என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கன்னிப்பெண்கள் அவர்களின் வயதுக்கேற்ற எண்ணிக்கையிலான விரலி மஞ்சளை தாலிக்கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவித்து வழிபடுகின்றனர்.
    தாலி பெண்களுக்கு உரித்தானது என்றாலும், மதுரையிலுள்ள ஒரு விநாயகருக்கு தாலி கட்டி அழகு பார்க்கிறார்கள் பெண்கள், இச்சடங்கு மதுரை வடக்குமாசி வீதி, மேலமாசிவீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலாலசுந்தர விநாயகர் கோவிலில் நடக்கிறது.

    இங்கு கன்னிப்பெண்கள் அவர்களின் வயதுக்கேற்ற எண்ணிக்கையிலான விரலி மஞ்சளை தாலிக்கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவித்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்கி, நல்ல கணவர் அமைவார் என்பது நம்பிக்கை.

    பொதுவாக அரச மரத்தின் கீழ் அமர்ந்த்திருக்கும் விநாயகர், இங்கு ஆல மரத்தின் கீழ் சுந்தரத்துடன் (அழகுடன்) இருப்பதால் ஆலால சுந்தரர் என அழைக்கப்பட்ட இவரை, மதுரைக்கு வந்த ஜவஹர்லால் நேரு வணங்கிச் சென்றதால், நேரு ஆலாலசுந்தர விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.

    இவரை வணங்கினால் முகப்பொலிவும், அழகும் பெறலாம் என்பது நம்பிக்கை. விநாயகர் ருத்ர அம்சமானவர் என்பதால், மார்கழி திருவாதிரையில் இவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டு களி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். கோவிலில் பூஜைகள் 21-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்தநாட்களில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அவ்வாறு அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    ஐயப்ப பக்தர்களுக்கான மருத்துவச்சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும். 17-ந் தேதி முதல், முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மாத பூஜையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்படுவதையொட்டி, தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
    ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயத்தில் அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் 100-வது நாள் நினைவு திருப்பலி நடந்தது. இதில் 5 ஆயர்கள் கலந்து கொண்டனர்.
    அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் -ன் 100-வது நாள் நினைவு திருப்பலி அவரது சொந்த ஊரான ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயத்தில் நடந்தது. அருட்பணியாளரின் மருமகனும் மீரட் மறைமாவட்ட ஆயருமான பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார். கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் முன்னுரை வழங்கினார். சிவகங்கை முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம் மறையுரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியையொட்டி அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் “மனநல ஆற்றுப்படுத்துதல் கையேடு” என்ற நூலை படைத்து அருட்பணியாளருக்கு அர்ப்பணமாக்கினார்.

    கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அருட்பணியாளர் எல்பின்ஸ்டன் ஜோசப் நிறைவுரை ஆற்றினார்.

    இதில் அகமதபாத் ஆயர் ரெத்தினசுவாமி, மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மா பாவுலோஸ், பாளையங்கோட்டை ஆயர் அந்தோணிசாமி, முன்னாள் ஆயர் ஜீடு பால்ராஜ் ஆகியோர் பங்கேற்று ஜெபித்தனர்.

    நிகழ்ச்சியில், அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் நிறுவிய வௌ்ளமடம் அகத்தியர் முனி குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் தலைவர் அருட்பணியாளர் லியோண் கென்சன், மேலாண்மை இயக்குனர் பேட்ரிக் சேவியர், மருத்துவமனை பணியாளர்கள், கோட்டார் மற்றும் குழித்துறை மறை மாவட்டங்களில் இருந்து அருட்பணியாளர்கள், பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற பிற மறைமாவட்டங்களை சேர்ந்த அருட்பணியாளர்கள், ஆலஞ்சி பங்குத்தந்தை. மரிய சூசை வின்சென்ட், பங்குப்பேரவையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பலியை தொடர்ந்து அருட்பணியாளரின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளரின் தம்பி ஜோசப் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
    விநாயகருக்கு இந்தியா முழுவதுமே பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
    விநாயகருக்கு இந்தியா முழுவதுமே பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. ஏன் ஒவ்வொரு தெருக்களிலும் கூட விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    சாசிவேகாலு கணேசா

