என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி-அம்பாள் மறுவீட்டிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்ளேயே நடத்தப்பட்டன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடந்த 12-ந்தேதி அன்று சாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடைபெற்றது.

    திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி-அம்பாள் மறுவீட்டிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக கெந்தமாதன பர்வத மண்டகப்படிக்கு மறு வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று இரவு 7 மணியளவில் சாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்ககேடயத்தில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் பேஸ்கார்கள் கலைச்செல்வன், கமலநாதன், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் சாவை வென்று உயிர்த்தெழுந்த இயேசு சீடர்கள் முன்பு தோன்றிய நிகழ்வுகளை இங்கு காண்போம்.

    “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு” என்று இயேசு கிறிஸ்து கூறினார். தாம் சொன்னபடியே, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் சாவை வென்று உயிர்த்தெழுந்த இயேசு சீடர்கள் முன்பு தோன்றிய நிகழ்வுகளை இங்கு காண்போம்.

    மகதலா மரியா

    மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து மரியா அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். (யோவான் 20:11-16)

    பெண் சீடர்கள்

    ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்’ எனச் சொல்லுங்கள்” என்றார். அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. (மாற்கு 16:1-8)

    ஆண் சீடர்கள்

    சீடர்கள் வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். (லூக்கா 24:36-43)

    திருத்தூதர் தோமா

    பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 20:24-29)

    தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட பத்தினிகளுக்கு, இறைவனே நேரில் வந்து உங்கள் கைகளிலே வளையல் சூட்டுவார்.
    வளையல் விற்ற லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    முன்பொரு காலத்தில் தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என்று செருக்குற்றிருந்தனர். அச்செருக்கை அடக்க எண்ணிய சொக்கநாதர் பிச்சாடனார் கோலத்தில் தாருகாவனத்திற்கு சென்றார்.

    அங்கு பிச்சையிட வந்த அத்தனை ரிஷிபத்தினிகளும் அவரது அழகிலே மயங்கி நின்றனர். கோபமுற்ற ரிஷிகள் அந்த பெண்களை மதுரையிலே சாதாரண வணிகர் குல பெண்களாக பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட பத்தினிகளுக்கு, இறைவனே நேரில் வந்து உங்கள் கைகளிலே வளையல் சூட்டுவார். அப்போது உங்கள் சாபம் தீர்ந்து எங்களை வந்தடைவீர்கள் என்று கூறினார்கள்.

    அவ்வாறு ரிஷிபத்தினிகளும் பெண்களாக மதுரையிலே பிறந்து வளர்ந்தனர். அவர்களின் சாபத்தை போக்க இறைவனும் வளையல் வியாபாரியாக தெருவில் வந்து, அவர்களின் கைகளை தொட்டு வளையல் அணிவித்தார். உடனே அவர்களின் சாபம் நீங்கி சிவலோகம் சென்றதாக புராண வரலாறு கூறுகிறது.
    நவக்கிரகங்களின் ஆசியைப் பெற நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் பேருதவி புரிவதாக அமையும். நவக்கிரகங்களுக்கான காயத்ரி மந்திரங்களை இங்கே பார்ப்போம்.
    மனிதர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவது ‘நவக்கிரகங்கள்’ என்று அழைக்கப்படும் ஒன்பது தெய்வங்கள். அந்த நவக்கிரகங்களின் ஆசியைப் பெற நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் பேருதவி புரிவதாக அமையும். நவக்கிரகங்களுக்கான காயத்ரி மந்திரங்களை இங்கே பார்ப்போம்.

