search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    காளானில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று காளான் சேர்த்து சூப்பரான ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காளான்கள் - 250 கிராம்
    இஞ்சி, பூண்டு - ஒரு தேக்க‌ர‌ண்டி
    வெங்காய‌த்தாள் - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - ஒன்று
    குடைமிளகாய் - சிறியது 1
    ப‌ச்சை மிள‌காய் - 3
    சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
    மிள‌குத்தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
    உதிரியாக வடித்த சாத‌ம் - 4 கப்
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    காளான்களை நீரில் சுத்தப்படுத்தி, நீளமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    குடைமிளகாய், பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சைமிளகாயையும் வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    ஒரு பெரிய வாணலியில், சிறிதளவு எண்ணெயை விட்டு சூடானதும் வெங்காய‌ம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

    அடுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து, சிறிது நேர‌ம் வத‌க்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை வாணலியில் சேர்க்கவும்.

    அடுத்து அனைத்தையும் நன்கு கிளறி வதக்கும்போது வெங்காயம், பச்சைமிளகாய், குடைமிளகாய், காளான்கள் அனைத்தும் நன்கு கலந்திருக்கும். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, வடித்து வைத்திருந்த சாதத்தைக் கொட்டி கிளறவும்.

    பின்னர் மிளகுத்தூள், சோயா சாஸ் முதலியவற்றைச் சேர்த்து வாணலி சூட்டிலேயே இறக்கி, அதன் மேல் சில வெங்காயத்தாள்களை தூவி கலந்தால் சூடான அட்டகாசமான சுவையில் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் தயார்.
    பன்னீரை வைத்து சூப்பரான பாப்கார்ன் செய்யலாம். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 100 கிராம்
    மைதா/ கடலைமாவு/ அரிசிமாவு - ¼ கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 ½ தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த் தூள் - ¾ தேக்கரண்டி
    கரம் மசாலா - ¾ தேக்கரண்டி
    மிளகு தூள் - ½ தேக்கரண்டி
    ரொட்டித் தூள் - ½ கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரொட்டித் தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா அல்லது நீங்கள் விரும்பிய மாவைக் கொட்டி, அதில் மிளகாய்த் தூள், உப்பு, மிளகு தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பின்பு அதில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாக கலக்கவும். அந்தக் கலவையில் வெட்டி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கிளறவும். பன்னீரில் மசாலா நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். பிறகு பன்னீரை ரொட்டித்தூளில் போட்டு பிரட்டவும்.

    இதை 15 நிமிடங்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பன்னீரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான பன்னீர் பாப்கார்ன் ரெடி.
    இந்திய உணவின் சுவை கூட்டியான ஊறுகாயைப் போன்று, கொரிய நாட்டில் எண்ணெய் சேர்க்காத காய்கறிகளுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, பதப்படுத்தி தயாரிக்கும் உணவுக்கு ‘கிம்சி' என்று பெயர்.
    கொரிய நாட்டின் பாரம்பரிய உணவின் அங்கமாக இருப்பது எண்ணெய் சேர்க்காத காய்கறிகள் மற்றும் மசாலாக் கலவை. காய்கறிகளுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, பதப்படுத்தி தயாரிக்கும் உணவுக்கு ‘கிம்சி' என்று பெயர். இந்திய உணவின் சுவை கூட்டியான ஊறுகாயைப் போன்று, கொரிய நாட்டின் பாரம்பரிய உணவின் அங்கமாக இருப்பது எண்ணெய் சேர்க்காத காய்கறிகள் மற்றும் மசாலாக் கலவை. காய்கறிகளுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, பதப்படுத்தி தயாரிக்கும் உணவுக்கு ‘கிம்சி' என்று பெயர். இது கொரிய நாட்டின் பிரதான குளிர்கால உணவாகக் கருதப்படுகிறது. இதன் செய்முறையை பார்ப்போமா?

    தேவையான பொருட்கள்


    முட்டை கோஸ் - 1
    முள்ளங்கி - 2
    கேரட் - 2
    வெங்காயம் - 1 பெரியது
    வெங்காயத் தாள் - 1 கைப்பிடி அளவு
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    சர்க்கரை - 1 ½ டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    நீள வாக்கில் நறுக்கிய முட்டை கோஸை தண்ணீரில் நன்றாக சுத்தப்படுத்தி, உப்பு சேர்த்து கிளறவும்.

    இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு மீண்டும் முட்டை கோஸை இரண்டு முறை தண்ணீரில் நன்றாகக் கழுவி உலர்த்தவும்.

    ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் அரிசி மாவு சேர்த்து அது கெட்டியாகாதபடி கிளறவும். அத்துடன் சர்க்கரை மற்றும் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து, அடிப்பிடிக்காதவாறு கிளறவும். அதில் சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து கலவையை ஆற விடவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், ஆற வைத்த அரிசி மாவு கலவையை சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்பு பொடிதாக நறுக்கிய வெங்காயத் தாள், தோல்நீக்கி நீளவாக்கில் வெட்டிய முள்ளங்கி மற்றும் கேரட்டை ஒன்றாகக் கலந்து, தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின்பு தண்ணீரை முழுவதுமாக வடியச் செய்து காய்கறிகளை மாவுக் கலவையில் சேர்க்க வேண்டும்.