    கர்நாடகா மாநிலத்தின் சரித்திர புகழ்பெற்ற இடம் ஹம்பி நகரம். இங்குள்ள ஹேமகூட மலையின் அடிவாரத்தில்தான் ‘சாசிவேகாலு கணேசா’ கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலையானது, கடுகுகளினால் பூசப்பட்டதுபோல் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்துள்ளது. இத்தல விநாயகர் தன்னுடைய வயிற்றில் பாம்பு ஒன்றை இறுக்கி கட்டிய நிலையில் காட்சி தருகிறார். 8 அடி உயரம் உள்ள இந்த விநாயகர், ஒரே கல்லில் செதுக்கப்பட்டவர்.

    தொட்ட கணபதி

    பெங்களூருவில் உள்ள பசவனகுடி என்ற பகுதியில்தான் இந்த தொட்ட கணபதி ஆலயம் அமைந்திருக்கிறது. இங்குள்ள விநாயகர் சிலை ஒற்றைப் பாறையை குடைந்து உருவாக்கப்பட்டதாகும். 18 அடி உயரம், 16 அடி அகலத்துடன் வெகு பிரமாண்டமாக காட்சியளிக்கிறார் இந்த விநாயகர். இதனாலேயே இவரை தொட்ட (மிகப்பெரிய) கணபதி என்று அழைக்கிறார்கள்.

    தக்டுசேட் கணபதி

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்தான், தக்டுசேட் கணபதி ஆலயம். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போல, இத்தல விநாயகரும் ‘பணக்கார விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். ஏனெனில் இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

    உச்சிப்பிள்ளையார்

    திருச்சியில் உள்ள மலைக்கோட்டை, 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் அமைந்த காரணத்தால், இங்குள்ள விநாயகர் ‘உச்சிப் பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோவில் பணி பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டு, 7-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் முடிக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்தில் இருந்து 273 அடி உயரத்தில் அமைந்த இந்தக் கோவிலை அடைய, 437 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.

    சித்தி விநாயக் மந்திர்

    மும்பையின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்று இது. 1801-ம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டள்ளது. முன் காலத்தில் சிறிய செங்கல் கட்டிடமாக இருந்த இந்த ஆலயம், தற்போது புனரமைக்கப்பட்டு, பார்க்கவே பிரமாண்ட தோற்றம் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

    மணக்குள விநாயகர்

    புதுச்சேரியில் 1666-ம் ஆண்டிலேயே இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதியில் முன்பு எங்கும் மணல் பரந்து கிடந்ததோடு, அருகே ஒரு குளமும் இருந்ததால் இது ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயரை பெற்றது.

    சுயம்பு கணபதி

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கணபதிபுலே நகரில் கடற்கரைப் பகுதியில் இந்தக் கோவில் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் சிலை, மணற்பாறையில் தானாகவே உருவானது. இதனாலேயே இதனை ‘சுயம்பு கணபதி’ என்கிறார்கள். இந்த சுயம்பு விநாயகரைத் தவிர, சிங்கத்தின் மீது காட்சியளிக்கும் தாமிரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையும் இந்த ஆலயத்தில் உள்ளது.

    கொட்டாரக்கரா மகாகணபதி

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம்தான் கொட்டாரக்கரா. இங்கு மகா கணபதி ஆலயம் உள்ளது. முன் காலத்தில் இந்தக் கோவில் இங்கு முதன்மை தெய்வமாக இருக்கும் சிவனின் பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. நாளடைவில் இங்குள்ள கணபதியின் புகழ் பரவத் தொடங்கியதால், இப்போது கணபதியில் பெயரிலேயே கோவில் வழங்கப்படுகிறது. இங்கு சிவன், விநாயகர் தவிர, பார்வதி, முருகன், ஐயப்பன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.
    கோவை அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரோப்கார் வசதி செய்யப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
    வடக்கே குரு விருட்சமலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று 3 பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ் சும் மலைப்பகுதியில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தூரம் சென்றால் சின்னதடாகம் என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் திரும்பி 2 கி.மீ. தூரம் சென்றால் இந்த கோவில் இருக்கும் மலைப்பகுதியை அடையலாம். மலையடிவாரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லலாம். வேகமாக சென்றால் முக்கால்மணி நேரத்தில் செல்லலாம். ஓய்வு எடுத்தபடி சென்றால் ஒருமணி நேரம் ஆகும்.

