search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. இன்று சிக்கன் 65 பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - 2 கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பச்சைமிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 2
    லவங்கம் - 5
    ஏலக்காய் - 2
    பிரியாணி இலை - 4
    சீரகம் - 1 டீஸ்பூன்
    தயிர் - 2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய், நெய் - தேவைக்கு

    சிக்கன் 65 செய்ய

    சிக்கன் - 1/2 கிலோ
    தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோளம் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    காஷ்மீர் மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    முட்டை - 1
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிக்கன் 65 செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.

    பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து முக்கால் பாகம் வெந்ததும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய், நெய் சூடானதும் ஊற்றி பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரிந்த பின்னர் வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

    பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

    பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பிறகு அதனுடன் கொத்தமல்லி தழை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பிறகு அதில் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும். மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து குக்கரை மூடவேண்டும்.

    குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான சிக்கன் 65 பிரியாணி தயார்.
    குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குல்ஃபியை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர் (full cream milk)
    சர்க்கரை - 50 கிராம்
    கஸ்டர்டு பவுடர் (இல்லையென்றால் கார்ன்ஃப்ளோர்) - 3 தேக்கரண்டி
    ஏலக்காய்ப்பொடி - 1 தேக்கரண்டி.
    முந்திரி+பாதாம் - 100 கிராம்.
    குங்குமப்பூ-பாதாம் எசன்ஸ் - 5 துளிகள்
    பனைவெல்லம் (அல்லது) வெல்லம் - எலுமிச்சைஅளவு.

    செய்முறை :

    ஒரு அடி கனமான பாத்திரத்தி்ல், பாலை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான சூட்டில், பால் 600 மில்லியாக குறையும் வரை அடிபிடிக்காமல் காய்ச்சவும்.

    பின்பு சர்க்கரையை போட்டு கரையும் வரை மேலும் 3 நிமிடங்கள் காய்ச்சவும்.

    பிறகு வெல்லத்தை போட்டு 2 நிமிடங்கள் கிளறவும்.

    கஸ்டர்டு பவுடரை கால் கிண்ணம், குளிர்ந்த நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் விட்டுக்கொண்டே, கை விடாமல் 3 நிமிடம் வரை கிளறவும்.

    அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய்ப்பொடி, எசன்ஸ் சேர்க்கவும்.

    நன்றாக ஆறினவுடன் Freezer ல் வைக்கவும்.

    கலவை ஐஸ்(frozen) ஆனவுடன் வெளியில் எடுத்து வைக்கவும்.

    அரைமணி நேரம் கழித்து, ஐஸ்கிரீமை பெரிய மிக்சி ஜாரில் நன்றாக நுரை(bubble) வரும் வரை ஓரிரு நிமிடம் விட்டு விட்டு அரைக்கவும்.

    பாதாம்-முந்திரி பருப்புகளை சின்ன மிக்சி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    ஐஸ்க்ரீம் உடன் பாதாம்-முந்திரி பொடி சேர்த்து, நன்றாக கலந்து திரும்பவும் குல்ஃபி கப்பில் ஊற்றி இரவு முழுவதும் freezerல் வைத்து எடுத்தால் குல்ஃபி தயார்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான சாதம் கொடுத்து அனுப்ப விரும்பினால் இறால் சாதம் செய்து கொடுக்கலாம். இந்த ரெசிபி மிகவும் சுவையானது. செய்வதும் சுலபமானது.
    தேவையான பொருட்கள் :

    இறால் கால் - கிலோ
    முட்டை - 3
    வடித்த சாதம்/பாசுமதி சாதம் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.

    சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த இறாலை ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் பிசிறி வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.

    இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.

    அடுத்து அதில் சாதத்தை சேர்த்து கலந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

    சூப்பரான இறால் சாதம் ரெடி.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸ், சிக்கன் வைத்து சூப்பரான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் - 100 கிராம்
    முட்டை - 4
    சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
    மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
    சிக்கன் - 100 கிராம்
    எலுமிச்சை பழம் - ஒன்று
    வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    முட்டைக்கோஸ் - 50 கிராம்
    கேரட் - 50 கிராம்
    தக்காளி - 1

    செய்முறை
     
    வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    சிக்கனை முக்கால் பாகம் வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தண்ணீரை கொதிக்க வைத்து நூடுல்ஸை 10 நிமிடம் போட்டு எடுத்துக் கொள்ளவும்.

