என் மலர்
பொது மருத்துவம்
- சிறந்த வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
- மாத்திரை அல்லது இன்சுலினை தவறாமல் எடுத்தல் நல்லது.
இக்காலகட்டத்தில் வயதானவர்கள் மட்டுமல்லாது நடுத்தர வயதினரும், இளைஞர்களும் கூட நீரிழிவு நோயால் அதிகம் பாதிப்பு அடைகின்றனர். நீரிழிவு நோயால் புதிதாக கண்டறியப்பட்டவர்களுக்கும் பொதுவாக நடுத்தர வயதினருக்கும் நீரிழிவு நோயை நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.
சில சந்தர்ப்பங்களில் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இன்சுலின் ஊசி பயன்பாடு அவசியமாகிறது. இதனால் அவர்களின் சிகிச்சைக்கான செலவும் அதிகரிக்கின்றது.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிடில் தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக இதயம், கண், நரம்புகள், சிறுநீரகம் மற்றும் கால் பாதிப்பைத் தவிர்ப்பது அவசியம்.
இந்த ஆண்டு நீரிழிவு தினத்தையொட்டி, உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் "நீரிழிவு மற்றும் நல்வாழ்வு" என்னும் தலைப்பில் கொண்டாடப்படுகிறது.
சில எளிய வழிமுறைகளால் நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுக்குள் வைக்கலாம். அவை அதிக உடல் எடை மற்றும் தொப்பை தவிர்ப்பது , உணவுக்கட்டுப்பாடு அதாவது சர்க்கரை மற்றும் இனிப்பு பண்டங்களைத் தவிர்த்தல், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்த்தல், மது மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது மிகுந்த நன்மைகளை விளைவிக்கும்.
சிறந்த வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம், நடைபயிற்சி, எளிய உடற்பயிற்சி, சத்தான உணவுமுறை, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, தன்னம்பிக்கை, மன உறுதி, நல்ல உறக்கம் ஆகிய பழக்கவழக்கங்களால் நீழிவு நோயை சிறப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.

மேலும், மருத்துவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி மாத்திரை அல்லது இன்சுலினை தவறாமல் எடுத்தல் நல்லது. அதனோடு குடும்பத்தினர் கூறும் அறிவுரைகளையும் கேட்டு நடப்பது அவசியம்.
குடும்பத்தார், நீரிழிவுக்குறைபாடு உள்ளவர்களின் நலன் கருதி அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஆதலால், நீரிழிவு நோயைக் கண்டு மன வருத்தம் அடைவதை விட வாழ்க்கை முறையை மேம்படுத்தி நீரிழிவு நோயை வென்று ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.
- கண்களில் டயாபட்டிக் ரெடினோபதி என்ற பிரச்சனை ஏற்படும்.
- விழித்திரை நீரிழிவு நோயினால் பாதிப்புக்கு உள்ளாகிறது.
உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாவதை நீரிழிவு நோய் என்று கூறுகிறோம். 10 முதல் 20 வருடங்களுக்கு முன்பு வரை 10% பேர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இருந்த நிலை மாறி இன்று நூற்றுக்கு 20 முதல் 25 பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

டயாபடீஸ் மெலிட்டஸ் என்ற இந்த நீரிழிவு நோய் உடலின் முக்கிய பாகங்களான கண்கள், இதயம், ரத்தக் குழாய்கள், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது.
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் இந்த பாதிப்புகளை நாளடைவில் உடலில் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் ஒன்று டயாபட்டிக் ரெடினோபதி என்ற கண்களில் ஏற்படும் பிரச்சனை ஆகும்.
நீரிழிவு பாதிப்பினால் விழித்திரை பாதிக்கப்படுவது என்பது 100-ல் 20 பேருக்கு ஏற்படலாம். நாம் ஒரு காட்சியை பார்க்க கருவிழியும் விழித்திரையும் இணைந்து செயல்படுகிறது. கருவிழி மூலம் ஊடுருவும் ஒளி விழித்திரையில் பட்டு பிரதிபலிப்பதையே நாம் காட்சியாக பார்க்கிறோம்.

