என் மலர்tooltip icon

    குஜராத்

    • பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம்.
    • பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம் என தெரிவித்தார்.

    அகமதாபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியது.

    இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம். அதேபோல் பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம்.

    குறிப்பாக ஹெட்மயர் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளியபோது என் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டேன். அங்குதான் ஆட்டம் எங்களின் கைகளில் இருந்து நழுவியது.

    பவுலிங்கில் ஆர்ச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தது. சுப்மன் கில் விக்கெட்டை திட்டமிட்டபடி எடுக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் திட்டமிட்டது வேறு, ஆனால் செயல்படுத்திய திட்டம் வேறு. அடுத்த போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாளை பார்க்க வேண்டும்.

    சில நேரங்களில் டிபென்சில் மட்டுமின்றி, சேசிங்கில் போட்டிகளை வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். டாஸ் முடிவு குறித்து போட்டிக்கு பின் மாற்றி செய்திருக்கலாமா என்று தோன்றுவது சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு அணியாக டிபென்சில் மட்டுமல்லாமல் சேசிங்கிலும் வெல்ல முயற்சித்தோம் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய குஜராத் 20 ஓவரில் 217 ரன்கள் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அகமதாபாத்:

    நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 53 பந்தில் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜாஸ் பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்கள் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் ராகுல் டெவாட்டியா 12 பந்தில் 24 ரன்கள் குவித்தார்.

    ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே, மகேஷ தீக்ஷனா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும், நிதிஷ் ரானா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் ரியான் பராக் இணைந்தார். ரியான் பராக் 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். சஞ்சு சாம்சன் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹெட்மயர் தனி ஆளாகப் போராடினார். அவர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்து 52 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.

    குஜராத் அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
    • தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும்.

    குஜராத் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சி பணிக்கு உதவி செய்யாதவர்கள் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக கார்கே பேசியதாவது:-

    கட்சியின் அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்டத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். எனவே, அவர்கள் கட்சியின் வழிகாட்டுதல்களின்படி பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும்.

    நாட்டின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் மூன்று கட்டங்களாக அழைத்து பேசியுள்ளோம்.. ராகுல் காந்தியும் நானும் அவர்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களைப் பெற்றோம். எதிர்காலத்தில், தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையில் மாவட்டத் தலைவர்கள் ஈடுபாடு இருக்கும்.

    கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும். தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும்.

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்டார்.
    • திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    • துவாரகா கோவிலுக்கு பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • கடந்த மாதம் 29-ந்தேதி அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    ஆதமாபாத்:

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து துவாரகா கோவிலுக்கு 170 கிலோ மீட்டர் நடந்து பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த மாதம் 29-ந்தேதி அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். பலத்த பாதுகாப்புடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இரவில் தான் அவர் அதிகமாக நடந்தார்.


    ஆனந்த் அம்பானி தனது 30-வது பிறந்த நாளுக்கு முன்பு பாதயாத்திரையை முடிக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி தனது 170 கிலோ மீட்டர் தூர பாத யாத்திரையை இன்று நிறைவு செய்தார்.

    அதிகாலை அவர் ஸ்ரீ துவாரகா தீவு கோவிலை வந்து அடைந்தார். அவரது கடைசி நாள் யாத்திரையில் தாயார் நீட்டா அம்பானி, மனைவி ராதிகா மெர்ச்சனா ஆகியோர் பங்கேற்றனர்.

    • சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு சிங்கம் விரட்டப்பட்டது.
    • யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ஒருவரின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வந்த சிங்கத்தால் கிராம மக்கள் தங்களின் தூக்கத்தை தொலைத்த சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது.

    குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கோவாயா கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாய். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக சிங்கம் ஒன்று நுழைந்துள்ளது. சமையறையின் சுவரின் மேல் அமர்ந்து கொண்டு இருந்த சிங்கத்தை பார்த்த குடும்பத்தினர் அலறி அடித்து ஓடினர். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு சிங்கம் விரட்டப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • போர் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம்.
    • விபத்தில் பலியான விமானியின் குடும்பத்தினருடன் உடன் நிற்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது.

    தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு விமானியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், விமானப் படையின் போர் பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறிய விபத்தில் மாயமான விமானி பலியாகி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இந்திய விமானப்படை எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    போர் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம். விமானிகளின் சாதுர்யத்தால் விமான தளம், உள்ளூர் மக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியான விமானியின் குடும்பத்தினருடன் உடன் நிற்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.



    • குஜராத்தில் ஜாகுவார் போர் விமானத்தில் விமானிகள் பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
    • ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் திடீரென வெடித்துச் சிதறியது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது.

    தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு பைலட்டை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரவு நேரத்தில் பயிற்சி விமானம் வெடித்துச் சிதறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காயம் மிகவும் மோசமாக இருந்ததால் பாதல் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
    • ஒரு கனமான பொருள் மார்பில் அதிக அழுத்தத்துடன் மோதுவதால் இதயதிற்கு சேதம் ஏற்படும்.

    குஜராத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் வீசிய தண்ணீர் பாட்டிலால் 14 வயது சிறுவன் மார்பில் காயமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2:45 மணியளவில் வேராவல்-பாந்த்ரா ரெயில் ராஜ்கோட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    ராஜ்கோட்டில் வசிக்கும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாதல் என்ற அந்த 14 வயது சிறுவன் அன்றைய தினம், ரெயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதி அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் இருந்த அடையாளம் தெரியாத பயணி ஒருவர் தண்ணீர் பாட்டிலை வெளியே எறிந்தார். அது பாதலின் மார்பில் நேரடியாகத் தாக்கியது. காயம் மிகவும் மோசமாக இருந்ததால் பாதல் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.

    உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    ஆரம்பத்தில் மாரடைப்புதான் மரணத்திற்குக் காரணம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, ரெயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்தான் மரணத்திற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஒரு கனமான பொருள் மார்பில் அதிக அழுத்தத்துடன் மோதுவதால் இதயத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டு, உடனடி மரணத்திற்கு வழிவகுக்கும்.

    அலட்சியமாக செயல்பட்ட ரெயில் பயணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • இந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது.
    • வெடிவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இருந்து 13 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே வெடிவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாங்கள் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை.
    • பீல்டிங்கில் சொதப்பியதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜராத் எடுத்துவிட்டது.

    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

    இந்நிலையில், குஜராத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:

    நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை பட்டியலிடுவது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் நாங்கள் பல தவறுகளை செய்தோம்.

    நாங்கள் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை. பீல்டிங்கில் சொதப்பியதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜராத் அணியை அடிக்க விட்டுவிட்டோம்.

    குஜராத் தொடக்க வீரர்கள் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்கள். குஜராத் அணி தங்களுக்கு தேவையான இலக்கை நிர்ணயித்து எங்களை கடும் நெருக்கடியில் ஆழ்த்தினர்.

    தற்போது ஐ.பி.எல். தொடர் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கின்றது. அதே சமயம், எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் ரன்களை குவிக்க வேண்டும். அவர்கள் விரைவில் அதை செய்வார்கள் என நான் நம்புகிறேன்.

    நான் அதிக அளவு பந்து வீசினேன். அப்போது பந்து ஆடுகளத்தில் நின்று வருகிறது என்பதை குஜராத் வீரர்கள் கவனித்திருப்பர். அந்த வகை பந்துகளை அடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஆடுகளத்தில் நிலையான பவுன்ஸ் இல்லை. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது என தெரிவித்தார்.

    • குஜராத் அணிக்கு எதிராக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.
    • சிஎஸ்கே அணியின் ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றவர் விக்னேஷ் புத்தூர்.

    இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.

    இந்நிலையில் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடிய விக்னேஷ் புத்தூர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, விக்னேஷ் புத்தூர் நீக்கப்பட்டதற்கு எதிராக இணைய தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

    இது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் ஓர் அதிர்ச்சியூட்டும் முடிவு. ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியை மிஸ் செய்கிறேன் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

    விக்னேஷ் புத்தூரை நீக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தவறு செய்ததால், குஜராத் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாகிவிட்டது எனவும் பதிவிட்டுள்ளனர்.

    ×