என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கொரோனா வைரஸ் காரணமாக கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது.
    ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21) கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் காரணமாகி விட்டது. அதுவே, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது. இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது.

    கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே மாணவ மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.

    எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும் இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

    ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது. வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்து வது என்பது நடைமுறையில் இயலாத ஒன்று தான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகி விட்டது.

    பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும். 
    டீன்-ஏஜ் பெண்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் பொழுதை போக்குவதால், ஆண்களை விட மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஒரு ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
    டீன்-ஏஜ் பெண்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் பொழுதை போக்குவதால், ஆண்களை விட மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஒரு ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. அந்த ஆய்வில் 40 சதவீத இளம்பெண்கள், சமூக வலைத்தளங்களில் ஆண்களை விட அதிக நேரம் செலவிடுவதாகவும், அப்படி தாங்கள் பகிரும் தகவல்களுக்கு லைக்கோ, கருத்துகளோ யாரும் பதிவிடவில்லை என்றால் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த மன அழுத்தம் காரணமாக, சமூக வலைத்தளங்களில், அவர்கள் மன அழுத்தத்தை குறிப்பிடும் ‘எமோஜி’ குறியீடுகளை அதிகம் பகிர்வதும் தெரியவந்திருக்கிறது. வாட்ஸ் ஆப்பில் தாங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ்களை யாரும் பார்க்கவில்லை என்றாலும், பெண்களின் மனநிலை இப்படி கவலைக்குரியதாக மாறுவதாக சொல்கிறார்கள்.

    லண்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வில், 11 ஆயிரம் டீன்-ஏஜ் பெண்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ஐந்தில் இரண்டு டீன்-ஏஜ் பெண்கள் தினமும் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக சமூகவலைத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் ஆண்களில் ஐந்தில் ஒருவர்தான் சமூக வலைத்தளத்தை பொழுதுபோக்குக்காக தேர்ந்தெடுப்பது தெரியவந்துள்ளது.

    ஆய்வை நடத்திய குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் வோன் ஹெல்லி இதுபற்றி கூறும்போது, “டீன்-ஏஜ் வயது ஆண்களை காட்டிலும் பெண்களுக்குத்தான் மன அழுத்தம் மற்றும் அதை சார்ந்த அறிகுறிகள் அதிகமாக காணப்படுகிறது. தினமும் அதிக நேரத்தை சமூக வலைத் தளங்களில் செலவிடுவதால் படிப்படியாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மன அழுத்தமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது” என்கிறார்.

    மன அழுத்தம் மட்டுமின்றி தூக்கமின்மைக்கும் சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக 14 வயதுக்குட்பட்டவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதிலும் 40 சதவீதம் பெண்கள் தான் என்ற ஆய்வின் முடிவு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. அதே நேரம் சமூக வலைதளங்களால் தூக்கமின்றி தவிக்கும் ஆண்களின் எண்ணிக்கை வெறும் 28 சதவீதம் தான் என்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    செல்போனை பக்கத்தில் வைத்துகொண்டே தூங்குவதால் சமூக வலைத்தளங்களில் இருந்து ஏதேனும் தகவல்கள் பரிமாறப்பட்டால் உடனே எழுந்துவிடுகிறார்கள். பின்பு அதிலேயே நேரத்தை செலவிடுவது தூக்கத்தை தாமதப்படுத்துகிறது. இதனால் படிப்பில் கவனச் சிதறல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் அதிகரிக்கின்றன. இரவில் எந்த நேரமாக இருந்தாலும் தகவல் பகிர்வதும், ஸ்டேட்டஸ் போடுவதும் தூக்கத்திற்கு தடை போடுவதாக அந்த ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது.

    தாங்கள் பதிவிடும் புகைப்படங்கள், ஸ்டேட்டஸ்களுக்கு யாரும் கருத்து பகிரவில்லை என்றால், தாங்கள் அழகாக இல்லையோ என்கிற வருத்தம் பெண்களிடம் தலைதூக்குகிறது. இதனால் அவர்கள் மனச்சோர்வு அடைகிறார்கள். எந்த விஷயத்திலும் நாட்டம் கொள்ளாமல் இருக்கிறார்கள். அது மன அழுத்தமாக மாறி தற்கொலை முயற்சியை தூண்டுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே செல்போன் உபயோகிப்பதையும், சமூக வலைத் தளங்களில் நேரத்தை செலவழிப்பதையும் குறைத்துக்கொள்வதே நம் வாழ்க்கைக்கு நல்லது.
    தம்பதியரிடையே விரிசல் ஏற்பட்டால் அதை சரிசெய்யும் அளவுக்கு வீரியம் நிறைந்த மருந்தாக தாம்பத்திய வாழ்க்கை இருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்கான மருந்தை அனுபவித்து, ரசித்து ருசிக்கத்தான் பல தம்பதிகளுக்கு தெரிவதில்லை.
    கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படாத அளவுக்கு, இயற்கை தரும் மருந்தாக அமைந்திருப்பது தாம்பத்தியம். தம்பதியரிடையே விரிசல் ஏற்பட்டால் அதை சரிசெய்யும் அளவுக்கு வீரியம் நிறைந்த மருந்தாகவும் இது இருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்கான மருந்தை அனுபவித்து, ரசித்து ருசிக்கத்தான் பல தம்பதிகளுக்கு தெரிவதில்லை. பெரும்பாலான தம்பதிகள், தாம்பத்தியத்தை ஆனந்தத்துடன் அணுகாமல் சம்பிரதாயத்துக்காக, இயந்திரத்தனமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    தம்பதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தாம்பத்திய உண்மைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..

