என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இந்தக் காலத்தில் எல்லோரையும், எல்லா இடத்திலும் காத்து நிற்பவன் செவ்வேள். முருகன் அன்பு வடிவம். அன்பே சத்தியம், அன்பே நித்தியம் என்று அவனைப் போற்றுகிறது கந்தகுரு கவசம்.

    வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகிறது. வள்ளியை மணம் புரிய கந்தன் வள்ளிமலை நோக்கிச் செல்லும்போது தீர்த்தகிரி மலையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறியதாகக் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக மருகனின் பாதச் சுவடுகள் மலையேறிச் செல்லும் பாதையில் உள்ளது.

    வள்ளிக்கும், முருகனுக்கும் இங்கு சம உயரத்தில் சிலை அமைந்துள்ளது. ஆலயத்தின் பின்புறம் தெரியும் பசுமை மலை கண்ணுக்கு இதமான விருந்து. மலைக்கூட்டத்தில் சின்ன மலையின் மீது முருகனின் ஆலயம் உள்ளது. அடிவாரத்தில் செல்வ விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இங்கிருந்து சன்னதிக்கு மலையேறும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைமீது வாகனங்கள் செல்லவும் வழி உள்ளது.

    222 படிகள் உள்ளது.. படியேறும் போது பத்து படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகனின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இடது புறம் கன்னிமார்கள் சன்னதியும், வலது புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரமும் காட்சி தருகின்றது. மலையில் அழகான ஆலயம் கண்ணையும், மனதையும் கவருகிறது. ஆலயத்தின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தலமரமான நாவல் மரம் ஆகியவை காணப்படுகிறது. ஆலமரத்தின் அடியில் ஒரு பாறையின் கீழ் இன்றும் சுனை நீர் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே இத்தலம் தீர்த்தகிரி என்று அழைக்கப் படுகிறது.

    வள்ளியை காதலித்து மணந்த முருகன் தன் மனைவிக்கு சம மான இடம் தந்திருக்கிறான். தன்னில் பாதியாக மனைவியைக் கருதி அவளுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்று காண்பிக்கிறான் குமரன். எனவே இங்கு காதல் திருமணம்தான் அதிகம் நடக்கிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் முருகன் அழைத்தவர் குரலுக்கு உடனே ஓடி வருகிறான். இதையே தன் கந்தர் அலங்காரப் பாடலில் “சொன்ன கிரவுஞ்ச கிரியூடுருவ” என்கிறார்.

    பொன் மயமான கிரவுஞ்ச மலையைப் பிளந்து அதில் அடைந்து கிடந்த லட்சக் கணக்கான வீரர்களையும், பூதத் தலைவர்களையும் காப்பாற்றினார்
    கடம்ப மலர்மாலை அணிந்தவன், ஞானத்திற்கு எல்லையாக விளங்கும் மவுன நிலையை அடைந்து மெய்யறிவால் உன்னை அறிந்து, நான் என்ற எண்ணம் முழுதும் அழிந்தே விட்டது. உனைத் துதிக்கும் நிலை தவிர வேறு எதுவும் வேண்டேன் என்கிறார்.

    நம்மை அறிந்து நான் என்ற எண்ணம் அழிந்து கடம்பனே கருத்தில் நிறைந்த பிறகு அங்கு எந்த ஒரு துன்பத்திற்கும் இடம் இல்லை என்பதே உண்மை. நம் துன்பங்கள் தீரவே, மனதில் உள்ள அசுர குணங்கள் அழியவே முருகனின் அவதாரம் நிகழ்ந்தது. இதையே கந்தர் அந்தாதியில் அடியார் களுக்கு அருளும் வரப் பிரசாதத்தை உடைய, மயிலின் மேல் ஏறி கிரவுஞ்ச மலையைத் தன் வேலால் தூளாக்கிய முருகப் பெருமானின் திருவடிகளை நான் அணுகாத காரணத்தினால், பஞ்ச இந்திரியங்களின் செயல்களால் என் இதயம் இருளில் மூழ்கி இருக்கிறது என்கிறார் அருணகிரி நாதர்.

    தீர்த்தகிரியில் இவர் பாடிய திருப்புகழ் நம் அனைவருக்கும் முருகனின் பெருமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. நல்ல நெறிகளை அறியவில்லை. இந்திரியங்களின் பின்னே ஓடுகிறோம். எழுதிய தலைவிதி என்பது எந்த வழியாக ஓடுகிறது என்பதையும் அறியவில்லை என்று அறிவுரை கூறுவது போல் அமைந்துள்ளது.

