என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
    இன்றைய தலைமுறை குழந்தைகள் வெளி உலக தொடர்புகளை குறைத்துக்கொண்டு ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற இணைய உலக வலைப்பக்கங்களுக்குள் மூழ்கி கிடக்கிறார்கள். கணினி யுகத்திற்கேற்ப தகவல் தொடர்புகளை வளர்த்துக்கொண்டாலும் சக மனிதர்களை அணுகும் விதம் சார்ந்த தகவல் தொடர்பு திறனில் பின்தங்கி இருக்கிறார்கள். நெருங்கிய உறவினர்களிடம் பேசுவதற்குகூட தடுமாறுகிறார்கள். சில சமயங்களில் மற்றவர்கள் மனம் நோகும்படியான வார்த்தைகளையும் உச்சரித்து விடுகிறார்கள்.

    குழந்தைகள் டிஜிட்டல் திரைகளில் பார்க்கும், கேட்கும் விஷயங்கள் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. மரியாதை கேடான அணுகுமுறை, தேவையற்ற சொற்களை பயன்படுத்துதல், மோசமான வார்த்தைகளை உச்சரித்தல், தடித்த வார்த்தைகளை உபயோகித்தல் போன்ற செயல்பாடுகளால் பெற்றோரை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள்.

    குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.

    குழந்தைகளிடம் மரியாதையான தகவல் தொடர்பு திறனை வளர்க்க பெற்றோர் செய்யவேண்டிவை:

    குழந்தைகள் வளரவளர நல்ல விஷயங்களையும் சுயமாக கற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து அஜாக்கிரதையாக இருந்தால் அவர்களின் குணாதிசயம் மாறிப்போய்விடும். பெரும்பாலான குழந்தைகள் ஸ்மார்ட்போனில்தான் நேரத்தை செலவளிக்கிறார்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைவாக இருக்கிறது. அதற்கு பெற்றோர்தான் காரணம். குழந்தைகளுடன் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவதன் மூலம் அவர்களின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்தலாம். பெற்றோர் பேசும் வார்த்தைகளை உள்வாங்கித்தான் குழந்தைகள் மொழித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும்? அவர்களை எப்படி அணுக வேண்டும்? என்பதை பெற்றோர் தங்கள் கடமைகளில் ஒன்றாக கருதி சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க பழகிக்கொள்வார்கள்.

    குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பதை விட நண்பராக இருப்பதுதான் சிறந்தது. அதன் மூலம் தகவல் தொடர்பை எளிமைப்படுத்தி விடலாம். புதிய சொற்களை கற்றுக்கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்றவிதத்தில் சொல்லகராதியை பின்பற்ற வைக்கலாம். குழந்தைகள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினால் கண்டிப்பு காட்டி புரிய வைக்கலாம். எது தவறு? எது சரியானது? என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் வேலை. தங்களை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடமும் மரியாதையோடுதான் பேச வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு முன் மாதிரியாக பெற்றோர் விளங்க வேண்டும். பேச்சில் தெளிவு, வார்த்தைகளில் கண்ணியம், மற்றவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் பாங்கு, மரியாதையான அணுகுமுறை உள்ளிட்ட நேர்மறையான தகவல் தொடர்புகளை பெற்றோர் நடைமுறைப்படுத்தவேண்டும். அதை பார்த்து குழந்தைகளும் கற்றுக்கொள்ளும்.

    குழந்தைகளின் நடத்தையில் குறைபாடு இருந்தால் அதனை தவறாமல் சுட்டிக்காட்ட வேண்டும். குழந்தைகளின் பேச்சுக்கள் மற்றவர்களை காயப்படுத்தும் விதத்தில் இருந்தால் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். இனி அதுபோல் ஏன் பேசக்கூடாது என்பதையும் அவர்களுக்கு புரியவையுங்கள். எளிமையாக அவர்கள் புரிந்துகொள்ள தக்கவகையில் வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.

    குழந்தைகள் தகாத வார்த்தைகளை பேசினால் கடுமை காட்டக்கூடாது. அந்த வார்த்தைகள் எந்த அளவிற்கு மோசமானவை என்பதை புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் மறுபடியும் அதுபோன்ற வார்த்தைகளை உச்சரிக்க மாட்டார்கள்.

