என் மலர்tooltip icon

    குஜராத்

    • வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது
    • இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது.

    அகமதாபாத்:

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது.

    இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது. ஆனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதமே ரெயில் சேவை முழுவதுமாக தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் "இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது. சேரும் இடத்துக்கான ரெயில் டிக்கெட் ரூ.100 என்றால், ரெயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது" என கூறினார்.

    • பயணிகள் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்கு வந்தனர்.
    • அயோத்தி செல்லும் முதல் விமானம் என்பதால் ஊழியர்களுடன் பயணிகள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    அகமதாபாத்:

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்தக் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர். திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அயோத்திக்கான முதல் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டது. இந்த விமானத்தில் சென்ற பயணிகள் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்கு வந்தனர்.

    அயோத்திக்கு செல்லும் முதல் விமானம் என்பதால் ஊழியர்களுடன் பயணிகள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விழாவில் முன்னாள் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.

    அகமதாபாத்:

    உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ராமர் கோவில் திறப்பு விழா பாஜக-ஆர்எஸ்எஸ் நிகழ்வு. இந்த விழா தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பதால் காஙகிரஸ் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அர்ஜுன் மோத்வாடியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், பகவான் ஸ்ரீ ராமர் ஒரு அபிமான கடவுள். இது நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இதுபோன்ற அரசியல் முடிவுகளை எடுப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அல் நயான் நேற்று குஜராத் வந்தார்.
    • இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    துடிப்புமிக்க குஜராத் சர்வதேச உச்சிமாநாடு கடந்த 2003ம் ஆண்டு அம்மாநில முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. தற்போது அதன் பத்தாவது உச்சிமாநாடு காந்திநகரில் நடைபெற்று வருகிறது. எதிர்காலத்துக்கான வாசல் என்ற கருப்பொருளில் இந்த உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அல் நயான் நேற்று குஜராத் வந்தார். அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கே சென்று நேரில் வரவேற்றார். முதல் மந்திரி பூபேந்திர படேல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் க்வத்ரா ஆகியோர் அதிபர் அல் நயானை வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து அவர்கள் சென்றபோது சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு தலைவர்களை வரவேற்றனர். அதிபர் அல் நயானை வரவேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "எனது சகோதரர் முகம்மது அல் நயானை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். எங்களைப் பார்க்க நீங்கள் வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த கவுரவம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தனது இந்திய வருகை குறித்து அல் நயான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவையும் ஐக்கிய அரபு அமீரகத்தையும் மேலும் வலிமையாக இணைக்கும் நோக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்தேன். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பும் வர்த்தகமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. இரு நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான புதிய வழிகள் குறித்து ஆராயப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி - அதிபர் அல் நயான் முன்னிலையில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, முதலீடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


    • குஜராத்தின் காந்தி நகரில் துடிப்பான குஜராத் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • உலகம் இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகப் பார்க்கிறது என்றார்.

    அகமதாபாத்:

    குஜராத்தின் காந்தி நகரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தன. இப்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் நேரத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம்.

    இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் அவர் தலைமை விருந்தினராக கலந்துகொள்வது இந்தியாவிற்கும் யு.ஏ.இ.க்கும் இடையே இருக்கும் வலுவான உறவைக் குறிக்கிறது.

    உலகம் இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகப் பார்க்கிறது. நம்பக்கூடிய ஒரு நண்பர், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு பங்குதாரர், உலகளாவிய நன்மையை நம்பும் ஒரு குரல், உலகப் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரம், தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையம், திறமையான இளைஞர்களின் சக்தி மற்றும் ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

    யு.ஏ.இ நிறுவனங்களால் இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 11-வது இடத்தில் இருந்தது.

    இன்று அனைத்து முக்கிய ஏஜென்சிகளும் வரும் ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அது நடக்குமென உத்தரவாதம் அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • உலகின் மிகவும் மதிப்பு மிக்க முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இதுவாகும்.
    • ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனமாக இருந்தது. எப்போதும் அது இருக்கும்.

    காந்திநகர்:

    குஜராத் தலைநகர் காந்தி நகரில் 10-வது சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு இன்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத், செக் குடியரசு பிரதமர் பீட்டர் பியாலா, மொசாம்பிக் அதிபர் பிலிப், குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ் வரத், முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:-

    உலகின் மிகவும் மதிப்பு மிக்க முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இதுவாகும். குஜராத் நவீன இந்தியாவின் வளர்ச்சியின் நுழைவு வாயிலாகும். வெளிநாட்டினர் புதிய இந்தியாவை நினைக்கும்போது அவர்கள் குஜராத்தை நினைக்கிறார்கள். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது.

