என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர்.
    • முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் உத்தரபிரதேச மாநில உதயநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தியுள்ளார். இது முழுமையாக அரசு நிகழ்ச்சி. இதில் அரசு அதிகாரிகள் பங்கேற்காமல் யார் பங்கேற்பது?

    தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் கலந்து கொள்ளும்போது நாம் என்ன சொல்கிறோம்? வளர்ச்சியடைந்த பாரத் திட்டம் அரசின் திட்டம் மட்டுமல்ல, யாருக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லையோ அவர்களும் பயன்பெறும் வகையில் பதிவு செய்யும் நிகழ்ச்சி.

    அது விளம்பர நிகழ்ச்சி அல்ல. மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்களா? தமிழகத்தில் நான் முதலமைச்சர் நிகழ்ச்சி திட்டமே, விக்சித் பாரத் திட்டம்தான்.

    மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதில் அதிகாரிகளை பயன்படுத்த கூடாதா?

    தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர். நான் என்ன கட்சி நடவடிக்கையில் ஈடுபடுகிறேன்.? மக்களுக்கான நலனில்தான் ஈடுபடுகிறேன். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்த திட்டங்கள் குறித்து பட்டியல் கொடுத்துள்ளார். மத்திய அரசின் திட்டம் குறித்து நான் பட்டியல் கொடுத்துள்ளேன். புதுச்சேரியில் எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சியினர் பட்டியல் தரட்டும்.

    கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை திறந்தார்கள் என அயோத்தி கோவில் பற்றி பல விமர்சனங்கள் வருகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, புதிய சட்டசபை கட்டிடத்தை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அப்போது அதற்கு மேற்கூரையே போடவில்லை. தற்காலிக செட் அமைத்து திறந்தனர்.

    முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர். ராமர் கோவில் திறப்பையும் அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் தயவு செய்து குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். கவர்னர் விருந்தாக பார்க்க வேண்டும், அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம்.

    ராமர் கோவில் 500 ஆண்டுகள் எதிர்பார்த்த நிகழ்வு. மத்திய அரசு நேரடியாக ஒளிபரப்பியதை எல்லோரும் பார்த்து பரவசம் அடைய வேண்டும் என்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளைத்தான் பிரித்தீர்கள். ராமன், முருகன், பிள்ளையாரை பிரித்து விடாதீர்கள்.

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி, நான் உட்பட எல்லா சாமியும் ஒன்றாக இருக்கிறோம். விடுமுறையை வைத்து பக்தியை எடை போடாதீர்கள். எல்லோரும் சேர்ந்து பக்தியோடு கொண்டாடுவோம்.

    வட சென்னை எம்.பி. தொகுதியில் போட்டியிடப் போவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நானே உங்களை அழைத்து தகவல் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.
    • புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம்.

    புதுச்சேரி:

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை 2008-ம் ஆண்டு எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

    பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.

    பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.

    புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார்.
    • புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார். தொடர்ந்து மாலையில் ராஜ் நிவாசில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளிக்கிறார்.

    இதற்கான அழைப்பிதழ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் கவர்னர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் எங்கள் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று உள்ளோம்.

    ஆனால் சமீப காலமாக புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.

    ஆகவே, கவர்னர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை தி.மு.க. புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
    • புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கனகசெட்டிகுளம் மூலம் புதுக்குப்பம் வரை 31 கி.மீ. கடற்கரை உள்ளது.

    ப்ரோமனேட் கடற்கரை, பாண்டிமெரினா, சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. சுனாமிக்கு பிறகு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டப்பட்டது.

    இதனால் கடலில் இறங்கி விளையாட முடியவில்லை. புதிய தொழில்நுட்பத்தில் ரூ.25 கோடியில் தலைமை செயலகம் எதிரே கூம்பு வடிவ அமைப்பு கடலில் இறக்கப்பட்டதால் செயற்கை மணல் பரப்பு உருவானதால் கடல் மணலில் இறங்கி சுற்றுலா பயணிகள், விளையாடி மகிழ்கின்றனர்.

    ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த 5 ஆண்டில் 4 கடற்கரைகளில் மட்டும் 67 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதல் 7 பேர் இறந்துள்ளனர். கடலில் மூழ்கி சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உயிரிழப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். இதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    வெறும் உத்தரவு மட்டும் உயிரிழப்பை தடுக்க முடியாது என்பதால் மாவட்ட நிர்வாகம் தடையை மீறி கடலில் இறங்கி குளித்தால் அபராதம், தண்டனை விதிக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான பரிந்துரை சுற்றுலா துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்தது.
    • வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குப்பட்ட உப்பனாரு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குமாடி வீடு சரிந்து துண்டாக விழுந்து விபத்துக்குள்ளானது.

    உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்துள்ளது.

    இந்த வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சரிந்து விழுந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.

    வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22-ந்தேதி அன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சில மாநிலங்களில் ராமர் கோவில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    உள்நாட்டில் மட்டுமல்ல சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

    சில மாநிலங்களில் ராமர் கோவில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22-ந்தேதி அன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 22-ந்தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வரும் 22-ந்தேதி பொது விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ், தி.மு.க. இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வின் கண்டனத்திற்கு பதில் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனமாக உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் சார்பில் நடந்த நல்லிணக்க பொங்கல் விழாவில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வை அழைத்து பாராட்டியதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் அந்த விழாவில், 2026 சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை எம்.எல்.ஏ.வுக்கு சீட் கிடைக்காவிட்டால், கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என காங்கிரஸ் தலைவர்கள் பேசியுள்ளனர். கூட்டணியை முடிவு செய்ய புதுவை மாநில தலைவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? என தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியுள்ளனர். தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா, தி.மு.க. தனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ், தி.மு.க. இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், தி.மு.க.வை பொது வெளியிலோ, கூட்டங்களிலோ விமர்சிக்கக்கூடாது என்றும், தி.மு.க.வுக்கு எதிர்ப்பான கருத்துக்களை சமூகவலை தளங்களில் பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வின் கண்டனத்திற்கு பதில் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனமாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் புதுவையில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், அதிருப்தி வெற்றியை பாதிக்கும் என காங்கிரசார் அஞ்சுகின்றனர்.

    • புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா-என்.ஆர். காங்கிரஸ், கூட்டணியில் பா.ஜனதா, வேட்பாளரை நிறுத்த உள்ளது.

    அதுபோல, காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. தமிழகத்தை பின்பற்றி அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுடன் 3-வது அணியாக களம் இறங்க உள்ளது.

    காங்கிரஸ்., கட்சியை பொறுத்தவரை, கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ்., தலைவராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார். நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட மூத்த நிர்வாகிகள் பலரும் சீட் கேட்கின்றனர்.

    இந்நிலையில், வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு குழுவின் தலைவர் ஹரிஷ் சவுத்ரி நேற்று புதுச்சேரி வந்துள்ளார்.

    அவரை தொடர்ந்து, புதுச்சேரிக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமாரும் இன்று புதுச்சேரிக்கு வருகிறார்.பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் அஜோய்குமார் முதன் முதலாக புதுச்சேரிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் அஜோய்குமார், ஹரிஷ்சவுத்ரி ஆகியோர், வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்கின்றனர்.

    இதனால் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

    தங்களுக்கு சீட் கேட்டு வலியுறுத்த திட்டமிட்டுள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் தி.மு.க., காங்கிரசார் இடையே கருத்து சர்ச்சையால் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட குழு விசாரணை நடத்தும் என்று கூறப்படுகிறது.

    • உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது.

    தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்- இல் பிரமாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு நேற்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். 

    வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

    லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

     டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

     இந்த மியூசியத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலா பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார். 

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
    • புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் வருகிற 14-ந் தேதி முதல் உரிய முறையில் உழவாரப் பணி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் சிவசங்கரன், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கோவில் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் குறிப்பாக புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் வருகிற 14-ந் தேதி முதல் உரிய முறையில் உழவாரப் பணி செய்ய வேண்டும்.

    கோவில் உட்புறம், பிரகாரம், சுற்றுப்புறங்கள், சுவர்கள், துாண்கள் மற்றும் சிலைகளை உரிய வகையில் தூய்மைப்படுத்த வேண்டும்.

    அவ்வாறு தூய்மை செய்யப்பட்ட கோவில் பிரகாரங்கள், சாமி சிலைகளின் புகைப்படங்களை 'வாட்ஸ் ஆப்' மூலம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 22-ந்தேதி நடக்க உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை, பக்தர்கள் அனைவரும் காணொலி மூலம் காண வசதியுள்ள கோவில்களில், அன்று பகல் 12.00 மணி முதல் பகல் 2.30 மணி வரை உச்சி கால பூஜை நடை சாத்தப்பட்டு, பிரகாரம் மற்றும் உள் மண்டபங்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு.

    தமிழகத்தில் நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தொடர் கனமழை எதிரொலி மற்றும் நாளை கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

    • வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெல்லித்தோப்பு டி.ஆர்.நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). இவர்கள் புதுவையில் உள்ள அரசு பள்ளியில் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி புதுவை கடற்கரைக்கு வந்தார். அங்கு ஏற்கனவே மோகனா, லேகா ஆகியோரது பள்ளி நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் நவீன் (15), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்த கூக்குரலிட்டு கதறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி சகோதரிகள் உள்பட 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்கள் உதவியுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியை கைவிட்டனர்.

    இன்று காலை மீண்டும் கடலில் இழுத்து செல்லப்பட்டு மாயமான 4 மாணவ-மாணவிகளையும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மற்ற 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×