    வேக வைத்த நூடுல்ஸுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு பிசைந்துக் கொள்ளவும்.

    அதனுடன் முட்டை, சில்லி சாஸ், மிளகுத் தூள், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் ஆகியவற்றைச் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும்.

    அதில் தேவையான உப்பு மற்றும் எலுமிச்சம்பழம் சாற்றையும் பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த கலவையை அடையாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான நூடுல்ஸ் சிக்கன் அடை தயார்.
    மட்டன் தால் செய்து சுவைத்துள்ளீர்களா? இல்லையா? அப்படியானால் அடுத்த முறை மட்டன் வாங்கினால் அதைக் கொண்டு மட்டன் தால் செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 350 கிராம்
    பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
    கறிவேப்பிலை - சிறிது
    தக்காளி - 2 (நறுக்கியது)
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - அரை தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கேற்ப
    துவரம் பருப்பு - 1/2 கப்
    தண்ணீர் - 2-3 கப்
    கொத்தமல்லி - சிறிது

    தாளிப்பதற்கு...

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:


    துவரம் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    மட்டனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு, மட்டன், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நீர் ஊற்றி 5 விசில் வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்துகுழைய வதக்கவும்.

    அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து மட்டன் பருப்பை சேர்த்து கிளறவும்.

    அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

    அனைத்து ஒன்றாக சேர்த்து திக்கான பதம் வரும் போது கொத்தமல்லியைத் தூவி கிளறினால், மட்டன் தால் தயார்.

    இந்த மட்டன் தால் சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இது செய்வதற்கும் சுலபமாக இருக்கும்.
    கபாப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கல்மி கபாப். பொதுவாக இதனை ஹோட்டல்களில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் நாளை வார விடுமுறையில் இந்த கல்மி கபாப்பை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தயிர் - 1 கப்
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    மைதா - 1/4 கப்

    மசாலாவிற்கு...

    கிராம்பு - 3
    வெங்காய விதை/பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 1
    பிரியாணி இலை - 1
    மிளகு - 5

    செய்முறை:


    முதலில் மசாலாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு கத்தி கொண்டு லேசாக ஆங்காங்கு கீறி விட வேண்டும்.

    ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, குங்குமப்பூ, எலுமிச்சை சாறு, மைதா மற்றும் மசாலா பொடி ஆகியவற்றைப் போட்டு கிளறி, பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால், சிக்கன் துண்டுகளை அதனுள் வைத்து 15-20 நிமிடம் க்ரில் செய்து இறக்கவும் அல்லது க்ரில் கம்பி இருந்தால் அந்த கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி நெருப்பில் வாட்டி எடுக்கவும்.

    இப்போது சுவையான கல்மி கபாப் ரெடி!!!
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நண்டு குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்

    நண்டு - 1/2 கிலோ,
    வெங்காயம் - 100 கிராம்,
    தக்காளி - 100 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்,
    தேங்காய் விழுது - 100 கிராம்,
    பச்சை மிளகாய் - 6,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    மஞ்சள் தூள் - 5 கிராம்,
    மிளகாய்த்தூள் - 10 கிராம்,
    மிளகுத்தூள் - 5 கிராம்,
    சீரகத்தூள் - 5 கிராம்,
    புளி தண்ணீர் - 50 மிலி,
    எண்ணெய் - 150 மிலி,
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    நண்டை நன்றாக சுத்தம் செய்து இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய் விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

    ப.மிளகாயை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பிறகு அதில் நண்டு, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

    நண்டு வெந்தவுடன் சிறிதளவு புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரித்து இறக்கவும்.

    சூப்பரான நண்டு குழம்பு ரெடி.
    எளிதாக கிடைக்கும் முட்டைகோஸை வைத்து இனிப்பான முட்டைகோஸ் அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டைகோஸ் - 1/2 கப்
    நெய் - 1/4 கப்
    கொழுப்பு நீக்காத பால் - 2 கப்
    சர்க்கரை - 1/2 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
    நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:


    பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றவும். அது உருகியதும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு அதில் பாலை ஊற்றி வேக வைக்கவும்.

    பால் பாதி அளவு சுண்டியதும், அதில் சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்து, அல்வா பதம் வந்ததும் நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி தூவி இறக்கவும். சுவையான முட்டைகோஸ் அல்வா ரெடி.


