என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • நோய்களால் ஏற்படும் மரணங்களில் இதயநோய்தான் முதலில் இருக்கிறது.
    • புற்றுநோயால் லட்சக்கணக்கான பேர் உயிர் இழக்கிறார்கள்.

    `நதியின் வழியே நீரின் பயணம் என்பது போல், விதியின் வழியே வாழ்க்கை பயணம்' என்றார் ஓர் அறிஞர். மலையில் இருந்து கடலை நோக்கி பாய்ந்தோடும் நதிநீர் எண்ணிலடங்கா துளிகளை உள்ளடக்கியது. இதில் எல்லா துளிகளுமே கடலை சென்றடைவதில்லை. கணிசமான நீர் பயிர்களுக்கு பாய்கிறது; குடிநீராக பயன்படுகிறது, தொழிற்சாலைகளுக்கு உபயோகமாகிறது. கொஞ்சம் ஆவியாகவும் செய்கிறது. மீதமுள்ள துளிகள் மட்டுமே தனது முழு பயணத்தையும் நிறைவு செய்து கடலை சென்று அடைகின்றன.

    இதுபோல்தான் மனித வாழ்க்கையும். மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் நினைப்பது போல் எல்லாமே நடந்து விடுவதில்லை. நோய்நொடிகள், எதிர்பாராத விபத்துகள் மட்டுமின்றி மழை-வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களும் மனித வாழ்க்கையை திசைதிருப்பி விடுகின்றன.

    உலக நாடுகளில் எந்த அளவுக்கு பொருளாதார மற்றும் சுகாதார வசதிகள் பெருகி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு நோய்களும் அதிகரித்து இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

    இயற்கை மரணங்களை விட நோய்களால் நிகழும் மரணங்கள்தான் அதிகம். நோய்களால் ஏற்படும் மரணங்களில் இதயநோய்தான் முதலில் இருக்கிறது. இதயநோயால்தான் அதிகம் பேர் இறப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் புற்றுநோய் (கேன்சர்) இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ''இனி அவன் பிழைப்பது கடினம்'' என்று கைவிரித்துவிட, ''கங்கையில் நீராடினால் நோய் குணமாகலாம்'' என்று யாரோ சொன்னதை கேட்டு, கடைசி நம்பிக்கையாக பெற்றோர் அவனை ஹரித்துவார் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அங்கு கங்கையில் அவனை மீண்டும் மீண்டும் மூழ்கச் செய்து குளிக்க வைத்ததில் அவன் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனான்.

    புற்றுநோயுடன் தொடர்ந்து போராடினால் கூட அவன் இன்னும் சிறிது காலம் வாழ்ந்து இருக்கக்கூடும். என்ன செய்ய?...விதி முன்கூட்டியே அவன் வாழ்வில் விளையாடிவிட்டது.

    இதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாடகி பவதாரிணியின் (இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள்) அகால மரணமும் ஈடுசெய்ய இயலாதது.

    விஞ்ஞானமும், மருத்துவமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனால் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பேர் உயிர் இழக்கிறார்கள்.

    புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை தடுத்து நிறுத்தும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந்தேதி (இன்று) உலகம் முழுவதும் புற்றுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    • தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.
    • மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பக்க தலைவலி பிரச்சினையால் உலகெங்கும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலையின் ஒரு பக்கத்தில் தான் இது பலருக்கு வரும். சில நேரங்களில் சிலருக்கு இரண்டு பக்கமும் வலி வருவதுண்டு. சாதாரணமாக வந்து சாதாரணமாக போய்விடும் இந்த ஒற்றைத் தலைவலி. சில சமயங்களில் 10 சுத்தியல், 10 சம்மட்டி போன்றவைகளைக் கொண்டு அடித்தால் ஏற்படுவது போன்ற மிகக் கடுமையான வலியை உண்டுபண்ணி, ஆளையே பிழிந்து எடுத்துவிடும்.

    உடலில் நீர்ச்சத்து குறைவு, அதிக மன அழுத்தம், அதிக தூர பயணம், போதுமான தூக்கமின்மை, சைனஸ் பாதிப்பு, மூளையில் நோய், மூளையில் கட்டி, அதிர்ச்சியான விஷயங்கள், அதிக களைப்பு, அதிக கோபம், மலச்சிக்கல் பிரச்சினை, அஜீரணம், கழுத்து எலும்பு பிரச்சினை, மூளைப் புற்றுநோய், பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்காக வராமலிருத்தல், மாதவிடாய் சுத்தமாக நின்று விடுதல், தலையில் காயம் ஏற்படுதல், மது அருந்துதல், சரியாக சாப்பிடாமல் இருத்தல், பதப்படுத்தப்பட்ட மற்றும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுதல், ஜலதோஷம், அலர்ஜி, சில மருந்துகளின் பக்க விளைவுகள், ரத்தசோகை, மூளைக் காய்ச்சல், பிடிக்காத சென்ட், பெயிண்ட் வாசனை, அதிக வெளிச்சத்தில் நீண்ட நேரம் நிற்பது, அதிக சத்தத்தைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது, அதிக நேரம் செல்போன் பேசுவது - இது போன்ற இன்னும் பல காரணங்களால் ஒற்றைத் தலைவலி வரக்கூடும்.