    மனம் பாட்டின் பொருளையும், சொல்லையும் கேட்டு உருகுவதில்லை. யமன் வரும் வழியைக் கண்டும் பக்தியால் உருகுவதே, தினந்தோறும், கஷ்டங்களை அனுபவித்தாலும்,உண்மைப் பொருளை நாடி அணுகுவதில்லை. பாழ்படும் இந்தப் பிறப்புகளிலேயே ஈடுபடுகின்றது மனம். வேலை வாய்ப்பு, திருமண வரம், குழந்தை வரம் என்று வேண்டியதை அள்ளித் தரும் அருள் வள்ளல் முருகன்.

    இங்கு ஆடிக் கிருத்திகை மூன்று நாள் விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இது தவிர, சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை போன்றவை சிறப்பாகச் செய்யப்படுகிறது. மலேசியா பத்துமலை முருகன் சிலையைப் போலவே இங்கும் 108 அடி உயர முருகன் சிலை அமைக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்துமலை முருகன் சிலையைச் செய்த சிற்பியே இந்தச் சிலையையும் வடிவமைத்துள்ளார்.

    சென்னை&வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வசூர் ஊரின் எல்லையில் அமைந்துள்ளது தீர்த்தகிரி. சோழர்களும், விஜய நகர அரசும் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்திருக்கிறது. தீர்த்தகிரி தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை போலவே இங்கும் பல சித்தர்கள் பல வடிவங்களில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது.

    தீர்த்தகிரியில் பல தீர்த்தங்கள் இருந்தாலும் ராம தீர்த்தம் மிக விசேஷமானது. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு வந்து வழிபட்டார் என்பது நம்பிக்கை. தீர்க்க முடியாத பெரிய பாபங்களைச் செய்தவர்கள் இங்கு வந்தால் அவர்கள் ராம தீர்த்தத்தில் நீராட விடாமல் இங்குள்ள குரங்குகள் நீரைத் தடுக்கும் என்பதைப் பலர் கண்டிருக்கிறார்கள்.

    ஜி.ஏ.பிரபா

    gaprabha1963@gmail.com

    சீர்காழி சட்டநாதர்கோவிலில் குடமுழுக்கு திருப்பணி விழா தொடங்கியது. இதில் தருமபுரம், மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்கள் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்மன்- பிரம்மபுரீஸ்வரர் கோவிலான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு அம்மன் ஞானப்பால் ஊட்டிய இடமாகும்.

    மூன்று தளங்களில் அமைந்துள்ள இந்த கோவில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலை மீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரர் கோலத்திலும், அதற்கு மேல் உள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவன் ஒரே கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    அஷ்ட பைரவர்களுக்கும் தனி சன்னதியாக உள்ள இந்த கோவில் பைரவ ஷேத்திரம் என்று கூறப்படுகிறது. சமயக் குரவர்களால் தேவாரம் பாடப்பெற்ற இந்த கோவிலில் 1991-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி குடமுழுக்கிற்கான திருப்பணிகள் நேற்று ெதாடங்கின.

    இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நேற்று காலை சிறப்பு வழிபாடு பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் ஈசானிய மூலையான வடகிழக்கு மூலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 27-வது மடாதிபதி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காறு பாறு சபாபதி தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி சட்டநாதர் கோவில் குடமுழுக்கு பணிகள் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    இத்துதியை பூர நட்சத்திர தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர்.
    ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
    ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்
    ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
    கோதாம் அனஸ்ய சரண:சரணம் ப்ரபத்யே

    -ஸ்ரீகோதாஸ்துதி

    பொதுப் பொருள்: கற்பகவிருட்சத்தில் பூக்கும் மலர் போல விஷ்ணு சித்தரின் குலத்தில் அவதரித்த ஆண்டாளே நமஸ்காரம். ஹரிசந்தன மரத்தின் கீழ் வாசம் செய்யும் ரங்கராஜனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே நமஸ்காரம். பூமிதேவியின் அம்சத்தைக் கொண்ட தாயே, உன் மனம் போல் மாங்கல்யம் அமைந்தாற்போன்று எனக்கும் அருள் செய்வாயாக. மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்ட அன்னையே! என் வாழ்க்கையில் மங்களமும், வளமும் பெருக வரமருள்வாய் அம்மா.

    இத்துதியை பூர நட்சத்திர தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர். செல்வச் செழிப்பும் ஏற்படும்.