    குழந்தைகள் தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்ளும் வரை கடுமையாக நடந்து கொள்ளுங்கள். பொய் பேசினால் கண்டிக்க தவறாதீர்கள். ‘உன்னிடம் நேர்மையான பதில்களை எதிர்பார்க்கிறேன்’ என்று கண்டிப்புடன் கூறுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளும்போது அவர்களை பாராட்டுங்கள்.

    பெற்றோர்கள் செல்போன்களில் மூழ்கிப்போய்விடக் கூடாது. தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் உரையாடவேண்டும். அவர்களின் விருப்பங்களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களை மனம் விட்டு பேச அனுமதிப்பதும் அவசியம். இவ்வாறு செய்தால் குழந்தைகளிடத்தில் முறையான தகவல் தொடர்புத் திறன் வளரும்.
    நெருங்கி பழகுபவர்களிடம் இருந்து விலக நேரிட்டாலோ, எதிர்பாராத பிரிவை எதிர்கொண்டாலோ மனம் வேதனைக்குள்ளாகி விடும். தனிமையை உணரும்போது மனதுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து பார்க்க முயற்சிக்கலாம்.
    நெருங்கி பழகுபவர்களிடம் இருந்து விலக நேரிட்டாலோ, எதிர்பாராத பிரிவை எதிர்கொண்டாலோ மனம் வேதனைக்குள்ளாகி விடும். அப்போது மன அமைதி குலைந்துபோய்விடும். அதன் தாக்கம் நீண்ட காலம் நீடித்தால் மன ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடும். மன அழுத்தமும் அதிகமாகிவிடும். அப்போது சிலர் தங்களுக்கு ஆறுதல் கூறுபவர்களிடம் கூட கோபம் கொள்வார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பகுத்தறிந்து சிந்திக்கும் திறன் இருக்காது. அவர்களின் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள இயலாது. பொறுமையை கையாண்டால்தான் அவர்களை இயல்புக்கு கொண்டு வர முடியும்.

    அதிக எரிச்சலும், விரக்தியும் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். அதனால் ஏற்கனவே மன வேதனையில் இருப்பவர்களிடம் மிக கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசவேண்டும். அன்பும், அக்கறையும், அரவணைப்பும் அவர்களின் மனநிலையை மாற்றிவிடும். சில நாட்களில் இயல்பான மன நிலைக்கு திரும்பிவிடுவார்கள். அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள், படைப்பாற்றல் திறன்களில் கவனம் செலுத்த வைக்கலாம். நண்பர்கள், குடும்பத்தினருடன் நெடுந்தூர பயணத்திற்கு அழைத்து செல்லலாம். அது அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை உருவாக்கும்.

    நண்பர்கள், குடும்பத்தினருடன் மட்டுமின்றி சமூக தொடர்புகளையும் மேம்படுத்த வேண்டும். அது மனச்சோர்வு, கவலையில் இருந்து விடுபட வைக்கும். விருந்துகள், சமூக கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்கலாம். மனச்சோர்வில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு அன்றாட நடவடிக்கைகளில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும். அது மன தடைகளை விலக்கும்.

    மனம் சோர்ந்து போயிருக்கும்போது தனி நபர் சுகாதாரத்தை பேணுவது அவசியமானது. இல்லாவிட்டால் மன நலமும், உடல் நலமும் வெகுவாக பாதிக்கப்படும். சோகம், கவலை, மன அழுத்தம் போன்றவை மனம் மற்றும் உடல் சார்ந்த செயல்பாடுகளை முடக்கிப்போட்டுவிடும். தனிமையை உணரும்போது மனதுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து பார்க்க முயற்சிக்கலாம். சமையலில் ஈடுபடுவதும் மனதை இலகுவாக்கும்.
    கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நோய் உள்ளவர்கள், பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுவோர் கண்டிப்பாக கொத்தவரங்காய் சாப்பிடக்கூடாது.
    கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை இதில் அதிகமாக உள்ளது. வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.

    கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ உங்கள் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

    கொத்தவரங்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்களை வயிற்று புண்களில் இருந்து பாதுகாக்க உதவும். வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி  சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இது அதிகப்படுத்தும்.

    கொத்தவரங்காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுவோர் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு உண்டாகும். எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாமல் போகும்.