    தம்பதிகள் அவ்வப்போது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க, உடல் அழகு அவசியமா? என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். திருமணமான தொடக்கத்தில்தான் அழகுக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நாட்கள் செல்லச்செல்ல படுக்கை அறையில் கணவனும்-மனைவியும் எவ்வளவு மகிழ்ச்சியாக இணைகிறார்கள், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஈர்த்து எவ்வாறு இணக்கமாக செயல்படுகிறார்கள், ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு எப்படி திருப்திபடுத்துகிறார்கள் என்பதுதான் தாம்பத்தியத்தை வெற்றியாக்கும். அந்த வெற்றித் தருணங்களில் அழகு என்ற பேச்சே அடிபட்டுபோகிறது.

    இதை இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், அழகே இல்லாத பெண்களால் சில ஆண்கள் ஈர்க்கப்பட்டிருப்பதை உங்கள் அனுபவத்திலே கண்டிருப்பீர்கள். அதுபோல் அழகற்ற ஆண்களை அழகான பெண்கள் வளைய வருவதையும் காணலாம். அன்பும், அணுகுமுறையும், ஆனந்தமான செயல்பாடுகளுமே தாம்பத்தியத்தை சிறப்பாக்கும்.

    தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களில் முப்பது சதவீத பெண்களே, ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உச்சகட்ட இன்பத்தை அடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே நேரம், வாழ்க்கையில் ஒருமுறை கூட உச்சம் அடையாத பெண்களும் இருப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. இது ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம்.

    திருமணமாகும் பெண்கள் முதல் முறையாக உறவு கொள்ளும்போது, கன்னி சவ்வு எனப்படும் ‘ஹைமன்’ கிழிந்து லேசாக இஇரத்த ம் வரும் என்றும், அதனால் வலி ஏற்படும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது தாங்கமுடியாத வலியாக இருப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ‘ஹைமன்’ கன்னித் தன்மையின் அடையாளம் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சவ்வு முதல் உறவில்தான் கிழிபட வேண்டும் என்பதும் இல்லை. பிறவியிலே அந்த சவ்வு இல்லாத பெண்களும் நிறைய இருக்கிறார்கள். விளையாட்டு, உடலை வளைக்கும் பயிற்சிகளால் கூட அந்த சவ்வு கிழிபடுவது உண்டு.

    மார்பகங்களை பற்றிய சந்தேகங்கள் பெண்களுக்கு நிறைய இருக்கின்றன. அதன் வடிவமும், அமைப்பும் பெண்ணுக்கு பெண் மாறுபடும். பாரம்பரியம், கொழுப்பு திசுக்களின் சேர்க்கை, ஹார்மோன்கள் போன்றவற்றின் அடிப்படையில் மார்பகங்களின் வடிவம் அமையும். சிலருக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்காது. லேசான வித்தியாசம் இருந்துகொண்டிருக்கும்.

    மனைவியை கணவனும், கணவனை மனைவியும் அதிக நேரம் கட்டிப்பிடித்தால், அவர்களது தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக அமையும் என்பதை சில ஆய்வுகள் உண்மைதான் என்கின்றன. 20 நிமிடங்கள் மனைவியை கட்டிப்பிடித்தால், அவளது உடலில் ‘ஆக்சிடோசின்’ என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். அது பெண்ணுக்கு அதிக உற்சாகத்தையும், சக்தியையும் தரும். அது போன்ற மாற்றங்கள் ஆணுக்கும் நிகழும். அவ்வப்போது கட்டிப்பிடித்து மகிழும் தம்பதிகளுக்குள் மனநெருக்கம் அதிகமாகும். அதுவே உடல் நெருக்கத்தையும் சிறப்பாக்கும். அதனால் கட்டிப்பிடிப்பதை கணவனும்-மனைவியும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
    தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. இன்று தக்காளி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி -  கால் கிலோ,
    பெரிய வெங்காயம் - 2,
    வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு, மிளகுத்தூள், பால், கொத்தமல்லி தழை - தேவையான அளவு

    தக்காளி

    செய்முறை:

    ஒரு வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, மற்றொரு வெங்காயத்தை பெரிதாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி… அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

    சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி… உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.

