search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூண்டி மாதா பேராலயம்
    X
    பூண்டி மாதா பேராலயம்

    பூண்டி மாதா பேராலயத்தில் இன்று பெரிய வியாழன் அனுசரிப்பு

    தஞ்சை மாவட்டத்தில் புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    தஞ்சை மாவட்டத்தில் புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் புனித வார நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகின்றன. கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் நாளில் தொடங்கியது.

    அன்றிலிருந்து கிறிஸ்தவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து தவக்காலத்தை அனுசரித்து வருகின்றனர். தவக்காலத்தின் நிறைவு வாரமாக குருத்தோலை ஞாயிறு கடந்த ஞாயிறு அன்று காலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பெரிய வியாழன் பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற உள்ளது.

    இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்வை பேராலய அதிபர் பாக்கிய சாமி இறைவார்த்தை வழிபாட்டுடன் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைவன் என்பவன் எப்பொழுதும் முதன்மையானவராக இருக்க வேண்டும் என்பதில்லை, மாறாக கடையனாகவும், பணி பெறுபவனாக மட்டுமல்லாமல், பணி புரிவனாகவும் இருக்க வேண்டும், என்பதை எடுத்துச் சொல்லும் மகத்தான ஒரு செய்தியை அனைவருக்கும் எடுத்துக் கூறும் நிகழ்வாக பாதம் கழுவும் சடங்கு நிகழ்வு நடைபெறுகிறது.

    இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணைஅதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவிபங்குதந்தை அருண்சவரிராஜ், ஆன்மீக தந்தையர் அருளாநந்தம், கருணைதாஸ், ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    புனித வெள்ளி நாளான வெள்ளிக்கிழமை மாலை இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை ஆகியவை நடைபெறுகிறது. ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் தின சிறப்பு வழிபாடு வருகிற சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. சரியாக 12 மணிக்கு ஏசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் விதமாக புதிய நெருப்பு ஏற்றப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஈஸ்டர்தினமான ஞாயிற்றுக்கிழமை பேராலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. புனித வார நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பூண்டி பேராலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×