என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தோசை, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    பன்னீர்  - 100 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி சாஸ்  - 1 ஸ்பூன்
    சோயா சாஸ்  - 1 ஸ்பூன்
    தனியாத்தூள்  - 1 ஸ்பூன்
    சீரகத்தூள்  - 1 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
    மிளகாய்த்தூள்  - 1 ஸ்பூன்
    குடைமிளகாய்  - 1



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வாணலியில் சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீரை எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளுடன், தனியா, சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும்.

    பின் வட்டமாக நறுக்கிய குடைமிளகாய், வறுத்த பன்னீர் துண்டுகளை போட்டு வதக்கவும்.

    இறுதியாக தக்காளி சாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும்.

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிஷ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ சிறந்தது. இதில் இருக்க கூடிய எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.
    கோடைக்காலத்தை காட்டிலும் குளிர்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். முகம், கை கால்கள், ஸ்கால்ப் ஆகியவற்றில் இருக்கக்கூடிய சருமத்தை வறண்டு போக செய்யும். சரியான முறையில் பராமரிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். க்ரீம்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை வைத்து உங்கள் சருமத்தை பராமரிக்கலாம்.

    பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ சிறந்தது. இதில் இருக்க கூடிய எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்கு தடவலாம். இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் இளமை தோற்றத்தை அள்ளித்தரும். மேலும் அவகாடோவில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

    முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

    உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.
    உடல்பருமன் உள்ள பெண்களின் கருவுறுதலை பாதிக்கும் காரணிகளாக, அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், முறையற்ற உணவு பழக்கங்கள், உடல் பருமன், திருமண வயது, மன அழுத்தம் போன்ற பலவற்றை கூறலாம். உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    உடல் பருமன் அதிகமாவதால் கருமுட்டைகளின் உற்பத்தி திறன் பாதிப்பு, வளர்வதில் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் சுரப்பில் மாறுபாடு, கருமுட்டை வளர்ச்சி, முதிர்ச்சி, வெளியாகும் திறன், கருவாக்கும் திறன் ஆகியவை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் அதிகரிப்பதால் செயற்கை முறையில் (IVF) கருத்தரிக்கும் பெண்களுக்கு குறைந்த சதவீதமே கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

    உடல் பருமன் அதிகம் உள்ள ஆண்களில் கருவாக்க தன்மையினை தீர்மானிக்கும் ஹார்மோன்களான “டெஸ்ட்டோஸ்டீரோன்” மற்றும் “கோனடொட்ரோபின்” போன்றவற்றின் அளவுகள் குறைவாகவும் ஈஸ்ட்ரோஜெனின் அளவு அதிகமாகவும் இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன் என்பது “பாடி மாஸ் இன்டெக்ஸ்” (BMI) எனும் ஒரு அளவுகோலால் அளவிடப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எடுத்துள்ள ஆய்வின்படி “இந்தியாவில் மட்டும் 4 கோடி பேருக்கு உடல் பருமன் பிரச்சனை உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டு 2 மடங்காக அதிகரிக்கும்” என்றும் எச்சரிக்கிறது.

    உடல் பருமன் அதிகமாக உள்ள ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு உருவமைப்பு, உருசிதைவு, டி.என்.ஏ  சிதைவு, உயிரோட்டம் அனைத்தும் ஆண்கள் குழந்தையின்மையை அதிகரிக்கிறது. உடல் பருமன்  அதிகரிப்பதனால் விந்துப்பையில் கொழுப்பு அதிகமாகி அதனால் உஷ்ணநிலை அதிகரித்து விந்தணு உற்பத்தி திறன், உயிரோட்டம் ஆகியவை பாதிக்கப்படுகிறது. மேலும் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு அதனாலும் விந்தணு உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது. இதை ஐரோப்பிய ஆய்வுகள் மற்றும் 2008 - ல் இந்தியாவில் செய்த ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஊற வைத்த கொள்ளு - 100 கிராம்,
    பூண்டு - 2 பல்,
    பட்டை, லவங்கம் - தலா ஒன்று,
    வெண்ணெய் - சிறிது,
    மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - தேவைக் கேற்ப.



