என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கோவையில் புகழ் பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி கோவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதன்பின்னர் நேற்று முன்தினம் கோனியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சூழ கோனியம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளினார்.

    நேற்று காலை முதல் ராஜவீதியில் திருத்தேர் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். அவர்கள் திருத்தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு வாங்கி திருத்தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மதியம் 2.16 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் இளையபட்டம் மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பரிவேட்டை, குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) தெப்ப திருவிழா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) தீர்த்தவாரி கொடியிறக்கம், 8-ந் தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
    அகரம் முத்தாலம்மன் கோவிலின் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி(செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய மூன்று அம்சங்களில் கையில் அட்சய பாத்திரங்களுடன் நின்ற கோலத்தில் மூன்று உருவங்களில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
    ஆந்திர மாநிலத்தில் விஜயநகர பேரரசின் கடைசிக்காலத்தில் வரித்தண்டலராக பணிபுரிந்தவர் சக்கரராயர் என்ற அந்தணர். இவர் தனது குலதெய்வமான முத்தியாலு அம்மனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் ஆவார். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சுல்தான்கள் ஆட்சி ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக அங்கிருந்து தன் குலதெய்வமான முத்தியாலு அம்மனின் உத்தரவின்படி முத்தியாலு அம்மனுடன் தென்திசை நோக்கி தன் படைபரிவாரங்களுடன் கிளம்பினார்.

    தாடிக்கொம்பு அருகே செல்லும் குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள அகரத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது முத்தியாலு அம்மன் குறிப்பால் உணர்த்திய இடத்தில் தனது குலதெய்வமான முத்தியாலு அம்மனுக்கு கோவில் கட்டினார். இதனைத்தொடர்ந்து இக்கோவிலில் வழிபாடுகள் மற்றும் விழாக்கள் பாரம்பரிய முறைகளின்படி நடத்தி வந்தார். இம்முத்தியாலு அம்மன் காலப்போக்கில் பெயர் மறுவி, தற்போது முத்தாலம்மன் என அழைக்கப்பட்டு வழிப்பட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலின் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி(செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய மூன்று அம்சங்களில் கையில் அட்சய பாத்திரங்களுடன் நின்ற கோலத்தில் மூன்று உருவங்களில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 2005-ம் ஆண்டிற்கு முன்னர் சுதையால் செய்யப்பட்ட மூன்று அம்மன் சிலைகள் இருந்ததை பாரம்பரிய வழக்கப்படி அம்மனின் உத்தரவினை கேட்டு கற்சிற்பங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகப்புமண்டபம் என பிரகாரங்கள் அமைந்துள்ளன.

    மேலும் இக்கோவிலின் கருவறையில் அம்மனை வழிபட்ட குருமாமுனிவரின் ஜீவ சமாதியும், அவருடைய பண்டாரப்பெட்டியும் உள்ளது. அம்மனுக்கு செய்யும் அனைத்து பூஜைகளும் குருமாமுனிவருக்கும், பண்டாரப்பெட்டிக்கும் செய்யப்படுகிறது. இக்கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஐந்து முகங்களைக்கொண்டு எழுந்தருளியுள்ள சுரலிங்கேஸ்வரருக்கு தனி சன்னதி, ஞானம் தரும் விநாயகர், விசாலாட்சி அம்மன், வடமேற்கு மூலையில் பாலமுருகன், மகாலட்சுமி, துர்க்கை, வடகிழக்கு மூலையில் நவகிரகங்களுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்திருக்கோவிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை கணக்கிட்டு நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 10-ம் தேதி அல்லது அதன்பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமை அம்மனின் சன்னதியில் அம்மனின் உத்தரவு கேட்கும் வைபவம் நடைபெறும். இதற்காக தாடிக்கொம்பு மற்றும் சுற்றுவட்டார கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சன்னதியில் கூடுவர். குண்டுசி விழுந்தால் கூட சப்தம் கேட்கும் வண்ணம் நிசப்தத்துடன் அம்மனை மனமுருக வேண்டியபடி அமர்ந்து இருப்பர். கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடக்குப்பகுதியில் உள்ள பூதராணி சிலை பக்கமோ அல்லது வடக்குப்பிரகாரத்தில் உள்ள திருவாச்சி பக்கமோ பல்லி சப்தம் தருவதை அம்மனின் உத்தரவாக கொண்டு திருவிழா நடத்தப்படுகிறது. அம்மனின் உத்தரவு கேட்கும்போது, தெற்கு பிரகாரத்தில் உள்ள ஆண்பூதராஜாவின் பக்கம் பல்லி சப்தம் செய்து சகுனம் அளித்தால் திருவிழா நடத்தப்படுவதில்லை. மேலும் எந்த பகுதியிலும் பல்லி சப்தம் கொடுக்கவில்லை என்றாலும் அம்மன் உத்தரவு அளிக்கவில்லை எனக்கருதி திருவிழா நடைபெறுவதில்லை.

