என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வழிதவறி சென்ற நம்மை, கண்டுபிடிக்கவும், நம்முடைய மனம் மாறுதலை ஏற்று நம்மை கொண்டாடவும், விண்ணுலகம் தயாராக இருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா..? என்ற கேள்விக்கு விடைதேடுங்கள்.
    வரி வசூலிப்பவர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்து கிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்.

    ‘‘இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார். வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார்.

    அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

    அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்’’ என்றார்.

    நாம் ஒவ்வொருவரும் வழிதவறி உலகில் வாழ்வதை அறிந்து, மனம் மாறவேண்டும். நம்மை நல்வழிபடுத்தவும், நம்முடைய மனம் மாற்றத்தை விண்ணுலகில் கொண்டாடவும் இறைமகன் தயாராக இருக்கிறார் என்பதையே, இந்த உவமைச்செய்தி நமக்கு கற்பிக்கிறது.

    இந்த உவமையை இருமுறை இயேசு கூறினார். இயேசு வாழ்ந்த கப்பர்நாகும் நகருக்கு வரும்வழியில், சீடர்கள் தம்மில் யார் பெரியவர் என்று வாதாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, மிகச் சிறிவராகிய தம் சீடர்களை வழிதவறிய ஆட்டுக்கு ஒப்பிட்டுக் கூறினார். இரண்டாம் முறை, யூதேயா, பெரேயா பகுதியில் மனம் மாறிய பாவிகளை வழிதவறிய ஆட்டுக்கு ஒப்பிட்டார்.

    இயேசு ஆட்டை உவமையாகச் சொல்வது ஏன்?

    செம்மறி ஆடுகளில் ஏதோ ஒன்று வழிதவறிவிட்டால் அதனால் அமைதியாக தொடர்ந்து மேய முடியாது. அது தடுமாறும். சத்தமிட்டவாறு அங்கும் இங்கும் ஆயரைத் தேடி அலையும். ஆயரின் சத்தத்திற்காக ஏங்கும். ஆயரைக் காணும்வரை அது நிலைகொள்ளாது.

    ஆனால், ஆற்றிவுடைய மனிதர்களாகிய நாம் வழிதவறி வாழ்வதை அறிவதில்லை. நம் உள்ளம் நம் தவறை மறைப்பதால், நம்மை நேர்மையாளர் என்றே எண்ணுகிறோம். மேலும், நாம் அனைவரும் நம்மை வழிதவறிய ஆடு என்று பாவ அறிக்கை செய்தாலும், நம்மில் பலர் வழிதவறி வாழ்வதையே விரும்புகிறோம்.

    இயேசுவின் காலத்தில் இயேசுவைப் பின்பற்றிய சீடர்களும், வரி வசூலிப்பவரும், பாவிகளும் வழிதவறியதை அறிந்த ஓர் ஆடாக இருந்தார்கள். பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தாங்கள் வழிதவறியதை அறியாத 99 ஆடுகளாக இருந்தார்கள். இந்த உவமையை இன்றைக்கு, நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம். வழிதவறி சென்ற நம்மை, கண்டுபிடிக்கவும், நம்முடைய மனம் மாறுதலை ஏற்று நம்மை கொண்டாடவும், விண்ணுலகம் தயாராக இருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா..? என்ற கேள்விக்கு விடைதேடுங்கள்.
    2 ஆண்டுக்கு பின்பு இன்று வரலாற்று சிறப்பு மிக்க பெங்களூரு கரக திருவிழா நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகே தர்மராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பல நூறு ஆண்டுகளாக தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கரக திருவிழா எளிமையாக நடந்தது. இந்த நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    வருகிற 16-ந் தேதி சிறப்பு வாய்ந்த கரக ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். கர்நாடகத்தில் தற்போது ஹிஜாப், ஹலால் இறைச்சி, மசூதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், தர்மராயசாமி கோவிலில் நடைபெறும் கரக ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் கே.ஆர்.சர்க்கிளில் உள்ள மஸ்தான் ஷாப் தர்காவுக்கு செல்வது வழக்கம்.

    பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. தற்போது ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால், கரக ஊர்வலம் மஸ்தான் ஷாப் தர்காவுக்கு செல்லக்கூடாது என்று இந்து அமைப்புகள் தெரிவித்தார்கள். இதையடுத்து, மஸ்தான் ஷாப் தர்காவின் மவுல்வி மற்றும் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலையில் தர்மராயசாமி கோவிலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது கரக ஊர்வலம் பல நூறு ஆண்டுகளாக மஸ்தான் ஷாப் தர்காவுக்கு செல்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த நடைமுறை தொடர வேண்டும். இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக தர்காவுக்கு கரக ஊர்வலம் வராமல் இருக்க கூடாது. கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நடைமுறைகளை இனியும் தொடர வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளுக்கு, முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கோவில் நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தர்மராயசாமி கோவில் நிர்வாகி சதீஸ் நிருபர்களிடம் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க கரக திருவிழாவின் போது கரக ஊர்வலம் மஸ்தான் ஷாப் தர்க்காவுக்கு செல்வது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும் கரக ஊர்வலம் மஸ்தான் ஷாப் தர்க்காவுக்கு செல்லும். இந்த நடைமுறைகள் எதுவும் மாற்றம் செய்யப்படாது, என்றார்.

    2 ஆண்டுக்கு பின்பு இன்று தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா தொடங்கி நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய இந்த மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய இந்த மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    ஏப்ரல் 1-ந் தேதியே இந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

    தினமும் 1000 பேர் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நாளை (சனிக்கிழமை) முதல் தரிசனம் செய்யலாம். தினமும் காலை 10 மணி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன வரிசையில் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்.

    வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் மாலை 3 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்...சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி: 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு
    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதியளித்து இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகளை முழுமையாக செய்து தருவது குறித்து துறை வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வது வழக்கம். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இதில் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். வருகிற 15, 16-ந்தேதிகளில் சித்ரா பவுர்ணமி நடைபெறுகிறது.

    இதனையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதியளித்து இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகளை முழுமையாக செய்து தருவது குறித்து துறை வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை அனைத்து துறையினரும் செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவையான எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். நகரின் முக்கிய இடங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வரிசையை முறைப்படுத்தி நெரிசல் ஏற்படாமல் தரிசனம் செய்ய அனுப்ப வேண்டும். கொரோனா தொற்று முற்றிலுமாக குறையவில்லை. கட்டுப்பாடுகள் மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முககவசம் அணியவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆன்மீக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

    அன்னதானம் வழங்குபவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் வரும் 14-ந்தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

    அனுமதிக்கப்படாத இடத்தில் அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்...திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவிலில் தோஷங்கள் விலக பரிகார பூஜை
    தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும்.
    ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோவில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.

    தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

    ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை நடந்தது. காலையில் உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் கிரிப்பிரகார வீதி வழியாக சுவாமி-அம்பாள்கள் மீண்டும் கோவிலுக்கு சென்றனர்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    வடசேரி கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு புஷ்ப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் நாள் திருவிழாவான நாளை காலை 6 மணிக்கு சுவாமி எழுந்தருளல், காலை 11 மணிக்கு அன்னதானம், இரவு இன்னிசை பட்டிமன்றம், மங்கள இசை ஆகியவை நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், மங்கள இசை மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.

    அதன்பிறகு இரவு 7 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருள், 9 மணிக்கு சப்தாவர்ணம் போன்றவை நடக்க உள்ளது. விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 11 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனியும், முத்து குடையுடன் யானை பவனியும் சிங்காரி மேளத்துடன் நடக்கிறது.

    பின்னர் ஆராட்டு பூஜை, மெல்லிசை மற்றும் இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடக்க இருக்கிறது.
    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில் மாலை நேரத்தில் விளக்கேற்றி அம்மனை வழிபடுவது சிறப்பாக இருக்கும்.
    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் மாலை நேரங்களில் குளித்து, தூய மனதோடு துர்கை அம்மனுக்கான இந்த எளிய ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வந்தால் மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். எந்த கெட்ட சக்தியும் உங்களை நெருங்காது.

    மந்திரம்:

    ஓம் காத்யாயனய வித்மஹே
    கன்யாகுமாரி தீமஹி
    தன்னோ துர்கிப்ரசோதயாத்

    பொருள்: காத்யாயனய என்ற மகரிஷிக்கும் மகளாகப் பிறந்தவளே, என்றும் இளமையாக இருப்பவளே, உன்னை வணங்குவோரின் மனக் குழப்பத்தை நீக்கி, நல்லறிவைக் கொடுத்து அதன் மூலம் பல நற்பலன்களை அருளக்கூடிய துர்க்கையே உன் பாதத்தைப் பணிகிறோம்.
    நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் அருள்மிகு பசுபதீஸ்வரர் - பிரசன்ன பார்வதி திருக்கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 16-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் அருள்மிகு பசுபதீஸ்வரர் - பிரசன்ன பார்வதி திருக்கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 16-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு தேவார பஜனையும், 7 மணிக்கு தீபாராதனையும், 7.30 மணிக்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் இருளப்பபுரம் சிவ தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் தனபாலன் திருக்கொடியை ஏற்றி வைத்தார்.