    குழந்தைகள் விரும்பி ருசிக்கும் சூப்பரான ரசகுல்லா புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ரசகுல்லா - 10
    ரசகுல்லா சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
    பால் - 1/2 லிட்டர்
    கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
    ரோஜா பன்னீர் - 2 ஸ்பூன்
    நறுக்கிய பிஸ்தா பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    நான்-ஸ்டிக் பாத்திரத்தில் பாதியளவு பாலை ஊற்றவும். பால் சிறிது குறையும் வரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு, எடுத்து வைத்திருந்த பாதி அளவு காய்ச்சாத பாலை ஊற்றி, கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

    இந்த கலவையைக் கொதிக்க வைத்த பாலில் ஊற்றி, ரசகுல்லா சிரப் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கட்டிகள் உருவாகாமல் இருக்க தொடர்ந்து கிளறி, மீண்டும் குறைவான தீயில் அடுப்பில் வைத்துக் கிளறவும்.

    ரசகுல்லாவை மென்மையாகப் பிழிந்து பாதியாக நறுக்கி தனியாக வைக்கவும்.

    அடுப்பில் இருக்கும் கலவை கெட்டியானதும் அதில் நறுக்கிய ரசகுல்லா மற்றும் ரோஜா பன்னீரை சேர்க்கவும். மெதுவாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.

    இதை 2 மணி நேரம் குளிரூட்டவும். பரிமாறும்போது நறுக்கிய பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும். குளிர வைத்து பரிமாறவும்.

    அசைவம் சாப்பிடாதவர்கள் மீல் மேக்கரில் சூப்பரான வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மீல் மேக்கரில் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீல் மேக்கர் - 100 கிராம்
    பொட்டுக் கடலை மாவு - அரை கப்
    பெரிய வெங்காயம் - 1
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூம் - கால் தேக்கரண்டி
    சோள மாவு - ஒரு தேக்கரண்டி
    கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    மீல் மேக்கர் கட்லெட்

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் மீல் மேக்கரை அரைமணிநேரம் ஊறவைத்த பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், கறிமசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் அரைத்த மீல் மேக்கரை போட்டு கட்லெட் மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கட்லெட் போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    வித்தியாசமான மீல் மேக்கர் கட்லெட் தயார்..!
    பள்ளி, கல்லூரி, வேலைக்கும் செல்பவர்களுக்கு மதிய உணவாக இந்த பச்சை பட்டாணி தேங்காய் சாதம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1½ கப்,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    பச்சை பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
    உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்,
    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 6 டேபிள் ஸ்பூன்,
    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பச்சரிசியை உதிர் உதிராக வேக வைத்து கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை அரைமணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக விடவும்.

    வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு போட்டு தாளித்த பின்னர்  தேங்காய்த்துருவல், உப்பு, வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த சாதத்தைச் சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி உலர் திராட்சை, கொத்தமல்லித்தழை தூவி நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான பச்சை பட்டாணி தேங்காய் சாதம் ரெடி.
    சைவப் பிரியர்கள் விரும்பும் சுவையான உணவு மீல்மேக்கர். இன்று அருமையான சுவையான மீல்மேக்கர் கீமா ஸ்டஃப்டு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 2 கப்,
    எண்ணெய் - சிறிதளவு,
    மீல்மேக்கர் - 100 கிராம்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப),
    கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி,
    உப்பு - தேவையான அளவு.

    அரைக்க…

    வெங்காயம் - 1/2 (நறுக்கியது),
    பூண்டு - 4 பல்,
    கறிவேப்பிலை - 5 இலை,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - 3.

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீல்மேக்கரை சூடான நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நன்றாக கழுவி அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

    வெங்காயத்துடன், பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதினை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

    அத்துடன் தூள் வகைகள் சேர்த்து கிளறிவிடவும்.

    அதில் அரைத்த சோயா சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும்.

    இது வெந்து முட்டை பொடிமாஸ் மாதிரி உதிரியாக வரும் போது இறக்கி விடவும். இப்போது மீல்மேக்கர் கீமா ரெடி.

    அத்துடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளவும். அதனை சிறிது நேரம் ஆறவைத்துக் கொள்ளவும்.

    அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவினை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு நன்கு வெந்தவுடன் அதில் கலந்து வைத்துள்ள கைமா கலவையினை மேலே 2 ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக பரவி விடவும்.

    தோசையின் மீது சிறிது எண்ணெயினை ஊற்றி 1 நிமிடம் வேகவிட்டுப் இரண்டாக மடித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் கீமா ஸ்டஃப்டு தோசை ரெடி.
    ×