    செய்முறை :  

    கொள்ளு, பூண்டு, பட்டை, லவங்கம் இவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.

    வேகவைத்தவற்றை நன்றாக மசித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

    வடிகட்டிய சூப் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் சேர்த்துப் பருகவும்.

    சத்து நிறைந்த கொள்ளு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த முத்திரையை செய்வதால் நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.
    ஆதி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும்போது சிசு தன் கையில் இந்த முத்திரையை வைத்திருக்கும். நவீன ஸ்கேன் படத்தில் இதைக் காண முடியும். இந்த முத்திரை நமக்குப் புதிதானது அல்ல. பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.

    செய்முறை :

    கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.

    விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.

    தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள் :

    நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

    தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது. மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

    வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
    கோடீஸ்வரர் நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்றால், சில விஷயங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசனை நிபுணர்கள்.
    ‘கோடீஸ்வரர்’ ஆக வேண்டும் என்று யாருக்குத்தான் விருப்பமில்லை?

    ஆனால், படிப்படியாக கோடீஸ்வரர் நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்றால், சில விஷயங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசனை நிபுணர்கள்.

    அவை பற்றி...

    * ‘எனக்கு இப்போதே வேண்டும்’ என்ற ஆசை தூண்டுதலை உங்களால் கடக்க முடிந்தால், நிதி நிர்வாகத்தில் பெரிய திறமை பெற்றவராகிவிடுவீர்கள். உடனடி மனநிறைவு என்பது குறுகிய காலத்துக்கு விலைமதிப்பில்லாததாகத் தெரிந்தாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் நாளடைவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நெருக்கடியான காலத்தில் உதவும். அதை நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும்.

    * நீங்கள் உங்கள் பணியில் சிறந்தவராக மாறப் போதுமான அளவு நேரத்தை ஒதுக்கினீர்கள் என்றால், உங்களின் வருமானம் ஈட்டும் திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். விருப்பமானவற்றை அயராது இடைவிடாமல் செய்வதன் மூலம், சந்தேகங்கள், போராட்டங்கள், நிராகரிப்பு இன்றி சிறப்பான பலன்களைப் பெறமுடியும். எல்லோரையும் போல நாமும் பணி செய்வதைக் காட்டிலும், செய்வதை சிறப்பாகச் செய்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

    * குறைந்த பட்ஜெட்டிலும் உங்களால் சீரான வாழ்க்கை வாழ முடியுமா என்று முயன்று பாருங்கள். பணத்தைச் செலவழிக்கும்போது சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பீர்களா? உங்கள் தேவைகளுக்காக முன்கூட்டியே பணத்தைச் சேர்த்து வைக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைத் தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையில் வைப்பது அவரவர் முடிவு. நாம் நினைப்பதற்கு மாறாக பணக்காரர்கள் பலரும் எளிய வாழ்க்கையை விரும்புகிறார்கள். உலகப் பெரும் பணக்காரர்கள் மார்க் சக்கர்பெர்க், வாரன் பப்பெட் போன்றோரைச் சொல்லாம். அவர்கள் ஆடம்பரமற்ற வாழ்க்கையை விரும்புவது, சிக்கன குணத்தால் அல்ல, எளிமை வாழ்க்கையின் சுகத்தை உணர்ந்ததால்தான்.



    * நாம் செலவழிக்கும் முறையானது, நமது நிதிநிலை மற்றும் சொத்துகள் மீது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்தல், அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைக் குறைத்தல், தேவையில்லாமல் பல பொருட்களை வாங்கிப் போடுவதைத் தவிர்த்தல் போன்றவை அதிகப் பணம் சேமிக்க வழிவகுக்கும்.

    * உங்களின் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யும் சரியான திட்டத்தின் மூலம்தான் பணக்காரர் ஆவதற்கான பாதை துவங்குகிறது. நல்ல பொருளாதார அடித்தளத்துக்கான முதல் அடி, சிறந்த நிதித் திட்டமிடல்தான். ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல், உங்களின் தேவைகளுக்கான செலவுகளை மாதாமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்ய வைத்து அதிகமாகச் சேமிக்க வழிவகுக்கும். உங்களின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், நிதித் திட்டமிடலில் வராத தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எளிதாக இருக்கும்.

    * பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறன் அல்லது அதிர்ஷ்டம் அல்லது வாரிசு உரிமை போன்றவற்றைப் பொறுத்ததல்ல. ஆனால் செல்வச் செழிப்பு இல்லாமல் இருப்பவர்கள் ஏன் பெரும்பாலும் முதலீட்டாளர்களாக இல்லாமல் இருக்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். முதலீடு செய்வதற்கு அதிகளவு பணம் தேவைப்படும் என்றே நாம் நினைப்போம். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, சிறுதுளிகள் ஒன்று சேர்ந்து பேராறாக உருவாவது போல, முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்துவரும் சிறிய அளவிலான தொகையும், சரியான சொத்து முதலீடும் விரைவில் உங்களைக் கோடீஸ்வரராக மாற்றும்.

    கோடீஸ்வரர் ஆவது மட்டுமல்ல, அதை நோக்கிய பயணமும் சுகமானதுதான். அலுக்காமல் சலிக்காமல் ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே இருந்தால், கடைசியில் மலை உச்சியை அடைந்து விடலாம்தானே?
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும். தங்கள் பெற்றோரிடம் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். சின்ன வி‌ஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள்.

    கெட்ட வார்த்தைகள்கூட பேசுவார்கள். குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படி தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாக தங்கள் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.

    கடும் வார்த்தைகளை பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதை பார்க்கலாம். பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம்.

    பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான். இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தை பெற்றோர் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும். ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கை கைவிடாது.

    ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களை பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு கற்றுக்கொடுப்பது அவசியமானது. விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, ரூபிக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தை குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும்.

    வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும். கணிப்பொறியில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும்போது சுவிட்ச் ஆப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில் அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.

    குழந்தை பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்பு உண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சி அடையும். குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால் அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தை பருவத்திலேயே இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வது அவசியம்.

    ஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. லிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.
    இன்று (நவம்பர் 17-ந்தேதி) தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம்.

    ஒவ்வொரு வருடமும் நவம்பர் 17-ந் தேதி தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. கால், கை வலிப்பைத் தான் நாம் தமிழில் காக்கா வலிப்பு என்று சொல்கிறோம். நமது மூளை ஒரு மின்னணு உறுப்பாகும். இது மின்னணு ஜெனரேட்டர் எனவும் கூறலாம். இதில் உற்பத்தியாகும் குறைந்த அளவு மின் சக்தி தான் நம்மை இயக்க வைக்கிறது. இது மட்டுமல்லாமல் நாம் பார்க்க, ருசிக்க, கேட்க, உணர, ரசிக்க என அனைத்து செயல்களுக்கும் இதில் உற்பத்தியாகும் மின் சக்திதான் காரணமாகும். ஏன்? நம்மை நாம் உணர்வதற்கே இந்த மின் சக்திதான் காரணமாகும்.

    ஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. வலிப்பு நோய்களில் பல வகைகள் உண்டு. அதற்கு பல காரணங்கள் உண்டு. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை இந்த நோயினால் பாதிப்படைவார்கள். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு, மரபணு ரீதியான நோய்கள், மூளையில் ஏற்படும் மெனின்ஜைட்டீஸ் எனப்படும். தொற்று காரணமாகவும் வலிப்பு நோய் உண்டாகிறது. வாலிபர்கள் மற்றும் முதியவர்களுக்கு சாலை விபத்துகளால் ஏற்படும் மூளை பாதிப்பு, மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட குறைபாடு, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் உண்டாகிறது.

    வலிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். நோய்க்கான காரணத்தை அறிந்து அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வதினால் 70 முதல் 80 சதவீத வலிப்பு நோய்கள் முழுமையாக குணமடையும். மேலும் 20 முதல் 30 சதவீத வலிப்பு நோய்களை அறுவை சிகிச்சையின் மூலமாகவும் குணப்படுத்தலாம். வலிப்பு நோய்க்கான காரணங்களை சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிகிறோம். அது மட்டுமல்லாது பெட் ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன், வீடியோ போன்ற அதி நவீன சாதனங்களினாலும் துல்லியமாக நோய்க்கான காரணங்களையும் கண்டறியலாம்.