    சூப்பரான தக்காளி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஊரடங்கு காரணமாக, குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஒன்றாக இருக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. இது அவர்களின் உறவு மேம்பட வழி வகுத்துள்ளது.
    கொரோனா வைரஸ் பாதிப்பு, மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதார நிலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என்று யாரையும் சந்திக்க, எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக, பெற்றோர்களும் வீட்டில் அதிக நேரம் இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஒன்றாக இருக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. இது அவர்களின் உறவு மேம்பட வழி வகுத்துள்ளது.

    கொரோனாவுக்கு முன்பு, குழந்தைகள் வீட்டை விட பள்ளிக்கூடத்தில் தான் அதிக நேரம் ஆசிரியர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் தற்போது முழுக்க, முழுக்க வீட்டிலேயே இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளை பெற்றோரும், பெற்றோரை குழந்தைகளும் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் குடும்பத்தின் பின்னணி, உறவுகள், பொருளாதார பின்புலம் போன்றவற்றை அறிந்து கொள்ள இயல்பான சூழல் கனிந்து இருக்கிறது.

    குழந்தைகளுக்காக, பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. அதை சமாளித்து, உழைத்து குழந்தைகளின் நலனை பேணுகிறார்கள். ஆனால் அதை குழந்தைகளுக்கு உணர்த்தவோ, நாசூக்காக புரிய வைக்கவோ பெற்றோரால் முடிவது இல்லை. ஆனால் அதற்கான வாசல்களை கொரோனா பாதிப்பு திறந்து விட்டுள்ளது. மேலும் விட்டுப்போன உறவுகளின் தொடர்பை புதுப்பிக்கும் காலமாகவும் இது மாறி இருக்கிறது. இந்த இணைப்பை வலுவானதாக மாற்றிக் கொள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோரும் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. மேலும் வீட்டில் அனைவரும் ஒன்றாக இருப்பதால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், ஒருவரின் திறமையை மற்றவர்கள் அறிந்து ஊக்குவிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில், ஊரில் தனிமையில் தவிக்கும் தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகள் செல்போனில் பேசி மகிழ்வதை காண முடிகிறது. இதனால் அவர்கள் மனரீதியாக புதிய எழுச்சி பெறுகிறார்கள். மேலும், இதுவரை பேசாத உறவினர்களிடமும் குழந்தைகள் பெற்றோர் மூலம் பேசி தங்களின் உறவு வட்டத்தை தெரிந்து கொள்கிறார்கள்.

    பொருளாதாரம் மட்டுமே என்பதை தாண்டி, கண்ணுக்குத் தெரியாத பண்புகளால் நிரம்பியது வாழ்க்கை. அந்த பண்புகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் நடத்தையிலும் வெளிப்பட ஊரடங்கு காலம் வழிகாட்டுகிறது. எல்லாவற்றையும் விட உயர்ந்தது உயிர் என்பதே கொரோனா மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியதும், அதை எதிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டியதும் மிகவும் அவசியம். அதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியமானது.

    தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் உள்ளனர். எனவே இந்த காலகட்டத்தில் மாணவ-மாணவிகள் படிப்பில் போதிய நாட்டம் இன்றி இருப்பது போல் தென்படும். ஆனாலும் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள், தங்களை மீண்டும் எளிதாக தயார்படுத்திக்கொள்வார்கள். என்றாலும், மாணவர்களை தொடர்ந்து கற்றிடும் மன நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்குரிய வகையில் படிப்பது, எழுதுவது மற்றும் எதையாவது கற்றுக்கொள்வது என்பதை விளையாட்டு முறையில் அளிக்க வேண்டும். அது அவர்களின் மனநிலையை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும்.
    பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வது எப்படி, பொதுவாக தோல் நலன் சார்ந்து பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்ற கேள்வி பெரும்பாலோனோர் மனதில் எழலாம்.
    பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வது எப்படி, பொதுவாக தோல் நலன் சார்ந்து பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்ற கேள்வி பெரும்பாலோனோர் மனதில் எழலாம்.

