என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    அழுக்குப் படியாமல், கிழியாத நல்ல நிலையில் இருக்கும் வஸ்திரத்தை தோஷம் போக்க ஒரு முறை உப்பு தண்ணீரில் துவைத்து காய வைத்து பின்னர் யாருக்காவது இயலாதவர்களுக்கு தானம் செய்து விடுங்கள்.
    ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவையான 3 விடயங்கள் உணவு, உடை, இருப்பிடம் ஆகும். இந்த 3 விஷயங்களை ஒருவருக்கு இன்னொருவர் தானம் கொடுப்பதன் மூலம் உயர்ந்த புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறுவது உண்டு. அன்னத்தையும், வஸ்திரத்தையும், இருக்க இடத்தையும் ஒருவர் மனமுவந்து மற்றவர்களுக்கு அருளினால் அவர்களுக்கு எத்தகைய பாவங்களும் வந்து சேருவது இல்லை. அந்த வகையில் நம்மிடம் இருக்கும் பழைய வஸ்திரத்தை என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

    ஒருவர் வீடு தேடி பசி, தாகம் என்று வந்தால் அவர் நல்லவரோ, கெட்டவரோ இல்லை என்று கூறாமல் உங்களால் முடிந்ததை கொடுத்து விடுங்கள். இந்த இடத்தில் நீங்கள் இல்லை என்று கூறினால், அந்த ஒரு வார்த்தை உங்களுக்கு பெரும் பாவத்தை சேர்க்கும்.

    நம்மால் செய்ய முடிந்த தானங்களை வாழ்நாளில் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    வருடம் ஒரு முறை உங்கள் உடன் பிறந்தவர்களுக்கும், தாய், தந்தையர் ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் புது வஸ்திரம் வாங்கி தானம் செய்து பாருங்கள். அவர்கள் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் ஆசீர்வாதம் உங்களை பன்மடங்கு உயர்த்தி காட்டும். வஸ்திர தானத்திற்கு அப்படி ஒரு அதீத சக்தி உண்டு. நம்மிடம் இருக்கும் நல்ல வஸ்திரம், ஆனால் நமக்கு போதாமல் போகும் பொழுது அதனை வீணாக வருடக் கணக்கில் குப்பைப் போல் பீரோவில் அடுக்கி வைத்திருப்போம். இது போல் பழைய துணிமணிகளை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

    பிறகு பார்த்துக் கொள்ளலாம், நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று காலத்தை கடத்தாமல் அன்றே செய்யும் தானத்திற்கு வலிமை அதிகம். அழுக்குப் படியாமல், கிழியாத நல்ல நிலையில் இருக்கும் வஸ்திரத்தை தோஷம் போக்க ஒரு முறை உப்பு தண்ணீரில் துவைத்து காய வைத்து பின்னர் யாருக்காவது இயலாதவர்களுக்கு தானம் செய்து விடுங்கள். இதனால் உங்களுக்கு புண்ணியமானது பன்மடங்கு பெருகும். புண்ணியத்தை சேர்ப்பவர்களுக்கு வாழும் இறுதிகாலம் கூட சுகமாக அமையும்.

    அது போல் நம்மிடம் இருக்கும் கிழிந்த அல்லது அழுக்கு படிந்த அல்லது ஒன்றுக்கும் உதவாத துணிமணிகளை எப்பொழுதும் நெருப்பில் இட்டு எரித்து விட வேண்டும். இது போன்ற துணி மணிகளை தானம் கொடுத்தால் அதிலும் உங்களுக்கு பாவம் தான் வந்து சேரும். இதனை ஆற்றில் விடுவது, குளத்தில் விடுவது, தானம் செய்வது போன்று தெரியாமல் கூட எந்த ஒரு செயலையும் செய்து விடாதீர்கள். இவையெல்லாம் பாவக் கணக்கில் சேர்ந்தவையாகும். தயங்காமல் நெருப்பிலிட்டு கொளுத்திப் பஸ்பமாகிவிடுங்கள், இதனால் தோஷங்கள் நீங்கி பாவங்கள் சேராமல் புண்ணியம் உயரும்.
    ஸ்ரீ-சிலந்தி, காள-நாகம், ஹஸ்தி-யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ விக்ரகங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தென்கயிலாயமாக கருதப்படுகிறது. கோவிலில் 5 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு ‘ஸ்ரீ’ என்னும் சிலந்தி, ‘காள’ என்னும் நாகம், ‘ஹஸ்தி’ என்னும் யானை மற்றும் பரத்வாஜ் முனிவர் உற்சவ விக்ரகங்கள் வைக்கப்பட்டது. கலச ஸ்தாபனம், கலச பூஜை, புண்யாவதனம், சிறப்புப்பூஜைகள் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஸ்ரீ-சிலந்தி, காள-நாகம், ஹஸ்தி-யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ விக்ரகங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர். பவித்ரோற்சவத்தில் கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கொரோனா தொற்று காரணமாக புரட்டாசி சனிக்கிழமை நாட்களான வருகிற 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2, 9, 16 ஆகிய தேதிகளிலும் என 5 நாட்களில் பக்தர்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
    துறையூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம், தாசில்தார் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், துறையூரை அடுத்த பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக புரட்டாசி சனிக்கிழமை நாட்களான வருகிற 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2, 9, 16 ஆகிய தேதிகளிலும் என 5 நாட்களில் பக்தர்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும். கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் திறக்க அனுமதி இல்லை.
    நைனாமலை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் தொடங்கியதும் சனிக்கிழமைதோறும் புரட்டாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் வரலாற்று புகழ் வாய்ந்த நைனாமலையில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த மலை கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.

