என் மலர்tooltip icon

    குஜராத்

    • எல்லையோர மாநில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்பு.
    • குஜராத், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுளளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று பிரதமர் மோடி பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநில முதல்வர்களை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    குஜராத் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் ஒன்று. இதனால் இந்த மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று இங்குள்ள நகரங்களிலும் மின்சாரம் (BlackOut) அணைக்கப்பட்டது.

    இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் எந்தவொரு நிகழ்ச்சியின்போதும் பட்டாசு வெடிக்கவும், டிரோன்கள் பறக்க விடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

    • குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் கடந்த சில தினங்களாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    அடுத்த சில நாட்களுக்கு குஜராத்தில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது. கேடா, காந்தி நகர், மெஹ்சானா மற்றும் வதோதரா மாவட்டங்களில் 25 முதல் 40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    மின்னல், மின்சாரம் பாய்தல், மரங்கள், வீடுகள் மற்றும் விளம்பர பலகைகள் இடிந்து விழுந்தது போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

    கேடா மாவட்டத்தில் 4 பேர், வதோதராவில் 3 பேர், அகமதாபாத், தாஹோத் மற்றும் ஆரவல்லியில் தலா 2 பேர் மற்றும் ஆனந்த் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்தனர்.

    • கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார்.
    • மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத்தில், 14 வயது மாணவனால் 23 வயது டியூஷன் ஆசிரியை கர்ப்பமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மாதம் 25 ஆம் தேதி டியூஷன் ஆசிரியையும் மாணவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். நான்கு நாள் தேடுதலுக்குப் பிறகு செல்போன் சிக்னல் மூலம் குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகே இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    டியூஷன் ஆசிரியை சூரத்தில் உள்ள அவரது வீட்டிலும், கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் சென்ற இடங்களிலும், சிறுவனுடன் பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார். கடந்த ஓராண்டாக இவர்கள் மிக நெருக்கமாக இருந்ததாகவும் இருவரும் பல மாதங்களாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவன் தான் அந்த குழந்தையின் தந்தை என்று அவர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய போலீசார், "தனக்கும் அந்த சிறுவனுக்கும் சிறந்த வாழ்க்கை அமைய, கருவை கலைக்க அப்பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் கருவை கலைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கருக்கலைப்புக்குப் பிறகு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது.

    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் நேற்று நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தது.

    இதற்கிடையே, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி மீண்டும் குஜராத் வீரரான சாய் சுதர்சன் வசமானது.

    இந்த ஆட்டத்தில் 48 ரன் எடுத்த சாய் சுதர்சனின் ரன் எண்ணிக்கை 504-ஆக உயர்ந்தது. அவர் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவிடம் இருந்து (475 ரன்) ஆரஞ்சு தொப்பியை தட்டிப் பறித்துள்ளார்.

    இந்நிலையில், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நேற்று 54 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்தார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்சுக்குப் பிறகு இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரராக சாய் சுதர்சன் திகழ்கிறார்.

    இந்திய வீரர்களில் இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 59 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்ததே அதிவேகமாக இருந்தது. அதனை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.

    • டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த குஜராத் அணி 224 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். சீசனின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.

    சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். பட்லர் 37 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 23 பந்தில் 9 பவுண்டரியுடன் 48 ரன்கள் குவித்தார்.

    ஐதராபாத் சார்பில் உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் 41 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

    • கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அல் கொய்தாவின் ஸ்லீப்பர் செல்களாக பணிபுரிந்ததை கண்டுபிடித்தோம்.
    • சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

    குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத்தில் நடந்த சோதனை நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சட்டவிரோத வங்கதேசத்தினரைப் பிடிப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. அகமதாபாத் காவல்துறையினரால் 890 சட்டவிரோத குடியேறிகளும், சூரத் காவல்துறையினரால் 134 பேரும் பிடிபட்டனர்.

    குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக குஜராத் காவல்துறை மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். இவர்களில் பலர் போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர், மேலும் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அல் கொய்தாவின் ஸ்லீப்பர் செல்களாக பணிபுரிந்ததை கண்டுபிடித்தோம்.

    அவர்களின் பின்னணி மற்றும் குஜராத்தில் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படும். கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவில் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    மேலும் குஜராத்தில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தாங்களாகவே காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

    • குஜராத்தி புத்தாண்டின் போது பிஸ்கட் கொடுத்து கடத்திச் சென்றார்.
    • ஒன்றரை மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    ஆனந்த் மாவட்டத்தின் காம்பட் கிராமப்புற பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் அக்டோபர் 28, 2019 அன்று வெளிச்சத்துக்கு வந்தது.

    குஜராத்தி புத்தாண்டின் போது பிஸ்கட் கொடுத்து சிறுமியை தாதோ என்கிற அர்ஜுன் அம்பலால் கோஹெல் (24) கடத்திச் சென்று வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஒன்றரை மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த தீர்ப்பு வந்துள்ளது.

    குஜராத்தின் நீதித்துறை மற்றும் காவல் அமைப்பின் செயல்திறனையும், குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டையும் இந்த முடிவு குறிக்கிறது என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பாராட்டினார்.

