என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    விஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் தான் கிருஷ்ணா அவதாரம், அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலஷ்டமியாக கொண்டாடுகிறார்கள்.
    எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்... என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். விஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் தான் கிருஷ்ணா அவதாரம், அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலஷ்டமியாக கொண்டாடுகிறார்கள். வட இந்தியாவில் ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்டு 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.

    அதற்கு முன்பு பகவான் கிருஷ்ணர் அவதாரத்தை தெரிந்து கொள்வோம்... ... ...

    ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின் சிறைச்சாலையில் இருந்த வசுதேவர் - தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் அவதரித்தார்.

    3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.

    தன்னை வதம் செய்யவே கண்ணன் பிறந்திருக்கிறான் என்று எண்ணினான் கம்சன். அதனால் அவனை அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். முதலில் வந்தவள் பூதனை என்ற அரக்கி. அவள் பால் தருவது போல் நடித்தாள். ஆனால் கண்ணனோ அவளிடம் பாலைக் குடிப்பது போல் குடித்து அவளைக் கொன்று விட்டார்.

    அரக்கியை தொடர்ந்து அரக்கர்கள் பல்வேறு உருவங்களில் வந்தார்கள். பராசுரன் கொக்காகவும், தேனுகாசுரன் கழுதையாகவும், பிரலம்பன் சிறுவனாகவும், அரிஷ்டன் காளையாகவும், கேசி குதிரையாகவும் உருவம் எடுத்து கண்ணனைக்கொல்ல முயன்றனர். ஆனால் 5 வயதில் இருந்த கண்ணன் அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொன்றார்.
    இதுபோன்று கண்ணனுக்கு தொடர்ந்து இடையூறுகள் வந்தாலும், அவரது வளர்ப்பு பெற்றோரான நந்தகோபனும், யசோதையும் மற்றும் கோகுலவாசிகளும் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கும் காளிங்கமடுவில் காளிங்கன் என்ற அசுரன் இருந்துகொண்டு அட்டகாசம் செய்து வந்தான். கண்ணன் அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் ஆடி அவனை அடக்கினார். இந்திரனது சூழ்ச்சியினால் பெய்த அடை மழையில் இருந்து கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்து பசுக்களையும், அங்கு இருந்த மக்களையும் காப்பாற்றினார்.

    கண்ணன் பிறந்தது விரஜபூமி என்ற வட மதுரா. வளர்ந்தது கோகுலம். வடமதுரா முக்தியளிக்கும் 7 நகரங்களுள் ஒன்று.கண்ணன் என்றால் ராதை, ருக்மணி, பாமா-இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால் கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு. ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தை, சத்யவதி, பத்திரை, லட்சுமணை இப்படி 8 பேர் பட்ட மகரிஷிகள். ஒவ்வொரு மனைவிக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன.

    கிருஷ்ணரின் பிள்ளைகளில் மிகவும் புகழ் பெற்றவர்கள் 18 பேர். அவர்கள் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாஹூ, விருபன், கவிநியோக்தன்.

    தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட்பதற்கே இனிமையாக இருக்கும். ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது... நீர் ஏந்திவரும் பெண்களின் குடங்களை கல்விட்டு உடைப்பது... வெண்ணையை திருடி உண்பது... போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.

    கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பினான். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் கண்ணன் கொன்று குவித்தார். அதனால் கோபம் கொண்ட கம்சன், “நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன் அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்” என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறினான். அமைச்சரும் அங்கு வந்தார். பலராமனும், கண்ணனும் கம்சனின் யாகசாலைக் குச்சென்றனர்.

    வழியில் குவலயபீடம் என்னும் யானைக்கு மதம் பிடித்தது. அது துதிக்கையால் இரும்பு உலக்கையை தூக்கி, கண்ணனனையும், பலராமனையும் தாக்க முயன்றது. அப்போது யானையின் தந்தத்தை ஒடித்து யானையையும், பாகனையும் கொன்றார் கண்ணன்.

    பின்னர் மல்யுத்த அரங்கிற்கு சென்றனர். அங்கு கண்ணனை அழிக்க சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற மல்யுத்த வீரர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்தார். இதைக்கண்ட அனைவரும் கண்ணனைப் பாராட்டினர். ஆனால் கம்சனுக்கு மட்டும் கண்ணணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

    ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் வெட்டி சாய்ந்து விட்டு, வசுதேவர், தேவகியைக் கொல்லுங்கள் என்று அவன் கூறினான். உடனே கண்ணன் தனது 7-வது வயதில் அவன் மீது ஏறிக் குதித்து, அவனது தலையை பிடித்து தரையில் வேகமாக அடித்துக்கொன்றார். இத்துடன் கம்ச வதம் முடிந்தது.

