என் மலர்
பொது மருத்துவம்
- கழுத்தருகில் ஏதாவது கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும்.
- தண்ணீரை வேகமாக குடிக்கலாம்.
மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (டயப்ரம்) எனப்படுகிறது. இது நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பாகும். இது மூச்சு விடுவதற்கும், உணவு வயிற்றுக்கு செல்வதற்கும் துணை செய்கிறது. இந்த தசைப்பகுதி திடீரென விரிந்து சுருங்கும் போது விக்கல் ஏற்படுகிறது.

காரணங்கள்
ஜீரணக் கோளாறு, குறைந்த அளவு புரதச்சத்துள்ள உணவுகளை எடுப்பது, கொழுப்புச் சத்துள்ள உணவை அதிகமாக உட்கொள்வது, அதிக காரத்துடன் உணவை எடுத்துக் கொள்வது, மாவுப் பண்டங்கள் அதிகமாக சாப்பிடுவது, ருசியான சாப்பாடு என்று மூச்சு விடக் கூட முடியாதபடி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, வேகவேகமாக சாப்பிடுவது போன்றவற்றால் இந்த தசைப்பகுதி சுருங்கி விரிவதால் விக்கல் ஏற்படுகிறது.
கல்லீரல் வீக்கம், இரைப்பை வீக்கம், உணவுக் குழாய் பாதிப்பு, நுரையீரலின் அடிப்பாகத்தில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு ரத்தத்தில் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படாமல் தேங்கும் பொழுது, கழுத்தருகில் ஏதாவது கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும். ஏனெனில் பெர்னிக் என்னும் நரம்பு கழுத்து தண்டுவடத்திலிருந்து ஆரம்பித்து மார்புப் பகுதிக்குள் உதரவிதான தசை வரை வருகிறது.

கண் சிவத்தல், கண்ணீர் வருதல், தொண்டை வறட்சி மற்றும் தொடர்ந்து விக்கல் ஏற்படும் போது வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சல் ஏற்படுவது உண்டு. தொடர்ச்சியாக விக்கல் இருந்தால் இது பல பிரச்சினைகளுக்கான எச்சரிக்கையாக இருப்பதால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
விக்கலை தடுக்கும் முறைகள்:
1) மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்தும்போது விக்கல் நின்று விடும். இதனால் தான் மூச்சை இழுத்துப் பிடித்தாலோ, தம் பிடித்தாலோ விக்கல் சட்டென்று நின்று விடுகிறது.
2) தண்ணீரை வேகமாக குடிக்கலாம். தண்ணீர் குடிக்கும் போது நாம் மூச்சு விடுவதில்லை. அப்போது உதரவிதான தசை இயல்பாக சுருங்கி விரிவதால் விக்கலும் நின்றுவிடும்.

3) அதிர்ச்சியாக ஏதாவது பேசினால் நாம் திடீரென விக்கித்துப் போய்விடுவோம். அதன் பலனாகவும் விக்கல் நின்று விடும்.
4) சீரகம், திப்பிலி இரண்டையும் வறுத்து பொடி செய்து சிறிதளவு தேனில் சாப்பிட விக்கல் நின்று விடும்.
- பக்கவாட்டில் படுத்து தூங்க முயற்சி செய்ய வேண்டும்.
- சற்று உயரமான தலையணையை பயன்படுத்துவது நல்லது.