    குரு

    ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருப் ப்ரசோதயாத்

    சூரியன்

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

    சுக்ரன்

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர ப்ரசோதயாத்

    சந்திரன்

    ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்

    சனி

    ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ சனிப் ப்ரசோதயாத்

    செவ்வாய்

    ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ அங்காரக ப்ரசோதயாத்

    ராகு

    ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத்

    புதன்

    ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புதப் ப்ரசோதயாத்

    கேது

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ கேதுப் ப்ரசோதயாத்
    இந்த 3 நாட்களும் திருமலையில் ஏழுமலையானுக்கு நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதியில் ஆண்டுதோறும் தோ‌ஷம் களையும் முக்கியமான உற்சவமான பவித்ரோற்சவத்தை ஆடி மாதம் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வரும் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி 18-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 19-ந்தேதி பவித்ர சமர்ப்பணம், 20-ந்தேதி மகா பூர்ணாஹுதியுடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவுபெற உள்ளது.

    இந்நாட்களில் கோவிலில் உள்ள மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையானை எழுந்தருள செய்து அங்கு 3 நாட்கள் யாகம் வளர்த்து இந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்துகிறது.

    இந்த 3 நாட்களும் திருமலையில் ஏழுமலையானுக்கு நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஆர்ஜித சேவைகள் 3 நாட்களும் ஒளிபரப்பாகாது. அதற்கு பதிலாக பவித்திர உற்சவம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

    திருப்பதி கோசாலையில் வருகிற 30-ந்தேதி கொரோனா நிபந்தனைகளுடன் கோ பூஜை நடக்கிறது. இந்த நாளில் பக்தர்கள் பசுகளுக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா நிபந்தனைகளுடன் கோபூஜை நடைபெற உள்ளதால் பக்தர்களுக்கு கோசாலையில் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது. பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய லீலை அலங்காரத்தில் இறைவன் காட்சி அளித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை பாணனுக்காக இறைவன் சென்று அங்கம் வெட்டிய லீலை அலங்கார நிகழ்ச்சி நடந்தது. அப்போது கம்பத்தடி மண்டபத்தில் இந்த அலங்காரத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்து கோவில் ஸ்தானிக பட்டர் ஹலாஸ் கையில் கேடயம், வாளுடன் லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் இரவு சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    விழாவில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    மதுரையை ஆண்ட குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யர்களில் சித்தன் என்பவன் தீய குணங்கள் கொண்டவன். பயிற்சி முடித்து சென்ற அவன் தானும் ஒரு பயிற்சி பள்ளியை அமைத்தான்.

    அங்கு தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரின் மாணவர்களை எல்லாம் அங்கு அழைத்து கொண்டான். ஆசிரியர் மனைவியிடமும் தவறாக நடக்க முயன்றான். இதைக்கண்ட பாணன் சோமசுந்தரரிடம் முறையிட்டார்.

    இறைவன் அந்த பாணன் வேடம் தாங்கி சென்று சித்தனை வாள்போருக்கு அழைத்தார். ஆசான் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் காத்து கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டினார். இறுதியில் அவனது தலையையும் வெட்டினார், இறைவன்.

    இந்த தகவலை அறிந்த குலோத்துங்க பாண்டியன் அந்த பாணனுக்கு தக்க மரியாதை செய்து கவுரவித்தார் என்று வரலாறு கூறுகிறது.

    மேலும் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சிகர நிகழ்ச்சியாக சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் கோவிலில் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடக்கிறது. அதில் சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக மீனாட்சி கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தை வலம் வருவார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்பிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    ஆடி கடைசி திங்கட்கிழமையையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் புஷ்பாபிஷேக விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை புஷ்பாபிஷேகம் விழா நடைபெறுவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டுக்கான ஆடி கடைசி திங்கட்கிழமையையொட்டி நேற்று புஷ்பாபிஷேகம் நடந்தது.

    மாலை 6.30மணி அளவில் தாணுமாலயன் சன்னதி, திருவேங்கட விண்ணவர பெருமாள், கொன்றையடி, அறம் வளர்த்த நாயகி அம்மன், சித்திர சபை, தட்சிணாமூர்த்தி, நீலகண்ட விநாயகர், கைலாசநாதர், சாஸ்தா, ராமர் சன்னதி, காலபைரவர் மற்றும் நிறைவாக 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகவிழா நடந்தது. அதை தொடர்ந்து தீபாராதனையும் காட்டப்பட்டது.