    பிறகு அதில் முட்டைகோஸ் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    இந்தக் கலவையை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு இரண்டு நாட்கள் வரை பிரிட்ஜிலோ அல்லது சூரிய ஒளி படாத இடத்திலோ வைக்க வேண்டும். நன்கு பதமானவுடன் இதை ஊறுகாய் போன்று சாதத்துடன் சாப்பிடலாம்.

    பலன்கள்

    ‘கிம்சி’ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள புரோ பயாட்டிக்ஸ் சரும ஆரோக்கியத்துக்கு உதவும்.
    குழந்தைகளுக்கு அல்வா ஸ்டஃப்டு பூரி மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு - 250 கிராம்
    பாதாம்(ஊற வைத்தது) - 50 கிராம்
    தேங்காய் - அரை மூடி (துருவியது)
    கோவா - 100 கிராம்
    பால் - 3 கப்
    நெய் - 1 கப்
    உலர்ந்த திராட்சை - 50 கிராம்
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    சர்க்கரை - 350 கிராம்
    மைதா - 250 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    கடலை பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்ற குழையும் வரை வேக வைக்கவும்.

    ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு ஊறவைத்த பாதாமை விழுதாக தனியே அரைத்து எடுத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் உலர்ந்த திராட்சையை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    அதே வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற அதில் அரைத்து வைத்திருந்த கடலை பருப்பு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

    பின்பு அதில் துருவிய தேங்காய், பாதாம் விழுது, கோவா, பால், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து கலநது மிதமான தீயில் கிளறவும்.

    பிறகு தீயை அணைத்து வறுத்து வைத்திருந்த திராட்சையை கலந்து ஆற விடவும்.

    மைதாவை பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான அளவு உப்பு 1 டேபிள் ஸ்பூன் நெய், அரை கப் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு பிசைந்து வைத்திருந்த மாவை சப்பாத்தி போல் திரட்டி அதற்குள் கடலை பருப்பு அல்வாவை வைத்து மூடவும்.

    ஓரங்களில் தண்ணீர் தடவி சோமாஸ் போல் மடித்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூடான சுவையான அல்வா பூரி ரெடி.
    சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும் கோல்டு காபி. ஹோட்டலில் மட்டுமே கிடைக்கும் இந்த கோல்டு காபியை வீட்டில் எளிய முறையில் செய்யலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்

    பால் - 100 மில்லி
    இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    வெனிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப்
    சாக்லேட் சிரப் - 3 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    இன்ஸ்டன்ட் காபி பொடியில், சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பாலை காய்ச்சி, ஆற வைத்து, குளிர வைக்கவும்.

    குளிர்ந்த பாலில், காபி, வெனிலா ஐஸ்கிரீம், சாக்லேட் சிரப், சர்க்கரை சேர்த்து மிக்சியில் நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்.

    காபி கலவையை டம்ளரில் ஊற்றி, மேலே நுரையை போட்டு, சிறிது இன்ஸ்டன்ட் காபி துாள் துாவி, கோல்டு காபியை பரிமாறவும்.
    ஆஞ்சநேயர் மிளகு வடையை கோவில்களில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்து - 200 கிராம்
    சீரகம் - 2 ஸ்பூன்
    மிளகு - 3 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.

    உளுந்தை நன்கு நீரில் கழுவி 30 நிமிடம் மட்டும் ஊற வைத்துக் கொள்ளவும்.

    ஊற வைத்த உளுந்தை தண்ணீர் சேர்க்காமல், வடைக்கு மாவு அரைப்பதை விட சற்று நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் உடைத்த மிளகு மற்றும் சீரகத்தை, உப்பு சேர்த்து பிசையவும்.

    கடாயில் எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் மாவை தட்டையாக தட்டி நடுவில் சற்று துளையிட்டு எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான அனுமார் வடை தயார்.

    இந்த வடை பல நாட்கள் ஆனாலும் கெடாது என்பது இதன் சிறப்பம்சம்
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முட்டை கொத்து பாஸ்தாவை செய்வது மிகவும் எளிது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாஸ்தா - 1 கப்
    முட்டை - 3
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    பூண்டு - 5 பல்

    செய்முறை:

    பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவை மென்மையாக வேக வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு சேர்த்து தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    பிறகு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வரும் போது அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சூப்பரான முட்டை கொத்து பாஸ்தா தயார்.
    குழந்தைகளுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரெட் - 2
    3 நிற குடைமிளகாய் - தேவையான அளவு
    வெங்காயம் - தேவையான அளவு
    சீஸ் (mozzarella cheese) - விருப்பத்திற்கேற்ப
    பீட்சா சாஸ் - 2 டீஸ்பூன் ( கடைகளில் கிடைக்கும்)
    உப்பு - சுவைக்கு
    பட்டர் - 2 டீஸ்பூன்
    ஆர்கனோ (oregano) - கால் டீஸ்பூன்
    சில்லி ஃப்ளேக்ஸ் - கால் டீஸ்பூன்
    மிளகு தூள் - விருப்பத்திற்கு

    செய்முறை

    குடைமிளகாய், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    சீஸை (mozzarella cheese) துருவிக்கொள்ளவும்.