தூக்கத்தில் தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து மூச்சுக் குழாயின் உள்சுற்றளவு குறைகிறது. இந்த குறுகிய பாதையில் காற்று செல்லும்போது குறட்டை ஏற்படுகிறது. குறட்டையானது பெரும்பாலும் பாதிப்பில்லாதது என்றாலும், அது தூக்கத்தை சீர்குலைத்து பகல்நேர சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ரத்த சர்க்கரை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குறட்டை ஏற்படுவதற்கு முக்கிய காரணம்:
மரபணு காரணங்கள், உடல் பருமன், சளி, ஒவ்வாமை, சைனஸ் பிரச்சினைகளால் ஏற்படும் மூக்கடைப்பு, மூக்கு செப்டம் விலகல், சிறிய தாடை போன்ற முக கட்டமைப்பு காரணங்கள், தொண்டை சதை (டான்சில்) வீக்கம், மல்லாந்து படுத்து தூங்கும் பழக்கம் (இதில் நாக்கு பின்வாங்கி சுவாசபாதையை தடுக்கும்), தைராய்டு குறைபாடு, புகைப்பழக்கம், மது பழக்கம், இரவில் அதிக தூக்க மாத்திரை உட்கொள்ளுதல்.
நீரிழிவு நோயாளிகளில் 4 பேரில் ஒருவருக்கு தூக்கத்தில் குறட்டையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு குறட்டை விடும் போது ஏற்படும் மூச்சுத்திணறல், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கி, இன்சுலின் எதிர்மறை நிலையை ஊக்குவிக்கிறது.
அது மட்டுமல்ல, குறட்டை விடும் போது சிலருக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து, கார்டிசால் போன்ற ஹார்மோன் அளவை அதிகரிக்க செய்து, ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது.
மேலும் குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறட்டை வராமல் தடுக்க சர்க்கரை நோயாளிகள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
1) தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொண்டும், நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும்.
2) புகைப் பழக்கம் மற்றும் மதுபழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
3) மூக்கடைப்பு பிரச்சினை உள்ளவர்கள் நாசி பாதைகளை திறக்க மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்த நாசி டைலேட்டர்கள் அல்லது ஒவ்வாமை மருந்துகளை பயன்படுத்தலாம்.
4) போதுமான அளவு தண்ணீர் குடித்து நீரேற்றத்துடன் இருங்கள். ஏனெனில் நீரிழப்பு தொண்டை திசுக்களை வறட்சியடையச் செய்து குறட்டையை மோசமாக்கும்.
5) மல்லாக்க படுத்து தூங்காமல் பக்கவாட்டில் படுத்து தூங்க முயற்சி செய்ய வேண்டும்.
6) சற்று உயரமான தலையணையை பயன்படுத்துவது சுவாச பாதையை திறந்து வைத்து குறட்டையை குறைக்க உதவும்.
- சுமார் 15 சதவீதம் பேருக்கு இந்தபிரச்சினை இருக்கிறது.
- டாக்டரின் ஆலோசனை இல்லாமல் காதிற்குள் மருந்துகள் போடக்கூடாது.
நீங்கள் அவதிப்படுவதாக சொல்கின்ற 'பல்சடைல் டின்னிடஸ்' என்பது காதிற்குள் கேட்கும் ஒரு வகை சீரான தாளத்துடன் துடிக்கக்கூடிய சப்தத்தோடு சேர்ந்த காதிரைச்சல் என்பதேயாகும்.

அதாவது உங்களைச் சுற்றி எந்தவித சப்தமும் இல்லாதபோதும் உங்கள் காதிற்குள் மட்டும் உங்கள் இதயத்துடிப்பின் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை 'சீர்தாள துடிப்புக் காதிரைச்சல்' என்றும் அழைக்கலாம்.
இந்த சப்தம் ஒருபக்க காதிலோ அல்லது இருபக்க காதிலோ கேட்கலாம். சப்தம் காதிற்குள் அதுவாகவே ஏற்படும். பின் சில நிமிடங்களில் அதுவாகவே போய்விடும். சிலருக்கு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். மொத்த ஜனத்தொகையில் சுமார் 15 சதவீதம் பேருக்கு இந்தபிரச்சினை இருக்கிறது.