    கம்சனின் சிறையில் இருந்த தாய், தந்தை, பாட்டனார், உக்கிரசேனர் என்று அனைவரையும் விடுவித்து, கோகுலத்திற்கு அழைத்துச் சென்றார் கண்ணன்.
    கம்ச வதத்திற்குப்பின்பு மக்கள் பயமின்றி வாழ்த்தனர். பலராமனுக்கும், கிருஷ்ணருக்கும் சாந்தி பீவி என்ற முனிவர் ஆயக்கலைகள் அறுபத்துநான்கையும் கற்றுக்கொடுத்தார். அதற்கு குருதட்சணையாக, வெகுநாட்களுக்கு முன்பு கடலில் தவறி விழுந்த எனது மகனை உயிருடன் கொண்டு வந்து கொடுங்கள் என்றார். நீண்ட போராட்டங் களுக்குப் பின்னர் எமனிடம் இருந்து குருவி னுடைய மகனை மீட்டுக் கொடுத்தனர். துவாபரயுக முடிவில் கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது.

    கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வட இந்தியாவில் இரவு 12 மணி வரையிலும் உபவாசம் இருந்து, பஜனை செய்கிறார்கள்.

    ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று காலையில் வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தி மாவை கொண்டு கோலம் இட்டுக் கொள்வார்கள். வீட்டு வாசலில் இருந்து பூஜை செய்யும் இடம் வரையில், சிறு குழந்தை ஒன்று நடந்து வந்த காலடித் தடங்கள் போன்று பாதச் சுவடுகளை பதிய வைப்பார்கள்.
    பூஜை அறையில் கிருஷ்ணரின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து, அதற்கு சந்தனம், குங்குமப் பொட்டு இட வேண்டும். மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்ய வேண்டும். பூஜை ஆரம்பித்தவுடன் கண்ணன் பற்றிய பக்திப் பாடல்களை பாட வேண்டும்.

    குழந்தைகளின் உடல் நலனுக்கு நோய் ஏற்படுத்தாத சீடைகள், முறுக்கு வகைகள் போன்றவற்றை யசோதை கண்ணனுக்கு வழங்கி வந்தாள். அதனை நினைவுகூறும் வகையில் வெல்லச்சீடை, உப்புச்சீடை, முறுக்கு மற்றும் லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்ற தின்பண்டங்களை செய்து பூஜையில் வைக்க வேண்டும்.

    பூஜை முடிந்தவுடன் கண்ணனுக்கு ஆரத்தி கரைத்து வைக்க வேண்டும். தொடர்ந்து, வீட்டிற்கு வந்துள்ள அனைவருக்கும் நைவேத்தியம் செய்த பதார்த்தங்களை வழங்க வேண்டும்.

    அன்றையதினம் மாலையில் சிலர், சிறு குழந்தைகளை கண்ணனை போன்று அலங்கரித்து மகிழ்வார்கள். கண்ணன் வேடத்தில் அந்த குழந்தைகள் வீட்டில் அங்கும், இங்கும் ஓடியாடி விளையாடும் போது அந்த கண்ணனே நம் முன் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படும்.

    ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.
    கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் எனக் கூறுகிறோம்.

    ஆனால் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

    இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.

    ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.

    ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

    ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

    ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
    மலை மாதேஸ்வரா கோவிலில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் பக்தர்களை தவிர பிற மாநில பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் மலை மாதேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியை சேர்ந்த பக்தர்களும் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் பக்தர்களை தவிர பிற மாநில பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

    இதனிடையே கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    இந்தநிலையில் கோவில் நிர்வாகம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதித்துள்ளது. மற்ற நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    அர்த்தசாம பூஜையின் போது, புனித நீரால் சுந்தரேசுவரர்-, மீனாட்சி அம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை நடந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடந்தது.

    இந்த திருவிளையாடலுக்கு இறைவன் சாதாரண மனிதராக வந்து பிரம்படி பட்டு, மண் சுமந்தார். இதற்காக வருகிற 1-ந் தேதி சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    அன்றைய தினம் காலை 7 மணிக்கு வேள்வி வளர்க்கப்பட்டு அங்குள்ள 108 கலசத்திற்கு விக்னேசுவர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், கலச பூஜை, ருத்ரம், பாராயணம், ருத்ரஹோமம் நடத்தப்படுகிறது. மாலையில் கலசத்திற்கு பூஜை நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெறுகிறது.

    பின்னர் அர்த்தசாம பூஜையின் போது, புனித நீரால் சுந்தரேசுவரர்-, மீனாட்சி அம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை நடந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

    வருகிற 1-ந் தேதி நடைபெறும் ருத்ர அபிஷேகத்திற்காக அபிஷேக திரவியங்களான பால், தயிர், சர்க்கரை, பழவகைகள், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி, திரவியபொடி, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களை கோவிலில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருச்சானூரில் 30-ந்தேதி மாலை ஸ்ரீகிருஷ்ணர் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    திருமலை, திருப்பதி, திருச்சானூர், கார்வேட்டிநகரம், சந்திரகிரி, நாராயணவனம், நாகலாபுரம் மற்றும் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துப் பெருமாள் கோவில்களில் வருகிற 30-ந்தேதி கோகுலாஷ்டமி விழா மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது.

    அதையொட்டி திருச்சானூரில் 30-ந்தேதி மாலை ஸ்ரீகிருஷ்ணர் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    9-ம் விழாவான இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை 10-ம் நாள் விழாவில் அய்யா வைகுண்டசாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி மிக எளிமையான முறையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் மிகக்குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவிழா 11 நாட்கள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 8-ம் நாளான நேற்று அய்யா வைகுண்டசாமி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா கொலுவீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்கினார். ராஜவேல் லோகாதிபதி முன்னிலை வகித்தனர்.

    தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு குறைவான அளவில் இருந்த பக்தர்கள் முன்னிலையில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    முத்திரி கிணற்றங்கரையில் இருந்து புறப்பட்ட குதிரை வாகனம் வடக்கு ரத வீதி மற்றும் வடக்கு வாசல் கோபுரத்தின் வழியாக தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு தவக்கால காட்சியளித்தார்.

    9-ம் விழாவான இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை 10-ம் நாள் விழாவில் அய்யா வைகுண்டசாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 30-ந் தேதி திங்கட்கிழமை 11-ம் நாள் விழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் இரவு தலைமை பதியின் உள்பகுதியில் வாகன பவனியும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவையும் எளிய முறையில் நடக்கிறது.
    ஆவணி கிருத்திகை தினத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் என்ன சிறப்பான பலன்களை பெறமுடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
    முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான ஒரு தினமாக ஆவணி கிருத்திகை தினம் இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ஆவணி மாதம் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கப் பெறுகிறது.

    முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

    வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

    இந்த ஆவணி மாத கிருத்திகை வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தடையால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி கோவில் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டன.

    எனினும் கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரம் முன்பும், 16 கால் மண்டபத்தின் முன்பும் நின்று கற்பூரம் மற்றும் விளக்கேற்றி வழிபட்டனர்.

    ஏராளமான பக்தர்கள் கோவிலின் வெளியில் நின்று சாமியை வணங்கி வழிபட்டனர். மேலும் தனித்தனியாக பக்தர்கள் கோவில் பின்புறம் உள்ள மலை சுற்றி கிரிவலம் சென்றனர்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி மாதம் தொடங்கியபின் நேற்று 6-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு சாலையில் வழிபாடு செய்தனர். வழக்கமாக ஆறாம் வெள்ளி திருவிழாவின் போது உற்சவ அம்மனுக்கு கமண்டல நதியில் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம். ஆனால் கொேரானா தொற்று கட்டுப்பாடு காரணமாக அம்மனுக்கு கோவில் வளாகத்தில் நேற்று தீர்த்தவாரி நடத்தி உட்பிரகார உலா நடந்தது.
    பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கோவில் முன்பு சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.
    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முக்கிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோவில்களில் தரிசிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

    நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் பூட்டி இருந்ததால் கோவில் தெற்கு வாசலில் உள்ள ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சூடம் மற்றும் விளக்கேற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு சென்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அங்கிருந்த போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கோவில் முன்பு சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள நாகநாதர் சுவாமி கோவில், திருச்சி இ.வி. ரோடு பகுதியில் உள்ள பூலோகநாதர் சுவாமி கோவில், பெரிய கடைவீதியில் உள்ள பைரவர் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், திருச்சி கோர்ட் அருகே உள்ள அய்யப்பன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மற்றும் பஞ்சவர்ண சுவாமி கோவில்.

    கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், வயலூர் முருகன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சாமிகளை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் கோவில்களில் தினமும் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். செப்டம்பர் 7-ந் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பெருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடு்த்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் ஆண்டு பெருவிழா நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே பக்தர்கள் இன்றி நாளை கொடியேற்றம் நடைபெறும் என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகளை இணையதளம், தொலைக்காட்சி மூலமாக தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவுபடியும், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின்படியும், வேளாங்கண்ணி செயல் அலுவலர் பொன்னுசாமி அறிவுறுத்தலின்படியும் வேளாங்கண்ணி ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை, சர்ச் சாலை, உத்திரியமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், பலசரக்கு கடைகள், பேன்சி ஸ்டோர்கள், மெழுகுவர்த்தி கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன.

    மேலும் பக்தர்கள் வருவதை தடுக்க பேராலயம் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் உள்பட 19 இடங்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேளாங்கண்ணி பஸ் நிலையத்திற்கு செல்லவும் அனுமதி இல்லை. அதேபோல் கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆண்டு பெருவிழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் மின்விளக்குகளால் கொடிமரமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


    வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், இந்த 3 நாட்களுக்கு மட்டும் கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், இந்த 3 நாட்களுக்கு மட்டும் கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கோபி கொண்டத்துக்காளியம்மன் கோவில், ஈரோடு ஈஸ்வரன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று நடைகள் சாத்தப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சாமி கும்பிட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சில பக்தர்கள், கோவில் வெளியே நின்று சாமி கும்பிட்டு விளக்கேற்றி வழிபட்டனர். இதன் காரணமாக நேற்று முக்கிய கோவில்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    திருக்கடையூர் கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்களும் புதுப்பித்து சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டி சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்- அபிராமி கோவில் உள்ளது. இந்த கோவில் அபிராமிபட்டராலும், சமய புலவர்கள் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்த சிறப்பு பெற்ற கோவிலில் 5 ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் பாலாலயம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் அனைத்து கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்களும் புதுப்பித்து சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டி சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    ×