    பொதுவாகப் பனிக் காலத்தில் யாரும் அதிகமாக தண்ணீர் குடிப்பதில்லை. பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைக்கூட அதிகமாக சாப்பிட மாட்டார்கள். இதனால் பனிக்காலத்தில் சருமத்தில் வறட்சி ஏற்படும். பலர் குளிக்கப் பயன்படுத்தும் சோப்புகள் பெரும்பாலும் உடலில் வறட்சித் தன்மையை உருவாக்கக்கூடியவை. இதற்கு மாற்றாக எண்ணெய் பசை தரும் ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் உடலின் ஈரத்தன்மை வறண்டு போகாமல் பாதுகாக்கப்படும். அதேபோல் தினமும் 2 வேளை ஈரப்பதம் தரும் கிரீமை உடலிலும் முகத்திலும் பூசிக்கொள்ளலாம்.

    சிலர் உதடு வறண்டு போகாமல் இருக்க நாக்கால் உதட்டை ஈரப்படுத்தியபடி இருப்பார்கள். இப்படிச் செய்வதால் உதட்டில் அழற்சி ஏற்பட்டு புண்ணாகிவிடும். இதைத் தவிர்க்க உதட்டுக்குப் பூசும் லிப் பாமை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை பூசினால் உதடுகளில் வெடிப்பு ஏற்படாது. லிப் பாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் வெண்ணெயை தடவலாம். குழந்தைகளுக்கும் தடவிவிடலாம்.

    பனிக்காலத்தில் சருமம் வறட்சியாக இருக்கும்போது, கையிலும் காலிலும் கோடுகள்போல் பிளவு உண்டாகி சிலருக்கு அரிப்பு ஏற்படும். இந்தப் பிளவுப் பகுதியை அப்படியே விட்டால் அதன் மூலமாக நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க குளித்துவிட்டு வந்ததுமே சிறிதளவு தேங்காய் எண்ணெயை தேய்த்தால் வறட்சி நீங்கும்.

    பனிக் காலத்தில் அதிக நேரம் தண்ணீரில் இருந்தால் சிலருக்குக் கை, கால் பகுதிகள் நீல நிறத்தில் மாறிவிடும். ரத்த நாளங்கள் பனிக் காலத்தில் சுருங்குவதால் இந்தப் பிரச்சினை உண்டாகிறது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மிதமான வெந்நீரில் பாத்திரங்களைக் கழுவலாம். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் கை, கால்களில் உறை அணிந்துகொள்ள வேண்டும். பனிக் காலத்தில் வெளியே செல்லும்போது, உடலை முழுவதுமாக மறைக்கும் அடர்த்தியான ஆடைகள் அணிய வேண்டும்.
    புகைப்பழக்கமே இல்லாத 9 லட்சம் அப்பாவிகளும் அடக்கம்(பெண்கள் குழந்தைகள் உள்பட). புகையிலை உபயோகம் மற்றும் புகைப்பழக்கம் மனிதன் மரணிப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
    உலக சுகாதார நிறுவனம் 1987-ம் ஆண்டு முதல் மே 31-ந் தேதியை உலக புகையிலை எதிர்ப்பு நாளாக அனுசரித்து வருகிறது. ஒரு நாள் முழுவதும் அனைத்து வகையான புகையிலை பயன்பாட்டை நிறுத்திவைப்பது மற்றும் புகையிலை உபயோகிப்பதனால் ஏற்படும் உடல் நலக்கேடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த தினத்தின் நோக்கமாகும்.புகையிலை உபயோகிப்பதனால் ஆண்டுதோறும் உலகளவில் 70 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் புகைப்பழக்கமே இல்லாத 9 லட்சம் அப்பாவிகளும் அடக்கம்(பெண்கள் குழந்தைகள் உள்பட). புகையிலை உபயோகம் மற்றும் புகைப்பழக்கம் மனிதன் மரணிப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

    இருபதாம் நூற்றாண்டில் சுமார் 10 கோடி பேர் புகையிலை உபயோகித்ததால் மரணம் அடைந்தனர். 21 -ம் நூற்றாண்டில் புகையிலை பழக்கத்தினால் சுமார் 100 கோடி பேர் இறக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். புகையிலையை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் அது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடியது. இதில் புகைப்பிடிக்கும் பழக்கம் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியது. புகைப்பழக்கம் புகைப்பிடிப்பவரையும் கூடவே இருக்கும் புகைப்பிடிக்காதவரையும் ஒருங்கே பாதிக்கக்கூடியது.

    இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுமார் 40 சதவீத ஆண்களும் 5 சதவீத பெண்களும் புகைப்பிடிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 25 சதவீத ஆண்களும் 15 சதவீத பெண்களும் புகைப்பிடிப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    வளர்ந்த நாடுகளில் புகைப்பழக்கம் குறைந்துவிட்ட நிலையில் வளரும் நாடுகளில் புகைப்பழக்கம் அது தொடர்பான வியாதிகளும் அதிகரித்துள்ளன. பள்ளி கல்லூரி காலங்களில் நண்பர்களின் ஊக்கத்தாலேயே புகைப்பிடிக்க ஆரம்பித்ததாக பெரும்பாலான புகைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். மன அமைதிக்காகவும் மலச்சிக்கலை தவிர்ப்பதற்கும் புகை பிடிப்பதாக பலர் சொல்கின்றனர். புகையிலையில் உள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் நமது நரம்புமண்டலத்தில் வேலை செய்து திரும்ப திரும்ப புகைப்பிடிக்க தூண்டுகிறது. புகையிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் 72 வேதிப்பொருட்கள் கண்டிப்பாக புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. புகைப்பழக்கம் மூலம் 13 வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. புகையிலை பான் குட்கா போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட 15 மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 3-ல் 2 பேர் புகைப்பழக்கத்திற்கு ஆளானவர்கள். புகைப்பழக்கம் மூலம் ஏற்படும் மாரடைப்பு மரணத்தை ஏற்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது.

    புகைப்பிடித்தல் பல வழிகளில் நமது நுரையீரலை பாதிக்கிறது. நுரையீரல் தொற்று ஆஸ்துமாவில் ஆரம்பித்து நுரையீரல் புற்றுநோய் வரை அதில் அடங்கும். இரண்டாம் தர புகைத்தல் என்பது புகைப்பழக்கம் அல்லாத ஒருவர் புகைக்கு உட்படுவதால் ஏற்படுவதாகும். குழந்தைகள் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பொது இடங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிப்பவர்களால் மற்றவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் இறந்துபோகின்றனர்.

    உலகளவில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் குழந்தைகள் வீட்டிலுள்ள பெரியவர்கள் புகைப்பிடிப்பதால் இறந்துபோகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தையையும் புகைப்பழக்கம் விட்டு வைக்காது. புகைப்பிடிக்கும் தாய் அல்லது தந்தையின் மூலம் சிசுவின் நுரையீரல் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால் இந்த குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற மனஉறுதி இருந்தால் மட்டுமே புகைப்பதை நிறுத்த இயலும். நிகோடின் சிகிச்சையின் மூலமும் பயன்பெறலாம்.

    2030-ம் ஆண்டுக்குள் தொற்றா நோய்களின் மூலம் ஏற்படும் மரணங்களை மூன்றில் ஒரு பங்காவது குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. புகைப் பிடிக்கும் பழக்கத்தையும் புகையிலை உபயோகத்தையும் கட்டுப்படுத்தாமல் இது சாத்தியமில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் புகைப்பிடிப்பதன் தீமைகளை தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். புகைப்பிடிப்பவராயின் முதலில் தாம் புகைப்பிடிப்பதை நிறுத்தி முன் உதாரணமாக திகழ வேண்டும். புகைப்பழக்கத்தையும் புகையிலை உபயோகத்தையும் கட்டுப்படுத்தி புகையில்லா (நோயில்லா) உலகத்தை ஏற்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

    டாக்டர் செந்தில்குமார்

    புற்றுநோய் சிகிச்சை நிபுணர் உதவி பேராசிரியர் தஞ்சை மருத்துவ கல்லூரி.
    முந்திரி உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோயைத் தடுப்பதிலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    முந்திரி பருப்பை உட்கொள்வது மனச்சோர்வை போக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முந்திரியில் வைட்டமின் பி 12 நிறைந்திருக்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் முந்திரி பருப்பில் காணப்படும் மெக்னீசியம் உடலில் செரோடோனின் ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு செரோடோனின் பங்களிப்பு முக்கியமானது. இதுதவிர முந்திரி பருப்பில் இருக்கும் புரதம், தாமிரம் போன்றவை நொதிகளின் செயல்பாடு, ஹார்மோன் உற்பத்தி, மூளையின் செயல்பாடு போன்றவற்றிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    முந்திரி பருப்பில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பும் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    முந்திரியை அரைத்து சருமத்தில் தடவினால் முகம் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும். முடி உதிர்தல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் முந்திரி பருப்பை சாப்பிட்டு வரலாம். மேலும் முந்திரியில் பொட்டாசியம், வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்றவையும் உள்ளன. அவை உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோயைத் தடுப்பதிலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    குழந்தை பருவத்தில் மனச்சோர்வு அடைபவர்கள் உடல் பருமன், சுறுசுறுப்பின்மை, செயலற்ற தன்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இளமை பருவத்தில் இதய நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பது அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் நடத் திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    முதுமை ஒரு நபரின் மனத்திறன், ஆளுமை மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது. மனச்சோர்வு உள்ளவர்களுக்கு முதுமையில் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி இரு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் சராசரி மனிதரை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனச்சோர்வுடன் வாழ்பவர்களுக்கு காது கேளாமை பிரச்சினை உண்டாகுவதற்கான வாய்ப்பும் அதிகம். ஆண்களை விட பெண் கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளில் இருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம். 
    வாழ்க்கை துணையுடன் புதிய பயணத்தை தொடங்கும்போது அவரின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
    வாழ்க்கை துணையுடன் புதிய பயணத்தை தொடங்கும்போது அவரின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவருக்கு உரிய அங்கீகாரமும் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கேலி, கிண்டலுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