இந்த 'சீர்தாள துடிப்புக் காதிரைச்சல்' ஏற்படுவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வயதானவர்களிடம் தான் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக சப்தத்தை ஒரே நேரத்தில் ஒரேயடியாக கேட்பது, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்து, தலை போன்ற இடங்களிலுள்ள ரத்தக்குழாய்களில் வீக்கம், காதிற்குள் அதிக அளவில் மெழுகு சேருவது, தலை கழுத்துப் பகுதியில் கட்டிகள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்று, இதய நோயுள்ளவர்கள், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்கள், ஹைப்பர்தைராயிடிசம் பிரச்சினை உள்ளவர்கள், ரத்தசோகை உள்ளவர்கள், இதுபோக இன்னும் பல காரணங்கள் காதிரைச்சலை உண்டாக்குகின்றன.
பதற்றம், மனச்சோர்வு, மனக்கவலை, எரிச்சலூட்டும் செயல்கள், சரியான தூக்கமின்மை, காது கேட்கும் திறன் குறைந்து போதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் மிக அதிக சப்தம் உள்ள இடங்களில் அதிக நேரம் நிற்பது இவைகள் எல்லாம் கூட காதிரைச்சலை உண்டுபண்ணும். காதிரைச்சல் உள்ள பலருக்கு காது கேளாமையும் லேசாக இருக்கக்கூடும்.
இந்த பிரச்சினை உள்ளவர்கள் ரத்த பரிசோதனை, ஆடியோகிராம், ஸ்கேன் முதலிய பரிசோதனைகளின் முடிவுகளுடன் காது மூக்கு தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணரைச் சந்தித்து அவரது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும்.
டாக்டரின் ஆலோசனை இல்லாமல் காதிற்குள் மருந்துகள் போடக்கூடாது. குச்சி, பென்சில், கோழி இறகு, பட்ஸ் போன்றவற்றை காதிற்குள் போட்டுக் குடையக் கூடாது.

மிக அதிக சப்தம் கேட்கும் இடங்களில் வேலை பார்ப்பவர்கள் காதிற்குள் கேட்கும் ஒலியைக் குறைக்க 'இயர் ப்ளக்' என்று சொல்லக்கூடிய ரப்பராலான காது செருகிகளை மாட்டிக் கொள்ளுதல் நல்லது.
பேச்சு சிகிச்சை, ஒலி சிகிச்சை, காது கேட்கும் கருவிகளை உபயோகப்படுத்துதல் போன்றவைகள் இந்த காதிரைச்சல் பிரச்சினைக்கு செய்யப்படும் ஆரம்ப சிகிச்சை ஆகும்.
காதிரைச்சல் என்பது ஒரு நோயினுடைய பிரச்சினையே தவிர இது நோயல்ல. என்ன நோயினால் இரைச்சல் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்தால் காதிரைச்சல் சரியாகிவிடும்.
- குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
- மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும்.
ஐஸ்கட்டி போல் ஜில்லென குளிர்ந்திருக்கும் நீரில் குளியல் போடுவது கூட ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதுதான். 'குளிர் நீர் தெரபி' எனப்படும் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
* தசை வலி
உடற்பயிற்சியின்போதோ, கடுமையான உடல் உழைப்பின்போதோ ஏற்படும் தசை வலியை போக்க குளிர்ந்த நீர் சிகிச்சை உதவும். ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த நாளங்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் பணியை எளிதாக்கும். மேலும் குளிர்ந்த நீர் சிகிச்சை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் தசைகளுக்கு புத்துயிர் அளிக்கும். லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றும். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியையும் குறைக்கும்.
* தூக்கம்
குளிர்ந்த நீர் சிகிச்சை நன்றாக தூங்கவும் உதவிடும். உடல் வெப்பநிலை குளிர்ச்சி சூழலில் இருப்பது தூக்கத்திற்கு உகந்தது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் குளியல் போடுவது ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் சட்டென்று நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் குறையும். குளிர் நீர் சிகிச்சை மேற்கொண்டவர்கள் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
* மனநிலையை மேம்படுத்தும்
ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டு மன ரீதியாக பலவீனமாக இருந்தாலோ, மன வேதனைக்கு ஆளானாலோ மன நிலையை மேம்படுத்துவதற்கு குளிர்ந்த நீர் குளியல் துணை புரியும். அப்படி உடலில் குளிர் வெப்பநிலை வெளிப்படுவது நோராட்ரெனலின் உற்பத்தியை அதிகரிக்கும். இது மூளையை தூண்டி கவனமுடன் செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும். மன நிலையை செம்மைப்படுத்தவும் வழி வகுக்கும்.
