என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • திரை பிரகாசம் மற்றும் தீவிர மாற்றங்கள் காரணமாக கண் சிமிட்டும் வீதத்தைக் குறைக்கிறது.
    • கண் சோர்வு, கழுத்து வலி மற்றும் கை சோர்வு போன்ற அறிகுறிகள் அடங்கும்.

    இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசியமான ஒன்றாக வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மொபைலில் நேரத்தை செலவிழக்கும் பலர் உடன் இருப்பவர்களிடம் பேச கூட மறுக்கிறார்கள். எந்நேரமும் ஸ்மார்ட்போனில் மூழ்கி கிடப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெரிந்தாலும் அதை பற்றி கண்டுகொள்வதில்லை.

    எந்நேரமும் ஸ்மார்ட்போனிலேயே மூழ்கி இருக்கிறாயே? என்று கேட்டால் வீடியோ, ரீல்ஸ் தான் பார்க்கிறேன். அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று கேட்பார்கள். அப்படி பட்டவர்களுக்கு தான் புதிய ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.

    ஜர்னல் ஆஃப் ஐ மூவ்மென்ட் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், டிஜிட்டல் சாதனங்களில் செலவிடும் நேரம் மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் உள்ளடக்க வகையும் கண் சோர்வை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும், நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது, ஒரே நேரத்தில் 20 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்துவது ஆகியவை மனநல கோளாறுகள் உட்பட உடல் மற்றும் மன ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அவற்றின் நீல ஒளியை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது டிஜிட்டல் கண் சோர்வு, தூக்கக் கோளாறுகள் மற்றும் பார்வை தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

    ஆய்வில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் 1 மணிநேரம் மின் புத்தக வாசிப்பு, வீடியோ பார்த்தல் மற்றும் சமூக ஊடக ரீல்கள் (குறுகிய வீடியோக்கள்) ஆகியவற்றின் போது கண் செயல்பாடு பதிவு செய்யப்பட்டது.



    "சமூக ஊடக ரீல்கள் அதிகரித்த திரை மாறுபாடுகளைக் காட்டுகின்றன, இது தொடர்ச்சியான திரை பிரகாசம் மற்றும் தீவிர மாற்றங்கள் காரணமாக கண் சிமிட்டும் வீதத்தைக் குறைக்கிறது. இந்த கண் சிமிட்டும் வீதக் குறைப்பு மற்றும் இடை-சிமிட்டும் இடைவெளி அல்லது கண் சிமிட்டும் விரிவின் அதிகரிப்பு பார்வை சோர்வுக்கு வழிவகுக்கும்" என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.

    அசௌகரியத்தைப் பொறுத்தவரை, ஆய்வுக்குட்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்திய பிறகு லேசானது முதல் கடுமையானது வரையிலான அசௌகரியத்தை அனுபவித்தனர். இதில் கண் சோர்வு, கழுத்து வலி மற்றும் கை சோர்வு போன்ற அறிகுறிகள் அடங்கும்.



    மேலும், பதிலளித்தவர்களில் 83 சதவீதம் பேர் பதட்டம், தூக்கக் கலக்கம் அல்லது மன சோர்வு போன்ற சில வகையான மனநல கோளாறுகளை அனுபவிப்பதாகக் குறிப்பிட்டனர். அசௌகரியத்தைக் குறைக்க, ஆய்வுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் நீல ஒளி வடிகட்டிகளைப் பயன்படுத்துதல் அல்லது திரை வெளிப்பாட்டின் தாக்கத்தைக் குறைக்க டார்க் பயன்முறை அமைப்புகளை இயக்குதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    எது, எப்படியோ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதுபோல் தான் எல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பயன்படுத்தினால் நன்மை...

    • பழைய சோற்றில் உள்ள நொதிகள் செரிமானத்திற்கு உதவக்கூடியவை.
    • பழைய சோற்றில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

    சமைத்த சாதத்தில் மீதமாகும் சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை சாப்பிடும் உணவான, பழைய சோறு உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. ஆனால் இன்று பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக மாறி இருக்கிறது.

    பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருந்து வரும் இது, உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருவதால், நம் முன்னோர்களால் அமுதம் என்று போற்றப்பட்டது.