    நமது காலத்தின் மிகப் பெரிய உலக தலைவராக உருவெடுத்த தலைவரால் இது முடிந்தது. இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

    ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனமாக இருந்தது. எப்போதும் அது இருக்கும். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் குஜராத்தில் ஜிகா தொழிற்சாலை தொடங்க தயாராக உள்ளோம்.

    2047-ல் குஜராத் மட்டும் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும். 2047-க்குள் இந்தியா 35 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உச்சி மாநாட்டில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேசியதாவது:-

    குஜராத்தில் 2025 வரை ரூ.55 ஆயிரம் கோடியும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேலும் முதலீடு செய்யப்படும். இந்தியாவை ஒரு முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் பாதையில் செல்கிறது. பிரதமர் மோடி இந்தியா ஒரு பெரிய சக்தியாக உலக வரைப்படத்தில் வெற்றிகரமாக இணைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாடு தொடங்கியது.
    • இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைத்தார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது வர்த்தக மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் காந்தி நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்கின்றன.

    முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயான், செக் குடியசு நாட்டின் பிரதமர், திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    • காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு தொடங்குகிறது.
    • இந்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நாளை காலை தொடங்கி வைக்கிறார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை, கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், முதல் மந்திரி பூபேந்திர பட்டேல், மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் வரவேற்றனர்.

    இன்று காலை காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திருக்கு வந்த பிரதமர், அங்கு திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.

    இதற்கிடையே, நாளை காலை 9:45 மணியளவில் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பின், முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது உலகளாவிய உச்சி மாநாடு நாளை தொடங்கி 3 நாட்கள் காந்தி நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்க உள்ளன.

    துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியில் உலகத் தரம்வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை நிறுவனங்கள் காட்சிப்படுத்துகின்றன. இ-மொபிலிட்டி, ஸ்டார்ட் அப்கள், எம்.எஸ்.எம்.இ.க்கள், நீல பொருளாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் ஸ்மார்ட் உள்கட்டமைப்பு ஆகியவை வர்த்தக கண்காட்சியில் கவனம் செலுத்தும் துறைகளாகும்.

    இந்நிலையில், துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயானை பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார். அவருடன் வாகன பேரணியிலும் பங்கேற்றார்.

    • விழாவுக்காக நாட்டின் முக்கிய ஜவுளி மையமான குஜராத்தின் சூரத் நகரில் சிறப்பு சேலை தயாரிக்கப்பட்டுள்ளது.
    • அயோத்தி கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் உலகம் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது.

    சூரத்:

    அயோத்தியில் வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டு குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில் இந்த விழாவுக்காக நாட்டின் முக்கிய ஜவுளி மையமான குஜராத்தின் சூரத் நகரில் சிறப்பு சேலை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதில், ராமர் மற்றும் அயோத்தி கோவிலின் படங்கள் அச்சிடப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு சேலையை தயாரித்த ஜவுளி தொழில் அதிபர் ராகேஷ் ஜெயின் அந்த சேலையை அங்குள்ள கோவிலுக்கு வழங்கினார். அதனை ஜவுளி துறை நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். அவர்கள் இந்த சேலை அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுபப்படும் என்றனர்.

    மேலும் இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் உலகம் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்க முடியாது என்பதால் நாங்கள் இங்கிருந்து சிறப்பு சேர்க்கும் வகையில் ராமர், அயோத்தி கோவில் படங்களுடன் சேலையை தயாரித்து வழங்கி உள்ளோம். இந்த சேலை சீதைக்கானது என்றனர்.

    • அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 8 டன் எடையுள்ள, ரோபோ திறன்களைக் கொண்ட, சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை, இஸ்ரோ நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளது.
    • சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியில் மனித வாழ்வில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள இந்த தரவுகள் உதவும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வருகிற 2028-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை தொடங்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் இதற்கான அறிவிப்பை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பாரதிய விக்யான் சம்மேளன கூட்டத்தில் வெளியிட்டுள்ளார்.