    திருக்கல்யாணம் முடிந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் சுவாமி- அம்பாள் பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 12-ந் தேதி அன்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    அது போல் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சுபமுகூர்த்த நாளில் சுவாமி-அம்பாளுக்கு புது பள்ளியறை நிகழ்ச்சி நடத்தப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் சாமி-அம்பாளின் புது பள்ளியறை நிகழ்ச்சியானது நேற்று இரவு ராமேசுவரம் கோவிலில் நடைபெற்றது. அதற்காக இரவு 8 மணி அளவில் சாமி மற்றும் அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதை. தொடர்ந்து கருவறையில் உள்ள சாமி சன்னதியில் இருந்து தங்கத்தாலான சாமி சிலையானது குருக்கள் ஒருவரால் தூக்கி வரப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் வைக்கப் பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சாமி வைக்கப்பட்ட வெள்ளி பல்லக்கு பிரகாரத்தை சுற்றி கொண்டு அம்மன் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அங்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த புது பள்ளியறையில் உள்ள தங்க ஊஞ்சலில் சாமி வைக்கப்பட்டது. அங்கு முன்னதாக அம்பாளின் சிலையும் வைக்கப்பட்டது. தொடர்ந்து தங்க ஊஞ்சலில் வைக்கப்பட்ட சாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ஆண்டுதோறும் திருக்கல்யாணம் முடிந்து ராமேசுவரம் கோவிலில் நடைபெறும் புதுப்பள்ளியறை நிகழ்ச்சியை காண உள்ளூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக நேற்று புது பள்ளியறை நிகழ்ச்சியை காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் வெளியேற்றப்பட்டனர்.

    இதனால் பள்ளியறை முன்பு அம்மன் சன்னதி பிரகாரம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும். அதேபோல, இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 18-ந் தேதி தொடங்கியது.

    இந்த உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 24-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப் பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.30 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக சயனப் பெருமாளை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனப் பெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
    கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
    அறுபடை வீடுகளின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 7-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது.

    திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து மற்ற காலபூஜைகள் நடந்தது.

    கொடியேற்றத்தையொட்டி கொடிபட்டம் கோவில் கிரிபிரகாரத்தை சுற்றி வந்தது. அதனை தொடர்ந்து 5.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் மகாதீபாராதனை நடைபெற்றது.

    கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

    கொடியேற்றம் உள்பட திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் யூ-டியூப் மூலம் பக்தர்கள் காண கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்தவாறே அதனை பார்த்து தரிசனம் செய்தனர்.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் தக்கார் கருத்தப்பாண்டி நாடார், திருவாடுதுறை ஆதீனத்தை சேர்ந்த அம்பலவாண சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா நாட்களில் நடைபெறும் சப்பர பவனி, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது.

    கோவிலின் ஆகமவிதிப்படி அனைத்து நிகழ்ச்சி களும் பணியாளர்கள் மூலம் நடக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு விழா 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க வேளாங்கண்ணி பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் பிரபாகர் நேற்று பேராலய விழாவிற்கான பத்திரிகையை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    தற்போது கொரோனா பரவலை தடுக்க பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு மற்றும் திருச்சபை வழங்கும் ஒழுங்கு நடைமுறைகளை பேராலய நிர்வாகம் கடைபிடித்து 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றும் நிகழ்ச்சிபக்தர்கள் இன்றி நடைபெறும். திருப்பலிகள் பேராலயத்துக்குள் நடைபெறும்.

    தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோசின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் கொடியேற்றம், நவநாள் மற்றும் திருப்பலிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் யாரும் நேரில் வர வேண்டாம். விழா நிகழ்ச்சிகள் பேராலய இணையதளம் மற்றும் தொலைக்காட்சி, யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதித்து கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
    தூத்துக்குடி :

    தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளிலும் வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவித்து உள்ளார். அதன்படி, கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைபடுத்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்று கருதப்படுகிறது.

    எனவே, கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

    எனினும் கோவிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்ச்சிகளும் பணியாளர்கள் மூலம் நடைபெறும். ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை பக்தர்கள் வீட்டில் இருந்து இணையதளம் மூலமாக காணும் வகையில் கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே, பக்தர்கள் வீட்டில் இருந்தே சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வழிபட அமைக்கப்பட்டிருந்த விளக்கணி மாடங்கள் சேதமடைந்ததால் அவை அனைத்தும் மாற்றப்பட்டன.
    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தமிழக அறநிலையத்துறை மற்றும் தனியாரின் பங்களிப்புடன் ரூ.6½ கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீகிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதியை சுற்றி தீபம் ஏற்றி வழிபட அமைக்கப்பட்டிருந்த விளக்கணி மாடங்கள் சேதமடைந்ததால் அவை அனைத்தும் மாற்றப்பட்டன.