* மனச்சோர்வை போக்கும்
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும். இந்த குளிர் நீர் குளியல் மூளையில் இருந்து நரம்பு மண்டலம் வழியாக பயணிக்கும் நரம்புகளை தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும். உடலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சோர்வை விரட்டிவிடும். அதிலும் மனதளவில் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்ந்தால் குளிர்ந்த நீர் சிகிச்சை சிறந்த தீர்வாக அமையும். மனத்தெளிவை உண்டாக்கும். கவனிக்கும் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் வலுப்படுத்தும்.
- பாசிப் பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.
- வாழைப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பருப்பு உணவுகள்
இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் உண்ணக்கொடுக்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிப் பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.
ஆரோக்கியமான எண்ணெய்கள்
ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.
பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், கால்சியம் பற்றாக்குறையை ஈடுசெய்ய கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழைப்பழங்கள்
மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.
கேரட்
கேரட் 'வைட்டமின்-ஏ' நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.

கோழி
கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் வைட்டமின்-சி உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.

மீன்
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இதய அமைப்பை பலப்படுத்துகின்றன.
வைட்டமின்-டி
இது ஒரு உணவு அல்ல என்றாலும், உடல் உறிஞ்சும் சத்தாகும். உடல் வளர்ச்சியில் வைட்டமின்-டி முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
- பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் லெக்டின்கள் நிறைந்துள்ளன.
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதல்ல என்பது பொதுவான நம்பிக்கை.
உடல் ஆரோக்கியத்தை சீராக பேணுவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவு, ஊட்டச்சத்து விஷயத்தில் சரியான புரிதலின்றி செயல்படுகிறார்கள். அதனால் அவை சார்ந்த கட்டுக்கதைகளும் ஏராளம் உலவுகின்றன. அவற்றுள் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி பார்ப்போம்.
கட்டுக்கதை 1 : காலை உணவை தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்கும்.
உண்மை: காலை உணவு முக்கியமானதுதான். அதனை தவிர்ப்பது நல்லதல்ல. அதேவேளையில் காலை உணவு சாப்பிடாவிட்டால் மதிய உணவை அதிகமாக சாப்பிட தோன்றும், உடல் எடை அதிகரிக்கும் என்பதெற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.
கட்டுக்கதை 2: நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
உண்மை: காலை-மதியம், மதியம்-இரவு உணவுக்கு இடையே நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவிடும். இருப்பினும் நீங்கள் எந்தவகையான நொறுக்குத்தீனி தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமானது. அவை ஆரோக்கியமற்றவையாக இருந்தால் உடல் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நொறுக்குத்தீனி வகைகளில் பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் இடம் பெறுவது நல்லது.
கட்டுக்கதை 3: உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவிடும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். நச்சு நீக்கம் செய்ய வேண்டியது அவசியமானது.
உண்மை: நச்சு நீக்கம் என்பது கட்டுக்கதை. ஏனெனில் நச்சு நீக்க உணவுகள் பயனுள்ளவை, பாதுகாப்பானவை என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. அவை பெரும்பாலும் அறிவியல் ரீதியாக ஆதரிக்கப்படாத, மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டவை.
அவற்றை தொடர்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் சாதாரண உணவை உட்கொள்ள தொடங்கும்போது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கக்கூடும். மேலும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் இயற்கையான நச்சு நீக்க அமைப்புகளுக்கு தீங்குவிளைவிக்கும்.
கட்டுக்கதை 4: குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்லது.