    10 மணிக்கு முருகப்பெருமானுக்கு சஷ்டி அபிஷேகமும், மாலை 6 மணிக்கு இருளப்பபுரம் சிவ தேவஸ்தான சிவசக்தி மகளிர் மன்றத்தாரின்1008 திருவிளக்கு பூஜை வழிபாடும் நடக்கிறது. இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டிற்கு இருளப்பபுரம் சிவசக்தி மகளிர் மன்ற தலைவி பொன்லெட்சுமி தர்மராஜா, தலைமை தாங்குகிறார்.

    நிகழ்ச்சியில் மேகலை மகேஷ் முதல் திருவிளக்கை ஏற்றி வைக்கிறார்.திரு விளக்கு பூஜையை பார்வதி புரம் ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம் சித்தாந்த ரெத்தினம் நிவேதிதா ஔவை. அன்புமதி நடத்துகிறார்.

    திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி 11வது வார்டு உறுப்பினர் ஸ்ரீ லிஜா முருகேசன் பரிசுகள் வழங்குகிறார்.
    இரவு 8 மணிக்கு திரைப்பட பக்தி மெல் லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் 2 ம் நாளான இன்று 8-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு தேவாரப் பஜனையும், 8.30 மணிக்கு திருவாதிரை விழாவான அருள்மிகு நடராஜமூர்த்தி சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் வாகனத்தில் திருக்கோயிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    முற்பகல் 11 மணிக்கு தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு தேவார பஜனையும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சிவ தேவஸ்தான சிவா இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆண்டு விழாவும், இரவு 8 மணிக்கு மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    இதைப்போன்று திருவிழாவின் அனைத்து நாட்களிளும் திருப்பள்ளிஎழுச்சி, தேவார பஜனை, தீபாரதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    திருவிழாவின் 3 ம் திருவிழாவான 9-ந் தேதி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு மாபெரும் வழக்காடு மன்றம் நிகழ்ச்சியும். 4 ம் நாள் திருவிழாவான 10-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சாந்தி விநாயகர் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது.

    5 ம் திருவிழாவான 11 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு சிவ தேவஸ் தான சிவசக்தி மகளிர் மன்ற மாநாடும், இரவு 8 மணிக்கு இருளப்பபுரம் சிவ தேவஸ்தான சிவசக்தி மகளிர் மன்றத்தாரின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

    6 ம் திருவிழாவான 12 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு 67வது இந்து சமய மாநாடு நிகழ்ச்சியும். இரவு 8 மணிக்கு  திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    7 ம் திருவிழாவான 13ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு அருள்மிகு பிரசன்ன பார்வதி உடனுறை பசுபதீஸ்வரர் திருக் கல்யாண மும், இரவு 8 மணிக்கு அருள்மிகு பசுபதீஸ்வரர் பிரச்சனை பார்வதி பவனி வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    8 ம் திருவிழாவான 14-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜையும், மாலை 3 மணிக்கு பிரதோஷ விழா, மாலை 6 மணிக்கு சுவாமி பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சிவ அருள்நெறி திருக்கூட்ட 62 வது ஆண்டு விழா நிகழ்ச்சியும். இரவு 9 மணிக்கு இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் தேவார இன்னிசை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    9 ம் திருவிழாவான 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு பல்சுவை ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது..

    10-ந் திருவிழாவான 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு தேவாரப்-பஜனையும், 6.30 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு பாலாபிஷேகமும், முற்பகல் 11 மணிக்கு தீபாராதனையும், 12:00 மணிக்கு திருக்காவடி எடுத்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 1 மணிக்கு  அன்னதானமும்,

    மாலை 5.30 மணிக்கு தேவாரப் பஜனையும், மாலை 6.30 மணிக்கு தீபாராத-னையும், இரவு 7 மணிக்கு சித்திரை திருவிழா சிறப்பு மாநாடு நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சுரேஷ்குமார் வழங்கும் டெலிவிஷன் பிரபலங்கள் பங்கேற்கும்  மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும். நள்ளிரவு 12 மணிக்கு மாபெரும் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இருளப்பபுரம் சிவ தேவஸ்தான நிர்வாகக் குழுவினரும், ஊர் பொதுமக்களும், மற்றும் சிவ பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
    மானாமதுரை ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    மானாமதுரை வைகையாற்று கரையில் அமைந்துள்ளது ஆனந்தவல்லியம்மன், சோமநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2020-21ஆகிய ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த விழா நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு கொரோனா தொற்று முற்றிலும் குறைந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று காலை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை விக்னேஷ்வர வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் நேற்று காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.

