என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஏரல் சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. விழாவையொட்டி கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
    ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா கடந்த 17-ந் தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய கொடை விழா நேற்று முன்தினம் நடந்தது.

    இதனை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மதியம் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு பக்தர்கள் கோவிலில் மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்து கொண்டு வருதல் போன்ற நேமிச கடன்களை செலுத்தினர்.

    இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் முன்பு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனை தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. தொடர்ந்து அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் வீட்டு முன் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். உலா சென்ற அம்மன் நேற்று காலையில் கோவில் வந்து சேரும் ஆனந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து கோவில் வளாகத்தில் பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இந்த ஆண்டு கொரோனா வெகுவாக குறைந்து வருவதால் கொடைவிழா அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் நடத்தப்பட்டது.
    வருகிற 29-ந்தேதி தொடங்கும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவை தொலைக்காட்சி-சமூக வலைதளங்களில் கண்டுகளிக்க வேண்டும் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் காரணமாக அனைத்து மத வழிபாட்டுத்தளங்களிலும் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் பாதையாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வந்து செல்வார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பக்தர்கள் பாதையாத்திரையாகவும், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக வருவதை தவிர்க்க வேண்டும்.

    இதற்கு பதில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஆராதனை நிகழ்ச்சிகளை, பக்தர்கள் தொலைக்காட்சி, செய்திதாள்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கண்டுகளிக்கலாம். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாதையாத்திரையாகவோ, வாகனங்கள் மூலமாகவே பக்தர்கள் வருவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குருவாயூர் கோவிலில் கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணத்தை நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.
    திருவனந்தபுரம்

    குருவாயூர் தேவஸ்தான தலைவர் மோகன்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குருவாயூர் கோவிலில் தினசரி தரிசனத்திற்கு தற்போது 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்பதிவு செய்யும் பலர் தரிசனத்திற்கு வருவதில்லை.

    இதனை கருத்தில் கொண்டு, கூடுதல் பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் தினசரி 100 திருமணங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணத்தை நடத்தவும் அனுமதிக்கப்படுவார்கள். நேற்று ஒரே நாளில் 88 திருமணங்கள் நடந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இத்துதியை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் தினமும் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண
    ருக்மிணீ ப்ரியவல்லப
    விவாஹம் தேஹிமே ஸீக்ரம்
    வாஸுதேவ நமோஸ்துதே

    இத்துதியை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் தினமும் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

    தங்கக்கோவில் பிரதிஷ்டை செய்து 14-வது ஆண்டு விழாவையொட்டி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவை நடந்தது.அதில் சக்தி அம்மா பங்கேற்று தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார்.
    வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கக்கோவில் பிரதிஷ்டை செய்து 14-வது ஆண்டு விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6.30 மணியில் இருந்து காலை 7 மணிவரை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவை நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை ஸ்ரீமகாலட்சுமி மூல மந்திர ஹோமம், ஸ்ரீசூக்த அஷ்ட லட்சுமி ஹோமம் நடந்தது. அதில் சக்தி அம்மா பங்கேற்று தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். அப்போது மகா ஆரத்தி நடந்தது. ஸ்ரீலட்சுமிநாராயணிக்கு சக்தி அம்மா மகா அபிஷேகம், சிறப்புப்பூஜைகள் ஆகியவற்றை செய்தார். பின்னர் பக்தர்களுக்கு சக்தி அம்மா ஆசி வழங்கினார்.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ், நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, அறங்காவலர் சவுந்தரராஜன், மேலாளர் சம்பத் மற்றும் பக்தர்கள் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். முன்னதாக பக்தர்கள் ஊர்வலமாக வந்து சக்தி அம்மாவுக்கு சீர்வரிசை அளித்தனர்.
    கோதண்டராமசாமி கோவிலுக்கு கர்னூலை சேர்ந்த பக்தர் புள்ளாரெட்டி என்பவர் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் 4¾ பவுன் எடையில் தயாரிக்கப்பட்ட நெக்லஸ் ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.
    கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா கோதண்டராமசாமி கோவிலுக்கு கர்னூலை சேர்ந்த பக்தர் புள்ளாரெட்டி என்பவர் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் 4¾ பவுன் எடையில் தயாரிக்கப்பட்ட நெக்லஸ் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். அந்த நெக்லசை கோவில் உதவி அதிகாரி முரளிதர் பெற்றுக் கொண்டார்.

