search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "food poisoning"

    • உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
    • உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பத்தனம்திட்டா:

    கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம், கீழ்வைப்பூர் அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் ஞானஸ்நான நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், ஏராளமானோ கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனம் ஒன்று உணவு வினியோகம் செய்துள்ளது. அந்த உணவை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 100 நபர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    உணவு சப்ளை செய்த கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டை கேட்டரிங் நிறுவனத்தினர் மறுத்துள்ளனர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் பருமலா பகுதியில் அதே நாளில் வேறு இரண்டு இடங்களில் உணவு வழங்கியதாகவும், இதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் கேட்டரிங் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

    வீராம்பட்டினத்தில் மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    புதுவை வீராம்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேலு, மீனவர். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது33). இவர்களுக்கு  3 மகன்கள். இதில் மூத்த மகன் லோகேஷ் (வயது15) மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதற்கிடையே  ஞானவேலுவுக்கும் அவரது உறவினருக்கும் சொத்து பிரச்சினை  ஏற்பட்டு அடிக்கடி  தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று அதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சீதாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள  முடிவு செய்தார்.  தான் இறந்து விட்டால்  மனநிலை பாதிக்கப்பட்ட மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என கருதிய சீதாலட்சுமி  மகனை கொன்று விட்டு  தானும் தற்கொலை  செய்து கொள்ள  எண்ணினார். சம்பவத்தன்று உணவில் எலிமருந்தை (விஷம்)  கலந்து லோகேஷ்க்கு கொடுத்து விட்டு மீதி இருந்த எலி மருந்தை சீதாலட்சுமி குடித்து விட்டார்.

    இதில் மயங்கி கிடந்த மனைவி மற்றும் மகனை ஞானவேலு மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர அளித்தும் பலனின்றி தாய்-மகன்  இருவரும் நேற்று மாலை இறந்து போனார்கள். 

    இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகிறார்.  இந்த சம்பவம்  வீராம்பட்டினம் பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    மகாராஷ்டிர மாநிலத்தில் விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #FoodPoisoningDeath
    நவி மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் மானே என்பவரின்  வீட்டு கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

    முதல் சுற்று உணவு பரிமாறி முடிந்ததும், உணவு சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. பெரியவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல மருத்துவமனைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், 3 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டதா? அல்லது வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள், உணவில் விஷம் கலந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #FoodPoisoningDeath
    ×