இந்த விழித்திரை நீரிழிவு நோயினால் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்த விழித்திரை இரண்டு விதங்களில் பாதிக்கப்படுகிறது.
ஒன்று விழித்திரை படலத்தில் ரத்த கசிவு ஏற்படுவது அதாவது ரெட்டினல் ஹெமரேஜ் என்பதாகும் மற்றொரு பிரச்சனை விழித்திரையில் நீர் கோர்வை ஏற்படுவது, அதாவது மேக்யூலர் எடிமா என்று அழைக்கப்படும் இந்தப் பிரச்சனையும் நீரிழிவினால் கண்களில் ஏற்படலாம். இந்த இரண்டு பிரச்சனைகளாலும் பார்வைத்திறன் குறையலாம்.
டயாபடிக் ரெட்டினோபதி என்பதில் நான்கு ஸ்டேஜ்கள் உள்ளன இதில் முதல் ஸ்டேஜ் என்பது பார்வை திறன் குறைவு இருக்காது. அறிகுறிகளும் இருக்காது. பொதுவாக கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்யும் பொழுது இதை மருத்துவர் கண்டுபிடிப்பார்.
இந்த பிரச்சனை பொதுவாக, நீரிழிவு நோய் மட்டுமல்லாமல் ரத்த உயர் ரத்த அழுத்தம், உயர் இரத்த கொழுப்பு, சிறுநீரக செயல்பாடு பாதிப்பினால் யூரியா கிரியாட்டினைன் போன்றவை அதிகரித்தல், ரத்த சோகை மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணிகளை நீக்கும் பொழுது அல்லது சரி செய்யும் பொழுது இந்த முதல் ஸ்டேஜ் டயாபடிக் ரெட்டினோபதி சீரமைக்கப்படுகிறது.
முதல் ஸ்டேஜ் கண்டுபிடிக்கப்படாமல் தொடர்ந்து நீடித்த நீரிழிவு மற்றும் மேல் குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடரும் பொழுது இரண்டாவது ஸ்டேஜ்க்கு இது செல்கிறது. இந்த நிலையில் ரெடினாவில் ரத்தக் கசிவு இருக்கும் அல்லது நீர் கோர்வை ஏற்படும்.

இந்த ஸ்டேஜில் லேசான பார்வை குறைபாடு இருக்கலாம். அந்த நேரத்திலும் மேற்குறிப்பிட்ட காரணிகளை சரி செய்ய வேண்டும்.
மேலும் மேக்யூலர் எடிமா என்ற விழித்திரையில் தேங்கி இருக்கும் நீரை ஊசி மூலம் சிகிச்சை அளித்து, ஸ்டேஜ் டூ ரெட்டினோபதி சீரமைக்கப்படுகிறது.
இதையும் தாண்டி நீரிழிவு ரத்த அழுத்தம் சிறுநீரக செயல்பாடு குறைந்து இருப்பது போன்ற காரணிகளால் நீரிழிவு கட்டுக்குள் இல்லாத பொழுது டயாபெடிக் ரெட்டினோபதி மூன்றாவது ஸ்டேஜ்க்கு செல்கிறது.
இந்த நிலையில் விழித்திரையில் அதிக ரத்த கசிவு இருக்கலாம் அல்லது நீர் தேக்கமும் அதிகமாக இருக்கலாம். இந்த நிலையில் பார்வை குறைவு ஏற்படும்.
விழித்திரையின் சேதத்தை கணிக்க பிளாரசென்ட் ஆஞ்சியோகிராம் என்ற பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் ரத்தக் கசிவு எங்கு ஏற்படுகிறது என்பதை கணித்து அந்த இடத்தில் லேசர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.
விழித்திரையில் ஏற்படும் நீர் தேக்கத்திற்கு மாதம் ஒருமுறை ஊசி மூலம் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். இந்த சிகிச்சை கடந்த காலங்களை விட தற்பொழுது அதிகமான அளவில் பலன் அளிக்கிறது என்றாலும் கூட இதில் பார்வை குறைபாட்டை முழுவதுமாக கொண்டு வர முடியும் என்பதை உறுதியாக கூற முடியாது.
இந்த மூன்றாவது ஸ்டேஜையும் கடந்து சிகிச்சை அளிக்கப்படாமல், கவனிக்கப்படாமல் இருக்கும் டயாபட்டிக் ரெடினாபதி நான்காவது ஸ்டேஜ் அதாவது என்ட் ஸ்டேஜ் என்ற கடைசி பிரிவுக்கு தள்ளப்படுகிறது.
இந்த நிலையில் விழித்திரையில் மட்டுமின்றி கண்ணுக்குள் அதிகமான ரத்த கசிவு ஏற்படும். இது விட்ரியஸ் ஹெமரேஜ் என்று அழைக்கப்படுகிறது. கண்ணுக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதால் விழித்திரை பிரிந்து விடும் நிலையும் ஏற்படுகிறது. அதாவது ரெடினல் டிடாச்மெண்ட்.
கண்ணுக்குள் ஊசி மூலம் சிகிச்சையோ லேசர் சிகிச்சையோ அளிக்க முடியாது. இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே செய்ய வேண்டி இருக்கும். விட்ரெக்ட்மி என்ற இந்த அறுவை சிகிச்சையை செய்து ரத்த கசிவை அகற்றி விழித்திரையை மீண்டும் இணைக்க செய்வோம். இதெல்லாம் செய்யும்பொழுது ஓரளவிற்கு பார்வை திரும்ப வரலாம்.

