என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும்.
    சமையலில் இடம்பிடிக்கும் முருங்கை இலை, சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும். முருங்கை இலை எண்ணெய்யும் முகப்பருக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. சரும வறட்சி, சரும சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை எண்ணெய், முருங்கை பவுடர் நிவாரணம் தரும்.

    முருங்கை பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் சரும சுருக்கங்கள் மறைய தொடங்கும். கரும்புள்ளிகள் இருந்தாலும் அவையும் நீங்கிவிடும். உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் முருங்கை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம்.

    சரும பொலிவை மேம்படுத்தவும் முருங்கை இலைகளை பயன்படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து முகத்தில் பூசி வந்தால் முக அழகு கூடும். சருமத்தில் ஏற்படும் நிற மாற்றமும் மறையதொடங்கும். முருங்கை இலை பேஸ்டை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.

    முதலில் முருங்கை இலைகளை வெயிலில் உலர்த்தி பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன், பன்னீர் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் காட்டன் துணியால் முகத்தை துடைத்துவிட்டு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும். 
    எலுமிச்சை பழம் என்றாலே ராஜகனி என்ற உயர்ந்த அந்தஸ்தினை கொடுத்து விடுகின்றோம். ஆனால் இதில் என்ன இருக்கின்றது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை முழுமையாக அறிந்து கொள்வதில்லை.
    எலுமிச்சை பழம் என்றாலே ராஜகனி என்ற உயர்ந்த அந்தஸ்தினை கொடுத்து விடுகின்றோம். ஆனால் இதில் என்ன இருக்கின்றது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை முழுமையாக அறிந்து கொள்வதில்லை. கொட்டிக் கிடக்கும் வைட்டமின் ‘சி’ சத்தும், வைட்டமின் பி6, கால்ஷியம், பொட்டாஷியம், மக்னீஷியம், கிருமி எதிர்ப்பு சக்தி, வைரஸ் எதிர்க்கும் சக்தி கொண்ட இதனை ‘ராஜகனி’ என்று கூறுவது சரிதானே.

    * இதிலுள்ள லிமோனென் குடல், வயிறு, மார்பகம், நுரையீரல், வாய், சருமம் இவைகளில் ஏற்படும் புற்று நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டது.

    * இதிலுள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் பைட்டோக்யூட்ரியன்ட் முகப்பரு ஏற்படுத்தும் கிருமியினை கொன்று சரும வீக்கத்தினை நீக்கும்.

    ஹெஸ்பெரிடின் எனும் ப்ளேவருய்ட் ரத்தத்தில் சர்க்கரை அளவினையும், கொழுப்பு அளவினையும் கட்டுப்படுத்துகின்றது. எலும்பின் தேய்மானத்தினைக் குறைக்கின்றது. அன்றாடம் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வது ரத்த கொதிப்பினை குறைக்கும்.

    வைட்டமின் ‘சி’ சத்து சளி, ப்ளூ இவற்றினைத் துரத்தும். வளர்சிதை செயல்பாட்டினைத் துரிதப்படுத்துவதால் நீண்ட சோர்வு, உடல் வலி இவை நீங்கும். பித்தப்பையை காக்கும். ஜீரண உறுப்புகள் அனைத்திற்கும் மிகச் சிறந்தது.

    * உள் வீக்கங்களைக் குறைக்கும்.
    * நோய் எதிர்ப்புச் சக்தியினை வெகுவாய் கூட்டும்.
    * சிறுநீரக கற்கள் உருவாகுவதைத் தவிர்க்கும்.

    இவ்வளவும் அறிந்த பின் தினமும் ஒரு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்வோம்.

    குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பேபிகார்ன் வைத்து பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    பாசுமதி அரிசு - 1 கப்
    பேபி கார்ன்  - 6
    குடை மிளகாய் - 1 (சிறியது)
    வெங்காயம் - 1
    கேரட் - 1 (சிறியது)
    பூண்டு - 5 பல்
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - ¼ ஸ்பூன்
    சர்க்கரை - ¼ ஸ்பூன்
    மிளகாய் தூள் - ¼ ஸ்பூன்
    மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    பூண்டை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

    பேபிகார்னை பக்கவாட்டில் நீளத் துண்டுகளாக நறுக்கி 3 நிமிடம் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் வடிகட்டி நன்கு துடைத்து வைத்துக் கொள்ளவும்.