    அம்மனின் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழா பாரம்பரிய அடிப்படையில் சாட்டுதல் நடைபெறும். மறுநாள் முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்களும் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டாரப்பெட்டி சன்னதியிலிருந்து கிளம்பி கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வார். அதனைத்தொடர்ந்து புராண நாடகங்களும் நடைபெறும். உற்சவ காலத்தில் எழுந்தருளும் அம்மன் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை மூட்டை, களிமண் உள்ளிட்ட பல பொருட்களைக்கொண்டு விழா சாட்டப்பட்ட 6-ம்நாள் வெள்ளிக்கிழமை உருவாக்கப்படுகிறது. பிறப்பு மண்டபத்தில் உருவாக்கப்பட்ட அம்மன் கண்திறப்பு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பபடுவார்.

    அங்கு அம்மனின் கண்திறப்பு விழா அரசு உயர் அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காலை 10 மணிக்கு நடைபெற்று உடனடியாக ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தபடி கொலுமண்டபத்தில் அம்மன் எழுந்தருள்வார். கண்திறக்கப்பட்ட உற்சவகால அம்மன் சன்னதிக்கு செல்லாமல் கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வது வேறு எங்கும் நடைமுறையில் இல்லாத ஒன்றாகும்.

    அன்று பகல் முழுவதும் சகல வரம் தரும் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் பெற்றோர் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் தங்களது குழந்தைகளை தூக்கிவந்தும் நேர்த்தி கடனை செலுத்துவர். மேலும் அம்மனின் அருளால் தங்களது விவசாயத்தில் கிடைத்த கம்பு, சோளம், நெல், மக்காசோளம், வாழைப்பழம் உள்ளிட் விவசாய பொருட்களை சூறையிட்டும், கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு மண்பொம்மைகளை காணிக்கையாக அளித்தும், சேத்தாண்டி வேடம் அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    அன்று நள்ளிரவு அம்மன் புஷ்ப விமானத்தில் எழுந்தருளி வாணக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருள்வார். மறுநாள் நண்பகல் வரை அங்கு எழுந்தருளும் அம்மன், பின்னர் சொருகுபட்டை சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் மத்தியில் உலா வந்து பூஞ்சோலையில் எழுந்தருள்வார். குறிப்பாக அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை தின்று, பூஜிக்கப்பட்ட மஞ்சளை உடலில் பூசி குளித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். இத்திருக்கோவிலின் காவல் தெய்வமான பூதராஜாவை வழிபடுவதன் மூலம் தொழில் மற்றும் வழக்கு தொடர்பான சிக்கல்கள் தீரும்.

    திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள தாடிக்கொம்பு அருகே குடகனாற்றின் மேற்கு கரையில் அகரம் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது.
    மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி தூக்கிச் சென்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. காப்புக் கட்டியதுடன் ஒவ்வொரு வீட்டிலும் மண் சட்டிகள் உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதாணிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை, தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித் திடல், கல்லணை கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர்.

    மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா மேலும் ஒரு வாரம் நடக்க உள்ளது. இதில் செரியலூர் கிராமத்தில் மண்பாண்டக் கலைஞர்களால் செய்யப்பட்டு வரும் மண் குதிரை, காளைகள் மற்றும் தெய்வங்களின் சிலைகளை மேற்பனைக்காடு கிராம மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் அய்யனார் கோவிலுக்கு தூக்கிச் செல்லும் நிகழ்வுகளும், பாட்டவர் கோவிலில் கல் பொங்கல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிராம மக்களால் நடத்தப்படும் மது எடுப்புத் திருவிழா வருகிற 10-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
    திருமலையில் வருகிற 24-ந் தேதியிலிருந்து 5 நாட்கள் தெப்போற்சவம் நடக்கிறது. தெப்போற்சவத்தின் முதல் நாள் மாலை சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமச்சந்திரமூர்த்தி ஆகிய சாமிகள் புஷ்கரிணியில் தெப்பலில் வலம் வருகிறார்கள்.
    திருமலையில் வருகிற 24-ந் தேதியிலிருந்து 5 நாட்கள் தெப்போற்சவம் நடக்கிறது. இதற்காக தெப்பல் தண்ணீரில் மிதக்கும் வகையில் பிளாஸ்டிக் டிரம்கள் பயன்படுத்தப்படும். அதன்படி தற்போது பிளாஸ்டிக் டிரம்கள் கொண்டுவரப்பட்டு தெப்பலில் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தெப்போற்சவத்தின் முதல் நாள் மாலை சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமச்சந்திரமூர்த்தி ஆகிய சாமிகள் புஷ்கரிணியில் தெப்பலில் வலம் வருகிறார்கள்.

    2-வது நாள் கிருஷ்ணசாமி, ருக்மணியுடனும், 3-வது நாளில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், மலையப்பசாமி 3 முறை தெப்பலில் சுற்றி வந்து அருள்பாலிக்கின்றனர். நான்காவது நாளில் ஐந்து முறையும், கடைசி நாள் ஏழு முறையும் புஷ்கரிணியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து, இதைச் சொல்வது நல்லது.
    தேனாம்ச ரிஷனாம்ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்!
    புத்தி பூதம் த்ரிலோகேஸம்
    தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

    குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து, இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர் செல்வன்) படத்தின் முன்பாக அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது.

    தொகுப்பு:- சிவல்புரி சிங்காரம்
    மண்டைக்காட்டில் மாசி கொடை விழாவில் வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மாசி கொடை விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி கொடை விழா கடந்த 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 9- ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் 3-ம் நாளான நேற்று காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4.15 மணிக்கு கீழ்கரை பிடாகையில் இருந்து சந்தன குடம் பவனியும், மாலை 6.15 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பும், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.

    ஆறாம் நாள் இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை எனும் மகாபூஜையும், 9-ம் நாள் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியும் நடக்கிறது,

    10-ம் நாள் அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனியும், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, தொடர்ந்து 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணி, மதியம் 1 மணி, மாலை 6.30 மணி இரவு 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
    கோவையில் உள்ள கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள்.
    கோவையில் உள்ள கோனியம்மன் கோவில் கோவையின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதல் மற்றும் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை கோனியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள். இந்த தேரானது ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்பக்கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக சென்று மீண்டும் தேர்த்திடலை வந்தடைகிறது.

    இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) பரிவேட்டை-குதிரை வாகனம், நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெப்ப திருவிழா, 6-ந் தேதி தீர்த்தவாரி கொடியிறக்கம், 8-ந் தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    கோவிலுக்கு மற்றும் தேரோட்டத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அம்மனை தரிசித்து செல்ல வேண்டும் என்று அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலயத்தில் நாளை (வியாழக்கிழமை) 31-வது ஆண்டு பிரதிஷ்டை-அசன பண்டிகை நடக்கிறது.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜி நகரில் பிரசித்தி பெற்ற சீயோன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 31-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    நாளை காலை 5.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெறுகிறது. இதில், அருட்திரு அறிவர் மோகன்ராஜ் தேவ செய்தி அளிக்கிறார். இன்னிசையுடன் கூடிய தெய்வீக பாடல்களுடன் ஆராதனை நடக்கிறது. இந்த ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் கலந்துகொண்டு இறைவனை ஆராதிக்கிறார்கள்.

    அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு ‘அசன விருந்து’ சிறப்பு ஆராதனையுடன் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து வழங்கப்படுகிறது.

    விழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு சீயோன் ஆலய ஆயர் செல்விதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோல் பால், சந்தனம், தேன் குடங்களை பக்தர்கள் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலம், அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர். மேலும் சில பக்தர்கள், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள், மாறுவேடம் அணிந்து வருகை தந்தனர்.

    தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக, கரும்பு தொட்டில்களில் குழந்தைகளை வைத்து கோவில் வளாகத்தை பக்தர்கள் சுற்றி வந்தனர். இதேபோல் அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் ஈடுபட்டனர்.

    பூக்குழியில் விறகு கட்டைகளையும், உப்பு, மிளகு பொட்டலங்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். மேள தாளம் முழங்க தாம்பூலத்தில் அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    இதைத்தொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் 'கோவிந்தா' கோஷம் முழங்க பூக்குழி இறங்கி மெய்சிலிர்க்க வைத்தனர்.

    முன்னதாக கோவில் முன்பு கழுமரம் ஊன்றப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு கழுமரம் ஏறினர்.

    பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி, விருதுநகர், சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே காப்புகட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கிய நாளில் ஊன்றப்பட்ட கம்பம், நேற்று இரவு கோவிலில் இருந்து அருகே உள்ள அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து இரவில், அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி குளக்கரையில் இருந்து புறப்படுகிறார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் அம்மன், பின்னர் கோவிலை வந்தடைகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் விஷேச நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கோவிலில் குண்டம் விழா நடைபெறும். இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கூடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் இந்த ஆண்டு குண்டம் விழாவுக்காக வருகிற 15-ந் தேதி பூச்சாட்டப்படுகிறது. அன்று முதல் பண்ணாரி அம்மன் சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களுக்கு சருகு மாரியம்மனுடன் திருவீதி உலா செல்வார்.

    முக்கிய விழாவான குண்டம் விழா வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 1-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 2-ம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

    5-ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், சிம்மவாகனம், வெள்ளியானை, தங்ககுதிரை, தந்தப்பல்லக்கு, வெள்ளிகாமதேனு ஆகிய வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாணத்திற்கு பத்மசால சமூகத்தினர் பொட்டும், காரையும் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருமண மேடையில் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மாங்கல்யத்தை அணிவித்தார். திருக்கல்யாணத்தை செல்வசுப்ரமணிய குருக்கள் மற்றும் கோவில் முறை பண்டாரங்கள் நடத்தினர்.

    திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் தீச்சட்டி, மாவிளக்கு எடுத்து வந்தனர். இதற்கிடையே திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு கொடி இறக்கமும் நடக்கிறது.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவத்தையொட்டி தியாகராஜசாமி, அகத்திய முனிவருக்கு ருத்ரபாத தரிசனம் கொடுத்து தனது இருப்பிடத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவத்தையொட்டி தியாகராஜசாமி, அகத்திய முனிவருக்கு ருத்ரபாத தரிசனம் கொடுத்து தனது இருப்பிடத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஹம்ச நடனம் புவனி விடங்க தியாகராஜர் மூலஸ்தானத்தில் இருந்து தலத்தார்கள் கலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன், கதாகரன் உள்பட பக்தகுழுவினரால் ஹம்ச நடனத்துடன் தூக்கி வரப்பட்டு வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    பின்னர் சாமிக்கு பூஜை நடந்தது.பின்னர் தியாகராஜ பெருமான் தனது ருத்ரபாதத்தை அகஸ்திய முனிவருக்கும், பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.

    இதை தொடர்ந்து தியாகராஜர் மீண்டும் ஹம்ச நடனத்துடன் (ஹம்ச நடனம் என்பது அன்னப் பறவை போல் அசைந்தாடும் காட்சி) தனது இருப்பிடத்திற்கு சென்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×