இந்த நிலையில் பார்வை முழுமையாக திரும்ப கொண்டு வர முடியும் என்று உறுதி அளிக்க முடியாது. ஏனென்றால் நீரிழிவு நோயால் சிறிய ரத்த நாளங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும். விழித்திரையை மீண்டும் இணைத்தாலும் கூட அதற்கு போதுமான அளவிற்கு ரத்த ஓட்டம் கிடைத்து மறுபடியும் இயங்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.
எனவே தான் ஸ்டேஜ் ஒன்று மற்றும் இரண்டில் பிரச்சனையை சீரமைத்து விட முடியும். ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளில் சிகிச்சை பலனளிக்காமலும் போகலாம்.
எனவே தான் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறி முடித்தார்.
- பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
- சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழம் ஒரு சுவையான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, மலிவான விலையில் கிடைக்ககூடிய பழமாக விளங்குகிறது.
ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 29 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்சத்து, 15 கிராம் சர்க்கரை, 422 கிராம் பொட்டாசியம் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி6, சி ஆகியவையும், மாங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும், கேட்டிசின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

ஒரு வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 31 முதல் 62 வரையிலும், கிளைசெமிக் லோட் 11 முதல் 22 வரையிலும் வேறுபடலாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தின் கிளைசெமிக் இன்டெக்சும், கிளைசெமிக் லோடும் அதிகமாக இருக்கும்.
ஆனால் அதே சமயம் குறைவாக பழுத்த வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்சும், கிளைசெமிக் லோடும் குறைவாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் பொதுவாக பச்சை நிறத்தில் உள்ள சற்று பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
ஏனெனில் குறைவாக பழுத்த வாழைப் பழத்தில் இருக்கும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் இன்சுலின் எதிர்மறை நிலையை குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
வாழைப்பழம் பழுக்கும் போது இதில் உள்ள ஸ்டார்ச் (மாவு சத்து) சர்க்கரையாக மாறுகிறது. வாழைப்பழத்தில் உள்ள அதிகமான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த நாளங்களை தளர்த்தி ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இதில் உள்ள அதிகமான அளவு நார்ச்சத்து, உணவு சாப்பிட்ட உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தாமதப்படுத்துகிறது.

வாழைப் பழம் பழுக்கும் போது அதனை திடமாக வைத்திருக்கும் பெக்டின் அளவு குறைந்து அதனை மிருதுவாக மாற்றுகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பெக்டின், குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் குடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஆற்றல் உடையது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் குளுக்கோஸ் அளவு அதிகம் உள்ள பூவன்பழம், ரஸ்தாளி போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. அதிக நார்ச்சத்து உள்ள குறைவாக பழுத்த பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம்பழம் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் மலச்சிக்கலுக்காக தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது தவறல்ல. ஆனால் சிறிய அளவிலான, குறைவாக பழுத்த வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
- சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம்.
- இரவு உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது.

நடப்பது
இரவு உணவு சாப்பிட்ட உடனேயே சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று கூறப்படு கிறது. இவ்வாறு செய்வது உடல் நலத்துக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. ஏனெனில் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய் வதால் கை, கால்களுக்கு ரத் தம் செல்லும். இது செரிமானத் தில் குறுக்கிடுகிறது. எனவே சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து நடக்கலாம்.

தண்ணீர் பருகுவது
நம் உடலுக்கு தண்ணீர் தேவை. ஆனால் அதை சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு தண்ணீர் பருக வேண்டாம். குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் காத்திருக்கவும்.

பழங்கள் சாப்பிடுவது
இரவு உணவு உண்ட உடனேயே பழங்கள் சாப்பிடு வதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதை செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது. பல் துலக்குவது.

பல் துலக்குவது
இரவு உணவு உண்ட உடனேயே பல் துலக்கும் பழக்கமும் பலருக்கும் உண்டு. ஆனால் அது. பல்லின் எனாமல் அடுக்கை பாதிக்கும். அதனால் பற்கள் இயற்கையான பொலிவை இழக்கும். எனவே இரவு உணவு உண்ட உடனே பல் துலக்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருந்து பல் துலக்கலாம்.