    கொத்தவரங்காய் சாப்பிட்டு வர எலும்பு மற்றும் பல்லானது உறுதிப்படும். பித்தமயக்கம் ஏற்படுவதை தடுக்கும். மாலைக்கண் நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

    கொத்தவரங்காய் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது. மேலும், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு கொத்தவரங்காய் உதவி புரியும்.
    உங்கள் துணையின் குறைபாடுகளை திருமணமான பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாற்றமடைவது உறுதி. ஏனெனில் அது ஒருபோதும் நடக்காது. நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை இதுதான்.
    வாழ்க்கையைப் போலவே, திருமணத்திலும் கசப்பு மற்றும் இனிப்பான நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் இருக்கும். மனைவியின் அருகாமை உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம், ஆனால் உங்கள் திட்டங்களின்படி சில விஷயங்கள் நடக்காதபோது மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் தரும். வெறும் மகிழ்ச்சியை மட்டும் எதிர்பார்த்து திருமண வாழ்க்கையில் நுழைவது என்பது முற்றிலும் தவறானதாகும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் இருக்கும் கசப்பான உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    உங்கள் காதல் பயணம் ஒரு அழகான அனுபவத்துடன் தொடங்கியிருந்தாலும், உங்கள் திருமண வாழ்க்கையில் காதல் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும் என்று அர்த்தமல்ல. நீங்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம், உற்சாகமும் சுகமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நினைக்கலாம், ஆனால் காலப்போக்கில் தற்காலிக தேனிலவு காலம் விரைவில் காலாவதியாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    திருமணம் என்பது நிச்சயமாக இரண்டு ஆன்மாக்களுக்கு இடையிலான ஒரு சங்கமாகும், ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. வாதங்கள் ஒவ்வொரு உறவிலும் ஒரு பகுதியாகும், ஒரு திருமணத்தில் இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருக்கும்போது, இந்த இருவருக்கும் வெவ்வேறு கருத்துகளும், கண்ணோட்டங்களும் இருப்பது இயல்புதான்.

    வாழ்க்கைத் துணைவர்களிடையே சண்டை அல்லது வாய்மொழி சண்டை ஏற்பட்டால், முடிவில் ஒருபோதும் வெற்றியாளர் இருக்க மாட்டார். ஒரு திருமணத்தில், ஒரு வாதத்தை பரஸ்பர ஒப்புதலின் பேரில் மட்டுமே தீர்க்க முடியும். ஆகையால், நீங்கள் இருவரும் அதை சண்டை என்று அழைக்கும் வரை அதற்கு முடிவே இருக்காது.

    மாற்றம் மட்டுமே மாறாதது, ஆனால் ஒரு நபரிடம் வரும்போது அவர்களின் வழிகளை மாற்றுவது இயலாத ஒன்றாகும். உங்கள் துணையின் குறைபாடுகளை நீங்கள் கவனித்து நீங்கள் திருமணமான பிறகு அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாற்றமடைவது உறுதி. ஏனெனில் அது ஒருபோதும் நடக்காது. நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை இதுதான்.

    திருமணத்திற்குப் பிறகு, நிச்சயமாக நீங்கள் குழந்தைகளைப் பெற விரும்புவீர்கள். இவை உங்கள் வாழ்க்கையின் மிக அருமையான தருணங்களாக இருந்தாலும், அது உங்கள் உறவின் முழு இயக்கவியலையும் மாற்றிவிடும். நீங்கள் ஒருவருக்கொருவர் குறைவான நேரத்தைக் கொண்டிருப்பீர்கள், மேலும் குழந்தைகளை நோக்கியே இருப்பீர்கள். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பும் பாசமும் கூட குறைந்து விடலாம்.

    உங்கள் திருமண நாளில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருக்கலாம், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நீங்கள் மிகுந்த சோகத்தையும், உங்கள் துணையை மணந்ததற்கு வருத்தத்தையும் உணர்வீர்கள். ஆனால் கோபம் மட்டுமே உங்களை அப்படி நினைக்க வைக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது கருவை பாதிக்கும். கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
    கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

    அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் கண் விழிப்பது, பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.

    தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தி எழுப்பக்கூடாது. சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகக் கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சீஸ் அதிகம் கலந்த உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.

    பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.

    காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் ரத்தசோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.
    காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிபனை காலை உணவாக சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்

    திணை அரிசி - 1 கப்
    உளுந்து - அரை கப்,
    வெந்தயம் - 2 தேக்கரண்டி,
    உப்பு - தேவையான அளவு,
    கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி,
    சின்ன வெங்காயம் - 200 கிராம்,
    ப.மிளகாய்  - 4,
    எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு,
    சீரகம் - சிறிதளவு.

    செய்முறை

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    திணை அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும்.

    இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.

    பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

    கடலைத் துவையல், புதினா துவையல், தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
    உங்க குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரா நீங்கள்? அப்ப இந்த பதிவு உங்களுக்காக தான் பெற்றோர்களே....
    சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருப்பார்கள். குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். அப்படி உங்க குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரா நீங்கள்? நீங்கள் இப்படி நடந்து கொள்வதால் என்ன நன்மைகள் உண்டாகிறது என்பதை பார்க்கலாம்.

    ஒரு பெற்றோராக உங்கள் அனுபவங்கள் எப்பொழுதும் தனித்தன்மை உடன் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நல்ல பெற்றோரின் முக்கிய தூண்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    * பெற்றோர் குழந்தைக்கு ஒரு உறவாக இருக்க வேண்டும். குழந்தைகளை தனித்துவமான நபராக கருத வேண்டும். அவர்கள் உங்களுக்கு ஏதேனும் விஷயங்கள் கற்பித்தால் அதையும் ஏற்றுக் கொள்ள மனம் திறந்திருக்க வேண்டும்.

    * ஒரு பெற்றோராக உங்கள் ஈகோ, ஆசைகள் மற்றும் இணைப்புகளை விட்டு விட வேண்டும்.

    * உங்க குழந்தைகள் மீது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நடத்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரு பெற்றோராக அதை எப்படி சொல்லிக் கொடுக்கலாம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    * நேரத்திற்கு முன்னால் திட்டமிட்டு நேர்மறையான எண்ணங்களை உங்க குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

    * குழந்தைகள் அவர்கள் போராட்டத்தின் மூலமே வளர வேண்டும். பெற்றோரின் நோக்கம் உங்கள் குழந்தையை மகிழ்விப்பது மட்டுமல்ல.

    விழிப்புடைய பெற்றோர்கள் எப்பொழுதும் நினைவாற்றலுடனும், சுய பிரதிபலிப்புடனும் நடந்து கொள்வார்கள். இது பெற்றோரின் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.

    விழிப்புடைய பெற்றோர்கள் குறைவான எரிச்சலைக் கொண்டு குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவழிக்க முன் வருவார்கள். விழிப்புடைய பெற்றோர்கள் குழந்தைகளுடான தகவல் தொடர்புகளை கூடுதலாக வைத்து இருப்பார்கள். குழந்தைகளை தனிபட்ட நபராக ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் குழந்தையுடன் ஒரு குறிப்பிட்ட மரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இது குழந்தைக்கு ஆரோக்கியமான உறவு பழக்கத்தை உருவாக்க உதவுகிறது. இது அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவி செய்கிறது.

    இருப்பினும் நீங்கள் இப்படி இருப்பது எல்லா நேரங்களிலும் சிறந்த தீர்வாக இருக்காது. நீங்கள் ஒரு சுய பிரதிபலிப்பு மற்றும் கட்டுப்பாட்டை அடைய நிறைய நேரம் ஆகலாம். உங்கள் குழந்தை சுயமாக நடந்து கொள்வது என்பது ஒரே நாளில் நடக்காது. விழிப்புடைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தாங்கள் செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள அனுமதிக்கின்றனர். இருப்பினும் குழந்தையை தோல்வியடைய அனுமதிப்பது சில நேரங்களில் அது பெற்றோரை கடினமாகவும் குழப்பமாகவும் மாற்றும். குழந்தை தோல்வியை அனுபவிப்பதை பார்ப்பது பெற்றோருக்கு கடினம் தான்.

    விழிப்புடைய பெற்றோர்களை பற்றி பேசுவது எளிது. ஆனால் அந்த குணநலன்களை நடைமுறையில் கடைபிடிப்பது சற்று கடினம். நீங்களும் விழிப்புடைய பெற்றோராக இருக்க என்ன செய்யலாம்? ஆத்திரத்துடன் செயல்படாதீர்கள். உடனடி தண்டனையை வழங்குவதற்கு பதிலாக அல்லது குழந்தையின் மீது பழியை சுமத்தும் முன் ஒரு நொடி மூச்சு விடுங்கள். ரிலாக்ஸ் ஆகி கொள்ளுங்கள்.