    வாழ்க்கையில் சந்தித்த சுவாரசியமான சம்பவங்கள், இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியங்கள் பற்றி துணையிடம் பேசலாம். அப்படி ஆழ்மனதில் இருக்கும் முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தும்போது சற்று அசவுகரியங்களை உணரலாம். ஆனால் இத்தகைய விஷயங் கள் துணைக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுக்கும். ஏனெனில் துணை உங்களை முழு மனதோடும், ஆத்மார்த்தமாகவும் நம்ப வேண்டும். ஆரம்பத்தில் இது எளிதான விஷயம் அல்ல. ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும், நேசமும்தான் உறவை பலப்படுத்தும்.

    எல்லா பெண்களுமே திருமணத்திற்கு முன்பு மாமியார் பற்றி வேறுவிதமான கருத்துக்களை கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களிடம் தனது தாயாரின் சுபாவங்களையும், குணாதிசயங்களையும் ஆரம்பத்திலேயே கணவர் எடுத்துச்சொல்லிவிட வேண்டும். மாமியாரின் செயல்பாடுகளின் மீது மனைவிக்கு ஆட்சேபம் ஏற்பட்டால் பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும். மாமியார், மனைவி இருவரின் நடவடிக்கைகளில் வெளிப்படும் நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டும். அது இருவருக்கும் இடையேயான இடைவெளியை குறைக்க உதவும்.

    திருமணமான ஆரம்ப நாட்கள் வேடிக்கையாகவும், சுவாரசியமிக்கதாகவும் நகரும். இருவரும் சந்தோஷ தருணங்களை அனுபவிப்பார்கள். அதேநேரத்தில் திருமணத்திற்கு முன்பு கணவரின் உலகம் எப்படிப்பட்டதாக இருந்தது? அதனை இப்போதும் அப்படியே தொடர விரும்புகிறாரா? என்பதை கேட்டு அவரது உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல சில மணி நேரங்களை கழிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். இது கணவன்-மனைவி இருவருக்குமே பொதுவானது.

    குடும்ப பொறுப்புகளை நிர்வகிப்பதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க தொடங்கும். அதனை நினைவில் கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.

    திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்வதற்கு அன்பு போதுமானது என்று சொல்வது எளிதானது. ஆனால் அன்பு மட்டுமே எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்துவிடாது. குடும்பத்தின் பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் தேவை. திருமணமான புதிதில் இருந்தே தேவையற்ற செலவுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. பணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தை நல்லபடியாக கட்டமைக்க முடியும்.

    திருமணமான புதிதில் இருக்கும் காதலும், நேசமும் சில காலத்திற்குள் முடிவுக்கு வந்துவிடுகிறது என்ற வருத்தம் இருவரிடமும் வெளிப்படுவதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. இருவருமே எதிர்பார்க்காத நேரத்தில் சின்ன சின்ன ‘சர்ப்பிரைஸ் கிப்ட்’கள் மூலம் அவ்வப்போது அன்பை வலுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலானோர் திருமணமாகி நீண்ட காலத்திற்கு பிறகுதான் திருமணமான புதிதில் பகிர்ந்துகொண்ட நேசத்தை உணர்கிறார்கள். அப்படி அல்லாமல் எல்லா நேரமும் அன்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

    ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திருமணம் மாற்றத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். திருமண தம்பதிகள் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கைமுறையில் இருந்து புதிய சூழலுக்கு மாற வேண்டியிருக்கும். குடும்ப பொறுப்பையும் சுமக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான தம்பதிகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை விட மகிழ்ச்சியான வாழ்க்கையை திருமணம் ஏற்படுத்தி கொடுக்கும். சிலருக்கு சவாலானதாக மாறும். திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் இயல்பான மாற்றங்கள் பற்றியும், அவற்றை எதிர்கொள்ளும் விதம் பற்றியும் பார்ப்போம்.
    இன்னொருவருக்கான குழந்தையை தனது கருப்பையில் சுமக்கும் வாடகைத் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் உணர்வுரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
    இந்தியாவில் திருமணமான தம்பதிகளில் பத்து சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் கர்ப்பம்தரிப்பதில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். அவர்களில் சிலர் வாடகைத் தாய்மார்களை நாடுகிறார்கள். பெரும்பாலும் வறுமையில் வாடும் பெண்களே வாடகைத்தாய் ஆவதற்கு சம்மதிக்கிறார்கள். குழந்தைக்கு ஏங்கும் தம்பதியும் வாடகைத்தாயும் நேரடியாக சந்தித்து பேசி, உடன்பாட்டிற்கு வரும்போது பெருமளவு சிக்கல்கள் தோன்றாமல் கர்ப்பமும், பிரசவமும் நிகழ்ந்து இருதரப்பினரும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் இதில் இடைத்தரகர்கள் தலையிடும்போது பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கிவிடுகின்றன.