    முன்னதாக ஆனந்தவல்லியம்மன், சோமநாதர், பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர். விழாவையொட்டி தினமும் இரவு பூதவாகனம், அன்ன பறவை வாகனம், கமலம், கைலாசம், யானை, கிளி, 2 குதிரை வாகனம், 2 சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 14-ந் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. 15-ந் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது.

    கொடியேற்ற விழாவில் மானாமதுரை நகராட்சி ஆணையாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் மானாமதுரை வைகையாற்று கரையில் உள்ள வீரஅழகர் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. 15-ந்தேதி இரவு எதிர் சேவை நிகழ்ச்சியும், 16-ந்தேதி காலை வீரஅழகர் மானாமதுரை வைகையாற்றில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    மானாமதுரை சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகையாறு முழுவதும் நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் சுத்தம் செய்து சீரமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கியதால் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
    பொன்னம்பல அடிகளாரிடம் அனுமதி வாங்கும் நிகழ்வாக அணிக்கை பெறுதல் என்ற ஆதின மரபுப்படி திருத்தேங்காய் தொடுதல் விழா நடைபெற்றது.
    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருக்கைலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை குயிலமுதாம்பிகை உடனாய திருக்கொடுங்குன்றநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருத்தேரோட்ட திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு தேரோட்டம் நடைபெற்றது.

    அதற்கு பிறகு கோவில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக பாலாலய விழா நடைபெற்று சுமார் 7 ஆண்டுகள் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று 2019-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதனைத்தொடர்ந்து 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாவிற்கு தடை ஏற்பட்டது. தற்போது கோவில் சித்திரை திருவிழா நடத்த விழா குழுவினர் ஏற்பாடு செய்தனர். அதனடிப்படையில நேற்று பிரான்மலை ஜோதிட சிகாமணி உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கொடியேற்ற வைபவம் நிகழ்ச்சியை நடத்தினர்.

    முன்னதாக பொன்னம்பல அடிகளாரிடம் அனுமதி வாங்கும் நிகழ்வாக அணிக்கை பெறுதல் என்ற ஆதின மரபுப்படி திருத்தேங்காய் தொடுதல் விழா நடைபெற்றது. இதையொட்டி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கான அணிக்கை பெறுதல் தொடங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றம் நடந்தது. பின்னர் காப்பு கட்டும் வைபவம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 11-ந் தேதி திருக்கல்யாண வைபவமும், 15-ந் தேதி விநாயகர், முருகர், குயிலமுதாம்பிகை, திருக்கொடுங்குன்ற நாதர், பிரியாவிடை அம்மன் 4 பெரிய தேர்களில், சண்டிகேஸ்வரர் சப்பரம் என ஐந்து தேர்களில் சாமி ஊர்வலம் நடைபெறும். 16-ந் தேதி மஞ்சுவிரட்டு விழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் மற்றும் பிரான்மலை ஐந்துவகை கோவில் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.
    பங்குனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் லட்சுமி தேவியின் அம்சமான நெல்லி மரத்திற்கடியில் பூஜைகள் செய்து வழிபடுவதால் இதற்கு ஆமலகி ஏகாதசி என்று பெயர் உண்டானது.
    பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆலமகீ ஏகாதசி என்று பெயர். ஆலமகீ ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து திருமாலை வழிபட கோ (பசு) தானம் செய்த பலன் கிடைக்கும். இவ்விரதத்தை மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

    இந்த பங்குனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி, லட்சுமி தேவியின் மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் இடப்பட்ட தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

    அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால் பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். மேலும் இந்த ஆமலகி ஏகாதசி தினத்தன்று ஒரு கலசத்தில் ஏழு வகையான தானியங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து, மகாவிஷ்ணுவை வழிபட்டால் நீங்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களும் சிறப்பான வெற்றிகளை பெற்று மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். உங்களுக்கு வாழ்வில் கடன், பணப்பற்றாக்குறை போன்றவை ஏற்படாமல் தடுக்கும். ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.
    ×