என் மலர்tooltip icon

    கேரளா

    • ஏராளமானோர் குடும்பமாக வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
    • தப்பித்து வர முடியாமல் மரண ஓலம் எழுப்பினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர்.

    பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். உயிர் தப்பிய நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து வர முடியாமல் மரண ஓலம் எழுப்பினர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

    யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று தவித்தபடி இருந்துள்ளனர். உயிர் பிழைப்பதற் காக அவர்கள் நடத்திய போராட்டம் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.

    வயநாடு மேப்பாடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய நீத்து என்ற பெண், தான் வேலை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட தகவலை தெரிவித்திருக்கிறார்.

    அப்போது அவர், "நான் எனது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கி உள்ளேன். எனது வீட்டை சுற்றி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கள் வீட்டை சகதி சூழ்ந்திருக்கிறது. தயவுசெய்து எங்களை காப்பாற்ற யாரைவது அனுப்புங்கள்" என்று கதறி உள்ளார்.

    இதையடுத்து நீத்து பணிபுரிந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர் வீடு இருந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

    ஆனால் அவரது வீடு இருந்த பகுதிக்கு செல்லக்கூடிய பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தது. இதனால் நீத்து வீடு இருந்த பகுதிக்கு ஆஸ்பத்திரி ஊழியர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில் நீத்து ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது தங்களது வீட்டின் பின்புறம் தண்ணீர் கொட்டுவதாகவும், ஆற்றை தங்களது வீட்டை நோக்க திருப்பி விட்டது போல் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதாகவும் கூறி எப்படி யாவது காப்பாற்றுங்கள் என கூறி கதறி இருக்கிறார்.

    ஆனால் சிறிது நேரத்தில் நீத்து இருந்த அவரது வீட்டின் சமையல் அறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். போன் பேசுவதற்காக வீட்டின் சமையல் அறைக்கு வந்தபோது அந்த பரிதாப சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    நீத்துவின் கணவர் ஜோ ஜோ, 5 வயது மகன் மற்றும் பெற்றோர் வீட்டின் மற்றொரு அறையில் இருந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

    நீத்து வீடு இருந்த பகுதியில் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தும் பலியாகி விட்டனர். மேலும் ஏராளமானோர் உயிர் பிழைத்துள்ளனர்.

    • 83 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்குவதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8ஆயிரத்து 300 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்து செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    வயநாடு நலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நடந்துவருகிறது. நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அவற்றை தோண்டும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.

    பெரிய பெரிய பாறைகள் விழுந்ததாலும், வெள்ளத்தில் அடித்துச்செல்லப் பட்டதாலும் உடல்கள் சிதைந்தநிலையிலேயே மீட்கப்படுகின்றன. இதனால் இறந்தவர்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிறது.

    • நிலச்சரிவு-மண்சரிவு ஏற்பட வாய்ப்பு .
    • 460 பகுதிகள் அபாய பகுதிகளாக அறிவிப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு-மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கேரள மீன்வளம்-கடல் அறிவியல் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.

    மாநிலத்தில் 460 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கேரள மீன்வளம்-கடல் அறிவியல் பல்கலைக்கழக ஆய்வின்படி 32 இடங்களில் 30 சதவீதத்திற்கு அதிகமாகவும், 76 இடங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகவும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    வயநாட்டில் வைத்திரி, தொண்டர்நாடு பொழுதானா, திருநெல்லி, வெள்ளமுண்டா, தரியோடு, முப்பைநாடு, பதிஞ்சசரதாரா உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    இதேபோல் இடுக்கியில் கொக்கையார், மறையூர் உள்பட 20 இடங்களிலும், மலப்புரத்தில் அமரம்பலம், கருளை, சோக்காடு, கருவரக்குண்டு உள்ளிட்ட இடங்களிலும், பாலக்காட்டில் 3 இடங்களிலும், பத்தினம்திட்டா மாவட்டத்தில் அருவாப்புலம், சீத்தாத்தோடு, சித்தார் ஆகிய இடங்களிலும் நிலச்சரிவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலெர்ட்.
    • மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகன மழைக்கான ரெட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், கேரளாவில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கேரளாவின் 11 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், திருச்சூர், பாலக்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
    • கேரளாவில் முழு வீச்சில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கேரளாவில் முழு வீச்சில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.

    நிலச்சரிவில் சிக்கி 5,592 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 191 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8,017 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வயநாட்டில் 115-204 மி.மீ மழை பெய்யும் என மத்திய அரசின் வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    நிலச்சரிவு ஏற்பட்ட அன்று ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. சோகம் நிகழும் முன் ஒருமுறை கூட அப்பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே அன்று காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் விடுத்தனர்.

    ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறிய நிலச்சரிவு அல்லது பாறை வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பருவநிலை மாற்றம் தொடர்பான கடும் சிக்கல்கள் உள்ளன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

    இப்போது நாம் பார்ப்பதுபோல் கடந்த காலங்களில் அதிக மழை பெய்ததை பார்த்திருக்கிறோமா?

    காலநிலை மாற்றத்தினை தணிக்கும் முயற்சிகள் தேவை. இதுபோன்ற ஏதாவது இயற்கை பேரிடர் நடந்தால் நீங்கள் மற்றவர்களின் மீது பழியை சுமத்த முயற்சிக்க கூடாது. நான் சொன்னதுபோல் இது பழி போடும் நேரம் இல்லை என தெரிவித்தார்.

