search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் பலி
    X

    புதுச்சேரி காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் பலி

    • மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.
    • தற்போது இறந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜியின் குடும்பத்துக்கும் இதே போன்று நிவாரணம் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பெரிய காலாப்பட்டு மாத்தூர் சாலையில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், அங்கு வேலை பார்த்த 14 தொழிலாளர்கள் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்களுக்கு, உடனடியாக பிம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில், 11 பேர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர். 3 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதில் புதுச்சேரி பிருந்தாவனம் 3-வது குறுக்கு தெரு வெங்கடாசலம், காலாப்பட்டை சேர்ந்த ரகுபதி, யுவராஜ், கிளியனுார் அடுத்த தென் சிறுவலுாரை சேர்ந்த நெடுஞ்செழியன் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் தமிழக பகுதியான கிளியனூரை அடுத்த தென் சிறுவலூரை சேர்ந்த நெடுஞ்செழியன், (34) சிகிச்சை பலனின்றி கடந்த 11-ந் தேதி இரவு இறந்தார்.

    இந்த நிலையில் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜ் (வயது 18) சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில், மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.

    மேலும் நெடுஞ்செழியன் மனைவிக்கு தொழிற்சாலையில் நிரந்தர பணி வழங்கவும், அவரின் 2 மகன்களின் கல்லூரி படிப்பு செலவையும் ஏற்கவும் ஒப்புக்கொண்டது.

    அதன்படி தற்போது இறந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜியின் குடும்பத்துக்கும் இதே போன்று நிவாரணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×