    பழைய சோற்றில் உள்ள நொதிகள் செரிமானத்திற்கு உதவக்கூடியவை. குறிப்பாக, குடல் இயக்கங்களை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கக்கூடியவை. பழைய சோற்றில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும், அரிதான வைட்டமின் பி6 மற்றும் பி12 போன்றவையும் இடம் பெற்றுள்ளன. பழைய சோற்றில் உள்ள இந்த நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன.

    பழைய சோற்றின் புளிப்புச் சுவைக்கு காரணம் அதில் உள்ள லாக்டிக் பாக்டீரியா அமிலம் ஆகும். பழைய சோறு சாப்பிடும்போது, தயிர், உப்பு, சீரகம், சாம்பார் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது சுவையையும், சத்துக்களையும் அதிகரிக்கும்.

    • சில உடல்நலப் பிரச்சனைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.
    • மல்லிகைப் பூவை தலையில் சூடிவந்தால், மன அழுத்தம் குறையும், உடல் சூடும் மாறும்.

    பெண்கள் விரும்பிச் சூடும் பூ மல்லிகை. மங்கையரின் கூந்தலில் இடம்பெறும் மல்லிகை, அவர்களுக்கு தனி அழகை தருகிறது. இனிய மணத்தைப் பரப்புகிறது.

    அதேநேரம் மல்லிகைப் பூ, மருத்துவ குணங்களும் நிறைந்தது என்று பலருக்குத் தெரியாது. இந்தப் பூவை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பல ஆரோக்கிய நலன்களைப் பெறலாம்.

    அவை பற்றி...

    * வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலிவடைவது மட்டுமின்றி, உபாதைகள் உண்டாவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், 4 மல்லிகைப் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர, வயிற்றில் உள்ள கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், பொதுவாக அடிக்கடி பூச்சி வெளியேற மருந்து சாப்பிடுபவர்கள் தவிர, அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

    * மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.

    * வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதைச் சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி, காலை- மாலை என இருவேளை அருந்தி வரலாம். இதனால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர, நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். இது மட்டுமல்லாமல், அவ்வப்போது ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.

    * மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தி வந்தால், வயிற்று வலி மற்றும் அஜீரணம் நீங்கும்.

    மல்லிகைப் பூவை தேனில் கலந்து சாப்பிடுவது நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் என்று கூறப்படுகிறது.

    * மல்லிகைப் பூ, பெண்களின் கருப்பை பிரச்சனைகளை சரிசெய்யவும், கருப்பையை வலுப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.



    * மல்லிகைப் பூவிலிருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

    * அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். உடலில் மல்லிகைப் பூ எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்யலாம். இதனால் உடல்வலி நீங்குவதோடு, குளிர்ச்சியும் அடையும்.

    * மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை தலையில் சூடிவந்தால், மன அழுத்தம் குறையும், உடல் சூடும் மாறும்.

    • இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது
    • இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.

    கொரோனா தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், கோவிட் தொற்று, அது லேசானதாக இருந்தாலும், நமது இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

    ஆண்களை விட பெண்களில் இந்த விளைவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    பிரான்சில் உள்ள பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோசா மரியா புருனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வை நடத்தியது.

    செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2022 வரை 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,390 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.

    "கோவிட் வைரஸ் நேரடியாக இரத்த நாளங்களைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது இரத்த நாளங்களை இயல்பை விட 5 வருடங்கள் வேகமாக வயதாக்குகிறது. இதன் விளைவாக, இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது" என்று பேராசிரியர் ரோசா மரியா புருனோ தெரிவித்தார்.

    கோவிட் தொற்று ஏற்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, கோவிடால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பாக பெண்கள், மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற நீண்டகால கோவிட் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு இரத்த நாளங்கள், தமனிகள் (Arteries) இறுக்கமாக இருந்தன என்பதை ஆய்வு காட்டுகிறது.

    இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு தமனிகள் அவ்வளவு விறைப்பாக இல்லை என்றும், அவர்களின் நிலை சற்று சிறப்பாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    பெண்களில் இந்த அதிக விளைவுக்குக் காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதே என்று பேராசிரியர் புருனோ நம்புகிறார்.

    "பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் வேகமாகவும் வலுவாகவும் செயல்படுகின்றன. இது அவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதே வலுவான பதில் தொற்றுக்குப் பிறகு இரத்த நாளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.

    இந்த சூழலில், கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   

    • ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
    • சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வாயு தொல்லை அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம்.

