search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெற்றோர்- குழந்தைகளிடையே உறவு மேம்பட வழி வகுத்த கொரோனா
    X
    பெற்றோர்- குழந்தைகளிடையே உறவு மேம்பட வழி வகுத்த கொரோனா

    பெற்றோர்- குழந்தைகளிடையே உறவு மேம்பட வழி வகுத்த கொரோனா

    ஊரடங்கு காரணமாக, குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஒன்றாக இருக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. இது அவர்களின் உறவு மேம்பட வழி வகுத்துள்ளது.
    கொரோனா வைரஸ் பாதிப்பு, மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதார நிலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என்று யாரையும் சந்திக்க, எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக, பெற்றோர்களும் வீட்டில் அதிக நேரம் இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஒன்றாக இருக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. இது அவர்களின் உறவு மேம்பட வழி வகுத்துள்ளது.

    கொரோனாவுக்கு முன்பு, குழந்தைகள் வீட்டை விட பள்ளிக்கூடத்தில் தான் அதிக நேரம் ஆசிரியர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் தற்போது முழுக்க, முழுக்க வீட்டிலேயே இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளை பெற்றோரும், பெற்றோரை குழந்தைகளும் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் குடும்பத்தின் பின்னணி, உறவுகள், பொருளாதார பின்புலம் போன்றவற்றை அறிந்து கொள்ள இயல்பான சூழல் கனிந்து இருக்கிறது.

    குழந்தைகளுக்காக, பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. அதை சமாளித்து, உழைத்து குழந்தைகளின் நலனை பேணுகிறார்கள். ஆனால் அதை குழந்தைகளுக்கு உணர்த்தவோ, நாசூக்காக புரிய வைக்கவோ பெற்றோரால் முடிவது இல்லை. ஆனால் அதற்கான வாசல்களை கொரோனா பாதிப்பு திறந்து விட்டுள்ளது. மேலும் விட்டுப்போன உறவுகளின் தொடர்பை புதுப்பிக்கும் காலமாகவும் இது மாறி இருக்கிறது. இந்த இணைப்பை வலுவானதாக மாற்றிக் கொள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோரும் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. மேலும் வீட்டில் அனைவரும் ஒன்றாக இருப்பதால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், ஒருவரின் திறமையை மற்றவர்கள் அறிந்து ஊக்குவிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில், ஊரில் தனிமையில் தவிக்கும் தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகள் செல்போனில் பேசி மகிழ்வதை காண முடிகிறது. இதனால் அவர்கள் மனரீதியாக புதிய எழுச்சி பெறுகிறார்கள். மேலும், இதுவரை பேசாத உறவினர்களிடமும் குழந்தைகள் பெற்றோர் மூலம் பேசி தங்களின் உறவு வட்டத்தை தெரிந்து கொள்கிறார்கள்.

    பொருளாதாரம் மட்டுமே என்பதை தாண்டி, கண்ணுக்குத் தெரியாத பண்புகளால் நிரம்பியது வாழ்க்கை. அந்த பண்புகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் நடத்தையிலும் வெளிப்பட ஊரடங்கு காலம் வழிகாட்டுகிறது. எல்லாவற்றையும் விட உயர்ந்தது உயிர் என்பதே கொரோனா மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியதும், அதை எதிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டியதும் மிகவும் அவசியம். அதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியமானது.

    தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் உள்ளனர். எனவே இந்த காலகட்டத்தில் மாணவ-மாணவிகள் படிப்பில் போதிய நாட்டம் இன்றி இருப்பது போல் தென்படும். ஆனாலும் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள், தங்களை மீண்டும் எளிதாக தயார்படுத்திக்கொள்வார்கள். என்றாலும், மாணவர்களை தொடர்ந்து கற்றிடும் மன நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்குரிய வகையில் படிப்பது, எழுதுவது மற்றும் எதையாவது கற்றுக்கொள்வது என்பதை விளையாட்டு முறையில் அளிக்க வேண்டும். அது அவர்களின் மனநிலையை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும்.
    Next Story
    ×