    தற்போது தனியார் ஒத்துழைப்புடன் ரூ.39 லட்சம் செலவில் புதிதாக விளக்கணி மாடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பணிகள் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி தேக்கு மரச்சட்டம் கொண்டு வரப்பட்டு, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விளக்கணி மாடம் அமைக்கும் பணிகள் வரும் நாட்களில் நடைபெறும் என கோவில் மேலாளர் மோகன்குமார் தெரிவித்தார்.
    காக்கும் கடவுளான திருமால், இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தன்னுடைய மார்பில் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபாடு செய்து வந்ததாக, புராணங்கள் தெரிவிக்கின்றன.
    இந்து சமயம், சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு), சாக்தம் (சக்தி), கவுமாரம் (முருகன்), சவுரம் (சூரியன்), காணாபத்தியம் (விநாயகர்) என ஆறுபிரிவுகளைக் கொண்டது.

    இதில் சிவன், சக்தி, முருகன் மூன்றும் இணைந்த வடிவமாக இருப்பது ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு. சிவபெருமானும், பார்வதியும் இருக்க அவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் இருக்கும் இந்த வடிவம், நல்புத்திரப்பேறு நல்கும் சக்தி படைத்தது. உண்மையாகிய சிவனும், அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது கந்தன் என்ற இன்பம் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த ‘சோமாஸ்கந்தர்’ இருக்கிறார்.

    சுகாசனமூர்த்தியான சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்து, பார்வதியின் பக்கம் சற்றே முகம் சாய்த்துப் பார்க்க, அதே ஆசனத்தில் வலது காலை மடக்கி, இடது காலை தொடங்கவிட்ட நிலையில் பார்வதி வீற்றிருக்கிறாள். அவளது இடது கையில் வரத முத்திரையும், வலது கையில் குவளை மலரும் தாங்கியுள்ளாள். இருவருக்கும் இடையில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இவர் பார்வதியின் கழுத்தளவு உயரத்திற்கு நின்ற நிலையில் இருப்பார்.

    இதைத்தவிர வேறு கோணங்களிலும் கூட சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசிக்கலாம்.

    காக்கும் கடவுளான திருமால், இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தன்னுடைய மார்பில் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபாடு செய்து வந்ததாக, புராணங்கள் தெரிவிக்கின்றன.

    அசுரர்களின் துன்பத்தில் இருந்து மீள்வதற்காக இந்திரன் திருமாலை வழிபட்டான். அவனுக்கு திருமால் சோமாஸ்கந்த மூர்த்தியை வழங்கினார். அதனை இந்திரலோகத்தில் வைத்து பூஜித்து வந்தான். அதன்பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியோடு, அசுரர்களை வென்றான். இந்திரன் வைத்திருந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தனக்குத் தரும்படி, முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டார்.

    அதற்கு இந்திரன், “இது விஷ்ணுவுடையது. அவர் சம்மதம் இல்லாமல் நான் தரமுடியாது” என்று கூறினான். இதையடுத்து முசுகுந்த சக்கரவர்த்தி, திருமாலை வணங்கி அந்த சிலையை பெறுவதற்கான அனுமதியை பெற்றான். ஆனாலும் அந்தச் சிலையை கொடுக்க மனம் இல்லாத இந்திரன், தேவ சிற்பியைக் கொண்டு அதே போன்று 6 வடிவங்களைச் செய்தான். அதில் சரியான சிலையை முசுகுந்த சக்கரவர்த்தி எடுத்துவிட, மற்ற சிலைகளையும் அவனிடமே கொடுத்து, பூலோகத்தில் வைத்து பூஜிக்கும்படி இந்திரன் அறிவுறுத்தினான்.

    திருமால், இந்திரன் இருவரும் பூஜித்த சோமாஸ்கந்த மூர்த்தியை, முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் நிறுவினார். மற்ற ஆறு மூர்த்திகளையும் திருநாகைக்காரோணம், திருநள்ளாறு, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு, திருக்கோளிலி ஆகிய தலங்களில் நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார்.

    சோமாஸ்கந்த மூர்த்தியே இத்தலங்களில் தியாகராசர் என்ற பெயருடன் விளங்குகின்றார். இத்தலங்கள் `சப்த விடங்கத் தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது.
    மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

    பொதுவாக சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, சிவன் சன்னிதியின் கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்தியை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியே இருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னிதி இருக்கிறது. ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது, திருவிடைமருதூர். இங்கு மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில், கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

    தஞ்சாவூர் மாவட்டம் மேலைத்திருப்பூந்துருத்தியில் புஷ்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, கையில் வீணையுடன் ‘வீணா தட்சிணாமூர்த்தி’யாக அருள்பாலிக்கிறார்.