    இரவு உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஏதாவது பழமோ, நொறுக்குத்தீனியோ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். பெரும்பாலானவர்களின் தேர்வு வாழைப்பழமாகவே இருக்கும். ஆப்பிளும் சாப்பிடலாமா? என்ற குழப்பமும் சிலருக்கு எழுவதுண்டு. இரவில் ஆப்பிள் சாப்பிடுவது தவறல்ல. ஆனால் சாப்பிடும் நேரத்தையும், தூங்கும் நேரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. ஏனெனில் இரவில் ஆப்பிள் சாப்பிடுவதில் நன்மைகளும், தீமைகளும் ஒருசேர கலந்திருக்கின்றன.

    நன்மைகள்:

    ஆப்பிளில் பெக்டின் நிறைந்துள்ளது. இது கரையக்கூடிய நார்ச்சத்தை கொண்டிருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தரும். அதனால் இரவில் சிற்றுண்டி அதிகம் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் சீராக வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக உடல் எடையை குறைக்க அல்லது பசியை நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு ஆப்பிள் சிறந்த தேர்வாக இருக்கும்.

    ஆப்பிள்களில் உள்ளடங்கி இருக்கும் பிரக்டோஸ் நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும். இதனால் ரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கும். பதப்படுத்தப்பட்ட இனிப்புகளை விட இரவில் சாப்பிட ஏற்றதாக ஆப்பிள் விளங்கும்.



    இரவு சாப்பிட்ட பின்பு வயிறு உப்புசமோ, வயிறு வீங்கியோ செரிமானம் மந்தமாக நடப்பதாக உணர்ந்தாலோ, அதன் காரணமாக இரவில் தூக்கம் வருவதற்கு தாமதித்தாலோ ஆப்பிள் சாப்பிடலாம். ஏனெனில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனினும் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது வறுத்த உணவுகளுடன் ஆப்பிளை உட்கொள்ள வேண்டாம்.

    எப்போது சாப்பிடலாம்?

    தூங்க செல்வதற்கு 30 முதல் 60 நிமிடங்களுள் சாப்பிடுங்கள். அது ஜீரணமாவதற்கு போதிய கால அவகாசத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். சிவப்பு நிற ஆப்பிளை சாப்பிடுவது நல்லது. அது செரிமானத்தை எளிதாக்கும். ஆப்பிளுடன் பீனட் பட்டர் போன்ற புரதம் நிறைந்த உணவுப்பொருட்களை சேர்த்து உட்கொள்ளலாம். அது ரத்த சர்க்கரையை சமப்படுத்தி வயிறை முழுமையாக உணர வைக்கும். பாலுடன் ஆப்பிள் சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆப்பிளை லேசாக தீயில் சுட்டு எடுத்தோ, வேகவைத்தோ சாப்பிடலாம். அது ஆப்பிளை பச்சையாக சாப்பிடுவதை விட எளிதில் செரிமானமாகுவதற்கு வழிவகை செய்யும்.

    தீமைகள்:

    சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வாயு தொல்லை அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம். அத்தகைய உணர்திறன் மிக்க வயிற்று பிரச்சனை கொண்டவர்கள் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். விரும்பும் பட்சத்தில் பாதி ஆப்பிள் சாப்பிடலாம். அல்லது ஆப்பிளை வேகவைத்து உட்கொள்ளலாம்.

    இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களும் ஆப்பிளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஆப்பிளில் அதிக நீர்ச்சத்து உள்ளது. அதனால் சிறுநீர் அதிகம் கழிக்க நேரிடும்.

    ஆப்பிளை சாப்பிட்ட உடன் தூங்குவதும் நல்லதல்ல. சிலருக்கு அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.

    பழங்களை துண்டுகளாக நறுக்கி சாப்பிடும்போது சிலர், சில துண்டுகளை அப்படியே வைத்து விட்டு தங்கள் வேலையை தொடர்வார்கள். சில மணி நேரம் கழித்து பார்க்கும்போது அவை பழுப்பு நிறமாக மாறியிருக்கும். அவை ஏன் அந்த மாற்றத்திற்கு உள்ளாகின்றன தெரியுமா?

    ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்ற பழங்களை வெட்டிய பின்பு அவற்றில் இருக்கும் ஒரு நொதி காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலக்கிறது. அந்த வினையின் காரணமாக பழம் பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த நிகழ்வு `நொதி பழுப்பு நிறமாக்கல்' என்று அழைக்கப்படுகிறது. இச்செயலின் காரணமாக பழுப்பு நிறமாக மாறிய பழம் அதன் இயல்பு சுவையை இழந்து விடும். இந்த மாற்றம் ஒரு பழம் வெட்டப்படும்போதோ, மரத்தில் இருந்து பழுத்து கீழே விழும்போது சேதமடைந்தாலோ நிகழும். அதனை தடுப்பதற்கான வழிமுறைகள்:

    * எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலத்தன்மை கொண்ட பழச்சாறை பழத்துண்டுகள் மீது பூசுவதன் மூலம் இந்த வினையை தடுக்கலாம்.

    * ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பழத்துண்டுகளை சுமார் 2 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். பின்பு பழங்களை சாதாரண நீரில் கழுவி சாப்பிடலாம்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது தேன் சேர்த்து கலக்கவும். இதில் அனைத்து பழத்துண்டுகளையும் சுமார் 30 முதல் 40 விநாடிகள் ஊற வைக்கவும். அதன்பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இது பழங்களை சில மணி நேரங்களுக்குப் பிறகும் பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.

    * வெட்டப்பட்ட பழங்கள் கெட்டுப்போவதை தடுக்க பிரிட்ஜில் வைக்கலாம். அது பழங்கள் பழுப்பு நிறமாக்குவதை தாமதமாக்கும்.

    • குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும்.
    • மக்காச்சோளத்தில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன.

    மக்காளச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனியாக இருக்கிறது. மக்காச்சோளத்தை வேகவைத்து சாப்பிடுவதும் சிறந்தது. மக்காச்சோளம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    செரிமானத்திற்கு உதவும்

    மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான அமைப்பை சீராக இயங்கச் செய்து, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்கக்கூடியது. வயிறு உப்புசத்தையும் கட்டுப்படுத்தும். குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும்.



    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

    மக்காச்சோளத்தில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை தடுக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    கண் ஆரோக்கியத்தை காக்கும்

    மக்காச்சோளத்தில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. இவை கண் புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சினைகளை தடுக்க வல்லவை.

    நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்

    மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக வெளியிட வழிவகை செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    நச்சுக்களை வெளியேற்றும்

    மக்காச்சோளத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஊக்குவிக்கும்.

    • இறக்கைகளை நீக்கி, வெயிலில் உலர்த்தி, வறுத்து பொடியாக மாற்றி சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.
    • பல்வேறு சத்துக்கள் அடங்கி இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    கரையான் கூடுகளில் இருக்கும் முட்டையில் இருந்து பிறந்து வளருகிறது ஈசல்கள். உலகின் சில நாடுகளில் சுவையான சத்தான உணவாக இருக்கிறது. ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் வறண்ட காலம் முடிந்து முதல் மழை தொடங்கும் போது அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகளை வைத்து அதற்கு கீழே நீர் நிரம்பிய பாத்திரத்தை பொறியாக வைத்து ஈசல்களை பிடிக்கின்றனர்.

    இதன் பின்னர் இறக்கைகளை நீக்கி, வெயிலில் உலர்த்தி, வறுத்து பொடியாக மாற்றி சேமித்து வைத்துக்கொள்கின்றனர். இந்த ஈசல் பொடியில் வேறு எந்த இறைச்சியிலும் காணப்படாத அளவுக்கு அதிக புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆரோக்கியமான ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு உள்பட பல்வேறு சத்துக்கள் அடங்கி இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இது மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்பு, இதய பலவீனத்தை நீக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம், பக்கவாதம், முக வாதம் ஆகியவற்றுக்கு எண்ணெயில் ஈசலை காய்ச்சி பயன்படுத்தினால் நல்ல பலன் தரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

    இன்றும் கூட மழை காலங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் ஈசலை பிடித்து அரிசியுடன் சேர்த்து வறுத்து உண்ணும் பழக்கம் உள்ளது.

    • சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது.
    • தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும்.

    உடல் எடையை குறைப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை பேணும் விஷயத்திலும் காலை வேளையில் பின்பற்றும் உணவுப்பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும், சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தவும் அவை காரணமாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் காலையில் பருகும் பானமும் முக்கியமானது. சீரக தண்ணீர், தனியா எனப்படும் கொத்தமல்லி தண்ணீர் இதில் எதை பருகுவது சிறந்தது என்று பார்ப்போம்.