    நைனாமலை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் தொடங்கியதும் சனிக்கிழமைதோறும் புரட்டாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று பெருமாள் மற்றும் குவலயவள்ளி தாயாரை தரிசனம் செய்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டது.

    கொரோனா பரவலால் இந்த ஆண்டும் நைனாமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் ஆலயங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் நைனாமலை கோவிலிலும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமி காந்தன் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் விண்ணப்பம் ஒன்று கொடுத்துள்ளார். அதில், நைனாமலை கோவிலுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அங்கு செல்வதை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக முக்கிய இடங்களில் விளம்பர பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புரட்டாசி மாதம் தொடங்கியவுடன் சனிக்கிழமை காலையிலேயே மலைமேல் உள்ள பெருமாளை தரிசனம் செய்வதற்காக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் முந்தைய நாளே வந்து தங்குவார்கள். தற்போது கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இங்கு பல அற்புதங்களும், அருள் அடையாளங்களும் மக்களுக்கு கிடைக்கிறது. இப்போது ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அற்புதம் நிகழ்த்தும் சிறப்பு ஜெப வழிபாடுகள் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.
    குழித்துறை மறைமாவட்டத்தில் அமைந்துள்ள முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் முன்பு கோட்டார் மறை மாவட்டத்தின் கீழும், அதற்கு முன்னதாக கொல்லம் மறை மாவட்டத்தின் கீழும் இருந்தது. இது பழமையும், பாரம்பரியமும் மிக்க கார்மல் மறைபரப்புப்பணி மையங்களுள் ஒன்று.

    1847-ம் ஆண்டிற்கு முன்பே முளகுமூடு பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகமும், ஆலயமும் இருந்துள்ளது என்று இயேசு சபையினரின் மறைப்பணி செயல்பாட்டு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் 1860-ல் மறைப்பணியாற்ற கார்மல் சபை துறவியாக இந்தியா வந்த அருட்தந்தை விக்டர் வெல்யுர் பங்குதந்தையாக நியமிக்கப்பட்டு முளகுமூடு பங்கு உருவாக்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டில், குறிப்பாக பங்கு நிறுவப்பட்டு 1860-ம் ஆண்டளவில், முளகுமூடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிகழ்ந்த கொடுமைகளை, ஒடுக்கு முறைகளை கடுமையாக எதிர்த்து போராடினார் அருட்தந்தை விக்டர். அதோடு நில்லாமல் மக்கள் ஓட்டுக்கூரை வீடுகளை கட்ட வலியுறுத்தியதோடு, ஓட்டு தொழிற்சாலை ஒன்றையும் முளகுமூட்டில் நிறுவினார்.

    ஓட்டுத்தொழிற்சாலை மூலம் பெறப்பட்ட வருமானத்தை ஆதரவற்ற அனாதை குழந்தைகளின் வாழ்வுக்காக செலவிட்டார். அந்த வகையில் ஏறத்தாழ ஆயிரம் ஆதரவற்றோரை பேணி பாதுகாத்து வந்தார். அந்த ஓட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓடுகளை பத்மநாபபுரத்திலுள்ள திருவிதாங்கூர் அரண்மனை கூரைகளில் இன்றும் நாம் காணலாம்.

    அருட்தந்தை விக்டர், வாழ்வு குறித்து அருட்பணியாளர் ஆன்ட்ரு, 1923-ம் ஆண்டு ‘அருட்தந்தை விக்டர் தென்னிந்தியாவின் அப்போஸ்தலர்’ என்ற பெயரில் புத்தகம் எழுதி வரலாற்று பதிவு செய்துள்ளார்.