    பணியில் இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற பிரச்னைகள் தீர்த்து வைப்பதிலும் எதிர்பார்க்கும் பணியை கிடைக்கச் செய்வதிலும் சித்தலிங்கேஸ்வரரின் அருள் சிறந்து விளங்குகிறது என்ற வலுவான நம்பிக்கை உள்ளது.
    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் பாதையிலுள்ள சுந்தராபுரம் மற்றும் குறிச்சியும் அடர்ந்த காடாக இருந்தன. இந்த வனப்பகுதியில் சித்தர்களும் தவயோகிகளும் வசித்து வந்தனர். இங்கு விவசாயம் தழைத்திருந்தது. விவசாயிகள், இறைவனை வழிபட சித்தர்கள் வாழ்ந்த இடத்தில் வழிபாட்டு தலம் ஒன்றை அமைத்தனர். இதனாலேயே மூலவர் சித்தலிங்கேஸ்வரர் ஆனார்.

    நுழைவாயிலைத் தாண்டியதும் மகாமண்டபம். எதிரே கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். கருவறையின் நுழைவாயிலின் இடதுபுறம் ஆதி விநாயகரும், வலதுபுறம் ஆதிமுருகனும் பக்தர்களை வரவேற்கின்றனர். தவிர, கருவறையின் இடதுபுறம் வரசக்தி விநாயகருக்கும், வலதுபுறம் முருகனுக்கும் தனித்தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன. விநாயகர் சந்நதியின் முன்னால் மூஞ்சூரும், பலி பீடமும்; முருகன் சந்நதிக்கு எதிரே மயிலும், பலிபீடமும்! மகாமண்டபத்தின் இடதுபுறம் விஷ்ணு துர்க்கை மிக அழகிய கோலத்தில் காட்சி தருகிறாள்.

    கல்யாண சுப்ரமணியர், வள்ளி-தெய்வானையுடன் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். பிராகாரத்தின் மேற்கு திசையில் விநாயகரும், நாகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதேபோல முருகப் பெருமானுக்கு சஷ்டி, கிருத்திகை, விசாகம் போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஐப்பசி மாதம் கந்தசஷ்டி அன்று முருகப் பெருமான் வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வருவதுண்டு. ஐப்பசி மாத பௌர்ணமியில் அருள்மிகு சித்தலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.கார்த்திகைத் திங்கள் கடைசி சோமாவாரம் அன்று சித்தலிங்கேஸ்வரருக்கு சங்காபிஷேகம் சிறப்புடன் நடைபெறுகிறது. பிரதோஷம், அமாவாசை நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. ஆடிக்கிருத்திகை அன்று பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பால்குடம் எடுத்து வரும் காட்சி மிக அற்புதமானது.

    மாதத்தின் முதல் சனிக்கிழமையில் நவகிரக நாயகர்களுக்கு தோஷ பரிகாரப் பூஜைகள் நடைபெறுகின்றன. விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ள இங்கு பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்கு கற்பூர தீப ஆராதனை இல்லை; தீப ஆராதனை மட்டுமே. அர்ச்சனை யாவும் தமிழிலேயே செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறைவனுக்கு பொங்கல் படையல் வைத்து பிரார்த்தனை செய்து அந்தப் பொங்கலை விநியோகம் செய்து நற்பலன் பெறுகிறார்கள். இங்கு இரவு 8.30 மணி அளவில் நடைபெறும் அர்த்தசாம பூஜை மிகவும் விசேஷமானது. கையில் தீபத் தட்டுடன் திருவங்கமாலை பாடியபடி அர்ச்சகர் பிராகாரத்தை வலம் வருவார். அவரைத் தொடர்ந்து பல சுமங்கலிப் பெண்கள் கையில் விளக்குத் தட்டுகளுடன் பாடியபடி பிராகாரத்தை வலம் வருகிறார்கள். அந்தப் பாடல் ஓசை கேட்போர்  இதயங்களை கொள்ளை கொள்வது அனுபவபூர்வமானது. அனைவரும் பாடியபடி மூன்று முறை பிராகாரத்தை வலம் வந்தபின் நடை சாத்தப்படுகிறது.

    பணியில் இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற பிரச்னைகள் தீர்த்து வைப்பதிலும் எதிர்பார்க்கும் பணியை கிடைக்கச் செய்வதிலும் சித்தலிங்கேஸ்வரரின் அருள் சிறந்து விளங்குகிறது என்ற வலுவான நம்பிக்கை உள்ளது. கோவை, உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து மதுக்கரை செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவிலுள்ளது குறிச்சி.
    ×