    அந்தத் தங்க நெக்லசுக்கு பூஜைகள் செய்து, கோவிலில் எழுந்தருளிய சீதா பிராட்டிக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது கோவில் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ஆய்வாளர் கிரி, அர்ச்சகர்கள் ஆகியோர் உடனிருந்தனர். அந்தப் பக்தருக்கு கோவிலில் தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
    ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற தோஷ பாதிப்புகளை நீக்கிக்கொள்ள குன்றத்தூர் தலத்தில் நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.
    நவகிரகங்களில் ராகு பகவானை யோகக்காரகன் என்று அழைப்பர் யோகக் காலத்தை உருவாக்குபவரே ராகுதான். ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேதனையும், வெறுப்பும் அதிகமிருக்கும். இதுபோன்ற தோஷ பாதிப்புகளை நீக்கிக்கொள்ள குன்றத்தூர் தலத்தில் நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.

    ஈடு இணையற்ற பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது. சேக்கிழார் பெருமான், சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பேறாக கருதினார். இப்படியொரு ஆலயத்தை தம் சொந்த ஊரில் அமைக்க ஆவல் கொண்டு அதை நிறைவேற்றி மனநிறைவு கொண்டார்.

    இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர். இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈசன். கோயிலினுள் சேக்கிழார் பெருமான் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் நாகேஸ்வரர் அருள் பொழிகிறார். தலைப்பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டிருந்ததால் நாகேஸ்வரரை திருக்குளத்தில் இட்டுவிட்டு அருணாசலேஸ்வரரை மூலவராக பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர், சிவனடியார்கள்.

    நாராயணரின் பெருமைக்குரிய குணங்களாக 4 விஷயங்களைச் சொல்கிறார்கள். அவை, வாத்சல்யம், சுவாமித்துவம், சவுசீல்யம், சவுலப்யம் ஆகியவையாகும்.

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயணரின் பெருமையை யாராலும் அளவிட்டுக் கூற முடியாது. அதை நம்மாழ்வாரே மிக அழகாக ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ என்கிறார். ‘நாராயணருடைய உயர்வின் முன்பாக, மற்ற உயர்வுகள் எல்லாம் அற்றுப்போகும் அளவுக்கு அளவிட முடியாத பெருமை கொண்டவர்’ என்று பெருமைபடுத்துகிறார். இருப்பினும் நாராயணரின் பெருமைக்குரிய குணங்களாக 4 விஷயங்களைச் சொல்கிறார்கள். அவை, வாத்சல்யம், சுவாமித்துவம், சவுசீல்யம், சவுலப்யம் ஆகியவையாகும்.

    வாத்சல்யம்

    இது கன்றிடம் தாய்ப்பசு கொண்டிருக்கிற அன்பு போன்றது. இந்த குணமானது, திருமாலின் அவதாரங்களில் முக்கியமானதாக கருதப்படும் கிருஷ்ண அவதாரத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. பாண்டவர்கள், அவர்களின் மனைவி திரவுபதி, தன் பால்ய நண்பன் குசேலர் ஆகியோரிடம் அப்படி ஒரு அபரிமிதமான அன்பை அவர் வெளிப்படுத்தினார். பாண்டவர்களிலும் கூட அர்ச்சுனனிடம் அவர் காட்டியது இன்னும் மேலான அன்பு. போர்க்களத்தில் அவன் குற்ற உணர்ச்சியில் தவித்தபோது, அது குற்றமல்ல என்பதையும், உண்மையான பொருளின் சிறப்பையின் உணர்த்தியவர், கிருஷ்ணர். அதுவே ‘வாத்சல்யம்’ எனப்படுகிறது.