    உங்கள் சொந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். உங்க குழந்தைகளை அவர்கள் சொந்தமாக கண்டறிய அனுமதிக்க வேண்டும்.
    உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் கரித்தூள் உதவுகிறது.
    உங்களது முகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க கரித்தூள் உதவுகிறது. கரித்தூளை தயார் செய்ய நீங்கள் முக்கியமாக தேங்காய் ஓட்டை நன்றாக எரித்து அதன் கரியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதேனும் ஒரு மூலிகை சார்ந்த மரத்துண்டுகளை எடுத்து எரித்து அதன் கரித்துண்டுகளை எடுத்துக் கொள்ள் வேண்டும். அல்லது ஆக்டிவேட்டேட் சாக்ரோல் கேப்சூல் (activated charcoal capsule) ஆன்லைன் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை வாங்கி பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூ ( non-toxic white glue) 2 கேப்சூல் ஆக்டிவேட்டேடு கரித்தூள், பழைய பிரஸ் டோனர் க்ளேன்சர்

    முகத்தை முதலில் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும்.

    மாஸ்க் தயாரிக்க முதலில் கரித்துண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூவையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். நான்-டாக்சிக் ஒயிட் க்ளூவிற்கு பதிலாக நீங்கள் தேன் அல்லது முல்தானி மட்டியை இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும்.

    இந்த மாஸ்க்கை உங்களது முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். இந்த மாஸ்க்கை அப்ளை செய்த உடன் கைகளால் தொட்டு பார்த்து அசைக்க வேண்டாம். முழுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கை முகத்திலேயே விட்டுவிடுங்கள். பின்னர் இந்த மாஸ்க்கை கீழ் இருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும்.

    மாஸ்க்கை உரித்து எடுத்தவுடன், தண்ணீரை கொண்டு கழுவ கூடாது. ஒரு சுத்தமான துணியால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை உபயோகிக்க வேண்டும். இந்த மாஸ்க்கை போட்டவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்காவது சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். முகத்தையும் கழுவ வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களது முகத்திற்கு படிப்படியாக வியக்கத்தக்க மாறுதல்கள் கிடைக்கும்.

    உங்களது முகத்தின் ஒரு சிறு பகுதியில் முதலில் அப்ளை செய்து பாருங்கள். எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டானால் இந்த மாஸ்க்கை நீங்கள் உபயோகிக்க வேண்டாம். இந்த மாஸ்க்கை நீங்கள் வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் அத்தனையும் நீங்கி முகம் புதுப்பொலிவு பெரும்.
    ஆண்கள் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்த்தால் இந்த பிரச்சனைகள் வராது.
    இளைஞர்கள் நிறைய பேர் தாடி வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கள் தோற்றத்தை ஸ்டைலாக காட்டுவதற்காக தாடியை அழகாக அலங்கரிக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் சில நன்மைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.

    தாடி வளர்ப்பது அறிவாற்றல் திறனையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    முகத்தை சூரிய கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்கு தாடி உதவுகிறது. அதனால் முகம் இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும் காட்சி அளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாடி வளர்க்கலாம்.

    நன்றாக ஷேவிங் செய்து முகத்தை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களை விட தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தாடி வளர்க்கும் ஆண்கள் மற்றவர்களை விட எளிதில் பெண்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.

    ஷேவிங் செய்யும்போது சருமம் எரிச்சலுக்குள்ளாவதோடு தடிப்புகளும் தோன்றக்கூடும். தாடி வளர்த்து கொண்டிருந்தால் முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது. முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகளால் அவதிப்பட்டால் தாடி வளர்க்க தொடங்கிவிடலாம்.