உண்மை: குறைந்த கொழுப்பு உணவுகள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்களை உள்ளடக்கி இருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலான உணவுகள் அதிகப்படியான பசி, எடை அதிகரிப்பு உள்பட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்படாத உணவுகள் மற்றும் இயற்கையாகவே கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதுதான் சிறந்தது.
கட்டுக்கதை 5: பீன்ஸ் நச்சுத்தன்மை வாய்ந்தவை.
உண்மை: பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் லெக்டின்கள் நிறைந்துள்ளன. அவை விஷத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் பீன்ஸை சமைக்கும்போது லெக்டினின் வீரியம் குறையக்கூடும். அத்துடன் பீன்ஸ் நார்ச்சத்து நிரம்பப்பெற்றது. உடல் எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
கட்டுக்கதை 6: சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருளைக்கிழங்கை விட ஆரோக்கியமானது.
உண்மை: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதல்ல என்பது பொதுவான நம்பிக்கை. பெரும்பாலானவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட விரும்புகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை வள்ளிக்கிழங்கும், உருளைக்கிழங்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டவைதான். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளடங்கி இருக்கிறது.
கட்டுக்கதை 7: சிவப்பு ஒயின் இதயத்திற்கு ஆரோக்கியமானது.
உண்மை: மது பானங்களால் எந்த நன்மையும் இல்லை. எந்த வகை மதுபானமாக இருந்தாலும் அதனை பருகுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும், மிதமான அளவு சிவப்பு ஒயின் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தாது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
கட்டுக்கதை 8: முட்டை உட்கொள்வது இதயத்திற்கு நல்லதல்ல.
உண்மை: புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த சூப்பர் உணவாக முட்டை கருதப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு 7 முட்டைகள் வரை சாப்பிடலாம். இதய நோய் அபாயத்தை அதிகரிக்காது. முட்டை உட்கொள்வது சில வகை பக்கவாதம் மற்றும் மாகுலர் சிதைவு எனப்படும் கடுமையான கண் நோய்களை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கட்டுக்கதை 9: சமச்சீரான உணவு பழக்கத்துக்கு இறைச்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உண்மை: உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி இறைச்சியை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள்தான் பிரதான உணவாக அமைய வேண்டும்.
- சுவை மிகுந்த கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன.
- மத்தி மீனை அடிக்கடி வாங்கிச் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, ரத்த சர்க்கரை அளவும் குறையும்.
தற்போது மாரடைப்பு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு உள்ளது. மீன்கள் ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும், அனைத்து மீன்களும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தாது. சில வகையான மீன்கள்தான் அதை கட்டுப்படுத்தும். அந்த வகையில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மாரடைப்பை தடுக்க உதவும் 5 வகை மீன்கள் குறித்து அறிந்துகொள்வோம்...
சூரை மீன்
சூரை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள், ரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைக்க உதவி புரிந்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
கானாங்கெளுத்தி மீன்
சுவை மிகுந்த கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகின்றன. உலக அளவில் முக்கியமான மீனாக கருதப்படும் கானாங்கெளுத்தி மீன் மாரடைப்புக்கு எதிரியாக விளங்குகிறது.

இறையன் மீன்
இறையன் மீன் எனப்படும் டிரவுட் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கிறது. எனவே இந்த மீனை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வெங்கணை அல்லது வெங்கணா மீன்
வெங்கணை அல்லது வெங்கணா எனப்படும் ஹெர்ரிங் மீனில் ஈ.பி.ஏ. மற்றும் டி.எச்.ஏ. என்னும் 2 வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்ற மீன்களை விட அதிகமாக உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. முக்கியமாக இந்த மீனில் வைட்டமின் டியும் அதிகளவில் உள்ளது.
மத்தி மீன்
ஏராளமான சத்துகளை உள்ளடக்கிய மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும், இரும்புச் சத்து, செலினியம் போன்ற தாதுக்களும் அதிகமாக நிறைந்துள்ளன. எனவே மத்தி மீனை அடிக்கடி வாங்கிச் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, ரத்த சர்க்கரை அளவும் குறையும். ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேற்கூறிய 5 மீன் வகைகளும் குறைந்த கொலஸ்ட்ரால் அளவை கொண்டுள்ளதால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவது மாரடைப்புடன், பக்கவாதத்தையும் தடுக்கும்.