டீ, காபி குடிப்பது
பலர் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடிப்பார்கள். இரவுப் பணியில் இருப்பவர்கள் அதிகமாக காபி, டீ அருந்துவார்கள். உண்மை யில் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடித்தால்,செரிமானம் பாதிக்கப்படும். வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் ஏற்படும். உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலுக்கு கிடைக்காது. முக்கியமாக இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படாது. எனவே சாப்பிட்ட உடனேயே காபி, டீ குடிக்க வேண்டாம்.

குளிப்பது
சாப்பிட்ட உடனேயே குளித்தாலும், உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் செரிமான மண்டலத்துக்குச் சரியாகப் போவதில்லை. இதனால் செரிமானம் சீராக நடைபெறாது.

உறங்குவது
சிலர், சாப்பிட்ட உடனே படுக்கையில் சாய்ந்துவிடு வார்கள். அவ்வாறு உடனே உறங்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் செரிமான பாதிப்பு ஏற்படும். வாயு. அமிலத்தன்மை அதிகரித்து, உண்ணும் உணவு கொழுப்பாக மாறும். எனவே உடல் எடை கூடும். அதனால் படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிடுங்கள்.
- பற்களுக்கு அடியில் நரம்பு இழைகள்தான் உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்துச்செல்கிறது.
- நரம்பு இழைகள் ஒவ்வொரு பல்லையும் நேரடியாக மூளையோடு இணைக்கிறது.
பற்களை பொறுத்தவரை மேலே உள்ள தலை பகுதியை சுத்தமாக வைத்து கொண்டால் மட்டும் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது பல் கட்டுமானத்தில் சிறு பகுதி மட்டுமே.
அதை தாண்டி பற்கள் மூன்று பகுதிகளாக உள்ளன. முதல் பாகம் நாம் வெளியே பார்க்கக்கூடிய க்ரோன் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது பகுதி எனாமல், மூன்றாவது ஈறுகளுக்கு கீழே இருக்கும் வேர்ப்பகுதி ஆகியவைதான். இந்த மூன்றும் இணைந்தது தான் ஒரு முழு பல்லின் கட்டுமானம்.
இதில் முதல் பாகத்தில்தான் நமது உடலின் உறுதியான பகுதி இருக்கிறது. அதை நாம் எனாமல் என்று அழைக்கிறோம். கடினமானதையும் கடித்து உண்ண உதவும் பகுதிதான் இது.
அடுத்து இருக்கும் லேயர் டென்டின் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் மிகச்சிறியதாக லேயர்கள் உள்ளது.

உங்களின் எனாமல் தேய தேய நீங்கள் சாப்பிடும் சூடான அல்லது குளிர்ந்த பொருட்கள் இந்த டென்டின் மீது பட்டு உங்கள் பற்களை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றி விடும்.
அதனால் தான் பல்கூச்சம் ஏற்படுகிறது. அதற்கும் உள்ளே ரத்தக்குழாய்களால் சூழப்பட்ட பல்ப் சேம்பர் என்ற பகுதி இருக்கும். இது முழுக்க ரத்தக்குழாய்களால் ஆனது. அதற்கு கீழ் பிரவுன் நிறத்தில் சிமெண்ட் போன்று இருக்கும்.
ஈறுகளுக்கு கீழே பற்களுக்கு வெளியே தாடை எலும்புகளையும், பற்களின் வேர்பகுதிகளையும் இணைக்கும் இடம்தான் சிமண்டம் என்று சொல்லக் கூடிய பகுதி இருக்கிறது. இதுதான் உங்கள் பற்களை உறுதியாக பிடித்து வைத்து கொள்கிறது.
இதற்கும் கீழே ரத்த குழாய்களால் நிறைந்த ரூட் கேனல் இருக்கிறது. அதேபோல் மஞ்சள் நிறத்தில் இருக்க கூடிய நரம்பு இழைகள் ஒவ்வொரு பல்லையும் நேரடியாக மூளையோடு இணைக்கிறது.
இதைத்தாண்டி வெளியே இருக்கும் தாடை எலும்புகளில்தான் ஒவ்வொரு பல்லும் இணைக்கப்பட்டுள்ளது. இதை இணைக்கும் மேல்பகுதிதான் பெரிடோன்டல் லிகமென்ட் என்ற பகுதி.
அதற்கும் மேல் உங்கள் கண்களுக்கு பிங்க் நிறத்தில் தெரிவதுதான் ஈறுகள். இதுதான் பற்களின் அழகான கட்டமைப்பு.

