஆனால் காலையில் பார்த்த போது குழந்தை ஆதித்யாவை காணவில்லை. இதனால் அவர்கள் திடுக்கிட்டனர். அங்குள்ள இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சோனியா பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுஷ்மிதா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
- சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் மனோகர், விவசாயக் கூலி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 21). இவர் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார். விடுமுறைக்கு காரைக்கால் வந்த சுஷ்மிதா கடந்த 26-ந் தேதி காலை புதுச்சேரி புறப்பட்டு சென்றுள்ளார். புதுச்சேரி சென்றவுடன் தந்தைக்கு போன் செய்து புதுச்சேரி வந்து விட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. பல மணி நேரம் முயற்சி செய்த தந்தை, சுஷ்மிதாவின் தோழிகளுக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது, சுஷ்மிதா கல்லூரிக்கும் மற்றும் ஹாஸ்டலுக்கும் வரவில்லை. என கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மனோகர், திருநள்ளாறு போலீசில் புகார் செய்து, உடனடியாக தனது மகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தியுள்ளார்.
- உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 3 நாட்களாக ராஜ பாண்டி கடையை திறக்க வில்லை.
- ஜெகதீசன், பேனை உடைத்து தனி தனி பகுதியாக மாற்றி மீண்டும் விற்பதற்காக சென்றதை பார்த்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலை யைச்சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர், நல்லாத்தூர் சாலை யில் காய்கறி கடை நடத்தி வருகிறார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 3 நாட்களாக ராஜ பாண்டி கடையை திறக்க வில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று காலை கடையை திறந்தபோது, கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் மதிப்பிலான டேபி ள்பேன் காணாமல் போயி ருந்தது. மேலும் கடையின் பின் வாசல் திறந்து கிடப்பது தெரியவந்தது.
மேலும், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, நெடு ங்காடு பஞ்சாட்சபுரத்தை ச்சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஒரு டேபிள் பேனை எடுத்து சென்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து, நெடுங்காட்டில் உள்ள பழைய இரும்பு கடைகளில் சென்று விசாரித்தபோது, ஜெகதீசன் என்பவர் பேனை விற்க வந்ததாகவும், தாங்கள் வாங்க வில்லை யென தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, ஜெகதீசன், பேனை உடைத்து தனி தனி பகுதியாக மாற்றி மீண்டும் விற்பதற்காக சென்றதை பார்த்துள்ளார். தொடர்ந்து, ராஜபாண்டி ஜெகதீசனை பிடுத்து, நெடுங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தார். ராஜ பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து ஜெகதீசனை கைது செய்து, பேனின் உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர்.
- அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
- சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை சாமிபிள்ளை தோட்டம் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது 57) டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி காளியம்மாள் (எ) காஞ்சனா (வயது 42) இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் மகன் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
குடிபழக்கத்திற்கு அடிமையான முத்துகுமரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி பிள்ளைகளை பிரிந்து சென்றுள்ளார். தற்போது பிளாட்பாரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று புதுவை வெள்ளாழர் வீதி பேங்க் ஆப் பரோடா அருகில் உள்ள வாய்க்காலில் முகத்தில் சிராய்ப்பு காயத்துடன் பின் தலையில் அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நள்ளிரவு பைக்கில் வந்த 3 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த முத்துகுமரனின் பாக்கெட்டில் பணம் ஏதாவது இருக்கிறதா என கைவிட்டு பார்க்கின்றனர்.
உடனே சுதாகரித்துக் கொண்டு எழுந்த முத்துகுமரன் அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடனே அவர்கள் 3 பேரும் சரமாரியாக அவரை கையால் தாக்குகின்றனர். பின் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர். மயங்கி முத்துகுமரன் அங்கே விழுந்து கிடக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
எனவே அவர்கள் 3 பேரும் அடித்ததில் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து கொலை செய்த 3 பேரையும் போலீசார் பைக் எண்ணை வைத்து தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- புதிய செவிலியர்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் போட்டித்தேர்வு நடத்துவதற்கான பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.
- கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு என் கையில் இருந்தால் செய்து விடுவேன்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா தொற்று காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 250-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த 2020- ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர்.
வாய்ப்பு இருந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு ஆலோசிப்பதாக பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதிய செவிலியர்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் போட்டித்தேர்வு நடத்துவதற்கான பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.
நியமன விதிகளை தளர்த்தி, நேரடியாக தங்களை நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை.
இதனால் சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க நேற்று 100-க்கான ஒப்பந்த செவிலியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வாயில் முன்பு முற்றுகையிட்டனர். அங்கு வந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் தி.மு.க.
எம்.எல்.ஏ.க்கள் ஒப்பந்த செவிலியர்களை அழைத்து பேசினர். சில செவிலியர்களை மட்டும் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர்.
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பாதிக்கப்பட சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் காரணம் என்று தி.மு.க.
எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அப்போது அவர்களிடம் முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில்,
"முன்பு இருந்த நிர்வாகம் வேறு. தற்போது இருப்பது வேறு. கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை ஒப்பந்தம் முடிந்ததும் பணியில் இருந்து விடுவிக்கலாம் என அதிகாரிகள் கூறினர். நான் தான் 3 மாதங்களுக்கு ஒரு முறை பணி ஒப்பந்தத்தை நீட்டித்து தருகிறேன்.
இங்கு 18 ஆண்டுகளாக பணிபுரிந்தோருக்கே ஏதும் செய்ய முடியவில்லை. உங்களிடம் சொல்வதற்கு சங்கடமாகத்தான் உள்ளது. முதலமைச்சர் இருக்கையில் ஏன் உட்கார்ந்திருக்கிறோம் என்று எண்ணுகிறேன். முதலமைச்சர் சொன்னால் முன்பெல்லாம் நடைபெறும்.
