search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palani mariamman temple"

    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 5-ந்தேதி கம்பம் சாட்டுதலும், 12-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவில் அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான மாசித்திருவிழாவின் தேரோட்டம் நேற்று நடந்தது.

    முன்னதாக 3.30 மணி அளவில் அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. 4.30 மணி அளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நான்கு ரத வீதிகளில் தேர் சுற்றி வந்து 5.30 மணி அளவில் நிலை வந்து சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    இதற்கிடையே மேடான பகுதிகளில் தேர் செல்லும்போது, அதனை கோவில் யானை கஸ்தூரி தன் தும்பிக்கையால் முட்டி தள்ளியது. இன்று இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கோவில் மேலாளர் உமா, சித்தனாதன் சன்ஸ் ராகவன், கந்தவிலாஸ் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் நகர் முக்கிய பிரமுகர் கள் கலந்துகொண்டனர்.
    ×