    ஒற்றைத் தலைவலி அடிக்கடி வராமலிருக்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். பதற்றம், கோபம் கூடாது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்தமுள்ள இடத்தில் இருந்து தள்ளி வந்துவிட வேண்டும். அதிக ஒளியை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்.

    உங்கள் வாழ்நாளில் இதுமாதிரி ஒரு ஒற்றைத் தலைவலியை அனுபவித்ததில்லை என்று நீங்கள் உணர்ந்தால், வலி தூக்கத்தைத் தொந்தரவு பண்ணி எழுப்பிவிட்டால், அதிக குழப்பத்தினால் வலி வந்தால், அதிக காய்ச்சலோடு வலி வந்தால், கண் பார்வைக்கோளாறுடன் வலி வந்தால், கண் சிவந்து போய் கண் வலியோடு தலைவலி வந்தால், நினைவு இழந்து வலி வந்தால், உடனடியாக உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திப்பது தான் மிகமிகச் சிறந்தது.

    தலைவலி தானே என்று முடிவு செய்து நீங்களாகவே மருந்து, மாத்திரை, கை வைத்தியம் பண்ணிக் கொண்டு வீட்டிலேயே இருக்காதீர்கள். ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நோய்க்கான அறிகுறிதான். இதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்தால் ஒற்றைத் தலைவலி காணாமல் போய்விடும்.

    மேலும் திடீர் தலைவலி, நாட்பட்ட தலைவலி, குமட்டல், கண் பார்வையில் மாற்றம், கால் மூட்டுகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, உணவின் மணத்தை உணர இயலாத தன்மை என பல்வேறு அறிகுறிகளை, நாள்பட்ட மற்றும் தற்காலிக ஒற்றை தலைவலியின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

     இத்தகைய பாதிப்பிற்கு நடைமுறையில் பல்வேறு நிவாரண சிகிச்சைகள் இருப்பினும், தற்போது 'கிரீன் லைட் தெரபி' என்ற சிகிச்சை, நாள்பட்ட ஒற்றைத் தலைவலி பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இத்தகைய சிகிச்சையை நாள்பட்ட ஒற்றைத்தலைவலி பாதிப்புக்குள்ளானவர்கள் பெறும் பொழுது, இத்தகைய பாதிப்பில் இருந்து அவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் குணமடைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • கிளைசிமிக் இன்டெக்ஸ் உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
    • எண்ணெய்யில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடக்கூடாது.

    சர்க்கரை நோயாளிகள் அசைவ உணவுகளில் புரதம் அதிகம் உள்ள கோழி இறைச்சி, மீன் இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோழி இறைச்சியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதாலும், மீன் இறைச்சியில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பொருட்கள் அதிகமாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகள் இவ்வகை அசைவ உணவுகளை உட்கொள்ளலாம். சிகப்பு இறைச்சி என்று அழைக்கப்படும் ஆடு இறைச்சி, மாடு இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது.

    கிளைசிமிக் இன்டெக்ஸ் அல்லது சர்க்கரை உயர்தல் குறியீடு என்பது சாப்பிட்டவுடன் ரத்த குளுக்கோஸின் அளவை உடனே உயர்த்துவதற்கு, கார்போஹைட்ரேட் உணவின் ஒப்பீடு திறனை குறிக்கும் ஒரு எண். அதிக கிளைசிமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். பொதுவாக, அசைவ உணவுகளில் கார்போஹைட்ரேட் இல்லாததால் இவ்வகை உணவுகளுக்கு கிளைசிமிக் இன்டெக்ஸ் கிடையாது.

    இருப்பினும் இதை சமைக்கும் போது சேர்க்கப்படும் இதர பொருட்கள், பதப்படுத்துதல், உண்ணும் முறை (வறுத்து உண்பது) ஆகியவற்றால் இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகரிக்கக்கூடும். அசைவ உணவுகளில் என்ன உண்ணுகிறோம் என்பதை விட எந்த முறையில் உண்ணுகிறோம் என்பது தான் முக்கியம்.

    எண்ணெய்யில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடக்கூடாது. அசைவ உணவுகளை கூடியவரையில் வேகவைத்து சாப்பிடுவது தான் நல்லது. கொழுப்பு அதிகமுள்ள சிகப்பு இறைச்சி, முட்டையின் மஞ்சள், இறா, நண்டு ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது.

    • மசாலா பொருட்களின் ராணி என ஏலக்காய் அழைக்கப்படுகிறது.
    • ஏலக்காய் விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது.