    பேய், பிசாசுகளினால் வலிப்பு நோய் வருவதில்லை. ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது கையில் கத்தி, சாவி, இதர இரும்பு பொருட்களைக் கொடுப்பதினால் அது குறையாது. மாறாக இதனால் வலிப்பு ஏற்பட்டவருக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால் இதுபோன்ற பொருட்களை வலிப்பு ஏற்படும்போது நோயாளியின் கையில் திணிக்கக்கூடாது.

    ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது அவரின் மேலாடைகளைத் தளர்த்திவிட்டு அவரை ஒருபுறமாக திருப்பி படுக்க வைக்கவேண்டும். பொதுவாக எந்தவித வலிப்பு நோயும் ஓரிரு நிமிடங்களில் நின்றுவிடும். மேலும் வலிப்பு ஏற்பட்டவரை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.

    வலிப்பு நோய் ஒரு மனநோய் அல்ல. முறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக இதை முழுமையாக குணப்படுத்தி, வலிப்பு நோய் உள்ளவர்களும் ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையைத் தொடரலாம். மேலும் அவர்கள் திருமணம் புரிந்து கொண்டு இயல்பான தாம்பத்திய வாழ்க்கையிலும் ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கு மரபணுக்கள் ஒரு காரணமாக இருந்தபோதிலும் பொதுவாக 95 சதவீதம் இது ஒரு பரம்பரை நோய் அல்ல. மேலும் வலிப்பு நோயினால் பாதிப்படைந்த பெண்கள் திருமணம் புரிவதில் எந்த தடையுமில்லை. பேறுகாலத்தின்போது மருத்துவரை அணுகி அதற்குண்டான ஆலோசனைகளையும் தற்காப்பு முறைகளையும் பின்பற்றினால் 95 சதவீதம் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு.

    இந்த விழிப்புணர்வை எல்லாரோடும் பகிர்ந்து கொண்டு, வலிப்பு நோயுள்ளவர்களையும் சமமாக மதித்து வாருங்கள் புதியதொரு உலகை உருவாக்குவோம்.

    டாக்டர் கே.விஜயன், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர், கோவை.
    மீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள். இதை வறுவலை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் (Pomfret Fish) - 1 பெரிய கையளவு
    தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    கறிவேப்பிலை - 1 கையளவு
    மிளகு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2-3
    பூண்டு - 4 பற்கள்
    பச்சை மிளகாய் - 3-4
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு அதனுடன் அரைத்த மசாலாவை மீனில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழ்க்கையில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரிடமும் குறிப்பாக தலைமைப் பண்புகளில் சிறந்தவர்களிடம் காணப்படும் சீரியகுணம் சகிப்புத் தன்மையாகும்.
    பகுத்தறிவுள்ள மனிதனின் தலையாயப்பண்பு, சகிப்புத்தன்மையாகும். வாழ்க்கையில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரிடமும் குறிப்பாக தலைமைப் பண்புகளில் சிறந்தவர்களிடம் காணப்படும் சீரியகுணம் சகிப்புத் தன்மையாகும்.

    உலகத்தில் வாழும் 750 கோடி மக்களும் வெவ்வேறானவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. சமூகங்களாக வாழும் மக்களிடையே பொது பண்பு நலன்கள் உள்ளன. தனி மனிதனோ அல்லது ஒரு குழுவினருக்கோ அவர் தம்மொழி, கலாசாரம், வாழ்வியல் முறைகள், குறிப்பாக உணவு, உடை இவைகள் தனித்தன்மை வாய்ந்தவை மற்றும் இன்றியமையாதவை. இன்றைக்கு தகவல் தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சிகளாலும், நாடுகளிடைய பயணிக்கும் நேரங்கள் குறைந்து விட்டமையாலும் உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது, மேலும், உலக மயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், வெவ்வேறு நாடுகளில் மக்களின் குடியேற்றம் அதிகரித்துள்ளது.

