என் மலர்tooltip icon

    சமையல்

    காராமணி சுண்டலில் புரதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒரு கிண்ணம் வேக வைத்த காராமணி சுண்டலை சாப்பிட்டால், நீங்கள் நீண்ட நேரம் பசி இல்லாமலும், ஆற்றலுடனும் இருப்பீர்கள்.
    தேவையான பொருட்கள்:

    காராமணி - 1/4 கப்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    வரமிளகாய் - 1
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் காராமணியை வாணலியில் போட்டு 2-3 நிமிடம் வறுத்து, பின் அதனை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி நீரை வடித்து, காராமணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் உப்பு தூவி, வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, இறுதியில் சீரகப் பொடி தூவி பிரட்டி இறக்கினால், காராமணி சுண்டல் ரெடி!!!

    தோசை, இட்லி, இடியாப்பம், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கத்தரிக்காய் - 2
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 1
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - அலங்கரிக்க

    அரைக்க

    தேங்காய் - கால் மூடி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி

    செய்முறை


    வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடி கனமாக கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

    பின்னர் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் மிதமாக வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    காய்கள் வெந்து எண்ணெய் மேற்பகுதியில் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கறிவேப்பிலையை தூவி பரிமாறவும்.

    சூப்பரான செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் ரெடி.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கில் அதிகளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் குறைந்தளவு கொழுப்புச்சத்தும், அதிகளவு நார்ச்சத்தும் உள்ளன.
    தேவையான பொருட்கள்

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 2,
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 1 (நறுக்கியது),
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது),
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை

    சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் 3 விசில் வரும்வரை வேக வைக்கவும்.

    தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.

    இதில் சிறு துண்டுகளாக வெட்டிய சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.

    வெந்தவுடன் சூடாகப் பரிமாறவும்.
    கச்சோரியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் மட்டர் (பட்டாணி) வைத்து கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1 1/2 கப்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    தண்ணீர் - தேவையான அளவு,
    பட்டாணி - 1 1/2 கப்,
    பச்சைமிளகாய் - 3,
    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    தனியா - 1 டீஸ்பூன்,
    சிவப்பு மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தூள் - 1 டீஸ்பூன்,
    ஆம்சூர் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், உ
    உப்பு - தேவைக்கு,
    நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்.

    செய்முறை

    மைதா மாவு, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பூரி மாவு போல பிசையவும்.

    தண்ணீர் சேர்க்காமல் இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம் பட்டாணி அனைத்தையும் கொரகொரப்பாக அரைக்கவும்.

    தனியா, சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் அனைத்தையும் தனியாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து அரைத்த பட்டாணி கலவை சேர்க்கவும்.

    பிறகு மிளகாய்தூள், மல்லித்தூள், ஆம்சூர்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    இறுதியாக அரைத்த மசாலாவைத் தூவவும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    மாவை பூரி போல் இட்டு நடுவில் ஒரு கரண்டி பட்டாணி மசாலா வைத்து மூடி மறுபடியும் பூரி போல் இட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மட்டர் கச்சோரி ரெடி.

    பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    பாலக்கீரை - 1 கப்
    தோசை மாவு - 1 கப்
    வெங்காயம் - 2
    ரவை - அரை கப்
    இஞ்சி - 1 அங்குல துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தோசை மாவை போட்டு அதனுடன், ரவை, உப்பு சேர்த்து நன்றாக கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    மிச்சியில் பாலக்கீரை, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து விழுது போல் அரைத்து மாவில் கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முதலில் வெங்காயத்தை பரப்பியபடி கல்லில் போட்டு மாவை சுற்றி ஊற்ற வேண்டும். பின்னர் சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

    வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாலக்கீரை ரவா தோசை ரெடி.
    மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த பிரெட் சீஸ் பால் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 4,
    கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம்,
    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:


    பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவை போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பிரெட் சீஸ் பால் ரெடி.


    தக்காளி உணவுகளை அடிக்கடி பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு வரக்கூடிய கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், சுவாசப்பை புற்றுநோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ,
    கடலைப்பருப்பு- 100 கிராம்,
    கடுகு - 1 ஸ்பூன்,
    பூண்டு - 4 பல்,
    காய்ந்த மிளகாய்- 10,
    எண்ணெய் - 2 ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    தக்காளி நன்றாக கழுவி 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

    பின்னர் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    சூடு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தால் சுவையான தக்காளி பருப்பு துவையல் தயார்.