    மசாலா பொருட்களின் ராணி என ஏலக்காய் அழைக்கப்படுகிறது. நறுமண பொருளான ஏலக்காய், பிரியாணி போன்ற உணவு வகைகளை சமைக்கும் போதும், தேநீர் தயாரிக்கும் போதும் அதன் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்தியர்கள் ஏலக்காயை கறிகள், ரொட்டி, அரிசி, தேநீர் போன்ற பலவகையான உணவுப்பொருட்களுடனும் கலந்து பயன்படுத்துகின்றனர்.

    இந்தியர்களின் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி என்பது வெறும் மசாலா பொருட்களை சேமித்து வைக்க பயன்படுவது மட்டும் கிடையாது. அதில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமும், மருத்துவ குணங்களும் உள்ளதை நாம் நன்கு அறிவோம். அதேபோல் ஏலக்காய் என்பது வெறும் மணம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படும் மசாலா பொருள் மட்டும் கிடையாது.

    ஏனெனில் அதன் இயற்கையான கூறுகள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன. ஏலக்காயில் மறைந்திருக்கும் 5 முக்கியமான ஆரோக்கிய பண்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்…

    செரிமானத்தை மேம்படுத்தும்:

    ஏலக்காய் விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது. அது செரிமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. ஏலக்காய் விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளை தடுக்கலாம். சமையலில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் உணவை குடல் வழியாக விரைவாக கொண்டு செல்ல உதவுகிறது.

    ரத்த அழுத்தத்தை சீராக்கும்:

    ஏலக்காயில் ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் டையூரிடிக் குணங்கள் உள்ளதால் அது, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த அளவை சமமாக பராமரிக்க உதவுகிறது. ஏலக்காய் சாற்றில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது, இது ரத்த நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது.

    வாய் துர்நாற்றத்தை போக்கும்:

    ஏலக்காய் பல நூற்றாண்டுகளாக வாய் துர்நாற்றத்தை போக்கவும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நன்றாக விருந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்று சாப்பிட்டால், அவை வலுவான பூண்டு அல்லது வெங்காய வாசனையை கூட அகற்ற உதவுகின்றன. ஏனென்றால் ஏலாக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவுகின்றன.

    மனச்சோர்வை சமாளிக்க உதவும்:

    ஏலக்காயில் நிறைந்துள்ள மணம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நன்மையை தருகிறது. மனச்சோர்வாக இருக்கும் போது ஏலக்காய் கலந்த ஒரு கோப்பை தேநீர் உங்களுடைய மனநிலையையே முற்றிலும் மாற்றுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதன் சுவை மற்றும் வாசனை உணர்வுகளை தளர்த்த உதவுகிறது.

     உடல் எடையை குறைக்க உதவும்:

    வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பை விரைவாக எரிக்க ஏலக்காய் உதவுகிறது. வயிற்றுப் பகுதியில் உள்ள அதிக கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் தண்ணீரை தக்கவைப்பது போன்ற விஷயங்களுக்கு உதவுவதால், ஏலக்காய் ஒரு முக்கிய எடை இழப்பு மசாலா பொருளாக விளங்குகிறது.

    வழக்கமான உணவில் ஏலக்காயை பயன்படுத்துவது எப்படி?

    1. கொதிக்கும் நீரில் சில திறந்த ஏலக்காய்களை சேர்க்கலாம்.

    2. உணவுக்கு பிறகு வாய் புத்துணர்ச்சியாக்க ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடலாம்.

    3. நிம்மதியான இரவு உறக்கத்திற்கு, படுக்கைக்கு செல்லும் முன்பு பாலில் ஒரு சிட்டிகை ஏலக்காயை மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து அருந்தலாம்.

    4. கறிகள் மற்றும் அல்வா மற்றும் கீர் போன்ற இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.

    • காய்கறி மற்றும் பழசாலட்களுக்கு அருமையான சேர்க்கை.
    • மசாலா சேர்த்து அப்படியே வறுத்தும் சாப்பிடலாம்.

    * கஞ்சி அல்லது சூப்களில் சேர்த்து பருகலாம்.

    * தயிர் அல்லது தானியங்களுடன் சேர்க்கலாம்.

    * காய்கறி மற்றும் பழசாலட்களுக்கு அருமையான சேர்க்கை.

    * சிக்கன் உணவுகள் அல்லது பாஸ்தாக்கள் போன்ற எந்த உணவையும் அலங்கரிக்கலாம்.

    * ஹம்முஸ், பெஸ்டோ அல்லது குவாக்காமோல் போன்ற மற்ற பொருட்களுடன் சேர்த்து உண்ணலாம்.

    * குக்கி மற்றும் ரொட்டி மாவில் கலந்து சமைக்கலாம்.

    * மசாலா சேர்த்து அப்படியே வறுத்தும் சாப்பிடலாம். பூசணி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்

    * பூசணி விதைகளை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுவலி, வாயுத்தொல்லை, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படும்.