    சோள மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், உப்பு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் இதில் பேபிகார்னை புரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி ¼ கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    குக்கரில் நெய் விட்டு உப்பு சேர்த்து பாசுமதி அரிசியை போட்டு வேக வைக்க வேண்டும். பின் இதை அகலமான தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும். சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும்.

    கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய குடைமிளகாய், கேரட், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகிவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

    ஓரளவு வதங்கியபின் ¼ ஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு உப்பு, பொன்னிறமாக பொரித்த பேபி கார்ன் சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் மிளகு தூள், ஆறவைத்த சாதம் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

    சுவையான பேபிகார்ன் பிரைடு ரைஸ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    வெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அவை உடலுக்கு பல்வேறு தீங்கை ஏற்படுத்தக்கூடிவையாகும். அத்தகைய உணவுகளை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

    * தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

    * எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

    * பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.



    * காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

    * காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சினைக்கு உள்ளாக்கி விடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

    * காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

    * தயிரில் என்ன தான் நல்ல பக்டீரியா இருந்தாலும்,  இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

    * வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கல்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள். 
    நீங்கள் முகத்தை கழுவும் போது சில விதிமுறைகள் உள்ளது. ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவினால், சருமம் தான் பாதிக்கப்படும்.
    நீங்கள் அடிக்கடி முகத்தைக் கழுவும் பழக்கம் கொண்டிருந்தால், உங்கள் சருமத்திற்கு உருப்படியான ஒன்றை செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் அதற்கும் ஒரு அளவு உள்ளது. ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவினால், சருமம் தான் பாதிக்கப்படும்.

    வறட்சியான சருமம்

    வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு நான்கு முறை முகத்தைக் கழுவுவது தவறான ஒன்று. இத்தகைய சருமத்தினர் பகலில் ஒரு நாளைக்கு ஒருமுறை தான் முகத்தைக் கழுவ வேண்டும்.

    எண்ணெய் பசை சருமம்

    எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 3 முறை முகத்தைக் கழுவுவதன் மூலம், சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

    பருக்கள்

    ஒருவேளை உங்களுக்கு பருக்கள் அதிகம் இருப்பின், ஒரு நாளைக்கு குறைந்தது 4 முறை முகத்தைக் கழுவ வேண்டும். அதுவும் சோப்பு எதுவும் பயன்படுத்தாமல் வெறும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    விதிமுறைகள்

    இங்கு முகத்தைக் கழுவுவதற்கான ஒருசில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் கோடையில் அதிகம் வியர்ப்பதால், பலரும் எந்நேரமும் முகத்தைக் கழுவியவாறே இருப்பார்கள். எனவே ஒவ்வொருவரும் தங்கள் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அந்த விதிமுறைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.



    காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு தான், எந்த வேலையையும் செய்வோம். வேண்டுமானால் இந்நேரத்தில் முகத்தைக் கழுவும் போது மைல்டு சோப்பைப் பயன்படுத்திக் கழுவலாம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

    எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மதிய வேளையில் கட்டாயம் முகத்தைக் கழுவ வேண்டும். அதிலும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் ஃபேஸ் வாஷ் என்னவென்று நிபுணர்களிடம் கேட்டு பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், குளிர்ந்த நீரில் மட்டும் முகத்தைக் கழுவலாம். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேற்றப்படும்.

    அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். ஆனால் கோடையில் மாலை வேளையில் முகத்தைக் கழுவுவதுடன், பழங்கள் அல்லது காய்கறிகளால் ஆன ஃபேஸ் பேக் போடுவது, உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

    ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முழுமையாக வெளியேற்றப்பட்டுவிடும்.