    புதிதாக குடியேறும் நாட்டிலுள்ள கலாசாரத்தையும், பண்பாட்டையும் பேணுவதா, அல்லது இது நாள் வரை தான் பழகி வந்ததை தொடர்வதா என்கிற குழப்பம் ஏற்படுவது இயல்பு. அது போல தனது நாடு, தனது மொழி, தனது கலாசாரம் முக்கியம். அவைகள், புதிதாக வருபவர்களிடமிருந்து காக்கப்படவேண்டும் என்று அந்நாட்டு குடிமக்கள் எதிர்பார்ப்பது நியாயம். இத்தகைய முரண்பாடுகளை களைய, வளர்த்துக் கொள்ள வேண்டியது சகிப்புத்தன்மையும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் நற்பண்புகள். உதாரணமாக, புலால் உணவை வாழ்வில் சுவைக்காதவரும், அதை அறவே விரும்பாதவரும், புலால் சாப்பிடுபவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

    நம்மை சுற்றி நடப்பவைகளை எல்லா நேரங்களிலும் நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அவைகளால் நமக்குள் ஏற்படும் பாதிப்பினையோ அல்லது அதற்கு எதிர்வினையாற்றுவதையோ நாம் தடுத்து நிறுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் வேடிக்கையாக ஏதோ சொல்லி விடுகிறார் என்று வைத்து கொள்வோம். அது நம்மை காயப்படுத்தி விடுகிறது.

    நமக்கு முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று உடனே அந்த நபர் மீது கோபம் கொண்டு பதிலுக்கு அவமானப்படுத்துவது. இப்படி செய்வதன் மூலம் அங்குள்ள சூழ்நிலையை இறுக்கமாக்கி விடுகிறோம். அதே நேரத்தில் ஒரு புன்னகையோடு அதனை கடந்து செல்லும் போது சூழ்நிலையை மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரையும் வென்று விடுகிறோம். சிறைச்சாலையில் கொலைக்குற்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையானோர் ஒரு சில நொடிகளில் உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பில் குற்றம் செய்ததாக கூறியுள்ளனர். ஒரு நொடியில் தவற விட்ட சகிப்புத்தன்மை காலம் முழுவதும் அவர்களை சிறைக்குள்ளிருந்து வருந்த செய்கிறது.



    சமூகத்தொண்டாற்றுபவர்களிடம் காணப்பட வேண்டியது சகிப்புத்தன்மை. கொல்கத்தா வீதிகளில் சுற்றிய அனாதை குழந்தைகளை விடுதியில் வைத்து பராமரித்த அன்னை தெரசா, குழந்தைகளுக்காக கடை கடையாக ஏறி உணவு பொருட்களை தானமாக பெறும் போது, ஒரு கடைக்காரர் அன்னை நீட்டிய கைகளில் எச்சில் துப்பி விடுகிறார். அதனால் சற்றும் கவலை கொள்ளாது, கைகளை துடைத்துக் கொண்டு, எனக்கு எது கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து விட்டீர்கள், ஆனால், பசியால் வாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்குவேண்டியதை தாருங்கள் என்று மீண்டும் கை நீட்டியபோது, கடைக்காரர், வெட்கி, மனமிரங்கி தேவையான பொருட்களை தாராளமாக வழங்கினார்.

    இன்றைய அவசர உலகத்தில் குறிப்பாக இளைஞர்கள் பழகிக் கொள்ளவேண்டியது சகிப்புத்தன்மை. எதிலும் சிறந்ததே கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். காரணம் இன்றைக்கு வளரும் சூழ்நிலை அப்படி. தனக்கு வேண்டியது உடனே கிடைக்க வேண்டும். தொழிலாக இருந்தாலும், குடும்ப வாழ்வாக இருந்தாலும் தேவையானது கிடைக்க வேண்டும்.

    கிடைக்காவிட்டால் மனஉளைச்சல், மன அழுத்தம், சச்சரவுகள். இதன் காரணமாக இளம் தம்பதியினர்கள் பலர் திருமணமான சிலமாதங் களிலேயே மணவிலக்கு பெற முடிவெடுக்கின்றனர். சென்னையில் பெருகி வரும் குடும்பநல வழக்காடு மன்றங்களும். அதிகரித்து வரும் மணவிலக்கு வழக்குகளுமே இதற்குச் சான்று. இல்லற வாழ்வு இன்புற்றிருக்க தேவையானது சகிப்புத்தன்மையே. குடும்பத்தில் நாம் பழகும் அத்தகைய பண்பு, நமதுதொழிலிலும் விரிவடைகிறது. தொழிற் செய்பவருக்கு அவசியமானது பொறுமையும், சகிப்புத்தன்மையும்ஆகும்.