இப்போது அதுபோல் செய்ய முடியாது. விழாவுக்கு சென்றாலே, கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. பல அதிகாரிகள் வி.ஆர்.எஸ். தரக்கூறுகிறார்கள். மின்துறையில் விடுப்பு எடுத்து சென்று விட்டனர்
புதிதாக ஆட்கள் எடுத்தால், கொரோனா காலத்தில் நீங்கள் பணி புரிந்ததற்காக வெயிட்டேஜ் செய்கிறோம். அதுதான் செய்ய முடியும்.
கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு என் கையில் இருந்தால் செய்து விடுவேன். அது முடியவில்லை. இதை புரிந்து காத்திருங்கள்" என்றார்.
- புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது.
- கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர்.
புதுச்சேரி:
நர்சுகள் தேர்வில் தற்காலிக நர்சுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல்பாடு குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இதன்பின் எதிர்கட்சித் தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை நிரப்ப முடியவில்லை. இதற்கு அதிகாரிகள்தான் தடையாக உள்ளனர்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது புதிதாக ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அரசு செயலர், தலைமை செயலர் நர்சுகளை பணி நிரந்தரம் செய்வதை தடுக்கின்றனர்.
முதலமைச்சரிடம் நர்சுகளோடு சென்று கோரிக்கை வைத்தோம். அப்போது முதலமைச்சர், எதையும் செய்ய முடியவில்லை.
தற்காலிக செவிலியர்களுக்கே 3 மாதத்திற்கு ஒரு முறை சம்பளம் வழங்க முடியவில்லை. இவர்களை ஏன் பணியில் வைத்துள்ளீர்கள்? என அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.என மன உளைச்சலை முதலமைச்சர் கொட்டியுள்ளார். அவர் செய்ய நினைத்ததை அவரால் செய்ய முடியவில்லை.
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்த முதலமைச்சர் பின்பக்கமாக போய்விடலாமா? என சொல்லும் அளவுக்கு முதலமைச்சரையும், தேர்வு செய்த அரசையும் மதிக்காமல் தனி அரசு நடத்தி வருகின்றனர். மக்கள் கோரிக்கைகள், சட்டமன்ற அறிப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. செவிலி லயர்களுக்கு ஒரு ஆண்டுக்குகூட பணி வழங்க முடியவில்லை.
முதலமைச்சர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் எதையும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.
இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், வாக்களித்த மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. புதுவை மக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் இதற்கு நல்ல பதில் கிடைக்கும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் புதுவையில் எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார். எல்லா கோப்புகளிலும் அவர் எடுக்கும் முடிவுப்படிதான் நடக்கிறது. பா.ஜனதா அளித்த வாக்குறுதிப்படி புதுவைக்கு இதுவரை எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவல் வந்தது.
- ரூ.1500 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திரு.பட்டினம் மலையன் தெருவில் ராஜேந்திர பிரசாத் நடத்திவரும் கடையில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.1500 மதிப்பிலான அப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.
- பயிற்சியின்போது பெண் போலீசாருக்கு பயிற்சி கொடுத்த சிலர் பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
- பயிற்சி காலத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 2022-ம் ஆண்டு 131 பெண் மற்றும் 252 ஆண் போலீஸ்காரர்கள் என மொத்தம் 383 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த போலீசார் தற்போது போலீஸ் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பயிற்சியின்போது பெண் போலீசாருக்கு பயிற்சி கொடுத்த சிலர் பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர், போலீஸ்துறை உயரதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆண் போலீசாருக்கு பயிற்சி கொடுக்க நியமிக்கப்பட்ட 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசாரை அணிவகுப்பின்போது தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரும், விசாரிக்கும் நபரும் ஒரே பகுதி(மாகி)யை சேர்ந்தவர்கள் என்பதால் புகார் விசாரிக்கப்படவில்லை.
பயிற்சி காலத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு செல்போன் வழங்கினர்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் பயிற்சி பள்ளியில் விசாரித்தபோது, பயிற்சி முடித்து சென்ற சிலர் அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் மொட்டை கடிதம் எழுதி போட்டுள்ளனர்.
பயிற்சி நிறைவு பெறும் முன்பு பெண் போலீசாரிடம் இதுகுறித்து தனித்தனியே விசாரிக்கப்பட்டது. அப்போது யாரும் நேரடியாக புகார் தெரிவிக்க முன்வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் உண்மை தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது.
- 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில் போடப்பட்ட புதிய சாலை, பொது மக்களின் புகாரையடுத்து, ஆய்வு செய்த தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன், தரம் இல்லையென புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில், அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி அரசு பாட்கோ நிறுவனம் மூலம், சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
இரவோடு இரவாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, சாலையின் பல பகுதிகள் பெயர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாக.தியாகராஜன், எம்.எல்.ஏ. பொதுமக்கள் முன்னிலையில், புதிய சாலையை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில், 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. என்றார்.
அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் 4 செ.மீ. இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், மேலும் கோபம் அடைந்த எம்.எல்.ஏ., தனது உதவியாளரை வரவழைத்து, அரையடி ஸ்கேல் ஒன்றை வாங்கி, சாலையின் தரத்தை, அதாவது 2 செ.மீ. இருப்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறி, முறையாக 4 செ.மீ தரம் கொண்ட சாலையை போடவில்லையென்றால், சாலைக்கான ஒப்பந்த தொகை வழங்க விடமாட்டேன் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