    சீரக நீரின் நன்மைகள்

    ஒரு லிட்டர் சீரக தண்ணீரில் 7 கலோரிகளே உள்ளன. அதனால் கலோரி உட்கொள்ளலை குறைக்க சிறந்த வழிமுறையை நாடுபவர்களுக்கு ஏற்ற பானமாக விளங்குகிறது. உடல் எடையை நிர்வகிப்பதற்கும் வழிவகை செய்கிறது.

    செரிமான நொதிகளை தூண்டி செரிமானம் எளிதாக நடைபெறவும், மலச்சிக்கலை போக்கவும் துணைபுரிகிறது. சீரகத்தில் உள்ளடங்கி இருக்கும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் வயிறு வீக்கத்தை குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

    மேலும் சீரகத்தில் இருக்கும் பயோபிளவனாய்டுகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கவும், கொழுப்பை திறம்பட எரிக்கவும், உடல் ஆற்றலை ஊக்கப்படுத்தவும் உதவுகின்றன.

    சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது. சர்க்கரை அதிகரிப்பதை தடுத்து நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் செய்யும். கணைய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

    எது சிறந்தது?

    சீரக தண்ணீர், தனியா தண்ணீர் இதில் எதை தேர்வு செய்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. ஏனெனில் இரண்டுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. அதிக கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் விரும்புபவர்கள் சீரக தண்ணீர் பருகலாம். திரவ மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்களுக்கு தனியா தண்ணீர் பொருத்தமானது.

    தயாரிப்பது எப்படி?

    சீரக நீர் தயாரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அதனை வடிகட்டி பருகிவிடலாம்.

    தனியா தண்ணீர் தயாரிப்புக்கு ஒரு டேபிள்ஸ்பூன் தனியாவை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் அதனை வடிகட்டி குடிக்கவும்.

    தனியா நீரின் நன்மைகள்

    தனியா நீரில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்றவை நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிடம் இருந்தும் பாதுகாக்கின்றன.

    நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டுவதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை ஒழுங்குபடுத்துகின்றன.

    பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் பிரச்சினைகளை சுமூகமாக எதிர்கொள்ள உதவிடும். தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும்.

    தனியாவில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் நச்சுகளை வெளியேற்றும். சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தும்.

    தனியா நீர் சிறுநீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவதை கட்டுப்படுத்தும். வயிறு வீக்கத்தையும் குறைக்கும். ரத்த ஓட்டத்தையும், சரும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவிடும்.

    • நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
    • 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை.

    இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என லான்செட் ஆய்விதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2019 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

    உலகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

    லான்செட் அறிக்கை 19.6 சதவீத ஆண்களும் 20.1 சதவீத பெண்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

    இதில் 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. இதன் விளைவாக, அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    மீதம் உள்ளவர்களில் 59 சதவீதம் பேர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 சதவீதம் பேர் இதய நோய் ஆபத்தும் கொலஸ்டிரால் பாதிப்பை கொண்டுள்ளனர்.

    எனவே இந்தியர்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.

    40 வயதைக் கடந்துவிட்டாலே 3 மாதங்களுக்கு ஒருமுறை HbA1c ரத்தப் பரிசோதனை செய்து 3 மாத ரத்த சர்க்கரை அளவின் சராசரியை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

    • துளசி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிக்கவும்.
    • கிராம்பு, மிளகு, ஏலக்காய் போன்றவற்றை கொண்டு டீ தயாரித்தும் பருகலாம்.

    ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும். இது தொண்டை வீக்கத்தை குறைக்கும்.

    தேன் கலந்த மூலிகை டீ அல்லது தேன், எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இது தொண்டை புண்ணை ஆற்றவும், தொண்டை கரகரப்பை நீக்கவும் உதவும்.

    சிறிதளவு இஞ்சியை பொடித்து, நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இது தொண்டையில் உள்ள புண் மற்றும் எரிச்சலை நீக்கும்.

    துளசி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிக்கவும். அல்லது துளசி இலைகளை மெல்லவும். இது தொண்டை வலியை போக்கும்.

    கிராம்பு, மிளகு, ஏலக்காய் போன்றவற்றை கொண்டு டீ தயாரித்தும் பருகலாம்.

    சூடான நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நீராவி பிடிக்கவும். இது தொண்டையில் உள்ள சளியை தளர்த்த உதவும். தீவிரமான தொண்டை வலி அல்லது காய்ச்சல் இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.