    இந்த கோவில் ராமாயண கால தொடர்பு உடையது. அதாவது இலங்கையை ஆண்ட ராவணன், சீதையை கடத்தி சென்று சிறை வைத்திருந்தான். தனது மனைவியை மீட்க ராமபிரான் ராவணனுடன் போர் புரிந்தபோது, ராவணனின் மகனால் விடப்பட்ட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகி போனான். அவரை காப்பாற்ற சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகை தேவைப்பட்டது. அதை கொண்டு வர அனுமான் அனுப்பி வைக்கப்பட்டார். மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால் அந்த மலையை பெயர்த்து எடுத்து கொண்டு அனுமான் பறந்து சென்றார். செல்லும் வழியில் அவருக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது அவர் முருகப்பெருமானை வேண்ட, அவர் தனது வேல் கொண்டு ஒரு சுனையை உருவாக்கி அனுமனின் தாகத்தை தீர்த்ததாக தலவரலாறு சொல்கிறது. இங்கு அனுமார் தீர்த்தம் உள்ளதால் இந்த பகுதி அனுமார்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    அடிவாரத்தில் இருந்து 586 படிக்கட்டுகள் ஏறி கோவிலை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம். கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

    சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வேண்டினால் உடனடியாக திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், இங்குள்ள அனுமன் குளத்தில் அதிகாலையில் குளித்தால் சகல நோயும் உடனடியாக குணமாகும் என்ற ஐதீகமும் உண்டு.

    இதுதவிர மாதந்தோறும் கிருத்திகை, செவ்வாய், ஞாயிறு உள்பட பல நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் படிக்கட்டுகள் செங்குத்தாக இருப்பதாலும், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் இங்கு செல்ல பக்தர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதைத்தடுக்க கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக உள்ளது. இது குறித்து அனுவாவியை சேர்ந்த அருள்குமார் கூறியதாவது:-

    மிகவும் புகழ்பெற்ற இந்த கோவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதியில் உள்ளது. இதை சுற்றுலா சார்ந்த ஆன்மிக பகுதியாக அறிவித்தால் இன்னும் அதிகம்பேர் வருவார்கள். மேலும் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் செங்குத்தாக இருக்கிறது.

    இதனால் வயதானவர்கள் நடந்து செல்ல சிரமம் இருக்கிறது. அதுபோன்று செல்லும் வழியில் படிக்கட்டுகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உண்டு. எனவேதான் இங்கு ரோப்கார் வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பயனாக பழனி முருகன் கோவிலில் ரோப்கார் அமைத்த குழுவினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ரூ.3 கோடி செலவாகும் என்றும் அறிவித்துவிட்டு சென்றனர். அதுபோன்று கடந்த ஜனவரி மாதம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோதும், ரோப்கார் வசதி அமைக்க சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவித்தனர். எனவே அனைத்து சாத்தியக்கூறுகள் இருப்பதால் உடனடியாக இங்கு ரோப்கார் வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, சமீபத்தில் இந்த கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவிடம் ரோப்கார் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு அவர் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

    எனவே உடனடியாக அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து ரோப்கார் வல்லுனர் குழுவை சேர்ந்த ரங்கசாமி என்பவர் கூறியதாவது:-

    அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் இருந்து 80 மீட்டர் உயரத்தில் மலை மீது உள்ளது. எனவே அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு 400 மீட்டர் தூரத்துக்கு ரோப்கார் அமைக்கலாம். இதற்காக 2 தூண்கள் அமைக்க வேண்டும்.

