என் மலர்
புதுச்சேரி
- 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சேதராப்பட்டு:
புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் சையது அமீர். இவர் சம்பவத்தன்று சின்ன கோட்டை குப்பம் கறிக்கடை சந்தில் நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அமீரிடமிருந்த பணத்தை பறித்துச்சென்ற அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து அமீரிடம் பணம் பறித்தவர்களை அடையாளம் காண அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டார்.
அதில் அமீரிடம் பணம் பறித்தவர்கள் சின்னக்கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற பிக்க்ஷா (வயது 22), ஆறுமுகம் (26) என்பது தெரிய வந்தது. ரவுடிகளான விஜி என்கிற பிக்க்ஷா மீது சின்னக்கோட்டகுப்பம் பகுதியில் 2021-ம் ஆண்டு நடந்த செல்வகுமார் கொலை வழக்கு, ஆறுமுகம் மீது அவரது அண்ணனையே கொலை செய்த வழக்கும் உள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
- இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.
- வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்தசாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், டெல்டா மாவங்களில் கனமழையின் காரணமாக, இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், குறைவான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை மிக எளிமையாக அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
- மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
- வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அது புயலாக மாறி 4-ந்தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை புயல் நெருங்கும் என வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை மறுநாள் 3-ந்தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
4-ந் தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனையெட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு 30-ந்தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அந்தந்த கிராம மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.
இதுமட்டுமில்லாமல், மீன்வளத்துறையிலிருந்து புதுவை பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களின் செல்போன் எண்ணிற்கும் இந்த வானிலை எச்சரிக்கை தனித்தனியாகவும் குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே புதுவை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடி அறை எடுத்து தங்கினர்.
அப்போது அந்த விடுதி படுக்கை அறையில் எலெக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்சில் இன்டர்காம் பிளக் பாயின்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு காதல் ஜோடியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காதல் ஜோடியினர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் விடுதி அறையில் சோதனை செய்தபோது பல காதல் ஜோடிகள் தனிமையாக இருந்ததை வீடியோ எடுத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார் மற்றும் விடுதி மேலாளர் இருதய ராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விடுதி அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்தது விடுதி ஊழியர்களான தேங்காய் திட்டு வசந்தம் நகரை சேர்ந்த ஆனந்து (25), அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த ஆபிரகாம் (21), என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான ஆனந்து, ஆபிரகாம் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் கோவாவில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
- சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா இருந்து வந்தார். அவரை கடந்த அக்டோபர் 8-ந் தேதி டிஸ்மிஸ் செய்ய கவர்னர் தமிழிசையிடம் முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அளித்தார்.
இதை அறிந்த சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்காததால் இந்த விவகாரம் புதுவை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 13 நாட்களுக்கு பிறகு சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
இதனிடையே காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
ஆனால் அமைச்சர் நீக்கத்துக்கு காலதாமதம், சர்ச்சை எழுந்ததால் புதிய அமைச்சர் உடனடியாக நியமிக்கப்படவில்லை.
தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை புதிய அமைச்சர் நியமனத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை.
புதுவை அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் தலா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு விட்டதால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அமைச்சர் இல்லை. தாழ்த்தப்பட்டோர், காரைக்கால் பிராந்தியம், பெண் என்ற 3 அம்சங்களும் பொருந்தும் வகையில்தான் சந்திரபிரியங்காவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அவர் பதவி நீக்கத்தால் சட்டசபையில் இடம் பெற்றிருந்த ஒரே பெண், காரைக்காலுக்கான முக்கியத்துவம் இழந்துள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு 6 மாதமே உள்ளதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சராக நியமித்தால் காரைக்கால் பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் கிடைக்காது. காரைக்காலுக்கு முக்கியத்துவம் அளித்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இதனை பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரசார யுக்தியாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கலாம் என என்.ஆர்.காங்கிரசார் முதலமைச்சர் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனாலேயே புதிய அமைச்சர் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 2011-ம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் பதவியை ராஜினாமா செய்தார். அப்போதும் முதலமைச்சர் ரங்கசாமி புதிய அமைச்சரை உடனடியாக நியமிக்கவில்லை. அமைச்சர் பதவிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில்தான் புதிய அமைச்சரை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் பீச் ரிசார்ட் ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் செய்யும் திருவிழா நடந்தது.
40 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை கொண்டு கலவையாக கேக் தயாரிக்க ஊற வைக்கப்பட்டது.
இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். ரிசார்ட் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
ஊறவைத்த கலவை 40 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.
அந்த கேக் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வரை பரிமாறப்பட உள்ளது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வீழிவரதராஜப்பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் மனைவி வஹிதா ரகுமான்(வயது58). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, செய்யது இப்றாஹிம் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இதனால், வஹிதா ரகுமானுடன், தங்கை ரஹமத் நிஷா(49) மற்றும் தாய், தந்தை சகோதரனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக, தங்கை ரஹமத் நிஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து, வஹிதா ரகுமான் நேற்று முன்தினம் மாலை, தங்கை ரஹமத் நிஷாவை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திருக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ரஹமத் நிஷா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து, திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது.
- நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் கடந்த 9.01.2014-ல் புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் தனது போலியான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை கொடுத்து பிரெஞ்சு குடியுரிமை பெற சிலர் முயற்சிப்பதாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது. மேலும் சோலைநகரை சேர்ந்த சாரங்கபாணி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட ஆரோக்கிய நாதன், சாரங்கபாணி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
புதுச்சேரியில் போலியான ஆவணங்கள் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தவர்களுக்கு முதல்முறையாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவிலில், வருகிற டிசம்பர் 20ந் தேதி 3 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனி பெயர்ச்சி விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போலீசார் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்து வருகிறார்கள். எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் காரை க்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேற்று இரவு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழா குறித்து, புதுச்சேரி முதல்-அமைச்சர் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பெயர்ச்சி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், போலீஸ் தரப்பில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.விழாவில் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு, சுமார் 1400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 150-க்கும் மேற்பட்டசி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரும் பக்தர்களுக்கு மாவட்டம் முழுவதும் இலவச பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 7 மண்டலங்களாக பிரித்து போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் பக்தர்கள் பாதுகாப்பாக, நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு, கண்காணிப்பு, வழிகாட்டுதல் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 23-ம் தேதிவரை கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு காவல்துறை பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும்.
புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கிணைந்து இந்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதியிலிருந்து இலவச பஸ்களை அரசு இயக்க உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத வகையில் ட்ரோன் காமிராக்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. காவல்துறை மூலம் "மே ஐ ஹெல்ப் யூ" பூத்கள் பல இடங்களில் நிறுவப்படும். இதில் பல மொழிகள் தெரிந்த போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.சனிப்பெயர்ச்சியை முன் ஏற்பாடுகள் தவிர, சட்டம் ஒழுங்கு நடவடிக்கை, சைபர் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், போதைப்பொருள் ஒழிப்பிலும் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு பல்வேறு வழக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதல் காலி உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். மேலும், கல்வித்துறையில் தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வது தற்காலிக நடவடிக்கைதான். புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்து, அரசாணை வெளிவந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் இணைய கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகும். இந்த 3 மாதங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல், வலுப்பெறுவதற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது. மிக விரைவில் கல்வித்துறையில் அத்தனை காலியிடங்களை நிறைவாக பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன்(தெற்கு) மற்றும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
- மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.
- தற்போது இறந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜியின் குடும்பத்துக்கும் இதே போன்று நிவாரணம் வழங்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு மாத்தூர் சாலையில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.
இதில், அங்கு வேலை பார்த்த 14 தொழிலாளர்கள் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்களுக்கு, உடனடியாக பிம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், 11 பேர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர். 3 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதில் புதுச்சேரி பிருந்தாவனம் 3-வது குறுக்கு தெரு வெங்கடாசலம், காலாப்பட்டை சேர்ந்த ரகுபதி, யுவராஜ், கிளியனுார் அடுத்த தென் சிறுவலுாரை சேர்ந்த நெடுஞ்செழியன் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் தமிழக பகுதியான கிளியனூரை அடுத்த தென் சிறுவலூரை சேர்ந்த நெடுஞ்செழியன், (34) சிகிச்சை பலனின்றி கடந்த 11-ந் தேதி இரவு இறந்தார்.
இந்த நிலையில் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜ் (வயது 18) சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.
மேலும் நெடுஞ்செழியன் மனைவிக்கு தொழிற்சாலையில் நிரந்தர பணி வழங்கவும், அவரின் 2 மகன்களின் கல்லூரி படிப்பு செலவையும் ஏற்கவும் ஒப்புக்கொண்டது.
அதன்படி தற்போது இறந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜியின் குடும்பத்துக்கும் இதே போன்று நிவாரணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன்.
- இணையதள பயன்பாட்டாளர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் நடந்த பழங்குடியினர் விழாவில் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது குறித்து 2 துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்துதான் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது போல் செய்திகள் வருகிறது. அது தவறானது.
நான் ஆந்திராவில் 6 பழங்குடியின கிராமங்களை தத்து எடுத்துள்ளேன். அங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன். இப்படி இருக்கையில் நான் எப்படி பழங்குடியினரை அரசு விழாவில் தரையில் அமர வைத்ததற்கு காரணமாக இருக்க முடியும்?
எனது ஆளுமைக்குட்பட்ட புதுவையில் இத்தகைய நிகழ்வு நடந்திருக்கவே கூடாது. அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இது குறித்து இணையதள பயன்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.
நாங்கள் மேடையின் கீழ் அமர்ந்திருந்ததால் எங்களுக்கு பின்னால் அவர்கள் அமர்ந்திருந்ததை பார்க்க முடியவில்லை. மக்களுக்கு தவறான தகவல்கள் சென்று விடக்கூடாது.
புதுவையில் நான் சூப்பர் முதல்வர் என செய்திகள் வருகிறது. நான் சூப்பர் முதல்வர் இல்லை. ரங்கசாமி தான் சூப்பர் முதல்வர். நான் தினமும் என்னை பற்றி என்ன செய்தி வந்திருக்கிறது என பார்ப்பதில்லை. குறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தால் துறை அதிகாரிகளிடம் பேசி, புதுவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைதான் பார்ப்பேன்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் 5500 ஹெக்டர் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் நன்றாக முளைத்து வரும் நிலையில், மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் முறைப்படி வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால், சுமார் 4300 ஹெக்டேரில் பயிர்கள் சேதமடைந்துள்ளது.வடிகால் வாய்க்கால்க ளை போர்க்கால அடிப்படை யில் தூர்வாரவே ண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை யிடம் முறையிட்டும், வேணாள்துறையை நடவடிக்கை எடுக்க வலியுறு த்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பாதிப்பிற்குள்ளாகிய செல்லூர் பகுதி விவசாயி கள், வடிகால் வாய்க்காலை தூர்வாராத பொதுப் பணித்துறையையும், கண்டுகொள்ளாத வேளாண்துறை யையும் கண்டித்து, வடிகால் வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, போர்க்கா ல அடிப்படையில் வடிகால் வாய்க்கால்களை உடனே தூர்வாரி, வயல்களில் தேங்கியுள்ள அதிகப்படி யான மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மாவட்ட வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