    • இந்த அளவுக்குள் பருகுவது பாதுகாப்பானது.
    • வரம்பை மீறுவது எதிர்மறையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    ஒருவர் தினமும் 3 முதல் 5 கப் காபி வரை பருகலாம். அதற்கு மேல் பருகுவது நல்லதல்ல. ஏனெனில் ஒருவரின் உடலுக்கு தினமும் 400 மில்லி கிராம் காபின் போதுமானது என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இது 4 கப் காபிக்கு சமம்.

    அதிகபட்சமாக 5 கப் காபியுடன் நிறுத்திக்கொள்வதுதான் சரியானது. இந்த அளவுக்குள் பருகுவது பாதுகாப்பானது. சில உடல்நல நன்மைகளுடனும் தொடர்புடையது. இந்த வரம்பை மீறுவது எதிர்மறையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    4 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பரிந்துரைக்கப்பட்ட தினசரி காபின் வரம்பு வெறும் 45 மில்லி கிராம் மட்டுமே. இது சிறிய துண்டு டார்க் சாக்லேட்டுக்கு சமமான அளவாகும்.

    • தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது.
    • சமையலறை மற்றும் வீடுகளில் துணிகளில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அவைகளை அணைக்க வேண்டும்.

    வீடுகளில் இல்லத்தரசிகள் சமையல் செய்யும் பொழுது, அல்லது ஆண்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஏதேனும் தீக்காயங்கள் ஏற்படக்கூடும். வீடுகளில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள் காரணமாகவும் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். அந்த வகையில் தீக்காயங்கள் ஏற்படும் போது எப்படிப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த ஆலோசனைகள் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

    இல்லத்தரசிகளை பொறுத்தவரை பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து சூடுபட்டுக்கொள்வது வழக்கம். அத்துடன் தண்ணீர் கொதிக்க வைக்கும் பாத்திரங்கள், துணி இஸ்திரி செய்யும் அயர்ன் பாக்ஸ், எதிர்பாராத மின்சார தாக்குதல், ஆடைகள் மற்றும் பிற பொருள்களில் தற்செயலாக தீப்பிடிப்பது ஆகியவற்றால் தீக்காயங்கள் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல் தீ விபத்து காரணமாக உடலில் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது மிகவும் அவசியம்.

    • தீப்புண்கள் ஏற்பட்டு விட்டால் அதன் மீது வெண்ணை, மாவு, சமையல் சோடா ஆகியவற்றை தடவுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



    • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆயின்மென்ட், லோஷன் அல்லது எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

    • தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது. அத்துடன் தீ புண்களை வெறும் கைகளால் தொடுவது துணி வைத்து துடைப்பது ஆகியவையும் கூடாது.

    • தற்போது பாலிஸ்டர் மற்றும் சிந்தடிக் ஆடை வகைகள் பயன்படுத்தப்படுவதால் தீக்காயங்களின் போது அவை உருகி தோலோடு ஒட்டிக் கொள்வது வழக்கம். அந்த நிலையில் அவ்வாறு தோலில் ஒட்டிக்கொண்ட துணிகளை தாங்களாகவே அகற்ற முயற்சிக்கக் கூடாது.

    இல்லத்தரசிகளை பொறுத்தவரை தீக்காயம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதில் உள்ள ஆபரணங்களை அகற்றி விடுவது நல்லது. சிறிய தீக்காயங்களாக இருந்தால் அதன் மீது நோய் தொற்று உருவாகி விடாமல் பாதுகாப்பாக சுத்தமான பருத்தித் துணியால் தீக்காயத்தின் மீது படாமல் மூடி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.

    சமையலறை மற்றும் வீடுகளில் துணிகளில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அவைகளை அணைக்க வேண்டும். அப்போது தீக்காயம் பட்டிருந்தால் குளிர்ந்த நீரை தீக்காயம் பட்ட பகுதியில் மீது ஊற்றி அந்த வெப்பம் தோலை பாதிக்காத வகையில் தடுக்கலாம்.

    முகம் மற்றும் கண் பகுதிகளில் ஏற்பட்ட தீக்காயம் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்ட நபரை அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது மிக முக்கியம்.

    பொதுவாக தீப்புண் ஏற்பட்டால் அதன் மீது பனிக்கட்டியை பயன்படுத்தாமல் குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது. சுய மருத்துவம் செய்வது என்பது கூடாது.

    ×