    இந்த ரோப்கார் மூலம் அடிவாரத்தில் இருந்து அதிகபட்சமாக 3 நிமிடத்தில் கோவிலுக்கு சென்றுவிடலாம். இதற்காக ரூ.6 கோடி வரை செலவாகும். இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, வனத்துறை அனுமதி கொடுத்தால் ஒரு ஆண்டுக்குள் பணியை முடித்து விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
    குறைவிலா உணவு, ஆடை கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள், புத்திமான்களான புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

    அருகம்புல்லை தூர்வை என்று சொல்வார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினம் தூர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தூர்வாஷ்டமி அன்று அருகம்புல்லை பூஜை செய்ய தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.

    ஒருவர் எத்தகைய நிலையில் கடன் வாங்கியிருந்தாலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடையச் சிறந்த வழிகளாகும்.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு பத்தாமிடத்தில் கர்ம/ஜீவன ஸ்தானத்தில் கேது நின்றுவிட்டாலும், கர்ம காரகன் சனியுடன் சேர்க்கை பெற்று நின்றாலும் அவர்களுக்கு வேலை மற்றும் தொழில் ஒரு போராட்டமாகவே அமைந்துவிடும். மேலும் கோசாரத்தில் சனி ஜெனன கேதுவை தொடர்பு கொண்டாலும் கோசாரக கேது ஜெனன சனியை தொடர்பு கொண்டாலும் இது போன்ற நிலை நீடிக்கும். அத்தகைய அமைப்பினர் விநாயகருக்கு சனிக்கிழமைகளில் அருகம்புல் சாற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வரத் தொழில் மற்றும் வேலையில் ஏற்படும் பிரச்சினைகள் விலகி நிம்மதி ஏற்படும்.

    தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.

    காலையில் நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். பூஜை அறையை சுத்தம்செய்து கோலமிட்டு, விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர், அருகம்புல் பறித்து வந்து வீட்டில் ஒரு தாம்பாளத் தட்டின் மேல் அருகம்புல்லை வைத்து அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு வணங்க வேண்டும். பலகையின் மேல் நமக்கு இஷ்ட தெய்வத்தை வைத்து பூஜிக்கலாம்.

    இப்படி வழிபடும் போது சவுபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்“ (நிர்ணய ஸிந்து) என்று சொல்லி பூஜிக்க வேண்டும்

    இவ்விரதத்தைக் கடைபிடிப்பதனால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குறைவிலா உணவு, ஆடை கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள், புத்திமான்களான புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி 16-ந் தேதி நடக்கிறது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    மேலும் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இந்த கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கிய விழாவாகும். இவ்விழாவின் 10-ம் நாள் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

    இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 19-ந் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் நடைபெற உள்ளது. அப்போது கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். மேலும் பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் பிச்சகர் பந்தக்காலை ராஜகோபுரம் வரை சுமந்து வந்து அங்கு பந்தக்காலிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்படும். அதன்பின்னர் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான அனைத்து பணிகளும் தொடங்கும்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
    அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

    கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
    விநாயகர் என்றால் ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். எளியவர்களும், எளிய முறையில் வழிபடும் தெய்வமாக பிள்ளையார் பார்க்கப்படுகிறார்
    சகஸ்ரநாமம்சுலோகம்காயத்ரிதுதி சுலோகம்
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

    மூஷிக வாகன மோதக ஹஸ்த
    சாமர கர்ண விளம்பித சூத்ர
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர
    விக்ன விநாயக பாத நமஸ்தே.
    ஆலயத்தின் வெளிமதில்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், சந்தியா தண்டவர், பிட்சாடனர் என்று சிவபெருமானின் பல்வேறு வகையான வடிவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில், கயிலாசநாதர் கோவில் இருக்கிறது.

    மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் எதுவும் இன்றி ஒரு ஆலயம் கட்ட நினைத்தான், மகேந்திரவர்மன். அவன் மரபில் வந்த ராஜசிம்மன் அதை சாத்தியப்படுத்தினான். அதுவே காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாசநாதர் கோவில். இது முழுவதும் கல்லால் மட்டுமே அமைந்திருக்கிறது.