    முகத்தில் அதிக அளவில் எண்ணெய் வழிந்தால், ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு பதிலாக, டோனரைக் கொண்டு முகத்தை துடைத்து எடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், வெதுவெதுப்பான நீரில் பால் சேர்க்கப்பட்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுவது நல்லது. 
    சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    புளி - ஒரு எலுமிச்சை அளவு
    தக்காளி - ஒன்று

    அரைக்க

    இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
    மிளகு - அரை தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    முழு தனியா - ஒரு மேசை கரண்டி
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    கொத்துமல்லி தழை - கால் கைபிடி அளவு
    கறிவேப்பிலை - கால் கைபிடி அளவு

    தாளிக்க

    நெய் - ஒரு தேக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
    பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவு



    செய்முறை

    புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போடு அரைத்து கொள்ளவும்.

    தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

    சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி!
     
    குறிப்பு

    1. பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.

    2. சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளிர்காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.

    3. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், மன அழுத்தம் என பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்பட்டாலும், நம்முடைய உணவுமுறையால் இதைச் சரிப்படுத்திவிடலாம்.
    'பொதுவாக, 28 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடிய மாதவிலக்கு, பலருக்கு இரண்டு, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறைகூட வந்து பெரும் அவஸ்தையை ஏற்படுத்தும். ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், மன அழுத்தம் என பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்பட்டாலும், நம்முடைய உணவுமுறையால் இதைச் சரிப்படுத்திவிடலாம்.

    'நம் உடலில் எஃப்.எஸ்.எச். (ஃபாலிக்கல் ஸ்டிமுலேட் ஹார்மோன்) என்ற ஹார்மோன் உள்ளது. இதுதான் பெண்களுக்கு ஓவரியில் முட்டை உருவாகத் தூண்டுகோள். இந்த 'ஃபாலிக்கல் ஸ்டிமுலேஷன்’ நன்றாக இருக்க வேண்டும். தைராய்ட் ஹார்மோன் சுரப்பும் சீராக இருக்க வேண்டும். இப்படி அனைத்து ஹார்மோன்களும் ஒத்துழைத்தால்தான், கருப்பையில் மாதவிடாய் சுழற்சி ஓர் ஒழுங்குமுறையில் இருக்கும்.

    ஆனால், ஒழுங்கற்ற மாதவிலக்கு உள்ளவர்களுக்கு முட்டை எப்போது வெளிப்படுகிறது என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது. இதற்கு மிக முக்கியக் காரணம், நம் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம். கம்பங்களியும் உளுத்தங்களியும் சாப்பிட்டு வளர்ந்த நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தனர். இன்றைய இளைய தலைமுறையினர் இனிப்பு, உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையே அதிகம் எடுத்துக்கொள்கின்றனர்.

    குழந்தைப்பருவத்திலிருந்தே இந்தப் பழக்கம் ஆரம்பித்துவிடுவதால், அவர்கள் வளர்ந்த பிறகு மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது இல்லை. இளம் வயதில் பால் பொருட்கள், மில்க் சாக்லேட் சாப்பிடுவதால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும். பிற்காலத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

    தைராய்ட் உள்ளிட்ட ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை, கருப்பையின் சுவரில் வரும் அடினோமையோசிஸ் பிரச்சனைகள் என ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனை வருவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. சித்த மருத்துவத்தின்படி, பெண்களின் உடலில் பித்தம் சரியாக இருக்க வேண்டும். பித்த அளவில் மாறுபாடோ, கபம் கூடுதலாக இருந்தாலோ, மாதவிலக்கு தள்ளிப்போகும். மேலும், உடலில் இருக்க வேண்டிய வளர்சிதை மாற்ற வேகம் சரியான அளவில் இல்லை என்றாலும், மாதவிலக்கில் பிரச்சனை ஏற்படும். எதனால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.

