என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றுகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
    புளி - சிறிதளவு
    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு
    வெந்தயம் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    சுடுநீரில் புளியை ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொட்டி வதக்கி, போதுமான தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.

    அதனுடன் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கிவிடலாம்.

    சூப்பரான சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழம்பு ரெடி.
    சேமியாவில் கிச்சடி, உப்புமா,பாயாசம் போன்ற ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்பீங்க.இன்று வித்தியாசமாக சேமியாவில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 200 கிராம்
    தேங்காய் துருவல் - அரை கப்
    காய்ச்சிய பால் - 2 கப்
    அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
    பெ.வெங்காயம் - 4 (நறுக்கவும்)
    பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
    கறிவேப்பிலை, கடுகு, எள் - சிறிதளவு
    சீரகம், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:


    வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து அரை மணி நேரம் பாலில் ஊற வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

    நன்கு வதங்கியதும் வாணலியை இறக்கிவிட்டு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்னர் பாலில் ஊறிய சேமியா, அரிசி மாவு, எள், சீரகம், உப்பு ஆகியவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி நன்றாக மசித்துக்கொள்ளவும்.

    பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சேமியா கொழுக்கட்டை தயார்.
    கேரட்டில் பாயாசம், அல்வா. ஜூஸ் போன்ற சத்தான உணவு வகைகளை சுவையாக தயார் செய்து அனைவரையும் கவர முடியும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கேரட் டிலைட்.
    தேவையான பொருட்கள்

    நறுக்கிய கேரட் - அரை கிலோ
    சர்க்கரை - அரை கப்
    சோள மாவு - கால் கப்
    தண்ணீர் - 1 கப்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    அலங்கரிக்க தேவையான பொருட்கள்

    கொப்பரை தேங்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
    பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    குக்கரில் நறுக்கிய கேரட்டை போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். கேரட்  ஆறியவுடன் மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, சோள மாவு கலந்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்க வேண்டும். பின்பு அதை கேரட் விழுதுடன் சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கேரட் கலவையை அதில் கொட்டி நன்றாக கிளற வேண்டும்.

    அவ்வப்போது சிறிது நெய் சேர்ப்பதுடன் பாத்திரத்தில் ஒட்டி கொள்ளாதவாறும் கிளறி விட வேண்டும்.

    பாத்திரத்தில் ஒட்டாமல் கலவை நன்றாக திரண்டு வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி அதில் பரவலாக கலவையை கொட்டவும். சிறிது நேரத்தில் சூடு ஆறியதும் தேவையான வடிவத்தில் அதை துண்டு போட்டு கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கொப்பரை தேங்காய் பொடி மற்றும் பொடித்த சர்க்கரையை ஒன்றாக கலந்து வெட்டி வைத்துள்ள துண்டுகளின் மீது அதை தூவினால் சுவையான கேரட் டிலைட் தயார்.
    கோவக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும். வாரத்தில் இருமுறை கோவக்காயை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய கோவக்காய் - 3 கப்
    நறுக்கிய சின்னவெங்காயம் - அரை கப்
    நறுக்கிய தக்காளி - அரை கப்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 5 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    அதனுடன் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி, உப்பு போன்றவற்றையும் சேர்த்து வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் கோவக்காயை போட்டு வேகவைத்து இறக்கவும்.

    சூப்பரான கோவக்காய் பொரியல் ரெடி.

    ஆரோக்கிய பலன்: இது எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. கல்லீரல், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
    வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 2 (தோல் நீக்கி துருவவும்)  
    காய்ச்சிய பால் - அரை லிட்டர்  
    நெய் - 3 டீஸ்பூன்  
    சர்க்கரை - தேவையான அளவு  
    பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்  
    அரிசி மாவு - 5 டீஸ்பூன்  
    முந்திரி - தேவையான அளவு  
    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    செய்முறை:

    அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் பாதாம் மிக்ஸை கலந்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை தனியாக வறுத்து எடுக்கவும்.

    வாணலியில் மீதமிருக்கும் நெய்யை ஊற்றி வெள்ளரிக்காயை நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

    பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்.

    நன்கு வெந்ததும் அரிசி மாவு கலவை சேர்த்து கிளறவும்.

    பின்னர் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    அதனுடன் காய்ச்சிய பால், முந்திரி பருப்பை சேர்த்து ருசிக்கலாம்.

    சூப்பரான வெள்ளரிக்காய் பாயாசம் ரெடி.
    குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் ஆம்லெட் செய்து கொடுக்கவிரும்பினால் உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    உருளைக்கிழங்கு - 2
    மிளகாய் - 5
    பெ.வெங்காயம் - 1
    வெண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு கலந்து சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்குமுட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும்.

    நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.