- அடிக்கடி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன.
- மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது.
சத்துகள் நிறைந்த பழமாக செவ்வாழைப்பழம் உள்ளது. தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிட்டும். அவை பற்றி பார்ப்போம்...
தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம். மற்ற பழங்களை விட செவ்வாழையில் குறைவான கலோரி அளவு மற்றும் அதிகமான நார்ச்சத்து காணப்படுவதே காரணமாகும்.
செவ்வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால், சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.
அடிக்கடி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன. செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடியில் பொடுகு நீங்குவதுடன், வறட்சியும் குறைகிறது.
மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது. நாள்பட்ட மலச்சிக்கல், மூலத்தை குணப்படுத்த உதவுகிறது. தினமும் மதிய வேளையில் செவ்வாழை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும்.
புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடவும் செவ்வாழைப் பழம் உதவுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும். உண்மையில், செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும். புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறைக்க இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் உதவுகிறது.
- செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்கவும்.
- ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ என பதிவு இருக்கிறது.
காற்றைத் தவிர வேறு எந்த ஒரு அந்நியப் பொருளும் நமது மூக்குக்குள் நுழைந்தால் நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அந்த மறுப்பின் பிரதிபலிப்பு தான் 'தும்மல்'.

'அலர்ஜி' அதாவது 'ஒவ்வாமை' தான் தும்மலின் மூலகாரணம் ஆகும். சமையற்கட்டு, வாகனங்கள், தொழிற்சாலைகள், சாம்பிராணி, ஊதுவத்தி, கொசுவத்தி, கற்பூரம் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் புகை, வீட்டை சுத்தப்படுத்தும் போது வெளிப்படும் தூசு, குளிர்ந்த தரை, கடும்பனி, குளிர்ந்த காற்று, ஒட்டடை இதுபோக எந்த ஒரு பொருட்களிலிருந்தும் வெளிப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் உள்பட இன்னும் பல விஷயங்களினால் வெளிவரும் தூசி மூக்கில் பட்டதும் தும்மல் ஆரம்பித்துவிடுகிறது.
பளிச்சென்ற மிகப்பொிய வெளிச்சத்தை திடீரென்று பார்க்கும்போதும், அதிக அளவில் உணவு சாப்பிட்டு வயிறு முழுவதும் நிரம்பியிருந்தாலும் கூட தும்மல் ஏற்படுவதுண்டு.
செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்கவும். தும்மலை உண்டாக்கும் காரசாரமான உணவுகளையும், மசாலா உணவுகளையும் தவிர்க்கவும்.
ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ என பதிவு இருக்கிறது. பொதுவாக ஆழ்ந்த தூக்கத்தின்போது தும்மல் வருவதில்லை. சில நோய்களில் அதிகப்படியாக நரம்புகளின் தூண்டுதல் இருந்தால் தூங்குபவர் விழித்துக்கொண்டு தும்முவதும் உண்டு.
ஒரு முறை தும்மும்போது மூக்கின் 2 துவாரங்களிலிருந்தும் சுமார் 40 ஆயிரம் திரவ நுண்துளிகள் சிதறி வெளியே பரவுவதுண்டு. தும்மும் போது வைரஸ் மற்றும் பாக்டீரியாக் கிருமிகள் வெளிவருவதுண்டு.
அந்த நேரத்தில் வேறு யாராவது நம் எதிரில் இருந்தால் அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு மிகமிக அதிகம். எனவே தும்மும் போது கர்ச்சீப் அல்லது துண்டு கொண்டு முகத்தை மூடிக்கொள்வது நல்லது.