    உடலில் கபம் அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க வேண்டும். அசோக மரத்தின் (வீட்டு வாசலில் உயரமாக வளர்ந்திருக்கும் நெட்டிலிங்க மரத்தை, சிலர் அசோக மரம் என்று தவறாக நினைப்பார்கள்) பட்டையை எடுத்து கஷாயம் தயாரித்துப் பருகுவதாலும் ஒழுங்கற்ற மாதவிலக்குப் பிரச்சனையை ஒழுங்குபடுத்தலாம். மேலும், மருத்துவரின் பரிந்துரைப்படி சோற்றுக்கற்றாழை லேகியம் எடுத்துக்கொண்டாலும் இப்பிரச்சனை சீராகும். அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த வெந்தயம் சாப்பிடுவதும் நல்லது. அதைவிட, 'ஆடாதொடை கற்கம்’ அதிக ரத்தப்போக்கை உடனடியாகக் குணப்படுத்தும்.''
    உடல் நலத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முதலில் கடைப்பிடிப்பது நடைப்பயிற்சிதான். அதிகாலையில் பயிற்சி செய்தால், அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.
    உடல் பயிற்சிக்காக ஓடுபவர்கள், ஓடும் விதத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஓடும் தூரத்தைப் பார்க்கக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடும்போது சோர்வு, வலி ஏற்படும். இதனால் பயிற்சியில் ஈடுபடுவதற்கான மனநிலை பாதிக்கப்படும். எனவே, பயிற்சிக்கு இடையே அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

    சரியான நிலையில் நடப்பது மிகவும் அவசியம். தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால், கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே, முதுகை வளைக்காமல், நடக்கும்போதும் ஓடும்போதும் நேராக இருங்கள். முதுகின் இயல்பான தன்மையைப்  பின்பற்றுங்கள்.

    ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு உடலை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

    இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதே போதுமானது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு ஓடுவது நல்லது.

    நடைப்பயிற்சியில், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பருத்தி மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. இதனால் உடலின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

    சாலை ஓரத்தில் பயிற்சியில் ஈடுபடுபவர், ஒளிரும் தன்மைகொண்ட ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

    காலுக்குப் பொருத்தமான, எடை குறைந்த காலணிகளை அணிந்து பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. மிகவும் இறுக்கமான காலணி அணிந்துகொண்டு நடைப்பயிற்சி செய்வது வலியை ஏற்படுத்தும்.

    புதிதாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இரண்டு நிமிடம் ஓட்டம், ஒரு நிமிடம் நடைப்பயிற்சி என்று மாற்றிமாற்றிச் செய்ய வேண்டும். இதனால், இதயத்துக்கு அதிக சிரமம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
    சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இனிப்பு சோளம், முட்டை சேர்த்து சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இனிப்பு சோளம் - 1 கப்
    வெஜிடபிள் ஸ்டாக் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) - 1 லிட்டர்
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    பால் - 1 கோப்பை
    முட்டை -  1
    அஜினோ மோட்டோ - 1/2 தேக்கரண்டி
    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
    சோள மாவு  - 1 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    இனிப்பு சோளத்தை வேகவைத்து கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் பால், வேக வைத்த சோளம், வெஜிடபிள் ஸ்டாக்கையும் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

    சூப் இரண்டு கொதி வந்தவுடன் முட்டையை உடைத்து மெதுவாக விடவும்.

    சூப்பை சுமார் 10 நிமிடம்வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். அஜினோ மோட்டொவைச் சேர்க்கவும்.

    சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும்.  

    சூப்பரான சத்தான இனிப்பு சோளம் - முட்டை சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கல்லூரி தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும், அலுவலக தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும் வெவ்வேறு மாதிரியானவை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்கள் படிக்கும் காலத்திலும், அலுவலகங்களில் வேலைபார்க்கும் காலகட்டத்திலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்பத்தை விட்டு பிரிந்து, ஆஸ்டல்களில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது அங்கே அவர்களோடு தங்கும் தோழிகளைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறது.

    கல்லூரி தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும், அலுவலக தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும் வெவ்வேறு மாதிரியானவை. கல்லூரி காலத்தில் பெற்றோரின் வருமானத்தில் ஆஸ்டல் வாழ்க்கை அமையும். அதில் விளையாட்டுத்தனமும், கலாட்டாவும் அமைந்திருக்கும். கல்வி கற்பது மட்டுமே பொறுப்பான ஒரு செயலாக இருப்பதால் அந்த காலகட்டம் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே இருக்கும். அதுமட்டுமின்றி சக மாணவிகளும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால் சிந்தனையும், செயலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால் பெருமளவு பிரச்சினை ஏற்படாமலே அவர்களது கல்லூரி ஆஸ்டல் வாழ்க்கை முடிந்துவிடும்.