    150-ம் ஆண்டு ஜூபிலி

    முளகுமூடு பங்கு பழைய ஆலயமானது, 1910-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மீண்டும் 1981-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி கான்கிரீட் கூரையாக மாற்றப்பட்டது. மீண்டும் பங்கின் 150-ம் ஆண்டு ஜூபிலியை தொடர்ந்து 5-9-2014 அன்று புதுபொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது.

    இத்தகைய சிறப்புமிக்க தூய மரியன்னை ஆலய பீடத்தின் இருபுறமும் முறையே 300 ஆண்டு பழமையான, பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை மரியின் திருஉருவ வரைபடமும், நமது மறைமாவட்ட பாதுகாவலர் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் அங்கீகரிக்கப்பட்ட முதல் வரை படமும் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு பல அற்புதங்களும், அருள் அடையாளங்களும் மக்களுக்கு கிடைக்கிறது. இப்போது ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அற்புதம் நிகழ்த்தும் சிறப்பு ஜெப வழிபாடுகள் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.

    பசிலிக்காவாக...

    14-1-2016 அன்று போப் ஆண்டவரின் சிறப்புத்தூதர் முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்துக்கு வந்த போது இங்கு நம்பிக்கை ஆழமாய் வேரூன்றியுள்ளதாக பாராட்டினார். தொடர்ந்து முளகுமூடு பங்குத்தந்தை அருட்பணியாளர் டொமினிக் கடாட்ச தாஸ், முளகுமூடு பங்கை பசிலிக்காவாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இது குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேலால் ஏற்கப்பட்டது.

    மறைமாவட்ட ஆயர் அதனை சிறப்பு வேண்டுகோளாக மதுரை பேராயர், தமிழ்நாடு ஆயர் பேரவைத்தலைவர், இந்திய ஆயர் பேரவை தலைவர் ஆகியோருக்கு அனுப்பி, அதற்கான தடையில்லா சான்றினை கோரினார். அதன்படி அவர்களால் அச்சான்று போப் ஆண்டவரின் தூதரிடம் வழங்கப்பட்டு, ரோம் நகரில் போப் ஆண்டவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

    இறுதியாக வத்திக்கானிலிருந்து ஜூன் 9-ந் தேதி முளகுமூடு தூய மரியன்னை ஆலயம், மைனர் பசிலிக்காவாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இவ்வாணையால் நமது தூய மரியன்னை பசிலிக்கா, தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அன்னையின் அருள் நிறைந்த முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா, பங்கு மக்களின் நம்பிக்கைக்கு உயிரூட்டும் தலமாக மட்டுமல்லாது, அன்னையின் அருளாசிகளை வேண்டும் அனைத்து மக்களுக்கான திருப்பயண ஆன்மிக தலம் ஆகட்டும்.

    முளகுமூடு தூய மரியன்னை ஆலயமானது 9-6-2020 அன்று போப் ஆண்டவரால் தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டது.

    பேரருட்தந்தை டொமினிக் எம்.கடாட்ச தாஸ், தூய மரியன்னை பசிலிக்கா அதிபர்,

    முளகுமூடு.
    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். கோவிலில் பூஜைகள் 21-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்தநாட்களில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அவ்வாறு அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    ஐயப்ப பக்தர்களுக்கான மருத்துவச்சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும். 17-ந் தேதி முதல், முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த மந்திரத்தை திருவோண நட்சத்திர தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் உச்சரித்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருட்கடாட்சத்தை பெற முடியும்.
    திருவோண நட்சத்திர தினத்தன்று பெருமாளின் மூல மந்திரத்தை 108 தடவை சொல்ல வேண்டும். இதுதான் அந்த மந்திரம்

    “ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
     ஓம் நமோ ஸ்ரீவேங்கடேசாய நமக”

    இந்த மந்திரத்தை திருவோண நட்சத்திர தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் உச்சரித்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருட்கடாட்சத்தை பெற முடியும்.
    இப்படி ஏகாதசி சிறப்புகளும், திருவோண நட்சத்திரத்தின் மகிமைகளும் கொண்ட தினமாக நாளைய தினம் அமைந்துள்ளது. இந்த புண்ணிய நாளில் புரட்டாசி முதல் நாள் தொடங்குவது மிக மிக விஷேசமாகும். எனவே நாளை காலையில் அருகில் உள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள்.