    புஷ்பாபிஷேகத்துக்கு கேந்தி, வாடா மல்லி பூக்களை தவிர்த்து பிச்சி, முல்லை, கொழுந்து, மருக்கொழுந்து, பச்சை, தாமரை, ரோஜா, அரளி, செண்பகப்பூ ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இதில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலக மேலாளர் தங்கம், நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    இந்த ஸ்லோகத்தை தினசரி கூறிவந்தால் அனைத்துத்தொல்லைகளிருந்தும் விலகி தோஷங்கள் நிவர்த்தியாகி அஷ்ட ஐஸ்வர்யங்களும் தீர்க்கமான உடல் நலமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
    சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜபமாலை, புஷ்ப பாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள்.

    ஸ்லோகம்:

    ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
    நித்யா நித்யாயை தீமஹி
    தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச தசமி, கிருஷ்ண பட்ச சஷ்டி. இந்த ஸ்லோகத்தை தினசரி கூறிவந்தால் அனைத்துத்தொல்லைகளிருந்தும் விலகி தோஷங்கள் நிவர்த்தியாகி அஷ்ட ஐஸ்வர்யங்களும் தீர்க்கமான உடல் நலமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
    கடந்த 2 வாரத்திற்கும் மேலாக வெறிச்சோடி காணப்பட்டு வந்த ராமேசுவரம் கோவில் ரதவீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை பகுதி நேற்று மீண்டும் பக்தர்கள் கூட்டத்துடன் களைகட்டி காணப்பட்டது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 1-ந் தேதி ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் அன்று முதல் 15-ந்தேதி வரை கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்தது. மேலும் அக்னி தீர்த்த கடல் பகுதியிலும் பக்தர்கள் புனித நீராடவும், கடற்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்யவும் அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராட விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை முதலே வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடியதுடன் கடற்கரையில் அமர்ந்து திதி மற்றும் தர்ப்பண பூஜைகளையும் புரோகிதர்கள் மூலம் செய்தனர்.

    கடந்த 2 வாரத்திற்கும் மேலாக வெறிச்சோடி காணப்பட்டு வந்த ராமேசுவரம் கோவில் ரதவீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை பகுதி நேற்று மீண்டும் பக்தர்கள் கூட்டத்துடன் களைகட்டி காணப்பட்டது. அதே நேரத்தில் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராட விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல் சுற்றுலா பயணிகள் நேற்று தனுஷ்கோடிக்கும் அனுமதிக்கப்பட்டனர்.
    திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மிகுந்த வேதனையில் இருக்கும் பக்தர்கள் முறையாக கோவில் திருப்பணிகள் நடைபெறுவதற்கு தொல்லியல் துறை அனுமதி கொடுத்து உள்ளதா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர்.
    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவில் ஆகும். இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருமாளை தரிசனம் செய்வதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் வருவார்கள். ேமலும் இந்த கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனியார் ஒருவர் கோவிலில் திருப்பணிகள் செய்ய முன்வந்து சில ஆண்டு காலமாக பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக கட்டுமானப் பணிகளுக்கு தேவையான செங்கல், சிமெண்டு உள்ளிட்ட பொருட்களை இறக்கி வைத்துள்ளதாகவும் தெரிகிறது. திருப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    ஊரை சுற்றி உள்ள கிராம மக்கள் இக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பு சாமியை வணங்கிய பின்பு தான் கோவிலுக்குள் சென்று பெருமாளை வணங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி வடக்கு வாசல் மூடப்பட்டதன் காரணமாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு சென்றார்கள்.