    ஆஸ்டலில் தங்கியிருந்து வேலைபார்க்கச் செல்வது அப்படியானதல்ல. பல்வேறு சூழலில் இருந்து வரும் பல பருவத்தினர் அங்கே ஒன்றிணைவார்கள். அங்கு தங்கியிருக்கும் எல்லா பெண்களுக்குமே பல்வேறு குடும்ப பொறுப்புகளும், கடமைகளும் இருக்கும். ‘பாதுகாப்பாக தங்கியிருக்கவேண்டும். கவனமாக வேலைக்குச் சென்று திரும்பவேண்டும். சரியான உணவுகளை சாப்பிட்டு உடல் நலனை பராமரிக்க வேண்டும். பொறுப்பாக சம்பளத்தை வாங்கி வீட்டிற்கு அனுப்பவேண்டும்’ என்பது போன்ற எத்தனையோ கடமைகளும், பொறுப்புகளும் ஆஸ்டலில் தங்கி வேலைபார்க்கும் பெண் களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் அவர்களோடு அறையில் உடன் தங்கியிருக்கும் தோழிகள், தொந்தரவு தர ஆரம்பித்துவிட்டால், அது கவலைக்குரிய விஷயமாகிவிடும்.

    ‘‘என் ஆஸ்டல் தோழிக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போய்விடும். அப்போது நான் பக்கத்தில் இருந்து அவளை கவனிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாள். என்னால் சில நேரங்களில் முடியாதபோது அவளுக்கு கோபம் வந்துவிடுகிறது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நான் பல்வேறு குடும்ப பொறுப்புகளை சுமந்துகொண்டு, குடும்பத்தை பிரிந்து இங்கே தங்கியிருந்து வேலைபார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் என் வேலையை பார்ப்பதா? அல்லது இவளுக்கு ஆயா வேலை பார்ப்பதா என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்” என்று புலம்புகிறாள், அந்த பெண்.

    “என்னுடைய பொருட்கள், ஆடைகள் என்று எல்லாவற்றையும் என் அறையில் தங்கியிருக்கும் ஒருசில பெண்கள் என் அனுமதி இல்லாமலேயே அணிந்து கொள்கிறார்கள். நான் எங்காவது வெளியே புறப்பட நினைக்கும்போது நான் விரும்பும் ஆடைகள் எல்லாம் அழுக்காக கிடக்கும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது நல்ல பழக்கம்தான். ஆனால் எனக்கு தேவைப்படும்போது நான் யாரிடம் போய் கேட்பது?” என்று கேள்வி எழுப்புகிறார், இன்னொரு பெண்.

    “என் ரூம்மேட் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து விட்டது என்று சொல்லி என் கைபேசியை பயன்படுத்துகிறாள். தடுக்க முடியவில்லை. அவளுக்கு வரும் அழைப்புகள் எல்லாம் எனக்கு வருகிறது. அது அவ்வளவு நன்றாக இல்லை. நான் அவள் இல்லை என்று சொன்னால்கூட யாரும் நம்புவதில்லை. அடிக்கடி பேசி தொந்தரவு செய்கிறார்கள். நான் வீட்டிற்கு போயிருந்தபோதும் அப்படி ஒரு அழைப்பு எனக்கு வந்தது. அதை என் அப்பா எடுத்துப் பேசி பெரிய பிரச்சினையாகி விட்டது. இதை எல்லாம் என் தோழிக்கு சொல்லி புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது” என்கிறார் ஒரு பெண்.