பல்வலி ஏற்பட காரணம்?
பற்கள் தான் உணவை மெல்லுவதற்கும், பேசுவதற்கும் முக்கியமாக உதவுகிறது. இந்நிலையில் பற்களில் ஏற்படும் வலி, பல் கூச்சம், இதர அசௌகரியமான உணர்வுகளுக்கு நிறைய காரணம் உள்ளது.
முதலில் நாம் அதிகம் கேள்விப்பட்ட கேவிட்டிஸ் சிறு குழந்தைகளில் துவங்கி பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரும். இதை மருத்துவ துறையில் கேரீஸ் என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் பற்களுக்கு அடியில் இருக்கும் மூளைக்கு போகும் நரம்பு இழைகள்தான் பல் உணரும் உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்துச் சென்று உடனடியாக பிரதிபலிக்கும்.
ஆரோக்கியமற்ற முறையில் பற்களை பராமரிக்காமல், அதிகமாக சர்க்கரை தன்மையுள்ள உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருந்தால் உங்கள் பற்களின் நிறம் மாறும்.
பெரும்பாலும் அதிகமாக இனிப்புத் தன்மையுள்ள உணவை தின்று விட்டு சரியாக ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் தேய்க்காமல், பற்களை பராமரிக்காமல் இருந்தால் இதன் பாதிப்பு பெரிதாகி வேர்ப்பகுதி வரை சென்றுவிடும்.
அதற்கு பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது பாக்டீரியாக்கள் மற்றும் கெமிக்கல்களோடு கலந்து சொத்தைப்பல்லை உருவாக்கிவிடும். இதுவும் சிறிதாக துவங்கி பெரியதாக மாறிவிடும்.
அப்படியே ஒரு பல்லோடு நிற்காமல் அடுத்தடுத்த பற்களுக்கும் பரவி கொண்டே இருக்கும். இதே நேரத்தில் ஈறுகளும் தொற்றுக்கு உள்ளாகி ஈறுகளில் தொற்று அல்லது ஈறுவீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.
அதே போல், பற்களை இணைக்கும் பகுதிகளும் தொற்றுக்கு உள்ளாகலாம். அதை நாம் பெரியோடோன்டிடிஸ் என்று அழைக்கிறோம்.
இப்படி பிரச்சனைகள் ஆகும்போது தான் நமது பற்களுக்கு கீழ் இருக்கும் நரம்பு இழைகள் அந்த வலியை உடனடியாக மூளைக்கு தெரிவித்து நமது பற்களில் பிரதிபலிக்கும். அது நமக்கு தாங்க முடியாத வலியை தருகிறது.
- இன்புளூயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.
- அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம்.
சென்னை:
பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புளூ வைரஸ்களால் பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.
இதைத்தவிர, நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
மற்றொருபுறம், டாக்டர்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை.

ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளையில், தீவிர பாதிப்பு உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சனைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.
தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.
மருத்துவத் துறையினா், சுகாதார களப் பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக் கவசங்களை அணியலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெண்களுக்கும் இன்று சர்க்கரை வியாதியின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது.
- பாலியல் உணர்வுகள் குறைவாக இருக்கலாம்.
சர்க்கரை வியாதி பொதுவாகவே எல்லோருக்கும் அதிகரித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும். குறிப்பாக பெண்களுக்கும் இன்று சர்க்கரை வியாதியின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது.
பெண்கள் பலருக்கு இன்று சிறு வயதிலேயே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த கால கட்டத்தில் இருக்கக்கூடிய உணவு பழக்க முறைகள், உடற்பயிற்சி இல்லாத நிலை, நவீன வாழ்க்கை முறைகள், கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் பருமன் மற்றும் மனதளவில் ஏற்படுகிற மனஅழுத்தம், தூக்கம் இல்லாத நிலையில் இரவில் தொடர்ந்து கண் விழித்தல் ஆகியவை அனைத்துமே சர்க்கரை வியாதியை அதிகரிக்கிற மிக முக்கியமான விஷயமாகும்.

பெண்களுக்கு சர்க்கரை வியாதியானது அதிகமாக இருக்கும் இந்த காலத்தில், அவர்களுக்கு பாலியல் உறவு சம்பந்தமான விஷயத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக பெண்களுக்கு பெண் உறுப்பில் சர்க்கரை வியாதியால் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் எவ்வளவு வருகிறது என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட பெண்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாலியல் உறவு முறைகளில் பிரச்சனைகள் வருகிறது என்று ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கிறது.
முதலில் அது உறவு முறைகளில் ஆர்வம் இல்லாத நிலையாக இருக்கலாம், விருப்பம் குறைவாக இருக்கலாம், பாலியல் உணர்வுகள் குறைவாக இருக்கலாம். இரண்டாவது, பாலியல் உணர்வுகள் நார்மலாக இருந்தால் கூட, பாலியல் உறவுக்கான எழுச்சி குறைவாக இருக்கலாம்.