    ஆலயங்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை இருந்தால், வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து மலர் மாலைகள் சூடி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள். இன்று காலை திருவோண நட்சத்திரம், ஏகாதசி, புரட்டாசி முதல் நாள் தொடக்கம் ஆகிய மூன்றும் சங்கமித்து இருக்கின்றன. எனவே இன்று காலையில் இந்த சிறப்பு வழிபாடுகளை வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.
    முத்தியால்பேட்டைபொன்னுமாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கலசங்களிலும், பொன்னு மாரியம்மன் மூலஸ்தானத்திலும் புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    முத்தியால்பேட்டை வேலாயுதம்பிள்ளை நகரில் பிரசித்திபெற்ற பொன்னு மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கடந்த 13-ந்தேதி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 5 கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. நேற்று (வியாழக்கிழமை) காலை 6-ம் கால யாகசாலை பூஜையும், ரக்‌ஷாபந்தனம், தத்துவார்ச்சனையும் அதைத்தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடந்தது.

    இதையடுத்து ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கலசங்களிலும், பொன்னு மாரியம்மன் மூலஸ்தானத்திலும் புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

    விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி தலைவர் மோகன், நாட்டாண்மை சுந்தரராஜா, தர்மகர்த்தா பழனிசாமி, பொருளாளர் உதயணன் மற்றும் சிவாச்சாரியார்கள் திருஞானசம்பந்தம், சிவராஜ், அர்ச்சகர் சாய்நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
    சிறப்புடைய புரட்டாசி மாதம் (இன்று) இந்த ஆண்டு பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியிலும், பெருமாளின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்திலும் கூடிய சுப நாளில் பிறப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
    இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே புரட்டாசி மாதத்தில் நாம் எந்த அளவுக்கு வழிபாடுகள் செய்கிறோமோ அந்த அளவுக்கு எம பயத்தில் இருந்து விடுபடலாம். துன்பங்களில் இருந்து மீண்டு கொள்ளலாம். தமிழ் மாதங்கள் 12-ல் 6-வது மாதமாக புரட்டாசி மாதம் வருகிறது. புரட்டாசி மாதத் துக்கு பல்வேறு மகிமைகளும், சிறப்புகளும் உண்டு. புரட்டாசி மாதத்தை பொதுவாக தெய்வீக தன்மை நிறைந்த மாதமாக சொல்வார்கள்.

    புரட்டாசி மாதம் என்பது காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதம் ஆகும். நவகிரகங்களில் புதனுக்குரியதாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. புதனின் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார். புதனின் வீடு கன்னி ராசியாகும். அதுவும் பெருமாளின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் அமர்கிறார். எனவே புரட்டாசி மாதம் முழுவதுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இத்தகைய சிறப்புடைய புரட்டாசி மாதம் (இன்று) இந்த ஆண்டு பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியிலும், பெருமாளின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்திலும் கூடிய சுப நாளில் பிறப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. புரட்டாசி முதல் நாள், ஏகாதசி திதி, திருவோணம் நட்சத்திரம் ஆகிய மூன்றும் ஒரே நாளில் சங்கமிப்பது என்பது மிகவும் அபூர்வமானது. புரட்டாசி தொடக்கம் பெருமாளை விரதம் இருந்து மனம் உவந்து வழிபட வேண்டியதற்கான தொடக்க நாளாகும். புரட்டாசி மாதம் முழுவதும் மகா விஷ்ணுவை நினைவு கொள்வோம் என்பதற்கான தொடக்கம் ஆகும்.

    அதே நாளில் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதி இருக்கிறது. ஏகாதசி திதி என்பது ஒரு புண்ணிய காலம் ஆகும். பரமாத்மாவுக்கு மிகவும் பிரியமான திதி இது. ஏகாதசி திதியை போற்றாத புராணமே இல்லை என்று சொல்லலாம். கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை. விஷ்ணுவை விட உயர்ந்த கடவுள் இல்லை. தாயை விட சிறந்த கோவில் இல்லை. காய்திரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை. அதுபோன்று ஏகாதசி திதி மிக மிக உயர்ந்தது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏகாதசி திதியில் முழு உபவாசம் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும். இயலாதவர்கள் மகா விஷ்ணுவை தியானித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
    ஏகாதசி திதி தினத்தில் சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடையும். அந்த சமயத்தில் சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியில் உள்ள தண்ணீர் மீது பாதிப்பை உண்டாக்கும்.