    ஷேவிங் செய்யும்போது சருமத்தில் உள்ள துளைகள் திறக்கும். சிலருக்கு சரும வறட்சியும் ஏற்படும். அதனால் கோடை, குளிர் காலத்தில் சருமத்தில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை இழக்கக்கூடும். தொடர்ந்து தாடி வளர்க்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

    தாடி வளர்ப்பது பெரிய விஷயமல்ல. அதனை நேர்த்தியாக பராமரிக்க வேண்டும். அதில்தான் தாடியின் அழகு வெளிப்படும்.
    பெண்கள் அன்றாட சுய உடல் பரிசோதனைகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆரம்ப காலத்திலே அதற்கான சிகிச்சையை பெற்றுவிடுவது நல்லது.
    பெண் பூப்படைதல் முதல் தாய்மை அடையும் வரை சந்திக்கும் பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சினைகள், மாதவிடாய் முடிந்த பிறகு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என பெண்கள் தொடர்பான எல்லா பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.

    தற்போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்து வருகிறது. அதற்கு தாமதமான திருமணம், கருத்தரிப்பதில் ஏற்படும் தாமதம், பெண்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. வலியில்லாமல் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என பலர் நினைப்பது கூட காரணமாக உள்ளது.

    சுக பிரசவத்துக்கு தாய்மார்களை உற்சாகப்படுத்த வேண்டும். சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு கவலைகள் இருக்ககூடாது. உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யலாம்.

    தற்போது குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது, அதற்காக சிகிச்சை பெற விரும்பும் தம்பதிகள் நல்ல தரமான மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும். தற்போது உள்ள வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை அதிகரித்து உள்ளது. தம்பதிகள் ஒன்றாக இருப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. எனினும் தற்போது குழந்தையில்லாத தம்பதிகள் குழந்தைகள் பெற்றெடுக்க பல வசதிகள் உள்ளன. அவர்கள் நல்ல மகப்பேறு மருத்துவமனையை அணுக வேண்டும்.

    என்டோஸ்காபிக் அறுவை சிகிச்சை முறை மூலம் 50 சதவீத குழந்தையின்மை பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பே இல்லாதவர்கள் கூட கருமுட்டை தானம், விந்தணு தானம், ஐ.யு.ஐ, ஐ.வி.எப், ஐ.சி.எஸ்.ஐ. போன்ற பல்வேறு சிகிச்சை மூலம் குழந்தை பெற முடியும்.

    பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. இதன் மூலம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பெரிய அறுவை சிகிச்சைகள் இன்றியும், கர்ப்பப்பையை நீக்காமலும் தீர்க்கப்பட்டு வருகிறது. கருக்கலைப்புகள் எல்லாம் மருந்து, மாத்திரைகள் மூலமே செய்ய முடியும். அதிக ரத்த போக்கு பிரச்சினைகளை கூட எளிதில் தீர்க்கும் சிகிச்சை முறைகள் உள்ளன.

    பெரிய அறுவை சிகிச்சைகள் கூட லேபராஸ்கோபி மூலம் செய்யப்படுவதால் நோயாளிகள் 24 மணி நேரத்தில் வீட்டுக்கு செல்ல முடியும்.

    பெண்கள் யாருக்கும் தாழ்வானவராக உங்களை நினைக்க வேண்டாம். அன்றாட சுய மருத்துவ சோதனைகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆரம்ப காலத்திலே அதற்கான சிகிச்சையை பெற்றுவிடுங்கள். மற்ற பெண்களையும் அதுபோல இருக்க உற்சாகப்படுத்துங்கள்.
    காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன உடல் பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
    காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இது, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய். கிருமியை எதிர்த்து, உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி முருங்கைக்காயில் உள்ளது. முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

    முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும்.

    முருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்துக்கு பின்பு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முருங்கைக்காய் நீக்குகிறது.

    பசியை அதிகரிக்க உதவுகிறது. முருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

    முருங்கைக்காயை சூப் செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

    முருங்கைக்காயை வேக வைத்து அதில் வருகிற ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.

    முருங்கைக்காய் சாற்றை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்தில் மினுமினுப்பு அதிகரிக்கும்.
    அவல் ஓர் ஆரோக்கியமான காலை உணவு. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    காய்ந்த மிளகாய் - 2
    கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    தேங்காய்த்துருவல் - கால் கப்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை அலசி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்த பின்னர் தண்ணீர் இல்லாமல் பிழிந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    பாசிப்பருப்பை மெத்தென்று வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும் அதில் வெந்த பருப்பு, ஊறிய அவல், தேங்காய்த்துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.

    அவல் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×