search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமி சிலை வைக்கப்பட்ட வெள்ளி பல்லக்கை தூக்கி வரும் காட்சியை படத்தில் காணலாம்.
    X
    சாமி சிலை வைக்கப்பட்ட வெள்ளி பல்லக்கை தூக்கி வரும் காட்சியை படத்தில் காணலாம்.

    ராமேசுவரம் கோவிலில் சுவாமி-அம்பாள் பள்ளியறை நிகழ்ச்சி

    திருக்கல்யாணம் முடிந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் சுவாமி- அம்பாள் பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 12-ந் தேதி அன்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    அது போல் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சுபமுகூர்த்த நாளில் சுவாமி-அம்பாளுக்கு புது பள்ளியறை நிகழ்ச்சி நடத்தப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் சாமி-அம்பாளின் புது பள்ளியறை நிகழ்ச்சியானது நேற்று இரவு ராமேசுவரம் கோவிலில் நடைபெற்றது. அதற்காக இரவு 8 மணி அளவில் சாமி மற்றும் அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதை. தொடர்ந்து கருவறையில் உள்ள சாமி சன்னதியில் இருந்து தங்கத்தாலான சாமி சிலையானது குருக்கள் ஒருவரால் தூக்கி வரப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் வைக்கப் பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சாமி வைக்கப்பட்ட வெள்ளி பல்லக்கு பிரகாரத்தை சுற்றி கொண்டு அம்மன் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அங்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த புது பள்ளியறையில் உள்ள தங்க ஊஞ்சலில் சாமி வைக்கப்பட்டது. அங்கு முன்னதாக அம்பாளின் சிலையும் வைக்கப்பட்டது. தொடர்ந்து தங்க ஊஞ்சலில் வைக்கப்பட்ட சாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ஆண்டுதோறும் திருக்கல்யாணம் முடிந்து ராமேசுவரம் கோவிலில் நடைபெறும் புதுப்பள்ளியறை நிகழ்ச்சியை காண உள்ளூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக நேற்று புது பள்ளியறை நிகழ்ச்சியை காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் வெளியேற்றப்பட்டனர்.

    இதனால் பள்ளியறை முன்பு அம்மன் சன்னதி பிரகாரம் வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×