    நமது உடலில் 70 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே ஏகாதசி தினத்தில் நமது உடலும், சந்திரனின் சக்தியால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிய லின் அடிப்படையில்தான் நமது முன்னோர்கள் ஏகாதசி திதி தினத்தன்று முழு விரதம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஜோதிட ரீதியாகவும் சந்திரனுக்குரிய முக்கிய தினமாக ஏகாதசி கருதப்படுகிறது. ஏகாதசி தினத்தில் ஜெபம், தியானம் செய்யும் போது மனம் மிக விரைவில் ஒருநிலைப்படும். இதன்மூலம் நமது அறிவுத்திறன் செயல் அதிகரிக்கும். எனவேதான் ஏகாதசி தினத்தில் தியானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஏகாதசி திதி ஆண்டுக்கு 25 முறை வருகிறது. புரட்டாசி மாதம் வரும் ஏகாதசி தினங்கள் அஜா ஏகாதசி என்றும், பத்மநாப ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
    புரட்டாசி மாத ஏகாதசியில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் முன்வினை பாவங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும் என்பது ஐதீகம் ஆகும். அதுமட்டுமின்றி வீட்டில் துன்பங்கள் நீங்கி திருமண யோகங்கள் கை கூடி வரும் என்பதும் ஐதீகம் ஆகும்.

    எனவே ஏகாதசி திதி தினத்தன்று பகலில் தூங்காமல் மகா விஷ்ணுவை போற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

    அதேபோன்று திருவோணம் நட்சத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ளது. திருவோண நட்சத்திரம் என்பது திருப்பதியில் பெருமாள் தன்னை வெளிப்படுத்தி கொண்ட தினமாக கருதப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர தினத்தன்று அவரை வழிபட்டால் மகா விஷ்ணுவின் கருணை பார்வை மிக எளிதாக கிடைக்கும்.

    ஆலயங்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை இருந்தால், வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து மலர் மாலைகள் சூடி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள். நாளை காலை திருவோண நட்சத்திரம், ஏகாதசி, புரட்டாசி முதல் நாள் தொடக்கம் ஆகிய மூன்றும் சங்கமித்து இருக்கின்றன. எனவே இன்று காலையில் இந்த சிறப்பு வழிபாடுகளை வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் பல்வேறு பூஜைகளின்போது அர்ச்சகர்கள், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஒவ்வொரு ஆண்டும் பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி 5 நாட்களுக்கு கோவிலில் நடக்கும் 4 கால அபிஷேகங்களில் 3-வது கால அபிஷேகமும், 20-ந்தேதி கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப்பூஜை வழக்கம்போல் நடக்கிறது எனக் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்தார்.
    கோவை சத்தி ரோட்டில் உள்ள அய்யா வைகுண்ட சிவபதி தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கோவை சத்தி ரோட்டில் உள்ள லட்சுமி கார்டன் அய்யா வைகுண்ட சிவபதி தேர்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 6.30 மணிக்கு கொடியேற்றம், 7.30 மணிக்கு உகப்படிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    18-ந் தேதி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, பிற்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு 7.30 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்கார பணிவிடை, அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளல், 19-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா பிரம்மனாக வெளிப்பட்டு சரஸ்வதி தேவியுடன் அன்னவாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    20-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்திலும், 21-ந் தேதி பூஞ்சரப்பா வாகனத்திலும், 22-ந் தேதி சர்ப வாகனத்திலும், 23-ந் தேதி கருட வாகனத்திலும், 24-ந் தேதி வெள்ளை குதிரை வாகனத்திலும், 25-ந் தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும், 26-ந் தேதி இந்திர வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    27-ந் தேதி மதியம் 1 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனம் ஏறி திருத்தேர் பிரவேசித்தலும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. இதில் சூலூர் டி.ஆர்.சந்திரசேகர், இருதயராஜ், கணேசன், பொன் செல்வராஜ், ஜெயராஜ், வேலுமயில், விஜயகாண்டிபன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாலையில் திருஏடு வாசிப்பும், இரவு 12 மணிக்கு காளை வாகனத்தில் அம்மையப்பராக எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பந்த காலுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் பிச்சகமிராசுகள் ரகுராமன் மற்றும் விஜயகுமார் மங்கள வாத்தியங்கள் முழங்க அண்ணாமலையார் கோவிலுக்கு உரித்தான ஒடல் வாத்தியங்கள் இசைக்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோ‌ஷத்துடன் பந்தக்காலை சுமந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள மைதானத்தில் நட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மாட வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேர்களுக்கு விசே‌ஷ பூஜை செய்யப்பட்டு பின்பு பந்தகாலுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் இணை ஆணையர் அசோக்குமார், கண்காணிப்பாளர் பத்ராச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
    ×