    • வயநாட்டில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
    • இந்தப் பகுதிகள் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    வயநாட்டில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்த பகுதிகள் முற்றிலும் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று செய்தியாளளைச் சந்தித்தார். அப்போது வயநாடு நிலச்சரிவு பாதிப்பு குறித்து அவர் கூறியதாவது:

    கேரளாவில் முழு வீச்சில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.


    கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.

    நிலச்சரிவில் சிக்கி 5,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

    நிலச்சரிவில் சிக்கி 191 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர்.

    மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8,017 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நிலச்சரிவு ஏற்பட்ட 30-ம் தேதி மாலைதான் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

    வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக கேரள மாநில அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

    • மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
    • இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

    அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    நிலச்சரிவில் சிக்கி 184 பேர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

    இதனால், உயிரிழப்பு எண்ணக்கை மேலும் உயர வாயப்புள்ளதாக அஞ்சப்பட்டது.

    இந்நிலையில், கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 225 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவர்களில், 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு, இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    பலர் மாயமான நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    400க்கும் மேற்பட்ட வீடுகளில், தற்போது 40 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    • சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
    • உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்த மாணவி ஒருவர் மாயமாகி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். சாமிதாசின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சாமிதாசின் மகள் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து சாமிதாஸ் தனது மகளை, வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டார்.

    இவரது மாமனார், மாமியார் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சாமிதாசின் மகள் சூரல்மலையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சாமிதாசின் மாமனார் குடும்பம் முழுவதும் சிக்கி மாயமானது.


    மீட்பு படைவீரர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, இந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ஆனால் சாமிதாசின் மாமனார், மாமியார் மற்றும் சாமிதாசின் மகள் ஆகியோரின் நிலை இதுவரை என்னவென்றே தெரியவில்லை.

    மகள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அறிந்ததும் சாமிதாஸ் உடனடியாக தனது உறவினர்கள் சிலருடன் கேரளா விரைந்தார்.

    சூரல்மலை பகுதிக்கு சென்ற அவர், அங்கு தனது மகள் மற்றும் உறவினர்களை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

    மகளின் நிலை என்ன என்பது தெரியாததால், சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார். தற்போது அவர் மேப்பாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளார்.

    சூரல்மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    அங்கு ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலில் நிற்கும் சாமிதாஸ், ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்படும் உடல்கள் மற்றும், சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களை ஓடி சென்று அது தனது மகளாக இருக்குமோ என பார்த்து வருகிறார். ஆஸ்பத்திரியில் அவர் அங்கும் மிங்குமாக சென்று வருவது மற்றவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுவரை அவரது மகள் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாததால் ஆஸ்பத்திரி வாசலில் அவர், கண்ணீர் மல்க தனது மகள் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறார். தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
    • நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உதவவேண்டும்.

    கேரளாவில் பெய்த பருவமழையின் கோர தாண்டவத்தால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் பலியாகி உள்ளனர்.

    வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் துரிதப்படுத்தி உள்ளார். மேலும் அவர் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதேபோல் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உதவவேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • ஏராளமான மாவட்டங்கள் மலையோர பகுதிகளை ஒட்டி இருக்கின்றன.
    • நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான மாவட்டங்கள் மலையோர பகுதிகளை ஒட்டி இருக்கின்றன. கனமழை பெய்யும்போது மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறு ஏற்படும் நேரத்தில் உயிர்பலியும் ஏற்பட்டு விடுகிறது.

    தற்போது வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது.

    முண்டகை இதற்கு முன்பும் ஒருமுறை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட அேத இடத்தில் கடந்த 1984-ம் ஆண்டு இந்த பகுதி யில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் 14 பேர் பலியாகி இருக்கின்றனர். ஏராளமானோர் கை, கால்களை இழந்தனர்.

    அந்த நிலச்சரிவின் போதும், தற்போது இருப்பது போன்றே முண்டகை பகுதி தரை மட்டமாகி இருக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    அந்த நிலச்சரிவின்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலாளராக இருக்கும் சேகர் குரியகோஸ், "கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய வரலாறு மற்றும் நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான பகுதிகளின் வரலாறு" என்ற கட்டுரையில் நினைவு கூர்ந்துள்ளார்.

    1984-ம் ஆண்டு எடுக்கப் பட்ட புகைப்படம் மற்றும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.
    • 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகிறது. கனமழை பெய்யும்போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்று நடக்கும்போது உயிர்ப்பலியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்படுகிறது.

    அதிலும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களிலும், அதனையொட்டிய மாதங்களிலும் பல பேரழிவுகள் நடந்திருக்கின்றன. நேற்று (ஜூலை 30-ந்தேதி) வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இதேபோன்று 1974-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடுக்கி அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 33 பேர் பலியாகினர். 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.

    2019-ம் ஆண்டு வயநாடு புதுமலை, மலப்புரம் காவலப்பாறை, கோழிக்கோடு விலங்காடு ஆகிய இடங்களில் ஆகஸ்டு மாதத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 60 பேர் இறந்து விட்டனர். 11 பேர் காணாமல் போயினர்.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள். இதேபோன்று 2001-ம் ஆண்டு திருவனந்தபுரம் ஆம்புரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேரும், 2021-ம் ஆண்டு இடுக்கி கொட்டிக்கல் மற்றும் கொக்கையார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

    ×