    அப்போது அவர் கூறும்போது, குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 8 டன் எடையுள்ள, ரோபோ திறன்களைக் கொண்ட, சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ்.) முதல் தொகுதியை, இஸ்ரோ நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளது. 'பாரத் விண்வெளி நிலையம்' என குறிப்பிடப்படும் இந்த லட்சிய திட்டப்பணிகள் வருகிற 2028-ம் ஆண்டு தொடங்கப்படும். தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி, 20 முதல் 1,215 டன்கள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட புதிய ராக்கெட்டை உருவாக்க உள்ளோம். தற்போதைய இந்திய ராக்கெட்டுகளால் 10 டன் எடையுள்ள செயற்கைகோள்கள் மற்றும் கருவிகளை கொண்டு செல்ல முடியும். 2035-ம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி நிலைய பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன், எதிர்காலத்தில் இஸ்ரோ பணிகளுக்கு ஒரு மூலக்கல்லாக சர்வதேச விண்வெளி நிலைய பணி அமைந்துள்ளது, என்று தெரிவித்தார்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ந் தேதி ஏவப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம், சூரியனை ஒளிவட்ட சுற்றுப்பாதை எல் 1-ல் இருந்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. சூரிய ஆய்வுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்வெளி அடிப்படையிலான திட்டமாகும். எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டவுடன், ஆதித்யா எல்-1 அடுத்த 5 ஆண்டுகளில் முக்கியமான தரவுகளைச் சேகரிக்கும்.

    இந்த தரவு, இந்தியாவிற்கு மதிப்புமிக்கது மட்டுமல்ல, உலகளாவிய முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியில் மனித வாழ்வில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள இந்த தரவுகள் உதவும். தற்போதைய நிலையில் சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ந்தேதி எல்-1 புள்ளியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விண்கலம் எல்-1 புள்ளியை மிக அருகில் நெருங்கி உள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    • ஏசிசி சிமென்ட் நிறுவன வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
    • பெண்கள் உண்ணாவிரதம், மவுன விரதம் இருந்து இதில் பங்கேற்பார்கள்

    குஜராத் மாநிலத்தில் உள்ளது துவாரகா நகரம். இங்கு இந்துக்கள் வணங்கும் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோயில் உள்ளது.

    இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து "மஹா ராஸ்" (Maha Raas) திருவிழாவில் பங்கேற்றனர்.

    பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மருமகளின் நினைவாக கொண்டாடப்படும் இந்த விழாவை பாரதிய அஹிரானி மஹாராஸ் சங்கதன் (Akhil Bharatiya Ahirani Maharas Sanghathan) எனும் அமைப்பினருடன் அகில் பாரதிய யாதவ் சமாஜ் (Akhil Bharatiya Yadav ) மற்றும் அஹிரானி மஹிலா மண்டல் (Ahirani Mahila Mandal) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தினர்.

    பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறுவதால், நந்த் தாம் (Nand dham) எனும் இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனமான ஏசிசி சிமென்ட் (ACC Cement) நிறுவன வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டன.

    37000 பெண்களில் பெரும்பாலோனோர் குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் சுமார் 1.5 லட்சம் அஹிர் யாதவ் (Ahir Yadav) இன மக்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த "ராஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் பக்தியுடன் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருந்து இதில் கலந்து கொள்வார்கள்.

    மஹா ராஸ் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் இந்துக்களின் புனித நூலான "ஸ்ரீ பகவத் கீதை" பரிசளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில ஜம்நகர் சட்டசபை உறுப்பினர் பூனம்பென் பங்கு பெற்றார்.

    • ஸ்வநிதி யோஜனாவில் கடன் தொகையில் 7 சதவீதம் மானியமாக வழங்கப்படும்
    • ஆத்மநிர்பார் பாரத் 140 கோடி இந்தியர்களுக்கான திட்டம் என்றார் அமித் ஷா

    கடந்த 2020 ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் கடனாக வழங்கும் "ஸ்வநிதி யோஜனா" (SVANidhi Yojana) எனும் திட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான அமைச்சரவையால் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின்படி, முதல் முறை பெறும் கடனை அடைத்ததும், வியாபாரிகளுக்கு தொடர்ந்து ரூ. 20 ஆயிரமும், அந்த கடன் அடைந்ததும், ரூ. 50 ஆயிரமும் கடனாக வழங்கப்படும்.

    கடன் பெறும் தொகையில் 7 சதவீதம் மானியமாக அரசு வழங்கும்.

    குஜராத் மாநில அகமதாபாத் நகரில், அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஆத்மநிர்பார் பாரத் (Atmanirbhar Bharat) எனும் சுயசார்புள்ள பாரதத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இது ஒரு தொலைநோக்குள்ள திட்டம்.

    விண்வெளித்துறை மற்றும் ராணுவம் உட்பட அனைத்திலும் சுயசார்பு நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் நமது வர்த்தகம், தொழில்துறை மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களும் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும்.

    வறுமைகோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நிலையை மேலே கொண்டு வர பிரதமர் மிகவும் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கிறார். தற்போது வரை வறுமையிலிருந்து 60 கோடி மக்களை மீட்டுள்ளார். உலகிலேயே கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உள்நாட்டு தடுப்பூசி இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கு பெற்றார்.

    ×