    ஒரு பிரெட்டை எடுத்து அதன் மேல் பட்டரை தடவி மறுபக்கத்தில் பீட்சா சாஸை தடவவும்.

    பின்னர் அதன் மேல் துருவிய சீஸை (mozzarella cheese) தூவி விடவும்.

    அதன் மேல் குடைமிளகாய், வெங்காயத்தை அடுக்கவும்.

    பின் அதன் மேல் உப்பு, ஆர்கனோ (oregano), சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள் தூவவும்.

    தோசை தவா சூடானதும் அதன் மேல் பிரேட்டை வைத்து மூடி வைத்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.

    இப்போது சீஸ் நன்றாக உருகி பிரெட் முழுவதும் பரவி இருக்கும்.

    சூப்பரான பிரெட் பீட்சா ரெடி.
    ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
    தேவையான பொருட்கள்:

    வெள்ளை எள் - அரை கிலோ
    வெல்லம் அல்லது கருப்பட்டி - அரை கிலோ
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்
    பொடித்த ஏலக்காய் -1 டீஸ்பூன்

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் எள்ளை கொட்டி சிறு தீயில் வறுத்தெடுக்கவும். எள் பொன்னிறமாக மாறும் வரை இடைவிடாமல் வறுத்தெடுக்கவும். ஒருபோதும் எள் கருகிவிடக்கூடாது. வறுத்த எள்ளை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். வெல்லத்தையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் சிறு தீயில் வைக்கவும்.

    பின்பு நெய் ஊற்றி அது சூடானதும், வெல்லத்தை கொட்டவும். வெல்லம் பாகு பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். அதனுடன் பொடித்த எள்ளையும், ஏலக்காயையும் சேர்த்து கிளறவும். பின்பு லட்டு களாக தயாரித்து காற்று புகாத டப்பாவில் 10 நாட்கள் வரை சேமித்து வைத்து சுவைக்கலாம்.
    உங்களுக்கு சிக்கன் என்றால் ரொம்ப பிடிக்குமா? இன்று வித்தியாசமான முறையில் சுவையான தயிர் சிக்கன் கிரேவியை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருள்கள்:

    சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 1 கப்
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    தனி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - அரை தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க :

    பூண்டு - 8 பெரிய பல்
    இஞ்சி - 1 துண்டு
    மிளகு - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

    சிக்கனுடன் அரைத்த விழுது, தயிர், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்தது 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறவும்.

    சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.

    கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

    அவ்ளோ தான் உங்களுக்கான தயிர் சிக்கன் கிரேவி தயார்..
    குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். எப்போதும் ஒரு மாதிரியாக செய்யும் பாஸ்தாவை இன்று வித்தியாசமான முறையில் சாக்லேட் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - 1 கப்
    காய்ச்சிய பால் - 1 கப்
    சர்க்கரை - 2 டீஸ்பூன்
    கோகோ பவுடர் - அரை கப்
    hershey's chocolate syrup - 2 டீஸ்பூன்
    சாக்லேட் சிப்ஸ்- விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்றாக கலக்கவும்.

    சர்க்கரை கரைந்தவுடன் அதில் கோகோ பவுடரை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொண்டே இருக்கவும்.

    கலவை திக்காக பதம் வந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும்.

    சாக்லேட் கலவையில் பாஸ்தாவை நன்றாக வேக விடவும்.

    அடுத்து அதில் hershey's chocolate syrup விட்டு மீண்டும் நன்றாக கலந்து விட்டு கொண்டே இருக்கவும்.

    சாக்லேட் கலவை முழுவதும் பாஸ்தாவில் சேர்ந்தவுடம் அடுப்பில் இருந்து இறக்கி சாக்லேட் சிப்ஸ் தூவி பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் பாஸ்தா ரெடி.
    குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளிய முறையில் வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயார் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 1 லிட்டர்
    கோக்கோ - 4 டீஸ்பூன்
    சாக்லேட் எசன்ஸ் - 4 துளி
    சர்க்கரை - 1/2 கிலோ

    செய்முறை

    பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிரவைக்கவும்.

    அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

    மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும்.

    10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.

    பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் 12 மணிநேரம் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.

    சூப்பரான கோக்கோ ஐஸ்கிரீம் ரெடி.
    ×