    சகிப்புத்தன்மை நாம் சார்ந்தவர்களிடம் மட்டுமல்ல, முன்பின் தெரியாதவர்களிடம் வெளிப்படுத்துதலே மிக முக்கியமானது. சாலைகளில், பேருந்துகளில் பயணிப்பவர்கள், வாகன ஓட்டிகள் இவர்கள் எல்லாம் ஈடுபடும் வாக்குவாதங்கள், சண்டைகள் நாம் அன்றாடம் காணும் காட்சி. இவைகளால் தீமைகள் தான் கூடுகிறது.

    அதே நேரத்தில் சமூக அவலங்களை சகிப்புத்தன்மை என்கிற பெயரில் நான் கண்டு கொள்ளமாட்டேன் என்று சொல்வதை ஏற்கமுடியாது. எங்கள் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாற்றத்தையும், சிரமத்தையும் சகித்துக்கொண்டு நடந்து செல்கிறோம் என்று சொல்வது பொது ஒழுங்கிற்கும், சமூக கடமைக்கும் எதிரானது. சமூக அவலங்களை கண்டு பொங்கி எழுதல் நமது தார்மீக கடமை. அந்தநேரத்தில் சகிப்புத்தன்மையுள்ளவன் என்றுகூறிக்கொள்வது பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் மற்றும் சுயநலத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படும்.

    சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். இதற்கு, அவர்கள் நிலையிலிருந்து உணரவேண்டும். அடுத்து, வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளவும் அதனை அங்கீகரிக்கவும், பாராட்டவும் பழகவேண்டும். நம்மிடம் எத்தனை வேறுபாடுகள் வேண்டுமானால் இருக்கலாம், அடிப்படையில் நாம்ஒருவர்; மனிதஇனம், என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். சக மனிதனை மதித்தல், அனைவருக்கும் வாழும் உரிமை, சமூகநீதி இவைகள் தான்அடிப்படை. இதற்காக, நாம் சுமக்கும் கலாச்சாரம், பண்பாடு, சாதி, மதம், மொழி, இனம் இழக்க வேண்டியிருந்தாலும், தயங்ககூடாது. இதுவே நாம் உலக சகிப்புத்தன்மை தினத்தில் எடுத்துக் கொள்ளும் சூளுரையாக இருக்கட்டும்.

    நா. வெங்கடேஷ், திறன் மேம்பாட்டாளர்
    தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    தண்ணீர் நமது தாகத்தை போக்குவதோடு நமது வாழ்வையும் வளமாக வைத்து கொள்கிறது. பலர் காரமாக எதையாவது சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் அவ்வளவு தான். கத்தி கூப்பாடே போட்டு விடுவார்கள். இந்த நிலையில் நாம் நீர் அருந்த கூடாது. ஏனென்றால், இவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்துமாம்.

    பலருக்கு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், பொதுவாகவே இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இது போன்ற நிலையில், உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும். அத்துடன் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் தடைபட கூடும்.

    சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், அதற்கு முன்பும்… இப்படி எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இவை செரிமான கோளாறை தரும். மேலும், மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.

    நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களின் உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான். அதிக தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். மேலும், ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.

    உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.

    பாட்டிலில் நாம் நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். எனவே, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்காதீர்கள்.

    தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடலில் சோடியம் அளவை இவை குறைத்து பாதிப்பை தரும். மேலும், உயிருக்கே கூட இதனால் ஆபத்து ஏற்படலாம். 
    உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். இப்போது மட்டன் கீமா சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 150 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    துவரம் பருப்பு - 50 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    நெய் - 3 டீஸ்பூன்
    புதினா - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    துவரம் பருப்பு, மட்டன் கீமாவை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் துவரம் பருப்பு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டிய பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    கடைசியாக அதில் புதினா சேர்த்து கிளறி, மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    சுவையான மட்டன் கீமா சூப் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×