    * இதிலுள்ள முக்கிய தீமை என்னவென்றால், அவற்றில் கலோரிகள் நிறைந்திருப்பதால், அவற்றை அதிகமாக சாப்பிடுவது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

    * பூசணி விதைகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இந்த விதைகளை நீரிழிவு நோயாளிகள் மருந்து மற்றும் ரத்த சர்க்கரைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் மிதமாக உட்கொள்ள வேண்டும்.

    பூசணி விதை கீர்

    தேவையான பொருட்கள்:

    பூசணி விதை – 1 கப்,

    சர்க்கரை – 1 ½ கப்,

    பால் – ½ லிட்டர்.

    செய்முறை:

    பூசணி விதையை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு நன்கு கழுவி, தண்ணீரை வடித்து தனியே வைக்கவும். ஊறவைத்த பூசணி விதைகளை சிறிது பால் சேர்த்து நன்கு மிருதுவாக அரைக்க வேண்டும். ஒரு கடாயில் அரைத்த பூசணி விதை விழுது, மீதமுள்ள பால், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும். பாயசம் கொதித்து நுரை வரும் வரை குறைந்த வெப்பத்தில் வேகவைக்கவும். பிறகு பரிமாறவும்.

    • நாள்பட்ட நோய்களின் ஆபத்துக்காரணிகளை குறைக்கின்றன.
    • இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    பூசணி விதைகளில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அம்சங்களுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துகள் கொண்டுள்ளன. இவை அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை புரதம், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றினை வளமாக கொண்டுள்ளது. அவை புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் ஆபத்துக்காரணிகளை குறைக்கின்றன. பூசணிப் பழத்தில் இருந்து அகற்றப்படும் இந்த விதைகளை நன்கு சுத்தம் செய்து, உலர்த்தி காயவைத்து பிறகு அதனை வறுத்தும், உப்பு மசாலா சேர்த்தும் அல்லது அப்படியே சுவையான சிற்றுண்டியாக சாப்பிடலாம். பூசணி விதைகளை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன, அவற்றைப் பார்ப்போம்

    சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றம்:

    வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் இருப்பதால் பூசணி விதைகள் சிறந்த ஆக்சிஜனேற்ற ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்க உதவுவதோடு, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. இதனால், எண்ணற்ற நோய்களில் இருந்து நமக்கு பாதுகாப்பை வழங்குகின்றன.

    கார்டியோ-பாதுகாப்பு:

    பூசணி விதைகள் நம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது இதயத்தை பல்வேறு கோளாறுகளில் இருந்து பாதுகாக்கிறது. பூசணி விதையில் உள்ள மக்னீசியம் நமது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மெக்னீசியம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது. இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. பூசணி விதையில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது, இதனால் நம் இதயத்தை பாதுகாக்கிறது.

    நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது

    பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. மெக்னீசியம் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். பூசணி விதைகள் நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் பயனுள்ளதாக இருப்பதால், அவற்றை நீரிழிவு உணவுத்திட்டத்தில் சேர்க்கலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    வைட்டமின் ஈ மற்றும் சிங்க் இருப்பதால் பூசணி விதைகள் நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும், மேலும் ஃப்ரீ ரேடிக்கல்கள் நமது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்தாமல் தடுக்கிறது.

    துத்தநாகம் நம் உடலை வீக்கம், ஒவ்வாமை மற்றும் ஊடுருவும் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் நோய்த்தொற்றுகளைத் தடுத்து நம் உடலுக்கு ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூசணி விதைகள் நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

    தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது

    பூசணி விதையில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் தூக்கத்திற்கு நல்லது. இது செரோடோனின் மற்றும் மெலடோனின் முன்னோடியாகும். செரோடோனின் மற்றும் மெலடோனின் இரண்டும் தூக்கத்தைத் தூண்ட உதவுகின்றன

    எடை இழப்புக்கு நல்லது

    விதைகளின் நன்மைகள் மிகவும் ஈர்க்கக்கூடியவை. ஏனெனில் அவை புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. அவை நம்மை நீண்ட நேரம் நிறைவாக உணரவைத்து, உணவு உட்கொள்ளலைக் குறைத்து, இறுதியாக உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன. இது எடையைக் குறைக்க உதவுகிறது.

    எலும்புகளுக்கு நல்லது

    பூசணி விதையில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. மெக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் நல்லது. உணவில் போதுமான அளவு மெக்னீசியம் உள்ளவர்களின் எலும்புகளில் தாதுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அபாயங்களை தவிர்க்க உதவுகிறது. மெக்னீசியம் குறைபாட்டின் மற்றொரு பக்க விளைவு ரத்தத்தில் கால்சியம் குறைபாடு. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோ போரோசிசைத் தடுக்கவும் உதவுகிறது.

    புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு நல்லது

    பூசணி விதைகளை உட்கொள்வது தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளாசியாவின் (BPH) அறிகுறிகளை மேம்படுத்துகிறது. பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. துத்தநாகம் புரோஸ்டேட் புற்றுநோயின் வாய்ப்புகளை குறைக்கிறது.