பலத்த வேகத்துடன் தும்மும்போது சிலருக்கு இரண்டு காதுகளும் அடைத்துக் கொள்வதுண்டு. சில சமயங்களில் தும்மும் போது காது சவ்வு கிழிந்து போதல், தலைசுற்றல், நுண்ணிய ரத்தக் குழாய்கள் வெடித்தல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே முடிந்தவரை தும்மலைத் தடுக்கக்கூடாது.
ஜலதோஷம் வந்தாலே உடனே தும்மலும் வந்துவிடும். தும்மலோடு ஜலதோஷம், மூச்சுத்திணறல், வாந்தி, கண் எரிச்சல், தொண்டை கட்டிக் கொள்ளுதல், காய்ச்சல் முதலியவை இருந்தால் உடனே உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.
உங்களுக்கு எது 'அலர்ஜி' என்பதை ஓரளவு கண்டுபிடிக்க 'ஒவ்வாமை பரிசோதனைகள்' என்று ஒரு பரிசோதனை இருக்கிறது. உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையுடன் அந்தப் பரிசோதனைகளை செய்து அலர்ஜி பொருள் எது என்பதைக் கண்டுபிடித்து அதை அறவே தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
- மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
- இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது அத்திப்பழம். ஒரு அத்திப்பழத்தில் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்பு சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.

அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நார்ச்சத்து ஆகியவை இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தி அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
அத்திப்பழம் 35 என்ற மிகக்குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாகும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுத்தும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்கள் வராமலும் தடுக்க துணை புரிகிறது.
மேலும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் பிரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்கின்றன.

மேலும் ஆன்டி ஆக்சிடன்ட் குளோரோஜெனிக் அமிலம் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலுசேர்க்கிறது.
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 அத்திப்பழங்கள் சாப்பிடலாம். ரத்த உறைவை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்பவர்கள் டாக்டரின் ஆலோசனை பெற்ற பின்னரே அத்திப்பழங்களை சாப்பிடவேண்டும். இத்தகைய நன்மைகள் நிறைந்த அத்திப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் பயமின்றி உட்கொள்ளலாம்.
- காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.
- அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது.
இலை, தழைகளை உண்டு வாழும் விலங்குகள் அவற்றின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துக்களையும் இலை, தழைகளில் இருந்து பெறுகின்றன. மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.
இதற்கு மாற்றாக, தற்போது உலகின் பல நாடுகளிலும் செடிகளின் இளந்தளிர்களை 'சாலட்' போன்ற வடிவில் உணவாக உட்கொள்ளும் கலாசாரம் பரவி வருகிறது. இதற்கென்று, குறிப்பிட்ட காய்கறிகள், தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து அவை முளை விடும் பருவத்தில் அந்த இளம் தளிர்களை சேகரித்து உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இதனை 'மைக்ரோ கிரீன்' என்று அழைக்கின்றனர்.
இது ஏறக்குறைய கோவில் விழாக்களில் சுமந்து செல்லப்படும் முளைப்பாரி வகை தாவர வளர்ப்பு முறை என்று சொல்லலாம். இந்த மைக்ரோ கிரீன் முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் வீடுகளில் வளர்க்கப்படும்போது அவற்றுக்கு எந்த விதமான பூச்சி மருந்துகளும் பயன்படுத்துவது இல்லை. அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவை மனித உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இதய நோய், வகை-2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள் மற்றும் உடல் பருமன் போன்றவை வரும் அபாயத்தை மைக்ரோ கிரீன் வகை உணவுகள் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
- வலி லேசாக இல்லாமல், கூர்மையானதாக, தாங்க முடியாத அளவில் இருக்கும்.