    அதனை முக்கோணமாக வெட்டி கொடுத்தால் சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வித்தியாசமான ஸ்பைசி ஃபிரை ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம,
    தேவையான பொருட்கள்

    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - கால் கப்
    காய்ந்த மிளகாய் - கால் கப்
    வேர்க்கடலை - கால் கப்
    பொட்டுக்கடலை - கால் கப்
    அரிசி மாவு -  1 கப்
    வறுத்த ரவை - கால் கப்
    மைதா - கால் கப்
    உப்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    வாணலியில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து வைத்துகொள்ளவும்.

    அவை  அனைத்தையும் சூடு தணியும் வரை வைத்திருநது அத்துடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரை குறையாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடியுடன் சீரகத்தூள், அரிசி மாவு, மைதா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் எண்ணெய்யை சூடு செய்து மாவுடன் கலந்து கிளற வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாததி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    அதை சப்பாத்தி போல் தேய்த்து விருப்பமான டிசைன்களில் மாவை துண்டித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான மொறுமொறுப்பான ஸ்பைசி ஃபிரை பரிமாறத்தயார்.
    மாலையில் நேரத்தில் குழந்தைகள் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இந்த பிஸ்கீமியா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை கோஸ் - கால்கிலோ
    மைதா மாவு - கால் கிலோ
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
    பொடியாக நறுக்கிய ப.மிளகாய் -  2
    வேக வைத்த முட்டை - 3
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த முட்டையை துண்டுகளாக நறுக்கி போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், முட்டை கோஸ், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதோடு சிறிதளவு காய்ச்சிய எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சமோசா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

    சிறிய உருண்டைகளாக மாவை உருட்டி முன்னர் பிசைந்து வைத்திருந்த ஸ்டபிங்கை உள்ளே வைத்து ஓரங்களில் தண்ணீர் விட்டு மடித்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் அதை பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

    பின்னர் என்ன? சுவையான ஸ்நாக்ஸ் பிஸ்கீமியா தயார்.
    பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் வேர்க்கடலையில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்

    வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலைப் - 2 கப்,
    கடலைப்பருப்பு - அரை கப்,
    வெங்காயம் - 2
    இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 5,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை

    வேர்க்கடலையை ரவை போல் பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    இதனுடன் வேர்க்கடலைப் பொடி, வெங்காயம், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    இதிலிருந்து மாவை எடுத்து சிறு உருண்டைகளாக செய்து உள்ளங்கையில் வைத்து வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை பருப்பு வடை ரெடி.
    விதவிதமான பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் காபி டீயுடன் சாப்பிட அருமையான காளான் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 125 கிராம்
    கரம் மசாலா  2 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கேசரி பவுடர் - சிறிதளவு

    செய்முறை

    காளான்களை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் பாதியாக நறுக்கிய காளான், வெங்காயம், கரம்மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சோள மாவு, கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசையவும்

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காளான் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூடான சுவையான காளான் பக்கோடா தயார்.
    மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பத்தே நிமிடத்தில் ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பன்னீர் உருளைக்கிழங்கு ரோல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
    துருவிய பன்னீர் - அரை கப்
    ரொட்டி துண்டுகள் - 5
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    கேரட் - 1 (துருவவும்)
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    ரொட்டி துண்டுகளை உதிர்த்துக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து அதனுடன் ரொட்டி பிசிறு, மிளகாய் விழுது, உப்பு, கொத்தமல்லி தழை, இஞ்சி, மிளகாய் தூள், பன்னீர் ஆகியவற்றை சேர்த்து பிசைந்துகொள்ளவும்.

    பின்னர் சிறு உருண்டைகளாக்கி அதன் நடுவில் கேரட் துருவலை வைத்து நீள வாக்கில் விரல் அளவுக்கு உருட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ்பன்னீர்  உருளைக்கிழங்கு ரோல் ரெடி.
    புலாவ், சாதம், நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த இறால் மஞ்சூரியன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - கால் கிலோ
    சில்லி பிளேக்ஸ் - சிறிதளவு
    வெங்காயத்தாள் - தேவைக்கு
    பெ.வெங்காயம் - 1 (நறுக்கவும்)
    குடைமிளகாய் - 1 (நறுக்கவும்)
    பூண்டு - 5 பல்
    மிளகாய் சாஸ் - 1 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இறாலை கழுவி சுத்தம் செய்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறாலை போட்டு பொரித்தெடுத்துக்கொள்ளவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி தனியாக வதக்கவும்.

    அடுத்து பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சில்லி பிளேக்ஸ், உப்பு போன்றவற்றை கலந்து பச்சை வாசம் நீங்கும்வரை வதக்கவும்.

    அதன் பிறகு குடைமிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து லேசாக வதக்கி, இறாலை கொட்டி கிளறி இறக்கவும்.

    ருசியான இறால் மஞ்சூரியன் ரெடி.
    ×