    இப்படி ஆஸ்டலில் தங்கியிருந்து வேைல பார்க்கும் பெண்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

    ஆஸ்டல் தோழி ஒருவருக்கு முகப்பரு வந்திருக்கிறது. உடனே இன்னொரு தோழி தான் முகப்பருவுக்கு பயன்படுத்திய மருந்தை அவளுக்கு கொடுத்து, இரவில் பூசிக்கொண்டு தூங்கும்படி கூறியிருக்கிறாள். அவளும் அவ்வாறே செய்ய, மறுநாள் காலையில் விழித்து பார்த்தபோது அந்த பெண்ணின் முகம் சிவந்து வீங்கிபோய் இருந்திருக்கிறது. அந்த மருந்து அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியை உருவாக்கிவிட்டது. அதனால் அந்த தோழி களுக்குள் சண்டை உருவாகிவிட்டது. கடைசியில் இருவருமே தங்கள் அறைகளை காலிசெய்துவிட்டு போயிருக்கிறார்கள்.



    “ஒருமுறை எனது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு போக வேண்டும். தனியாக போக முடியவில்லை. ரூம்மேட்டை துணைக்கு அழைத்தேன். அவளோ ‘தன்னால் வர முடியாது. முக்கியமான பிறந்தநாள் பார்ட்டிக்கு போக வேண்டும்’ என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள். இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இரவு நேரங்களில் நமக்கு ஏதாவது பிரச்சினை என்றால், எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக தூங்குவதுபோல் சிலர் நடிப்பார்கள். சிலர் நமக்கு ஏதாவது பிரச்சினை என்றாலே, உதவி கேட்டுவிடுவோம் என நினைத்து பயந்து ஒதுங்குவார்கள். அதே நேரத்தில் அவசர காலத்தில் கை கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்” என்கிறார், ஒரு பெண்.

    “அவசர தேவைக்கு திடீரென்று பணம் கேட்பார்கள். இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. சொன்னால் நட்பு முறிந்துவிடும். கொடுத்தே ஆக வேண்டும். கொடுத்தால் அதை திருப்பித் தரும் எண்ணம் சிலருக்கு இருக்காது. ஒருசிலர், ‘உன்னிடமிருந்து பணம் வாங்கிய நான்காம் நாளே திருப்பித்தந்துவிட்டேனே! உனக்கு நினைவில்லையா?’ என்று கேட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் களால் நானும் சில முறை பணத்தை இழந்திருக்கிறேன். எனது சின்னச்சின்ன பொருட்கள் அடிக்கடி காணாமல் போய்விடும். அது பற்றி யாரிடமும் கேள்வி கேட்க முடியாது. கேட்டால், பிரச்சினைதான் உருவாகும்..” என்று வருத்தத்தோடு சொல்கிறார், சென்னையை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர்.

    ஆஸ்டல் வாழ்க்கை அருமையாக அமைய..

    கூடுமானவரை விலை உயர்ந்த பொருட்களை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள். தொலைந்தால் யாரையும் கேட்கமுடியாது. கேட்டால் சண்டை வருமே தவிர பொருள் வராது.

    உடன் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு தக்கபடி நடந்துகொள்ளுங்கள்.

    உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை உங்கள் அறை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டும் சொல்லுங்கள்.

    நீங்கள் பயன்படுத்தும் மாத்திரை மருந்துகளை மற்றவர் களுக்கு கொடுக்காதீர்கள். அது சில நேரங்களில் நீங்களே எதிர்பாராத விதத்தில் கொலைக்கு சமமாகிவிடும்.

    கூடுமானவரை மற்றவர்களை வேலை வாங்காதீர்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.

    எல்லோருக்குமாக சேர்த்து மற்றவர்கள் வேலை செய்யும்போது, கூடுமானவரை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    மனதில் எதையாவது வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் சிடுசிடுப்பாக நடந்துகொள்ளாதீர்கள். முடிந்த அளவு புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் வலம் வாருங்கள்.

    அவசர தேவைக்கு பணம் கொடுத்து உதவுங்கள். ஆனால் ஞாபகமாக திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்.

    உங்கள் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி குறைகூறி உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். 
    சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம். அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது.
    முன்பு தொலைக்காட்சிகள் மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் நேரத்தை விரயமாக்கும் சாதனமாக இருந்தது. அதனால் தொலைக்காட்சிப் பெட்டிக்கு “முட்டாள் பெட்டி” என்ற பெயருண்டு. அந்த அளவுக்கு நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடக் கூடியதாக இருந்தது தொலைக்காட்சிகள்.