    இது பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கிராம பட்டையதாரர்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சில மாதங்களுக்கு முன்பு வடக்கு வாசலை திறந்து வைத்தார். இந்நிலையில், திருப்பணிகளை விரைவாக நடத்தி முடித்து விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும், திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மிகுந்த வேதனையில் இருக்கும் பக்தர்கள் முறையாக கோவில் திருப்பணிகள் நடைபெறுவதற்கு தொல்லியல் துறை அனுமதி கொடுத்து உள்ளதா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர். மேலும் கட்டுமான பணிகளுக்கான கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் பல மாதங்களாக அப்படியே உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரசித்தி பெற்ற கோவிலையும் ஆய்வு செய்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இக்கோவில் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று குறிப்பிடும் 10 அவதாரங்களில், வாமன அவதாரத்திற்குரிய தலமாக கேரள மக்களால் வழிபடப்படும் ஆலயம் இது.
    கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின், வரலாற்றைச் சொல்லும் இடமாக ‘திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்’ விளங்குகிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று குறிப்பிடும் 10 அவதாரங்களில், வாமன அவதாரத்திற்குரிய தலமாக கேரள மக்களால் வழிபடப்படும் ஆலயம் இது.

    அசுர குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கேரளநாட்டை ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களின் மீது பற்றுகொண்டவனாக இருந்தான். இந்த மன்னனை, வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், மூன்றடி மண் கேட்டு பாதாள உலகத்திற்குள் தள்ளிய இடத்தில் திருக்காட்கரை ஆலயம் அமைந்திருப்பதாக சிலர் சொல்கின்றனர்.

    மகாபலி சக்கரவர்த்தி காலத்திற்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவின் வாமன தோற்றத்தைப் பார்க்க விரும்பினார். இதையடுத்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, இறைவன் வாமன தோற்றத்தில் காட்சியளித்த இடமே இந்த ஆலயம் இருக்கும் பகுதி என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இந்தக் கோவிலில் கபில தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டே, இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் பெருமாள் வாமன அவதாரத் தோற்றத்தில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கிய நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் இத்தல இறைவன், ‘திருக்காட்கரையப்பன்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘வாத்சல்யவல்லி’ என்பதாகும். இதற்கு ‘பெருஞ்செல்வ நாயகி’ என்று பொருள். இந்த ஆலயத்தில் பகவதி அம்மன், சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்ம ராட்சசன், யட்சி ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன.

    இந்த ஆலய இறைவனை போற்றி, நம்மாழ்வார் 10 பாசுரங்கள் பாடியிருக்கிறார். குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்பு பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி வழிபடுகிறார்கள். திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழைப் பழங்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் அரச மரம் ஒன்று உள்ளது. இதன் வேர் பகுதி பிரம்மா என்றும், நடுப்பகுதி விஷ்ணு என்றும், மேல் பகுதி சிவபெருமான் என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மரத்தை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கிறார்கள். மரத்தடியில் மேடை கட்டி, அதில் மாட விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆயில்ய நட்சத்திர நாளில் இங்கு பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாக இன பழங்குடி மக்கள் ‘புல்லுவன்’ என்ற பாடலை பாடுகிறார்கள்.

    பழமையான சிவாலயம்

    ஆலயத்தின் பின்புறம் ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்ற சிவாலயம் உள்ளது. இங்கு மகாபலி சக்கரவர்த்தி நிறுவி வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. திருக்காட்கரையப்பன் கோவிலைவிடவும், இந்த சிவாலயம் மிகவும் பழமைவாய்ந்தது. சிவன் கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வருபவர்கள், முதலில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னரே இங்கு வந்து வாமனரை வழிபடும் வழக்கம் இருக்கிறது. வாமனருக்கு பால்பாயசமும், சிவபெருமானுக்கு நெய் பாயசமும் படைக்கப்படுகிறது.

    கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரை என்ற இடத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. திருச்சூரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது, திருக்காட்கரை திருத்தலம்.