    இது சப்பாத்தி, இட்லிக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
    கேரள மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் சுவையான மலபார் பரோட்டாவை இன்று வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - அரை கிலோ,
    முட்டை (விருப்பப்பட்டால்) - ஒன்று,
    பால் - 100 மில்லி,
    தயிர் - 50 மில்லி,
    தூள் உப்பு, சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சர்க்கரை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பின்னர், அதில் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பிறகு, சிறிது மாவை எடுத்து உருண்டையாக செய்து, தட்டி, இரண்டு கைகளிலும் வீசி, மடித்து எடுக்கவும்.

    பின்னர் மீண்டும் பரோட்டாவாக தட்டி வைக்கவும்...

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

    பிறகு, அதனை கைகளில் வைத்து அடித்து பரிமாறவும்.

    சூப்பரான மலபார் பரோட்டா ரெடி.
    பூண்டை விரும்பாதவர்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு அருமையான சுவையுடன் கூடிய பூண்டு பொடியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    பூண்டு - 1/2 கப்,
    உளுத்தம் பருப்பு - 1/4 கப்,
    துருவின தேங்காய் - 1/4 கப்,
    தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்,
    வரமிளகாய் - 10,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    பெருங்காயப் பொடி - 1/4 டீஸ்பூன்.

    செய்முறை

    பூண்டை தோல் உரித்து நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பூண்டுகளை போட்டு நன்கு சிவக்க வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    இதேபோல் துருவிய தேங்காயை போட்டு வறுத்து எடுத்து அதனுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் தொடர்ந்து மல்லி விதையை(தனியா) வறுக்கவும், இதை எடுக்காமல் அப்படியே வர மிளகாய்களை சேர்த்து வதக்கவும். வர மிளகாய் நன்கு வறுபட்டதும், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகம் இரண்டு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடவும்.

    இப்போது கால் ஸ்பூன் அளவிற்கு பெருங்காயப் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

    அனைத்தையும் நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு கொர கொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள்.

    சூப்பரான பூண்டு பொடி ரெடி.

    பூண்டு பொடியை இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு சைட்டிஷ்சாக வைத்து சாப்பிடலாம். சட்னியே உங்களுக்கு தேவைப்படாது.

    இட்லி பொடியை விட பூண்டு பொடி அட்டகாசமாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பூண்டு பொடி ஒருமுறை செய்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் வைத்து விட்டால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.
    கோகுலாஷ்டமியான இன்று கிருஷ்ணருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இன்று கிருஷ்ணருக்கு படைக்க ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 டம்ளர்
    சர்க்கரை - 2 1/4 டம்ளர்
    நெய் - அரை டம்ளர்
    முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
    ஏலக்காய் - 4 (பொடித்தது)

    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.

    நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மிக்சியில் போட்டு திரித்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

    திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.

    இந்த மாவை சிறிது சிறிதாக சூடான நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

    உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.

    இப்போது சூப்பரான ரவா லட்டு ரெடி.

    குறிப்பு :

    பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.

    ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று அவல் பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கெட்டி அவல் - 1/2 கப்
    வெல்லம் - 1/4 கப்
    பால் - 2 கப்
    ஏலக்காய் - 1
    முந்திரிப்பருப்பு - 5
    நெய் - 2 தேக்கரண்டி
    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.

    பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.

    பால் நன்றாக கொதித்து சுட்டி வரும் போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.

    1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.

    ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.

    வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.

    சூப்பரான அவல் பாயாசம் ரெடி.

    கவனத்திற்கு

    அவல் நன்கு  வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்கவேண்டும். வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது. 

    கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. கிருஷ்ண ஜெயந்திக்கு நைவேத்தியம் படைக்க அவல் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    அவல் - 1 கப்
    பொட்டுக்கடலை (உடைத்தக்கடலை )- கப்
    முந்திரி - 6
    திராட்சை - 6
    ஏலப்பொடி - சிறிதளவு
    பால் - அரை கப்
    சர்க்கரை - 1 கப்
    நெய் - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - 2 கப்

    செய்முறை

    அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, காய்ந்த திராட்சையை போட்டு வறுத்து வைக்கவும்.

    வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

    சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை பிடித்து வைக்கவும்.

    உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.

    ×