    இன்று தொலைக்காட்சிகளின் இடத்தை ஸ்மார்ட்போன்கள் பிடித்துக் கொண்டன. சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைவிட நவீனமாக நம்மை கட்டிப் போட்டிருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம்.

    அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது. இதை கண்டித்தால் பெற்றோரின் மீது வெறுப்பு காட்டுகிறார்கள் மாணவர்கள். கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் பலர்.

    ஸ்மார்ட்போன்களை கல்விக்கு உகந்த வகையில் பயன்படுத்த முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் உலவுதல், விளையாட்டு அப்ளிகேசன்களில் மூழ்குதல், இசை கேட்டல் என பலவிதங்களிலும் நேரத்தை வீணாக்கிவிடுகிறார்கள். மனம் அதற்கு அடிமையாகிவிடுவதால் வகுப்பில் ஒருமுகத்துடன் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. எப்போது வகுப்பு முடியும் என்ற ஏக்கமும், மன உளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. சமூக வலைத்தளங்களில் யார், என்ன பதிவிட்டார்களோ? என ஏங்கத் தொடங்கிவிடுகிறது மனம்.



    ஏறத்தாழ போன் அடிமையாகிவிட்ட இந்த மனநிலை வாழ்க்கையில் பலவிதங்களில் எதிரொலிக்கும். பெற்றோர் மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரும். வலைத்தளங்களில் தம்மை ஆதரிக்காதவர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும். இன்னும் நிறைய ஆதரவை பெற வேண்டும் என்ற ஏக்கமும் அதிகரிக்கும். இது தீவிர மனஅழுத்த பாதிப்பில் தள்ளிவிடும். இரவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் தூக்கமும் கெடுகிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கல்வியையும், சுமுகமான வாழ்க்கை முறையையும் முற்றிலும் பாதிக்கிறது.

    இதில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்றாகும். அதிக மன உறுதி கொண்ட வெகுசிலரே ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்து நல்வழிக்குத் திரும்புகிறார்கள். பலர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திற்கு சிகிச்சை பெறும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பெற்றோர் ஸ்மார்ட்போன்களை படிக்கும் குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அளவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும். சிறிது நேர பயன்பாட்டிற்குப் பிறகு போனை அணைத்துவிட்டு, படிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது, வெளியில் விளையாடச் செல்வது, தியானம் செய்வது, கலைப் பணியில் ஈடுபடுவது, செய்முறை பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்துவது போன்ற பயிற்சிகளால் மனதை ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கலாம். இளமைப் பருவம் கல்விக்கானது என்பதை உணர்ந்தால் மற்றவற்றின் மீதான மோகத்தை குறைத்து வெற்றிபெற உங்களால் முடியும்! 
    அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
    டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம். ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்று நோய் ஏற்படுவதற்கான காரணம், டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.

    இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் போது, அதுவே உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும்.

    அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தச் சோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விரிவடையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.



    எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீகுடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. புராஸ்டேட் புற்று நோய், உணவுக் குழாய் புற்று நோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

    காபியோ, டீயோ ஒரு நாளுக்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை கூடிய வரை தவிர்க்க வேண்டும். காபி, டீ இரண்டையும் நாம் அப்படியே குடிப்பதில்லை. அவற்றுடன் பால், சர்க்கரை இரண்டையும் கலந்து தான் குடிக்கிறோம். தினமும் நாம் சாப்பிடுகிற உணவிலேயே போதுமான அளவு சர்க்கரை, நமக்குக் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது நாம் தனியாகச் சேர்த்துக் கொள்கிற, ஒவ்வொரு டீஸ்பூன் சர்க்கரையும் வரப்போகிற நோய்க்கான அழைப்புதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    பாலும் அப்படித்தான். வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ற அளவில் தான் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான கால்சியச் சத்தும் உடலுக்கு நல்லதல்ல. இந்த இரண்டு பானங்களுமே உற்சாகத்தைத் தருவதால், நம்மை அடிமைப்படுத்திவிடும். அதனால் தான் பலர் காபி குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது என்று சொல்கிறார்கள். இந்தநிலை உகந்தது அல்ல. 
    ×