மூன்றாவதாக, இதனால் ஏற்படுகிற சில உச்ச கட்டங்களுக்கான பிரச்சனைகளை சீரான முறையில் அவர்களால் உணர முடியாமல் இருக்கலாம், நான்காவதாக, முக்கியமான விஷயமாக வலிகளும் ஏற்படலாம். அதனால் பாலியல் விஷயத்துகான இந்த 4 செயல்பாடுகளுமே சர்க்கரை வியாதி உள்ள பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு அவர்களது உடலில் பலவிதமான தொற்று கிருமிகள் ஏற்படுகிறது. மேலும் இதனால் ஹார்மோன் மாற்றங்கள், செல்களில் மாற்றங்கள் ஆகியவை உருவாகிறது.
குறிப்பாக ரத்தக்குழாய்களில் பழுது, நரம்பு மண்டலங்களில் பழுது, அதில் உள்ள தோல் பகுதிகள் மற்றும் ஜவ்வு பகுதிகளில் பழுது போன்றவையெல்லாம் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.
எனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிற பெண்களுக்கு, பாலியல் உறவு கொள்வதில் ஏன் ஆர்வம் ஏற்படாமல் இருக்கிறது என்று பார்த்தோமென்றால், இதுபற்றி வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளிலும் சொல்லப்படுகிற ஒரு கருத்து பெண்களுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் குறைவு என்பதுதான்.
அதாவது அந்த பெண்களுக்கு உறவு கொள்ளலாம் என்கிற எண்ணங்கள் வரலாம், ஆனால் உறவு கொள்வதற்கான ஆர்வம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இது பலராலும் மறுக்கப்பட முடியாத உண்மை.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முதல் முக்கியமான காரணம், பெண் உறுப்புகளில் ஏற்படுகிற சில உலர்வு தன்மைகள் ஆகும்.
குறிப்பாக உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது, இந்த பெண்களுக்கு பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, பல நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் வருவது குறைவாகி, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாகி, அதனால் ஏற்படும் சில பிரச்சினைகளால் பெண்களுக்கான உலர்வுத்தன்மை அதிகரிக்கிறது.

இதன் மூலம் பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள், தாக்கங்கள் ஆகியவை மூலம் அவர்களின் ஆர்வம் குறைவாகலாம். பல நேரங்களில் இதற்கு சில நவீன சிகிச்சை முறைகளும் தேவைப்படலாம்.
அந்த வகையில் சர்க்கரை வியாதி இருக்கிற பெண்களுக்கு, இந்த ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படுவது ரொம்ப ரொம்ப பொதுவான விஷயம் ஆகும். அதனால் தான் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு மாறுபடும், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மாறுபடும்.
ஏனென்றால் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறிப்பாக முதலில், நரம்பு மண்டலமும், ரத்தக்குழாய்களும் பழுதாகும். இதன் காரணமாக பெண் உறுப்புக்கு போகும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
மேலும் பெண்ணுறுப்பை சீராக வைத்திருக்கிற நரம்பு மண்டலம் பழுதாகும் நிலையில், அவர்கள் பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
- குழந்தைகள், முதியவர்களுக்கு பிரச்சினை ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் தடுக்கலாம்.
சென்னை:
சென்னையில் பருவநிலை மாற்றம் காரணமாக 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருகிறது. மழைக்காலத்தில் 'மெட்ராஸ் ஐ' கண் நோய் பரவுவது வழக்கம்.
தற்போது குழந்தைகள், முதியவர்களுக்கு அதிக அளவில் கண் நோய் பிரச்சினை ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

நமது கண்களில் விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் வைரஸ் தொற்று ஏற்படுவதால் 'மெட்ராஸ் ஐ' ஏற்படுகிறது. இந்த கண் நோய் பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசுக்கள் வாயிலாகவும் பரவக்கூடும்.
மேலும், 'மெட்ராஸ் ஐ' பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவும்.
'மெட்ராஸ் ஐ' கண் நோயானது எளிதில் குணப்படுத்தக்கூடிய மிக சாதாரணமான தொற்று நோய் தான். ஆனால், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் சிகிச்சை பெறுவதில் தாமதம் செய்து அலட்சியம் காட்டினால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுவிடும்.

கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை 'மெட்ராஸ் ஐ' நோய் தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.
பொதுவாக ஒரு கண்ணில் 'மெட்ராஸ் ஐ' பிரச்சனை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்காலத்தில் 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு அதிகரித்து வருவதை காண முடிகிறது. விழிப்புணர்வாக இருந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் அதை தடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஐடி நிறுவனங்கள் தான் Work from Home நடைமுறையை கொண்டு வந்தன.
- அமெரிக்காவைச் சேர்ந்த Sapien Labs ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.
கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்தனர். அந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்து வேலை செய்யும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.
அமேசான் மற்றும் இன்ஃபோசிஸ் மற்றும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதிகளை வழங்கின.