    நேந்திரம் வாழை வரலாறு

    திருக்காட்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். ஆனால் வாழை சரியான விளைச்சலை அளிக்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அந்த விவசாயி, திருக்காட்கரையப்பன் கோவிலுக்குச் சென்று, “இறைவா.. உன்னுடைய கண் பார்வை, வாழை பயிரிட்டுள்ள என் நிலத்தில் பட வேண்டும்” என்று மனமுருக வேண்டிக்கொண்டார். திருக்காட்கரையப்பனும், தன் பக்தன் நிலத்தைத் தன் கண்களால் பார்த்தார். இதனால் அவர் பயிரிட்ட வாழை பயிர் அதிக விளைச்சல் கண்டதுடன், அதில் விளைந்த வாழை, பெரிய அளவில் இருந்தது. இறைவனின் கண் பார்வையால் விளைந்த வாழை என்பதால் அதற்கு ‘நேத்திரம் வாழை’ என்று பெயர் வந்தது. கண்ணுக்கு ‘நேத்திரம்’ என்ற பெயர் உண்டு. இதுவே காலப்போக்கில் மருகி, ‘நேந்திரம் வாழை’ என்று ஆனது.

    பிரம்ம ராட்சசன் சன்னிதி

    திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழையை படைப்பது வழக்கம். ஒரு விவசாயியின் நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழை, தங்கமாக இருந்தது. அந்த வாழையை கோவிலுக்கு அவர் காணிக்கையாக செலுத்தினார். ஒரு முறை ஆலயத்தில் இருந்த அந்த தங்க வாழை காணாமல் போனது. அந்தச் செய்தி, நாட்டு மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னன் சில காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள் கோவிலுக்கு வந்தபோது, அங்கே ஒரு யோகி தியானத்தில் இருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மன்னன் முன்பாக நிறுத்தினர். மன்னனும் யோகியை, சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.

    இதற்கிடையில் தங்க வாழை கிடைத்துவிட்டது. உடனடியாக யோகியை விடுதலை செய்ய மன்னன் உத்தரவிட்டான். இருப்பினும் செய்யாத தவறுக்காக தண்டனை பெற்ற யோகி, தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர் பிரம்மராட்சசனாக மாறினார். பின்னர் மன்னனுக்கும், மற்றவர்களுக்கும் துன்பம் அளித்தார். மன்னன் தன் தவறுக்கு வருந்தி திருக்காட்கரையப்பனை சரணடைந்தான். பின்னர் கோவில் வளாகத்திலேயே யோகிக்கு ஒரு சன்னிதியை எழுப்பினான். பிரம்மராட்சசனாக இருந்த யோகிக்கு, அங்கு தினமும் வழிபாடு நடத்தி அவரது கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதியை திருக்காட்கரையப்பன் கோவிலில் இன்றும் பார்க்கலாம். இதனை ‘பிரம்மராட்சசன் சன்னிதி’, ‘யோகி சன்னிதி’ என்றும் அழைக்கிறார்கள்.

    செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
    பூமியில் இருக்கும் அனைத்தின் மீதும் நவகிரகங்களின் தாக்கம் இருக்கின்றன என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். நமது முன்னோர்கள் காலத்தை நமக்கு காட்டும் நாள், வருடம் போன்றவற்றில் 7 நாட்கள் கொண்ட ஒரு வாரம் காலத்திற்கு ராகு கேது கிரகங்களை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு வார தினங்களுக்கு பெயர் வைத்தனர். அந்த வகையில் செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடன் செவ்வாய் கிழமை உண்டாயிற்று. இந்த செவ்வாய் கிழமை அன்று மேற்கொள்ள படும் செவ்வாய் கிழமை விரதம் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    நவகிரகங்களில் ஒரு மனிதனின் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், பூமி சம்பந்தமான சொத்துகள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார். ஜாதகத்தில் இந்த செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் மேற்கண்ட அனைத்து விஷயங்களில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி நன்மைகளை பெற செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப் பெருமானை செவ்வாய் கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும்.

    செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

    மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை உளமார வழிபடுவதால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மையான பலன்கள் உண்டாகும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துகள் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
    ×