    விந்தணுவின் தரத்தை மேம்படுத்துகிறது:

    பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. துத்தநாகம் ஆண்களின் கருவுறுதலை மேம்படுத்துகிறது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது மற்றும் விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை அதிகரிக்கிறது.

    கர்ப்பத்திற்கு நல்லது

    பூசணி விதைகளில் துத்தநாகம் இருப்பதால் கர்ப்பகாலத்தில் நன்மை பயக்கும். துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தில் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நன்மை பயக்கும்.

    மனச்சோர்வு மற்றும் கவலையை குறைக்கிறது

    பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது. அது நம் மனதையும் அமைதிப்படுத்துகிறது.

    தலைமுடிக்கு நல்லது

    முடிக்கு பூசணி விதைகளின் நன்மைகள் ஆரோக்கியமான, வலுவான இழைகளை அவற்றின் வளமான ஊட்டச்சத்துக்களுடன் ஊக்குவிப்பதில் அடங்கும். இதனை உட்கொள்வதால் நமது கூந்தல் வலுவடைவதுடன், கூந்தலை பட்டுபோலவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

    சருமத்திற்கு நல்லது

    பூசணி விதைகள் தோலுக்கான நன்மைகள் குறிப்பிடத்தக்கவை. அது நம் சருமத்தை மென்மையாகவும், சுறுக்கமில்லாததாகவும் மாற்றும். இது தொற்றுநோய்களைத் தடுக்கிறது மற்றும் நமது சருமத்தை முகப்பரு இல்லாமல் வைத்திருக்கும்.

    புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது

    பூசணி விதைகளை நல்ல அளவில் உட்கொள்வது இரைப்பை, மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த விதைகளில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் இது ஏற்படுகிறது. பூசணி விதையில் உள்ள கரோட்டினாய்டுகள், புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

    • துரித உணவுகள் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது.
    • துரித உணவுகளில் அதிகமாக டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும்.

    தற்போதைய வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளே பெரும் இடத்தை பிடித்துள்ளன. அலுவலக பணி செய்பவர்கள் அருகில் இருக்கும் டீ கடைக்கு சென்றால், அங்கு அதிகரிப்படியாக நிறைந்திருப்பவை துரித உணவுகளாகவே இருக்கிறது. இன்று மட்டும்தான் என்று நாம் தினமும் எடுக்கும் சிறிய சிறிய துரித உணவுகள் கூட உங்கள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    வீட்டில் சமைப்பதை விட கொஞ்சம் காரமாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் நம் எல்லாருக்குமே இருக்கும். அதனால்தான் ஹோட்டலுக்கு சென்று பர்கரோ அல்லது பீட்சாவோ சாப்பிடுகிறோம்.

    ஆனால், இதுபோன்ற துரித உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நம் உடல்நலத்தை மோசமாக பாதிக்கும். அதிக கலோரிகளை கொண்ட உணவையோ அல்லது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு குறைகிறது. நாளடைவில் இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome disease) வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    ஒருவருக்கு இதய நோய், பக்கவாதம், டயாபடீஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக ட்ரைகிளீசரைட், நல்ல கொழுப்பின் அளவு குறைவாக இருப்பது மற்றும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். மேலும் உடல் எடை அதிகமாக இருப்பதால் வயிறு உப்புசம், சோர்வு, குடல் அழற்சி போன்றவை ஏற்படும்.

     துரித உணவுகள் சாப்பிடுவதால் பல வழிகளில் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது. உடலின் பல மெடபாலிக் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது கல்லீரல். துரித உணவுகளில் அதிகமாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும். இது கல்லீரலை பெரிதாக்கி குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.

    இந்நோய் மோசமானால் சிரோசிஸ் தாக்கும் அபாயம் உள்ளது. துரித உணவுகளில் அதிகமாக இருக்கும் சுத்திகரிகப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைடரேட்ஸ் கல்லீரலில் அழற்சியை உண்டாக்குகிறது. மேலும் துரித உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு, வீக்கத்தை ஏற்படுத்தி கல்லீரலுக்கு செல்லும் ரத்தத்தை தடை செய்கிறது.

    • ப்ரொக்கோலியில் அதிகளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • பச்சை பட்டாணியின் கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு மிக குறைவு.

     ப்ரொக்கோலியில் அதிகளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் குறைந்த அளவில் கொழுப்பு மற்றும் குறைந்த அளவில் கலோரிகளை கொண்டுள்ள காய்கறி ஆகும். எனவே ப்ரொக்கோலில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன், நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. மேலும் இது புற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய காய்கறியாகவும் உள்ளது.

    மேலும் ப்ரொக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். ப்ரொக்கோலி சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். தோள் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து இளமையான தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

    பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது; அல்லது குறைவாக இருக்கும். ஆனால் ப்ரொக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது.

