என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தென் மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.

    அப்போது அங்கு வசித்த நாடார் சமுதாயத்தினர் ஏராளமானோர் சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பஞ்சம் பிழைக்க நிலக்கோட்டை வந்ததாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் நிலக்கோட்டை பகுதி மக்கள் பிளேக் நோய், காலரா, அம்மை போன்ற நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதை அறிந்த நாடார் சமுதாயத்தை சேர்ந்த பெரியோர்கள் இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம்தான் காரணம் எனக் கருதினார்கள். எனவே அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அப்போது முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆரம்ப காலத்தில் மிகச்சிறிய அளவில் கோவிலை ஏற்படுத்தினார்கள். மேலும் கோவில் அருகே ஒரு தெப்பக்குளமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். அதன் எதிரொலியாக நிலக்கோட்டையில் ஏற்பட்ட நோய் தாக்குதல் விரைவாக குறைந்தன.

    அம்மனின் அருளால்தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நம்பிய நாடார் சமுதாயத்தினர் 1912-ம் ஆண்டு அந்தக் கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1987-ம் ஆண்டு கலைநயத்துடன் பல்வேறு வேலைப்பாடுகளுடன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகள் கொண்ட 50 அடி உயர ராஜகோபுரம் அமைத்து மிகப்பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்தக் கோவில் வளாகத்தில் முதல் கடவுள் விநாயகர், சுப்பிரமணியசுவாமி, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணாசலேஸ்வரர், பைரவர், லிங்கோத்பவர், ஆஞ்சநேயர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளின் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் நேர்த்திக்கடனை சொல்லி வழிபட்டு வருவதும், அதை நிறைவேற்றித்தரும் தெய்வமாக அம்மன் வீற்றிருக்கிறாள் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    மிளகு, உப்பு காணிக்கை

    உடலில் தோன்றும் பல தொந்தரவுகள் தீர அம்மனுக்கு மிளகு, உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் திருவிழாவின்போது அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் மிளகு, உப்பு காணிக்கையை கொடிக்கம்பத்தில் செலுத்துவார்கள்.

    மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர் களின் அக்னிசட்டி ஊர்வலத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
    மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேரை திருவாவடுதுறை ஆதீனம் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏற்கனவே இருந்த தேர் பழுதடைந்து சேதமடைந்து விட்ட காரணத்தால் புதிய தேர் உருவாக்கப்பட்டது.

    அதன்படி ரூ.30 லட்சம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டு, அதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    இந்த தேர் கோவில் சன்னதியில் புறப்பட்டு நான்கு வீதிகளையும் சுற்றி மீண்டும் சன்னதியை வந்தடைந்தது.

    பின்னர் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தேர் நிறுத்தும் செட்டில் தேர் நிறுத்தப்பட்டது. முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
    இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாளில் தம்முடைய சீடர்களோடு இணைந்து இரவு உணவு அருந்தும் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியாக இந்த பெரிய வியாழன் அமைந்துள்ளது.
    இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாளில் தம்முடைய சீடர்களோடு இணைந்து இரவு உணவு அருந்தும் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியாக இந்த பெரிய வியாழன் அமைந்துள்ளது. இது குறித்து வேதாகமத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி பகுதிகளில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

    இந்த பெரிய வியாழன் ஆண்டு தோறும் இயேசு உயிர்தெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகிற ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய 6 நாட்களை பரிசுத்த நாட்களாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து அதில் இந்த பெரிய வியாழனையும் நினைவுகொள்கின்றனர்.

    பெரிய வியாழன் இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுதல் (ஈஸ்டர்) விழாவின் முதல் நாளாகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி, மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடைபிடிக்கின்றனர்.

    இப்படி இந்த பெரிய வியாழன் அன்று இயேசு 3 முக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார். முதலில் இயேசு பெரிய வியாழன் அன்று தன்னுடைய சீடர்களுடன் உணவு உட்கொண்டு நற்கருணை எண்ணும் அப்பம் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறார். பின்னர் இயேசு தம்முடைய சீடர்களின் கால்களை கழுவுகிறார். பின்னர் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்துகிறார்.குருத்துவம் என்றால், இயேசு தம்முடைய சீடர்களுக்கு ஏற்படுத்திய அப்பம் கொடுக்கும் நிகழ்வை, இனி எல்லா தேவாலயங்களிலும் குருவானவர் (போதகர்) ஏற்படுத்தி அவர்கள் தான் எல்லா ஜனங்களுக்கும் அப்பம் கொடுக்கும் நிகழ்வை பின்பற்ற வேண்டும்.