கொரோனா தொற்று கட்டுக்குள் வரத்தொடங்கிய பிறகும் சில ஆண்டுகளாக இன்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை வழங்குகின்றன.
ஆனால் நீண்ட நேரம் வீட்டில் இருந்து வேலை செய்வது மக்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான Sapien Labs உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மனநலம், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை விட சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளது.
அலுவலகத்தில் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதும், அலுவலகத்தில் உள்ள சூழலும் மன நலனில் பெரும் பங்கு வகிப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
65 நாடுகளைச் சேர்ந்த 54,000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். மனநலத்தை மேம்படுத்துவதில் சக ஊழியர்களுடனான உறவு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில், வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலம் சிறப்பாக இருப்பதாகவும், மேலும் ஊழியர்களின் சிரமத்திற்கு பணிச்சுமையே முக்கிய காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலை போன்ற காரணங்கள் அடிக்கடி வலியுறுத்தப்படும் அதே வேளையில், வேலை செய்யும் இடத்தில் நல்ல உறவுகள் மற்றும் வேலையில் பெருமைப்படுதல் ஆகியவை மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை என்று அறிக்கை காட்டுகிறது.

அதேசமயம் இந்தியாவில், அலுவலகத்திலிருந்து பணிபுரியும் பணியாளர்கள் சிறந்த மனநலத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. மற்ற நாடுகளை விட இந்திய ஊழியர்களிடையே குழுப்பணியின் காரணமாக மனநலம் மேம்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் சோகமாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர வாய்ப்புள்ளது. முற்றிலும் வீட்டிலிருந்து வேலை செய்வது குழப்பம், தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
- தினமும் சீரான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
- தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும்.
மன அழுத்தம் என்பது நமக்கு பிடிக்காத ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வதால் ஏற்படும் கவலை அல்லது உணர்ச்சிகள் என வரையறுக்கப்படுகிறது. இது ஒரு இயற்கையான மனித எதிர் வினையாகும்.

நம் வாழ்வில் ஏற்படும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கவலைகளை எதிர்கொள்ள நம்மைத்தூண்டுகிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்.
ஆனால் மன அழுத்தத்திற்கு ஒவ்வொருவரும் பதிலளிக்கும் விதம் தான் ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தத்தால் உணரப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் போது, மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைபோதாலமஸ், உடலில் ஒரு எச்சரிக்கை அமைப்பை உருவாக்குகிறது.
நரம்பு மற்றும் ஹார்மோன்களின் சமிக்ஞைகள் மூலம், இந்த அமைப்பு சிறுநீரகத்தின் மேல் காணப்படும் அட்ரீனல் சுரப்பிகளை மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் எழுச்சியை வெளியிட தூண்டுகிறது.
அட்ரினலின் இதயத்தை வேகமாகத் துடிக்கச்செய்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச்செய்து, அதிக ஆற்றலைத் தருகிறது.
கார்டிசோல், மன அழுத்தத்தை தூண்டும் முதன்மை ஹார்மோன். இது ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் என்றும் அழைக்கப்படும் சர்க்கரையை அதிகரிக்கிறது, மூளையின் குளுக்கோஸின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.
மன அழுத்தத்தால் ஏற்படும் எதிர்வினையால் கார்டிசோல், அட்ரீனலின் இவைகளின் அதிகப்படியான வெளிப்பாடு உடலின் அனைத்து செயல்முறைகளையும் சீர்குலைக்கும். இது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.
குறிப்பாக-கவலை, மனச்சோர்வு, செரிமான பிரச்சனைகள், தலைவலி, தசை மற்றும் உடல் வலி, நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம், தூக்க பிரச்சினைகள், எடை அதிகரிப்பு, ஞாபக மறதி, கவனக்குறைவு, முடிவெடுபப்பதில் திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி?
தினமும் சீரான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இறை பிரார்த்தனை, ஆழ்ந்த சுவாசம், தியானம், யோகா செய்வது நல்ல பலன் தரும்.

நகைச்சுவை உணர்வுடன் இருப்பது மற்றும் நகைச்சுவைகளை ரசிப்பது, நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது நல்லது.

தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் உண்ண வேண்டும். புகையிலை, மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி பிரம்மி மாத்திரை 1-2 வீதம் காலை, இரவு மற்றும் சடாமாஞ்சில் சூரணம் ஒரு டீஸ்பூன் இரவு வேளையில் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
- பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.
- பட்டாசுகளில் பெரும்பாலானவை அதிக ரசாயனம் கொண்டவையாக உள்ளன.
தீபாவளி பண்டிகையை சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் நாளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில் பட்டாசுகளை மிகவும் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:-
பட்டாசு வெடிக்கும் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருமே பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். சமீபகாலமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பெரும்பாலானவை அதிக ரசாயனம் கொண்டவையாக உள்ளன.
அந்த பட்டாசுகள் வெடிக்கும்போது தங்கம், வெள்ளியை உருக்கத் தேவைப்படும் அளவுக்கு அதிக வெப்பம் வெளியேறுகிறது.
பொதுவாகவே பட்டாசு விபத்துகள் நேரிடும்போது கைகளில் தான் அதிகம் காயம் ஏற்படும். அதற்கு அடுத்தபடியாக கண்களில் பட்டாசு துகள்கள் பட்டு காயம் ஏற்படுகிறது.
இந்த பட்டாசு துகள்கள் கண்ணின் இமைப் பகுதிகள், விழிப்படலம், கண் நரம்புகளை பாதிக்கின்றன. அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் பார்வை இழப்பு, பார்வை திறன் குறைபாடு, விழித்திரை பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.

எனவே கண்களில் தீப்பொறியோ அல்லது பட்டாசு சிதறல்களோ படும் பட்சத்தில் கண்களை அழுத்தி தேய்க்கவோ, கசக்கவோ கூடாது. காயம் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும் கூடாது.
அதேபோன்று, பட்டாசு காரணமாக ஏற்படும் காயங்களுக்கு வலி நிவாரண மருந்துகளை சுயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவை பாதிப்பை அதிகரிக்கக் கூடும்.
தூய்மையான நீரில் கண்களை திறந்த நிலையில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அந்த நிலையிலேயே மென்மையாக கழுவ வேண்டும். அதைத்தொடர்ந்து தாமதிக்காமல் டாக்டர்களை அணுக வேண்டும்.
டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் சுயமாக மருந்துகளோ, களிம்புகளோ தடவக் கூடாது. பட்டாசு காயங்களில் பார்வை இழப்பு ஏற்படுவதற்கு 50 சதவீதம் அலட்சியமே காரணமாக அமைகிறது. எனவே உரிய விழிப்புணர்வுடன் செயல்பட்டால், அத்தகைய பாதிப்புகளை தவிர்க்கலாம்.

பார்வை திறனுக்காக கண்களில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்தி இருப்பவர்கள், அதனை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கும்போது 2 மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தொடர்ந்து வெப்பமான சூழலில் கான்டாக்ட் லென்ஸ் இருக்கும் பட்சத்தில் அது கண்களுக்கு பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே பட்டாசு வெடிக்கும் போது கண்டிப்பாக கான்டாக்ட் லென்ஸ்களை கழற்றிவிட வேண்டும்.
மேலும் பட்டாசுகளை வெடிக்கும்போது கண்களை முழுமையாக மறைக்கும் வகையிலான கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டும்.
இதனால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும். மேலும் 5 மீட்டர் தொலைவில் இருந்துதான் பட்டாசு வெடிக்க வேண்டும்.
- மாலை நேரங்களில் வீட்டிற்குள் கொசுக்கள் அதிகமாக வரும்.
- வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இனி அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழைக்கு பிறகு தெருக்களில் தண்ணீர் தேங்கி பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மழைக்காலத்தில் மாலை நேரங்களில் வீட்டிற்குள் கொசுக்கள் அதிகமாக வரும். இதுவும் டெங்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாலையில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

காலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். இந்த நாட்களில், முடிந்தவரை வீட்டிற்குள் இருங்கள். குறிப்பாக குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாதீர்கள்.

கட்டாயம் இருந்தாலோ அல்லது பூங்காவிற்கு குழந்தைகளை விளையாட அனுப்ப வேண்டியிருந்தாலோ, அவர்களை முழுக் கை ஆடைகளை அணியச் செய்யுங்கள்.
பொதுவாக டெங்குவுக்கு நிலையான சிகிச்சை இல்லை. டெங்கு சிகிச்சையானது அதன் அறிகுறிகளை குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. டெங்குவுக்கு வலி நிவாரணி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்த அணுக்கள் அதிகரிக்க உணவு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
கண் வலி, தசை வலி, மூட்டு வலி, வாந்தி, சொறி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். சிகிச்சையின் போது இந்த அறிகுறிகளை குறைப்பதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.