    சுவாமித்துவம்

    கடவுளர்களுக்கு எல்லாம் தலைமைத் தன்மை உடையவனாகும் சிறப்பைக் கூறுவதே ‘சுவாமித்துவம்.’ இது திருமாலின் அனைத்து அவதாரங்களிலும் வெளிப்படவே செய்தது என்றாலும், கிருஷ்ண அவதாரம் அந்தச் சிறப்புக்கு உறைவிடமாக இருக்கிறது. பகவத் கீதையை அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணன் உபதேசித்தபோது, தன்னுடைய கடவுள் தன்மையை உணரும் பொருட்டு, அதை விளக்கியதன் அடிப்படையில் இந்த குணத்தை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

    சவுசீல்யம்

    ஏற்றத் தாழ்வின்றி, உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி அமைந்த நட்பைக் குறிப்பது, ‘சவுசீல்யம்.’ இந்த குணமும் திருமாலின் அவதாரங்களில் கண்ணனிடம் அதிகமாக வெளிப்பட்டது.

    சவுலப்யம்

    இறைவனின் எளிமை நிலையைக் குறிப்பது ‘சவுலப்யம்.’ உலக மாயைக்கு கட்டுப்படாத திருமால், மனித உருவம் எடுத்து பூமிக்கு வந்து, தனது உடலை உலக மக்களுக்கு காண்பித்தருளிய நிலையை, இந்த எளிமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

    சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
    சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 18-ந் தேதி தொடங்கியது.

    இதனை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பவித்ரோத்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார்.

    அங்கிருந்தவாறு உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நாளை (26-ந் தேதி) காலை 9.30 மணியளவில் நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சக பட்டர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    கடந்த 2 மாதங்களாக இணையதளத்தில் வெளியிடப்படும் டிக்கெட்டுகளின் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இதனால் பக்தர்களால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலவில்லை.
    திருப்பதி :

    திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் 20-ந்தேதிக்கு மேல் அடுத்த மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.

    செப்டம்பர் மாதத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டது. ரூ.300 கட்டணத்தில் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 10 நிமிடத்தில் செப்டம்பர் மாத 30 நாட்களுக்கான 2.40 லட்சம் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு முடிந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் கிடைக்காமல் அவதியடைந்தனர்.

    கடந்த 2 மாதங்களாக இணையதளத்தில் வெளியிடப்படும் டிக்கெட்டுகளின் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இதனால் பக்தர்களால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலவில்லை.

    மேலும் டிக்கெட் வெளியிடப்படும் சமயத்தில் தேவஸ்தானத்தின் இணையதள சேவை முற்றிலும் முடங்கி விடுகின்றன. இதனால் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

    இதுகுறித்து பலமுறை தேவஸ்தானத்துக்கு புகார் அளித்தாலும் அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை. தேவஸ்தான இணையதளம் ஹாக்கர்ஸ்சால் ஹாக் செய்யப்பட்டதால் பக்தர்களால் இவற்றை முன்போல் எளிதாக முன்பதிவு செய்ய இயலவில்லை என பக்தர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலை தொடர்ந்தால் ஏழுமலையான் தரிசனம் பக்தர்களுக்கு கிடைப்பது அரிதாகிவிடும்.

    கடந்த 2 மாதங்களாக 5,000 முதல் 8,000 டிக்கெட்டுகள் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் தினசரி அதிகபட்சம் 20 ஆயிரம் முதல் 23 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை சற்று முரணாக உள்ளது.

    விரைவு தரிசன டிக்கெட்டுகளை காட்டிலும் விமானம், ரெயில் மற்றும் பஸ் மூலம் நடத்தப்பட்டு வரும் சுற்றுலாத் துறைக்கு திவ்ய தரிசனம் என்ற பெயரில் அளிக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு தேவஸ்தானம் முன்னுரிமை அளித்து வருவதால் விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாகவும் பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

    அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் இலவச தரிசனம் தொடங்க வேண்டும் என்றும், அல்லது ரூ.300 முன்பதிவு தரிசன டிக்கெட்டுகளையாவது கூடுதலாக வெளியிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும்.
    ‘ஓம் சுதர்ஹநாய வித்மஹே
    மஹாஸ்வாலாய தீமஹி
    தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்’

    திருமாலின் கரங்களை அலங்கரிக்கும் சுதர்சனரை அறிந்து கொள்வோம். மகா ஜூவாலையாகத் திகழும் சுதர்சனர் மீது தியானம் செய்வோம். தீமையை அழிக்கும் அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். திருமாலின் அருளையும் பெறலாம். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும்.
    ×