     பச்சைப்பட்டாணி

    பச்சை பட்டாணியில் அதிகளவு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவில் கொழுப்பு சத்துக்களும், கொலஸ்ட்ராலும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பச்சை பட்டாணியில் மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ், போலேட், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளது. மேலும் இது வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

    பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை இதில் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து மிகுந்த பச்சை பட்டாணியை குளிர் காலத்தில் சாப்பிடுவதன் மூலமாக இன்னும் சிறப்பான பலன்களை பெற முடியும்.

    பச்சை பட்டாணியின் கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு மிக, மிக குறைவாகும். நாம் சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு வேகமாக சேருகிறது என்பதை குறிப்பதுதான் கிளைசமிக் இன்டெக்ஸ் ஆகும். இது மட்டுமல்லாமல் பச்சை பட்டாணியில் புரதம் மற்றும் நார்ச்சத்து போன்றவை மிகுதியாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வரும்.

    நமக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் டிரைகிளிசைரைடு, விஎல்டிஎல் போன்ற கொலஸ்ட்ரால் ஆகும். பட்டாணியில் உள்ள நியசின் என்னும் சத்து, நம் உடலில் இந்த வகை கொலஸ்ட்ரால் உற்பத்தி ஆகுவதை தடுத்து, உடலுக்கு நன்மை பயக்கும் கொலஸ்ட்ரால் வகையை மேம்படுத்துகிறது.

     மக்காச்சோளம்

    மக்காசோளத்தில் அதிக அளவில் புரதச்சத்துக்களும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்துக்களும் உள்ளது. மேலும் இதில் தியாமின் வைட்டமின் உள்ளது. இதில் ரத்த சோகை, புற்றுநோயைத் தடுக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கண் பார்வையை ஊக்குவிக்கும் மற்றும் எடை மேலாண்மைக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

    மக்காச்சோளத்தில் மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பீட்டா கரோட்டீன், பெருலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட அமிலங்களும் உள்ளது.

    மக்காச்சோளத்தில் உள்ள மெக்னீசியம்  எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை இயல்பாக பராமரிக்க உதவுகிறது. இது இதய நோய்கள் மற்றும் பல்வேறு நாட்பட்ட சுகாதார பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது.

    மக்காச்சோளத்தை சூடாக்கி சமைக்கப்படும் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி என்பதால், உடலால் எளிதில் ஜீரணிக்க கூடியது ஆகும். மேலும், இது மாவுச்சத்து இல்லாதது மற்றும் கொழுப்பு இல்லாதது, மேலும் இது இடைநிலை கார்போஹைட்ரேட்டுகளை டெக்ஸ்ட்ரைனாக மாற்றப்படுகிறது, இது உடலில் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இது பெரிஸ்டால்சிசைத் தூண்டுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

    • குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படும் பிரச்சினைகளாகும்.
    • சீழ் வடிவது, காதில் இயற்கையாக உற்பத்தியாகும்.

    காதில் சீழ் வடிதல், கடுமையான காதுவலி, காது வீங்கிப் போதல் போன்ற எல்லாமே குழந்தைகளுக்குத்தான் அதிகமாக காணப்படும் பிரச்சினைகளாகும். பெரியவர்களுக்கும் சில நேரங்களில் இந்தப் பிரச்சினைகள் வருவதுண்டு. காதில் இருந்து அழுக்கு நிறத்தில் நீர் வேகமாக வெளியே வடிவது, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கெட்டியாக மெதுவாக வெளியே சீழ் வடிவது, காதில் இயற்கையாக உற்பத்தியாகும்.

    மெழுகு அதிகமாகி வெளியே வடிவது, காதில் இருந்து ரத்தம் வெளியே வடிவது இவை எல்லாம் காதின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறிக்கும். இவை காயங்கள் மற்றும் தொற்றுநோயினால் தான் வருகின்றன. நடுக்காது பகுதியில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களால் தான் காதில் பிரச்சினையே ஏற்படுகிறது.

    காதில் இருந்து வடியும் சீழ் திரவமானது, காதிற்குள்ளே ஏற்படும் நோய் காரணமாகவே வருகிறது. குழந்தை பருவத்தில் காதில் சீழ் வடிவதை அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் அல்லது அந்தக் குழந்தையின் பள்ளி ஆசிரியர்கள் சரியாக கவனித்திருந்தால் வளர்ந்து வயதான பின்பும் காதில் சீழ் வர வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பெரியவர்கள் ஆனபிறகு வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு காது பிரச்சினையை அதிகமாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    குச்சி. பேப்பர், கோழி இறகு, பென்சில், பட்ஸ் போன்றவைகளை காதில் விட்டு சுத்தம் பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டு குடைவது கூடாது. இதன்மூலம் வெளியில் உள்ள கெட்ட கிருமிகள் காதிற்குள் நுழைகிறது. காது பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் எண்ணையில் முக்கி பிழிந்த, நன்கு இறுக்கமாக சுருட்டிய பஞ்சை காதுகளில் வைத்துக் கொண்டுதான் குளிக்க வேண்டும்.