    காஞ்சிபுரத்தில் பாயும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம், ‘தென்திசை கயிலாயம்’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

    கருவறை விமானம் தனிச்சிறப்பு கொண்டது. மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜ ரதத்தின் உச்சிப் பகுதியை போன்று இதன் விமானம் அமைந்துள்ளது.

    இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்ம பல்லவனால் இந்த ஆலயத்தின் கட்டுமானம் கி.பி.700-ல் தொடங்கப்பட்டது. ஆனால் அவரது மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் காலத்தில்தான் கட்டிடப் பணிகள் முடிவுற்றன.

    கருவறையில் வீற்றிருக்கும் கயிலாசநாதர் என்ற பெயருடைய சிவலிங்கம், 16 பட்டைகள் கொண்டு ‘ஷோடச லிங்க’மாக விளங்குகிறது. இந்த லிங்கத்தின் பின்புறம், சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடுவில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ‘சோமாஸ்கந்தர்’ உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    பிரதான ஆலயத்தைச் சுற்றி பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை அனைத்தும் சிறு விமானத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த துணை ஆலயங்களை அமைத்தவர், ராஜசிம்மனின் பட்டத்தரசி ரங்கபதாகை ஆவார்.

    ஆலயத்தின் வெளிமதில்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், சந்தியா தண்டவர், பிட்சாடனர் என்று சிவபெருமானின் பல்வேறு வகையான வடிவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

    கருவறையை சுற்றி குறுகலான திருச்சுற்று உள்ளது. இதற்கு ‘புனர்ஜனனி’ என்று பெயர். இந்த திருச்சுற்றின் உள், வெளி வாசல்கள் தரையில் படுத்து ஊர்ந்து செல்லும் வகையில் அமைந்தவை. இதனைச் சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை என்கிறார்கள்.

    ராஜசிம்ம பல்லவன், போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமைக்குரியவன். அதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஆலயத்தில் அனைத்துப் புறங்களிலும், கோவிலைத் தாங்கி நிற்பது போல சிங்கத்தின் சிலைகளே அதிகமாக காணப்படுகின்றன.

    பிரதான ஆலயத்திலும், சுற்றியுள்ள துணை ஆலயங்களிலும் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. கி.பி.14-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்கள் இந்த ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டியதாக கருதப்படுகிறது. இதனால் இதனை ‘ஈரடுக்கு ஓவியங்கள்’ என்கிறார்கள்.
    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் வடிவமைக்கப்பட்ட இந்த 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை ராட்சத லாரி மூலம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள கொள்ளிடக்கரைக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது.
    தமிழகத்தில் சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும், நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும் ஆஞ்சநேயர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது அதைவிட உயரமாக 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வாசுதேவன் கூறியதாவது:-

    ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் முதலில் 33 அடி உயர ஆஞ்சநேயர் சிலைதான் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்காக நாமக்கல் பகுதியில் உள்ள குவாரியில் கல் தேடியபோது, 105 டன் எடையுள்ள 40 அடி உயரத்தில் ஒரே கல் கிடைத்தவுடன் 37 அடி உயர சிலை அமைப்பது என முடிவெடுத்தோம். பின்னர் அந்த கல்லில் ஆஞ்சநேயர் சிலை கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் வடிவமைக்கப்பட்ட இந்த 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை ராட்சத லாரி மூலம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள கொள்ளிடக்கரைக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்திக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆஞ்சநேயர் சிலையுடன், இங்கு சிறிய அளவில் கோவிலும் அமைக்கப்பட்டு அதில் நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ராமர், சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை ஸ்ரீரங்கம் மேலூர் வந்தடைந்த ஆஞ்சநேயர் சிலையை பக்தர்கள் மலர் தூவி வணங்கினர்.
    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி கொடியேற்றப்பட்டு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று தேரோட்டமும் நடைபெறும். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.

    ஆனால் இந்த ஆண்டு ஆவணி திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம்13-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 12-ந்தேதி தேரோட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வந்தது.

    ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
    ×