    இரட்டை மரண தண்டனை என்பது மேல்முறையீடு மூலம் உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்றத்தில் அவர் விடுவிக்கப்பட்டாலும், அவர் மரண தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இந்த இரட்டை மரணதண்டனை தீர்ப்பு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    • குஜராத் அணி இதுவரை 6 போட்டியில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
    • நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்டு, பட்லர், கரிம் ஜனத், கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை.

    இதற்கிடையே, நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் என்றும், தொடர் முழுவதும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு முன்னணி வீரர்கள் விலகியது குஜராத் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    குஜராத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடம் வகிக்கிறது.

    இந்நிலையில், காயம் காரணமாக விலகிய கிளென் பிலிப்சுக்கு பதிலாக இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான டாசன் ஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வயது தளர்வை ரத்து செய்கிறது.
    • 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன.

    2002 குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னர் வழங்கப்பட்ட வயது தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த முடிவு குஜராத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 28 தேதியிட்ட மத்திய அரசின் துணைச் செயலாளரால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வயது தளர்வை ரத்து செய்கிறது.

    2007 முதல் இந்த விதியின்மூலம் துணை ராணுவப் படைகள், இந்திய ரிசர்வ் பட்டாலியன்கள், மாநில காவல்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் கீழ் உள்ள பல்வேறு துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயதுச் தளர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டங்கள் குவிந்து வருகின்றன.

     குஜராத் கலவரம்

    2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்தனர்.

    இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவா அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடும் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. பிப்ரவரி 28 ஆம் தேதி அகமதாபாத்தின் நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

    அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

     மோடி அரசும், காவல்துறையுமே இதற்கு முக்கிய பொறுப்பு என அவ்வமைப்புகள் குற்றம்சாட்டின. இதற்க்கிடேயே 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரெயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், கோத்ராவில் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் உறுதி செய்தது.

    இந்த கலவரத்தை குஜராத் முதல்வராக இருந்த மோடி கையாண்ட விதம், பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கடந்த 2023 ஆம் ஆண்டு பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படம் மத்தியில் ஆளும் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    • படகில் இருந்தவர்கள் ஏராளமான மூட்டைகளை கடலுக்குள் தள்ளி விட்டு தப்பி ஓட்டம்.
    • பெரும்பாலானவை மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்கள்.

    அகமதாபாத்:

    குஜராத் கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு படை வீரர்களும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் ஒருங்கிணைந்து ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கமாகும்.

    நேற்று அவர்கள் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடலோர காவல் படையினரும், தீவிரவாத தடுப்பு படையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும் படி வந்த ஒரு படகை நிறுத்த உத்தரவிட்டனர்.

    ஆனால் அந்த படகு நிற்காமல் தப்பிச் சென்றது. அந்த படகில் இருந்தவர்கள் ஏராளமான மூட்டைகளை கடலுக்குள் தள்ளி விட்டு விட்டு படகை வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த கடல் பகுதியில் குதித்து ஆய்வு செய்தனர். அப்போது பல மூட்டைகள் கிடைத்தன. அவற்றை கப்பலுக்கு கொண்டு வந்து பார்த்த போது மூட்டைக்குள் போதைப் பொருள் பொட் டலங்கள் இருப்பது தெரிய வந்தது.

    300 கிலோ அளவுக்கு அந்தப் போதைப் பொருட்கள் இருந்தன. அதில் பெரும்பாலானவை மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்கள் என்று தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடி என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

    பாகிஸ்தான் போதைப் பொருள் வியாபாரிகள் இவற்றை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விற்ப தற்காக படகில் கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    • அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
    • தனது குழந்தைகளை காப்பாற்றிய தாயின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்திற்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிய தனது குழந்தைகளை மீட்க போராடிய ஒரு தாயின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    பெண் ஒருவர் பால்கனியில் நின்றுகொண்டு, தன உயிரை பற்றி கவலைப்படாமல் கீழே தரையில் இருந்தவர்களிடம் தனது 2 குழந்தைகளை கவனமாக ஒப்படைத்தார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, தனது குழந்தைகளின் உயிரை துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய தாயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 

    • பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம்.
    • பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம் என தெரிவித்தார்.

    அகமதாபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியது.

    இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம். அதேபோல் பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம்.

    குறிப்பாக ஹெட்மயர் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளியபோது என் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டேன். அங்குதான் ஆட்டம் எங்களின் கைகளில் இருந்து நழுவியது.

    பவுலிங்கில் ஆர்ச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தது. சுப்மன் கில் விக்கெட்டை திட்டமிட்டபடி எடுக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் திட்டமிட்டது வேறு, ஆனால் செயல்படுத்திய திட்டம் வேறு. அடுத்த போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாளை பார்க்க வேண்டும்.

    சில நேரங்களில் டிபென்சில் மட்டுமின்றி, சேசிங்கில் போட்டிகளை வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். டாஸ் முடிவு குறித்து போட்டிக்கு பின் மாற்றி செய்திருக்கலாமா என்று தோன்றுவது சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு அணியாக டிபென்சில் மட்டுமல்லாமல் சேசிங்கிலும் வெல்ல முயற்சித்தோம் என தெரிவித்தார்.

    ×