    இவர்கள் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களுக்கு பணிசெய்யும் பொறுப்பையும் போதகர்களிடம் ஒப்படைத்தார் என்பது தான் குருத்துவத்தை ஏற்படுத்துதல் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே தான் இயேசு உயிர்த்தெழுந்த முந்தைய வியாழக்கிழமையை பெரிய வியாழன் என்று போற்றப்படுகிறது.

    சகோ.பெலிக்ஸ், பலவஞ்சிபாளையம்.
    எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும் மேற்கொள்வதில்லை. ஏகாதசி விரதத்தின் மகிமையை முதலில் அறிந்துகொள்வோம்.
    அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும்,  ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்...எப்படி கடைப்பிடிப்பது?அதன் பலன்கள் என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    எனவே, ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி பகவானை வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்கிறார்.

    ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான  இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் உபவாசமிருப்பது மிகவும் விசேஷமானது. 'ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி' என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.

    ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும்.

    ஏகாதசி  திருநாளில்  அதிகாலையில் எழுந்து குளித்து,  தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.

    அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.

    உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.  விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை.  மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால்,  ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.

    பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.

    மறுநாள் துவாதசியன்று  காலையில்  பூஜைகளை முடித்து விட்டு,  விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன்  உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனிதேர் திருவிழாவில் பெரிய தேர் மற்றும் சின்ன தேரை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர்.
    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 23-ந்தேதி காப்பு கட்டுதல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    நேற்று மாலை பெரிய தேர் மற்றும் சின்ன தேர் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சின்னத்தேரை தலையிலும் தோளிலும் பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர். தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருவீதி உலா கோட்டைமேடு, சந்தைபேட்டை, திருச்சி-சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வாணப்பட்டறை மைதானத்தை அடைந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) எல்லை உடைக்கும் திருவிழாவும், நாளை(வெள்ளிக்கிழமை) வாணவேடிக்கை நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த பதினெட்டு பட்டி கிராம ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகம் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருப்பரங்குன்றம் :

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழாவாகும். 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சே‌ஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப் பெருமான்-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சொக்கநாதர் - மீனாட்சி அம்மன் கலந்துகொண்டு முருகப்பெருமான் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

    இரவு மீனாட்சி அம்மன்- பிரியாவிடையுடன் சொக்கநாதர் வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருக பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன்-தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 5.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

    அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப் பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார்.

    இந்த தேரோட்டத்தில் மதுரை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டத்தில் புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    தஞ்சை மாவட்டத்தில் புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் புனித வார நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகின்றன. கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் நாளில் தொடங்கியது.

    அன்றிலிருந்து கிறிஸ்தவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து தவக்காலத்தை அனுசரித்து வருகின்றனர். தவக்காலத்தின் நிறைவு வாரமாக குருத்தோலை ஞாயிறு கடந்த ஞாயிறு அன்று காலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பெரிய வியாழன் பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற உள்ளது.

    இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்வை பேராலய அதிபர் பாக்கிய சாமி இறைவார்த்தை வழிபாட்டுடன் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைவன் என்பவன் எப்பொழுதும் முதன்மையானவராக இருக்க வேண்டும் என்பதில்லை, மாறாக கடையனாகவும், பணி பெறுபவனாக மட்டுமல்லாமல், பணி புரிவனாகவும் இருக்க வேண்டும், என்பதை எடுத்துச் சொல்லும் மகத்தான ஒரு செய்தியை அனைவருக்கும் எடுத்துக் கூறும் நிகழ்வாக பாதம் கழுவும் சடங்கு நிகழ்வு நடைபெறுகிறது.

    இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணைஅதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவிபங்குதந்தை அருண்சவரிராஜ், ஆன்மீக தந்தையர் அருளாநந்தம், கருணைதாஸ், ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    புனித வெள்ளி நாளான வெள்ளிக்கிழமை மாலை இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை ஆகியவை நடைபெறுகிறது. ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் தின சிறப்பு வழிபாடு வருகிற சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. சரியாக 12 மணிக்கு ஏசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் விதமாக புதிய நெருப்பு ஏற்றப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஈஸ்டர்தினமான ஞாயிற்றுக்கிழமை பேராலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. புனித வார நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பூண்டி பேராலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    வாய்மேடு அருகே தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நடைபெற்றது. விழாவையொட்டி காப்புகட்டுதல் நடைபெற்றது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நடைபெற்றது. முன்னதாக தகட்டூர் பைரவர் கோவில் இருந்து ராதாகிருஷ்ண சாமியார் 3 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து மாப்பிள்ளை வீரான் கோவிலை அடைந்தனர். பின்பு கோவிலில் அம்மன் புறப்பாடு செய்யப்பட்டது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது சாமியார் வாழைப்பழங்களை வீசினார். இந்த வாழைப்பழத்தை பிடித்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாழைப்பழத்தை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.

    தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு போட்டு, பொங்கல் வைத்து உருவச்சிலைகளை நேர்த்திக்கடனாக

    செலுத்தினர். விழாவில் 30-க்கும் மேற்பட்ட மண் குதிரைகளை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து குதிரை விடும் நிகழ்ச்சியும் இரவு தேரோட்டம், வானவேடிக்கையும் நடைபெற்றது.
    காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தில் சுந்தராம்பாள்- கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது.
    காரைக்கால் அம்மையார் கோவில் அருகே கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 27-ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    12-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தில் சுந்தராம்பாள்- கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது. விழாவில், கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில்கள் நிர்வாக அதிகாரி காசிநாதன் தலைமையில், கோவில் அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    திருச்சி தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் வருடாந்திர தேர்திருவிழா இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அம்பாள் தேரில் வீதி உலா வந்தார்.
    திருச்சி தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் வருடாந்திர தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை சுத்த பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அம்பாள் தேரில் வீதி உலா வந்தார்.

    தேர் தென்னூர் காவல்கார தெரு, அண்ணாநகர், லட்சுமிபுரம், ராமச்சந்திரா தெரு, மல்லிகைபுரம் உள்பட முக்கிய வீதிகளில் வலம் வந்தது.அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.இன்று (வியாழக்கிழமை) தென்னூர் பிடாரி மந்தையில் எல்லை காவல் தெய்வமாகிய சந்தன கருப்பு சாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மருளாளி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    தொடர்ந்து அம்பாள் தேரில் முக்கிய வீதிகளில் வலம் வருவார். நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடலும் அம்பாள் வீதி உலாவும் நடைபெறும்.நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி கோவிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சியும், 4-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.
    பழனி முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், கொடுமுடியில் இருந்து தீர்த்தக் காவடி எடுத்து பாதயாத்திரையாகவும் வந்தனர்.
    பழனி முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், கொடுமுடியில் இருந்து தீர்த்தக் காவடி எடுத்து பாதயாத்திரையாகவும் வந்தனர். பங்குனி உத்திர திருவிழா முடிந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி சேலத்தை சேர்ந்த பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர், பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நேற்று வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் 5 பேர் பறவைக்காவடியில் பழனிக்கு வந்தனர். இதற்காக ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து, திருஆவினன்குடி மற்றும் கிரி வீதிகள் வழியாக வந்து பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.

    ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வருகிறோம். அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறோம் என்றனர்.
    செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது.
    சக்கர வழிபாடு மிக சக்தி வாய்ந்தது. எந்த சக்கர வழிபாடு செய்கிறோமோ அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது.

    பொருட் செல்வம் வர ஆரம்பித்து விட்டால் இதரச் செல்வங்களும் தானாகவே தேடி வரும் என்பதில் ஐயமில்லை. "ஸர்வ ஸம்பத் ஸம்ருத்யர்த்தம்'' என்ற மந்திரத்தைத் தினந்தோறும் இருபத்தையாயிரம் முறை ஆறு நாட்கள் உச்சரித்து வர வேண்டும். அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடித்து விட்டுக் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

    எத்ருஸா த்ராகீயஸ்யா தரதஸித-நீலோத்பல-ருசா
    தலியாம்ஸம் தீ நம ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
    அநே நாயம் தந்யோ பவதி நசதே ஹாநி-ரியதா
    வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர''

    இந்த மந்திரத்தை ஜெபித்து மகாலட்சுமியை வணங்கும்போது தேவிக்கு நிவேதனமாக தேன் அல்லது பாயசம் வைத்து வழிபட வேண்டும். தேவியின் கடைக்கண் பார்வைப் பட்டால் வாழ்வில் முன்னேற்றம் தானாக வரும்.

    ஒருவருக்கு வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் முனைப்புடன் செயல்படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்து விடும்.

    இவ்விதம் வருவதற்கு மகாலட்சுமி சக்கரத்தை வைத்துப் பூஜை செய்து வர வேண்டும். செப்புத் தகட்டிலோ, வெள்ளித் தகட்டிலோ அல்லது பஞ்சலோகத் தகட்டிலோ இந்தச் சக்கரத்தைப் பதித்துப் பூஜையறையில் வைத்தும் வணங்கி வரலாம்.

    வெள்ளியினால் செய்த தாயத்தினுள்ளோ, தங்கத்தினால் ஆன தாயத்தினுள்ளோ இந்தச் சக்கரம் பாதிக்கப்பட்ட தகட்டை அடைத்துக் கையில் கட்டிக் கொள்ளலாம். நிச்சயமாக நன்மைகள் பெருகவும், நலம் சேரவும் பக்கத் துணையாக விளங்கும்.
    ×