    குளிர்காலங்களிலும், குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போதும் கண்டிப்பாக காதில் பஞ்சை வைத்துக் கொள்ள வேண்டும். காதுகளை மூடிய மாதிரி கழுத்தைச் சுற்றி துண்டை சுற்றிக் கொள்ள வேண்டும்.

    காதில் கடுமையான வலி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஆரம்பித்தால் நீங்களே வைத்தியம் செய்து கொள்வதை நிறுத்திவிட்டு முதலில் அருகில் உள்ள காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரைப் பார்க்க வேண்டும். அலட்சியமாக இருக்க கூடாது.

    • தோள்பட்டை மூட்டில் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துவது.
    • அசையாமல் வைத்திருப்பது உறைந்த தோள்பட்டை உருவாகும்.

    புரோசன் ஷோல்டர் எனப்படும் உறைந்த தோள்பட்டை என்பது தோள்பட்டை மூட்டில் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துவது. வலிஇருக்கிறது என்பதற்காக தோள்பட்டையை நீண்ட நேரம் அசையாமல் வைத்திருப்பது உறைந்த தோள்பட்டை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    தோள்பட்டையின் மூட்டுகள் இணைப்புத் திசுக்களால் இணைக்கப்பட்டுள்ளது. உறைந்த தோள்பட்டை நிலையில் இணைப்புத் திசுக்களின் உட்பகுதி கடினமடைந்து, தோள் மூட்டின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது கை முறிவு போன்ற நிலைகளில் நீண்ட காலத்திற்கு தோள் மூட்டை அசையாமல் வைத்திருந்தால் இது வரும் வாய்ப்பு அதிகம். கீழ்க்கண்ட காரணிகள் உறைந்த தோள்பட்டை வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

     1) 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்களுக்கு, உறைந்த தோள்பட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    2) நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்கள், அல்லது குறைந்த உடல் இயக்கம் உள்ளவர்களுக்கு உறைந்த தோள்பட்டை பாதிப்பு வரும் ஆபத்து அதிகம்.

    3) உடைந்த தோள் மூட்டு, பக்கவாதம் போன்ற நோய் நிலையில் உறைந்த தோள்பட்டை உருவாகும் வாய்ப்பு அதிகம்.

    4) நீரிழிவு நோய், அதிக தைராய்டு (ஹைப்பர் தைராய்டிசம்), குறை தைராய்டு (ஹைப்போ தைராய்டிசம்), பார்கின்சன் நோய் போன்ற நோய் உள்ளவர்களுக்கு உறைந்த தோள் பட்டை வரும் வாய்ப்புகள் அதிகம்.

     அறிகுறிகள்:

    உறைந்த தோள்பட்டை நோயின் ஒரு பிரிவு அதிக வலி கொண்ட உறைதல் நிலை' எனப்படும். இந்தநிலையில் தோள் மூட்டின் எந்தவொரு சிறு அசைவும் வலியை ஏற்படுத்துகிறது. மேலும் தோள்பட்டையை அசைக்க இயலாது, அல்லது அசைக்கும்போது வலி கடுமையாக இருக்கும். இந்த நிலை 2 முதல் 9 மாதங்கள் வரை நீடிக்கும்.

    இரண்டாம் நிலையான உறைந்த நிலையில் தோள் மூட்டின் வலி குறையக்கூடும். இருப்பினும், தோள்பட்டை கடினமாகி தோள்மூட்டை பயன்படுத்துவது மிகவும் சிரமமாகிறது. இந்த நிலை 4 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.

    மூன்றாம் நிலையான தாவிங் அல்லது உருகும் நிலையில் தோள்பட்டை நகரும் திறன் மேம்படத் தொடங்குகிறது. உறைந்த தோள்மூட்டு

    சித்த மருத்துவம்:

    இந்த நோய் சித்தர்களால் கூறப்பட்டுள்ள வாத நோய்களில் ஒன்றாகும். வாத நோய்களில் முக்குற்றங்களில் மிகுந்து நிற்கும் வாதத்தை சமன்படுத்த பேதி மருந்தை சித்த மருத்துவர்களின் அறிவுரை படி எடுத்து அதன் பிறகு நோய்க்குரிய மருந்தை சாப்பிட வேண்டும்.

    1) ரச கந்தி மெழுகு 500 மி.கி. இருவேளை பனை வெல்லத்தில் வைத்து சாப்பிட வேண்டும்.

    2) சேராங்கொட்டை நெய் 5 மி.லி. இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. நாகப்பற்பம் 200 மி.கி, முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, தேன் அல்லது வெந்நீரில் கொடுக்க வேண்டும்.

    4) தோள் மூட்டின் வலி உள்ள இடங்களில் விடமுட்டி தைலம், உளுந்து தைலம், காயத்திரு மேனி தைலம், வாத கேசரி தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    5) எந்தக்கை பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தக்கையின் முழங்கை பகுதியை உயர்த்தி, தோள்பட்டையை நீட்டுவதற்கு மென்மையான அழுத்தத்தைச் செலுத்தி, மேலே கொண்டு வரும் பயிற்சியை செய்யவேண்டும். இதை ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

    • ஒரு சிறந்த உணவாக ஓட்ஸ் திகழ்கிறது.
    • ஓட்சை பதப்படுத்தும் போது அதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகும்.

    சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்ய ஒரு சிறந்த உணவாக ஓட்ஸ் திகழ்கிறது. 100 கிராம் ஓட்சில் கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்து, 68 கிராம் கார்போஹைட்ரேட், 13 கிராம் புரதம் மற்றும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பர போன்ற தாதுக்களும் இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி சாப்பிட்டபின் ரத்தத்தில் குளுக்கோஸ் உடனே உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

    இதில் உள்ள பீட்டா குளுகான்' என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும், 'அவான்என்திரமைட் என்ற அல்கலாய்டு செல்களில் அழற்சியை தடுப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் ஓட்ஸ் சாப்பிடும் போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் பசி குறைந்து, அடிக்கடி நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவும். இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவு. ஆனால், இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஓட்சை பதப்படுத்தும் போது அதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகும்.

     பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள், கடைகளில் விற்கக்கூடிய இன்ஸ்டன்ட் ஓட்சை அறியாமையால் வாங்கி உட்கொண்டு, ஆரோக்கியத்துடன் இருப்பதாக கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. ஓட்சில் 'ஸ்டீல் கட் ஒட்ஸ்', 'ரோல்டு ஓட்ஸ், 'இன்ஸ்டன்ட் ஓட்ஸ்' என்று மூன்று வகை உள்ளது. இதில் பதப்படுத்தப்படாத ஒட்ஸ் ஸ்டீல் கட் ஒட்ஸ் ஆகும். இதன் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் 53. கொஞ்சம் பதப்படுத்திய ரோல்டு ஓட்சின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 57 ஆகும்.

    மூன்றாவது வகையான இன்ஸ்டன்ட் ஓட்ஸ் அதிகமாக பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுவதால், இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் 83 என்ற மிக அதிக மான அளவை அடைந்து, சர்க்கரை நோயாளிகளுக்கு இதை சாப்பிட்டவுடன் உடனே ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் ஸ்டீல் கட் ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆனால், இன்ஸ்டன்ட் ஒட்சின் கிளைசிமிக் இன்டக்ஸ் மிக அதிகம் என்பதால், இதனை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்தமுறை கடையில் ஓட்ஸ் வாங்கும் பொழுது ஸ்டீல் கட் ஓட்ஸ் அல்லது ரோல்டு ஓட்சை வாங்கி பயன் படுத்துங்கள். இன்ஸ்டன்ட் ஓட்சை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    • பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சினைகள் உள்ளன.
    • உள்ளிருந்து சரி செய்யக்கூடிய மருந்து பொருட்கள்.

    குளிர்காலம் என்பதால் பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. வறட்டு இருமலை உள்ளிருந்து சரி செய்யக்கூடிய வைத்தியத்திற்கு, தொண்டையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பொருட்களை உட்கொள்வது மிகச்சிறந்தது.

    தேவையான பொருட்கள்

    சித்தரத்தை- 50 கிராம்

    அதிமதுரம்- 50 கிராம்

    கடுகு- 50 கிராம்

    வெந்தயம்- 50 கிராம்

     பயன்படுத்தும் முறை

    சித்தரத்தை, அதிமதுரம், கடுகு, வெந்தயம் இந்த 4 பொருட்களையும் வறுத்து அரைத்த பிறகு நன்கு ஆறவைத்து அரைத்து பொடி செய்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் இரண்டு வேளை அரை ஸ்பூன் எடுத்து இதை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். அல்லது இந்த பொடியை ஒரு டம்ளர் கொதிக்கின்ற தண்ணீரில் சேர்த்து கஷாயம் போல் காய்ச்சி சாப்பிட்ட பின்பு தினமும் இரண்டு வேலை குடித்து வரலாம்.

    இந்த பொடியை தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்ட வர வேண்டும். தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளில் இருந்து முழு நிவாரணம் தரும்.

    இந்த பொடியுடன் ஓமவல்லி, துளசி, முசுமுசுக்கை, ஆடாதோடை இலை, திருநீற்று பச்சிலை, தும்பை இலை போன்ற இலைகளில் ஏதேனும் ஒன்றை சாறு பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

    இந்த பொடியை தொடர்ந்து குடித்து வந்தாலும் வறட்டு இருமல் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது அவசியமாகும்.

    சாப்பிடக்கூடாதவை:

    ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது.

    குளிர்ச்சியான பானங்கள் அருந்த கூடாது.

    குளிர்ச்சியான ஆகாரங்கள் சாப்பிட கூடாது.

    சுடுதண்ணீர் குடிக்க வேண்டும்.

    அதிகம் பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

    மூச்சி பயிற்சி செய்ய வேண்டும்.

    ×