    இன்னொருவருக்கான குழந்தையை தனது கருப்பையில் சுமக்கும் வாடகைத் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் உணர்வுரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். ‘வறுமையால் தாய்மையை விலை பேசிவிட்டேனே!’ என்ற குற்றஉணர்வு அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படுவதாக மனநல நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். குற்ற உணர்வு ஏற்படக்கூடாது என்பதற்காக பெரும்பாலான தம்பதிகள் தங்கள் உறவினர்களையோ, தெரிந்தவர்களையோ வாடகைத்தாயாக ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர். அதே நேரத்தில் ‘தெரிந்தவர்களாக இருந்தால், எதிர்காலத்தில் அந்த வாடகைத் தாய்மார்களால் தங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ’ என்ற பயமும் சில தம்பதிகளுக்கு இருக்கிறது.

    வாடகைத்தாய் கருவை சுமப்பதில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை, குழந்தையை ஏற்றெடுக்கும் தம்பதிகளின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருக்க வேண்டியதிருக்கிறது. அந்த தம்பதிகள் வாடகைத் தாயை தங்கள் கண்காணிப்பிலோ அல்லது மருத்துவமனையிலோ பத்து மாதங்களுக்கு மேல் வைத்திருக்கவேண்டியதிருக்கிறது. அத்தனை மாதமும் அனேகமான வாடகைத் தாய்மார்கள் கவலையோடும், மனஅழுத்தத்தோடும்தான் காணப்படுகிறார்கள். அதனால் வாடகைத் தாய்மார்களுக்கும் தம்பதிகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடுகளும், மோதல் போக்கும் ஏற்படுவதுண்டு.

    வாடகைத் தாய்மார்களுக்கு ஏற்கனவே சொந்த குழந்தைகள் இருக்கும். அந்த குழந்தைகள் பட்டினியோடு சொந்த வீட்டில் இருந்துகொண்டிருக்கலாம். வாடகைத்தாய்க்கோ கர்ப்பகாலத்தில் தனி வீட்டில் விலை உயர்ந்த உணவுகள் கிடைத்துக்கொண்டிருக்கும். அப்போது அவள் ஒவ்வொரு கவளம் உண்ணும்போதும் அவளது சொந்த குழந்தைகள் நினைவுக்கு வந்து அதை உண்ண முடியாமலும், ஒதுக்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்படும். அந்த தவிப்பு அவளது ஹார்மோன் சுரப்பில் சீரற்ற நிலையை உருவாக்கும். கர்ப்பக் காலத்தில் தாயின் ரத்தம்தான் கர்ப்பப்பைக்கும் போகிறது. அந்த நேரத்தில் தாயின் மனநிலையை பொருத்தே வயிற்றில் இருக்கும் குழந்தையின் மனநிலையும் அமையும்.

    கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மிகப்பெரிய மருந்து, அவளது கணவனின் அருகாமைதான். கணவனின் அருகாமை அவளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும். ஆனால் வாடகைத்தாய்மார்களின் அருகில் அவளது கணவனை நெருங்க அனுமதிக்கமாட்டார்கள். அதுவும் அவளுக்கு மனஅழுத்தத்தை தோற்றுவிக்கும்.

    தனது சொந்த குழந்தையை வயிற்றில் வளர்க்கும்போது அந்த பெண் தாய்மையின் பூரிப்பில் சந்தோஷமாக இருந்திருப்பாள். ‘எப்போது தனது குழந்தையின் முகத்தை பார்ப்போம்’ என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பாள். ஆனால் வாடகைத்தாயிடம் அந்த எதிர்பார்ப்பு எதுவும் இருக்காது. தனது வயிற்றில் அடுத்தவரின் குழந்தை வளர்ந்துகொண்டிருக்கும்போது பெரும்பாலும் அவள், ‘பிரசவம் எப்போது முடியும்? ஒழுங்காக பேசிய பணத்தை தந்துவிடுவார்களா? கணவர் முன்புபோல் முழுஅன்பு காட்டுவாரா?’ என்ற கேள்விகளோடு மனக்குழப்பத்தில் இருந்து கொண்டிருப்பாள்.