- அஜீரணக் கோளாறானது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
நமது உடலின் முக்கியமான உள்ளுறுப்புகளில் ஒன்று, பித்தப்பை. இது, கல்லீரலுக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை ஆகும். இந்த பை, கல்லீரல் வெளியிடும் பித்தநீரைச் சேமித்து வைக்கிறது. உணவுகளை செரிப்பதற்கு பித்தநீர் உதவுகிறது. இந்த பித்தநீரில் இருக்கும் கொழுப்புகள் மற்றும் பிற பொருட்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது, அது ஒரு கட்டத்தில் பித்தக்கற்களை உருவாக்குகிறது. இந்த பித்தக்கற்கள் பித்தப்பையில் அடைப்பை ஏற்படுத்தும்போது பித்தப்பை தாக்குதல் ஏற்படுகிறது. பித்தப்பை தாக்குதல், பிலியரி கோலிக் தாக்குதல் எனப்படுகிறது. இது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும்.
பித்தப்பையில் உள்ள நீர் சரியாக பாயாமல் இருந்தால், அதன் விளைவாக வீக்கமும், கடுமையான வலியும் ஏற்படும்.
பித்தப்பை தாக்குதல்களால் சந்திக்கும் அசவுகரியம், சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம் வரை நீடித்திருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
சரி, பித்தப்பையில் பிரச்சனை இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் என பார்க்கலாம்...
மேல் வயிற்றுவலி
பித்தப்பையில் பிரச்சனை இருந்தால் வெளிப்படும் முதல் அறிகுறி, வயிற்றுவலிதான். அதுவும் இந்த வலியானது வயிற்றின் மேல்பகுதியில், விலா எலும்புகளுக்கு கீழே ஏற்படும். குறிப்பாக இந்த வலி லேசாக இல்லாமல், கூர்மையானதாக, தாங்க முடியாத அளவில் இருக்கும்.
வலது தோள்பட்டை, முதுகு வலி
பித்தப்பையில் பிரச்சனை இருந் தால், வயிற்றுப்பகுதியில் வலி தொடங்கி, அந்த வலி அப்படியே மேல்முதுகு மற்றும் வலது தோள் பட்டை வரை பரவும். இந்த வலி மிகவும் கடுமையானதாக இருக்கும்.
குமட்டல், வாந்தி
ஒருவரின் பித்தப்பையில் கற்கள் உருவாகி அதனால் பிரச்சனை ஏற்பட்டிருந்தால், அவருக்கு குமட்டல், வாந்தி, காய்ச்சல், குளிர் போன்றவை ஏற்படும். எனவே வயிற்றுவலியுடன் குமட்டல், வாந்தியையும் சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அஜீரணக் கோளாறு, வயிறு வீக்கம்
அஜீரணக் கோளாறானது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். அதில் ஒன்றுதான் பித்தப்பை பிரச்சனை. ஒருவரது பித்தப்பை சரியாக செயல்படாவிட்டால், அது பல இரைப்பை பிரச்சனைகளை உண்டாக்கும், வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.
மஞ்சள் நிறத்தில் தோல், கண்கள்
பித்தப்பையில் இருந்து செல்லும் பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால், ரத்த ஓட்டத்தில் பித்தம் படிந்து, அது சருமம் மற்றும் கண்களை மஞ்சள் நிறத்தில் மாற்றும். இப்படியான நிலை, பித்தப்பையில் ஏற்பட்டுள்ள கடுமையான பிரச்சனையின் அறிகுறியாகும். இப்படிப்பட்ட அறிகுறி ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சாம்பல், வெளிர் நிறத்தில் மலம்
பித்தப்பையில் அடைப்பு ஏற்பட்டு, பித்தநீர் ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, அதன் விளைவாக சாம்பல் அல்லது வெளிர் நிறத்தில் மலம் வெளியேறும்.
அடர்நிற சிறுநீர்
பித்தப்பையில் பிரச்சனை இருந்தால், ரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிகரித்து, அதன் விளைவாக அடர்நிறத்தில் சிறுநீர் வெளியேறும். அடர்நிற சிறுநீருக்கு பல காரணங்கள் இருந்தாலும், பித்தப்பை தாக்குதல் ஒரு முக்கியமான காரணமாகும்.
இந்த அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.






