என் மலர்
நீங்கள் தேடியது "Black Tea"
- ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை.
- கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த கருப்பு பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம்.
கருப்பு காபி (பிளாக் காபி):
கருப்பு காபியை அதிகம் விரும்புபவர்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களாகத்தான் இருக்கிறார்கள். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு ஒரு கப் காபி பருகுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. காபியில் உள்ளடங்கி இருக்கும் அதிக காபின் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
மேலும் கருப்பு காபியில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்சிடென்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை. சர்வதேச தொற்றுநோயியல் ஆய்விதழில், 'கருப்பு காபி' குடிப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காபியில் இருக்கும் அதிக காபின் சிலருக்கு நடுக்கம், பதற்றம் அல்லது தூக்க கோளாறு பிரச்சினையை ஏற்படுத்தும். அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் வயிற்று அசவுகரியத்தை உண்டாக்கும். கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
கருப்பு தேநீர் (பிளாக் டீ):
கருப்பு காபி, கருப்பு தேநீர் இரண்டுமே ஒரே மாதிரியானவை என்றாலும் பிளாக் டீயில் காபின் குறைவாக இருக்கும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கருப்பு தேநீரை தொடர்ந்து பருகுபவர்களால் கூடுதலாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் பருகுவதற்கு ஏற்ற பானமாக கருப்பு தேநீர் விளங்குகிறது. ஒரு கப் கருப்பு தேநீரில் 2 கலோரிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க கருப்பு டீ சிறந்த தேர்வாகும்.
எது சிறந்தது?
இரண்டு பானங்களையும் மிதமாக பருகினால் ஆரோக்கியமானவை. உடல் இயக்க செயல்பாடு மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு எந்த பானத்தை தேர்வு செய்வது என்று முடிவு செய்யலாம். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலை பெறவும் கருப்பு காபியை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
சின்ன விஷயத்திற்கும் சட்டென்று பதற்றம் கொள்பவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு காபியை தவிர்க்க வேண்டும். மேலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கருப்பு காபி பருகக்கூடாது. ஏனெனில் அது தூக்கத்தை பாதிக்கும். காபின் அதிகமாக உட்கொள்ள விரும்பவில்லை என்றால் கருப்பு தேநீர் சிறந்த தேர்வாக அமையும்.
- பிளாக் காஃபியில் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
- காஃபி மற்றும் டீ இரண்டும் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
பிளாக் காஃபி மற்றும் தேநீர் இரண்டும் உலகெங்கிலும் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக இருந்தாலும், பிளாக் காஃபி மிகவும் ஆற்றல் வாய்ந்த, சுவையான மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பானமாக பார்க்கப்படுகிறது.
பிளாக் காஃபியில் அதிக காஃபின் உள்ளது, கலோரிகள் இல்லை. மேலும் பல்வேறு ஆரோக்கிய நலன்களுடன் கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
தேநீரை விட பிளாக் காஃபி எப்படி சிறந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தேநீர் மற்றும் காஃபி உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். மேலும் கோடிக்கணக்கானோர் காலையில் இதை குடிக்கும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். இரண்டும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், அவற்றுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன.
நிபுணர்களின் கூற்றுப்படி, காலை வேளையில் சூடான திரவத்தை பருக விரும்புபவர்களு பிளாக் காஃபி சிறந்த தேர்வாக இருக்கும்.
காய்ச்சும் நேரம் மற்றும் செயலாக்க முறைகளை பொறுத்து காஃபின் உள்ளடக்கம் மாறுபடும் என்றாலும், ஒரு கப் பிளாக் காஃபியில் 95 மில்லிகிராம் காஃபின் உள்ளது. மேலும் ஒரு கப் பிளாக் டீயில் 26-48 மில்லிகிராம் மட்டுமே இருக்கும்.
குறிப்பாக காலை நேரத்திலோ அல்லது அதிக நேரம் வேலை செய்யும் நேரத்திலோ விழிப்புணர்வையும், செறிவையும் மேம்படுத்த விரும்புவோருக்கு காஃபி சிறந்த பானங்களில் ஒன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிளாக் காஃபி கலோரிகள் இல்லாதது மற்றும் நீங்கள் சர்க்கரை அல்லது பால் சேர்க்கவில்லை என்றால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். தேநீரில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், பல தேநீர் குடிப்பவர்கள் சர்க்கரை, பால் அல்லது தேனைக் கூட சேர்க்கிறார்கள். இது விரைவாக கலோரி நிறைந்த பானமாக மாறும்.
பிளாக் காஃபியில் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய பிரச்சனைகள் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, தேநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருந்தாலும், காஃபியில் உள்ள பாலிபினால்கள் பலதரப்பட்டவை. இதனால் பொது நலனுக்கு அதிக விரிவான பாதுகாப்பை வழங்குகிறது.
காஃபியில் உள்ள காஃபின் ஆரோக்கியமான எடையைக் குறைக்க உதவுகிறது. இது கொழுப்பு உயிரணுக்களில் கொழுப்பின் முறிவைத் தூண்டுகிறது. உடலின் வெப்ப உற்பத்தியை அதிகரிக்கிறது. சராசரி எடை, அதிக எடை மற்றும் பருமனான உடல்வாகு கொண்டவர்களில் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. டீயில் காஃபின் இருந்தாலும், காஃபியில் உள்ள அளவு தினசரி கலோரி செலவை மிதமாக அதிகரிக்கிறது.
பிளாக் காஃபியில் உள்ள உயர்வான சுவை பெரும்பாலான மக்களால் விரும்பி சுவைக்கப்படுகிறது. உலகெங்கிலும் காஃபியில் பல்வேறு கலவைகள் மற்றும் சுவைகள் உள்ளன. தேநீருக்கு அதன் சொந்த வசீகரம் இருந்தாலும், காஃபி பிரியர்கள் விரும்பும் தீவிர சுவையம்சம் இதில் இல்லை.
காஃபி மற்றும் டீ இரண்டும் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்முறைகள் மூலம் நாட்பட்ட நோய்களுக்கு எதிராக பாதுகாக்கின்றன. காஃபியின் அதிக காஃபின் உள்ளடக்கம் சிறந்த ஆற்றலை அளிக்கிறது. அதேசமயம் தேநீரில் உள்ள காஃபின் மற்றும் எல்-தியானின் கலவை படிப்படியாக ஆற்றலை அதிகரிக்கிறது.
இரண்டு பானங்களும் ஆரோக்கியமானவை மற்றும் மிதமான அளவில் பாதுகாப்பானவை.