    வாடகைத்தாய்க்கு முழு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வழங்குவதுதான் அவளது வயிற்றில் வளரும் தமது எதிர்கால சந்ததிக்கு நல்லது என்பது, அந்த தம்பதிகளுக்கு தெரியும். அதனால் அவர்கள் அவளுக்கு உணவு, பொழுதுபோக்கு, ஓய்வு போன்றவைகளை எல்லாம் வழங்குவார்கள். ஆனால் அவள் மனதோ அந்த பத்து மாத சொகுசை ஏற்றுக்கொள்ள முடியாமல், நாளை என்ன நடக்கும் என்ற ஏக்கத்துடனே இருந்துகொண்டிருக்கும்.

    வாடகைத்தாய் பிரசவித்ததும் அவளிடம் குழந்தையை காட்டுவதில்லை. குழந்தை ஆணா, பெண்ணா என்றும் சொல்வதில்லை. அதை ஏமாற்றமாக எடுத்துக்கொண்டு நிராசையாகிவிடும் பெண்களில் சிலரின் சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் கணவரின் குடும்பத்தினரே அவளது தியாகத்தை மறந்து ‘பணத்திற்காக குழந்தை பெற்றுக்கொடுத்தவள்தானே!’ என்று ஏளனமாக பேசுவதும் உண்டு.

    அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள நிறைய பணம் செலவாகும். அதில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் செலவாகிறது. அதனால் இங்கு வாடகைத் தாய்மார்களின் தேவை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இதனை கவனத்தில் கொண்டு இந்தியாவில் வாடகைத்தாய்மார்களை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் மருத்துவ மையங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் வாடகைத்தாய்மார்களைத் தேடி வரும் வெளிநாட்டு தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குஜராத்தை சேர்ந்த டாக்டர் நைனா பட்டேல் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைத்தாய்மார்களை கருத்தரிக்க வைக்கும் மையத்தை நடத்தி வருகிறார். இது குழந்தை பாக்கியம் இல்லாத வெளிநாட்டினர் அதிகம் பேர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று செல்லும் மையமாக விளங்குகிறது. 
    அரிசி, காய்கறி சேர்த்து செய்யும் இந்த சூப் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது. இந்த சூப் குடித்தால் நீண்ட நேரம் பசிக்காது. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    புழுங்கலரிசி - 2 டேபிள் ஸ்பூன்,
    (கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, நூல்கோல், கோஸ், நாட்டுக் காய்கறிகள் அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை கொட்டை, சர்க்கரைவள்ளி கிழங்கு, வெள்ளைப் பூசணி) ஏதாவது கலந்த காய்கறிகள் - 1/4 கப் (பொடியாக நறுக்கவும்),
    இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,
    வெங்காயம்  - 1,
    தக்காளி  - 1,
    புதினா, கொத்த மல்லித்தழை  - சிறிது,
    தேங்காய்ப்பால் - 1/2 கப்,
    வெண்ணெய்  3 டீஸ்பூன் + எண்ணெய்  - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள்  - 1 சிட்டிகை,
    உப்பு  - தேவைக்கு.

    அரிசி காய்கறி சூப்

    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி வேக வைக்கவும்.

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் + எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி,  கரம் மசாலாத்தூள், புதினா, கொத்த மல்லித்தழை போட்டு வதக்கவும்.

    பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.

    ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான அரிசி காய்கறி சூப் ரெடி.

    கத்தரிக்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காயை உப்பு போட்டு மசிய வேக வைத்து சூப்பில் சேர்க்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு பரவுகின்றன.
    இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்குதலில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது. கொரோனா காலம் மட்டுமல்ல எந்த காலத்திலேயும் கை சுத்தம் என்பது ஆரோக்கியத்தின் மிகப்பெரிய அடையாளம்.

    சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு பரவுகின்றன.

    உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆண்டில் 170 கோடி பேரை பாதிக்கும் இந்த நோய்க்கு, 6 லட்சம் குழந்தைகள் பலியாகி விடுகிறார்கள்.

    தூய்மையின்மை காரணமாகவும், கை அசுத்தமாக இருப்பதும் நோய் தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி வெளியில் சென்று வந்த பிறகு, கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவதுதான். பல குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம்.

    எனவே கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகள், சிறுநீர், மலம் பட்ட துணிகளை கையாளும்போது கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படி செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.

    கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலக கை கழுவும் நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. ‘தூய்மையான கைகள்; பாதுகாப்பான வாழ்க்கை’ என்பதே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்.
    ×