என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதிகாலை 5-30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    திருவிழா வருகிற 1-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. உற்சவர் வீதி உலா மற்றும் சப்பர வீதி உலா அனைத்தும் கோவில் பிரகாரங்களிலேயே நடக்கிறது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேரோட்டம் மற்றும் சப்பர வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் செய்து வருகிறார்.
    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மன் சிலைக்கு சுசீந்திரத்தில் தமிழக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடந்தது.

    இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சாமி சிலைகள் கடந்த 3-ந் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றன. நவராத்திரி விழா முடிந்ததும் 17-ந் தேதி சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டன.

    நேற்று முன்தினம் பத்மநாபபுரம் அரண்மனை முன்பு வந்த போது சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் சிலையும் குமாரசாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தங்க வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணிக்கு சுசீந்திரம் வந்தடைந்தது. அங்கு அம்மன் சிலைக்கு, நவராத்திரி குழு தலைவர் வீரபத்ர பிள்ளை மற்றும் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் சார்பில் 4 ரத வீதிகள் வழியாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் கோவில் முன்பு அம்மனுக்கு தமிழக போலீசார் சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதன் பின்பு அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், நவராத்திரி கொலு அமைப்பினரும் செய்திருந்தனர்.
    வீரமாமுனிவரின் திருவுருவச் சிலை மரத்தாலான மற்றும் பிரகாசமான வண்ணங்களில் வரையப்பட்ட 10 அடி (3.0 மீ) உயர சிலை பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் மிஷனரி கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் முகாசபரூரின் வனப்பகுதியாக இருந்த கோணான்குப்பத்தில் அமைந்துள்ளது. இங்கே நிறைய மரங்கள் மற்றும் புதர்கள் இருந்ததால் மக்கள் தங்களுடைய கால்நடைகளை மேய்க்கும் இடமாகப் பயன்படுத்தி வந்தனர்.

    17 ஆம் நூற்றாண்டில், இத்தாலியப் பாதிரியார் மற்றும் மிஷனரி அருட்தந்தை பெஸ்கி, அவர் வேலை செய்யும் இடத்தில், அதாவது ஏலாக்குறிச்சி என்ற திருக்கோவிலூரில் (இப்போது கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ளது [சான்று தேவை]) வைக்க மரியாள் (இயேசுவின் தாய்) இரண்டு சிலைகள் கொண்டு வந்தார். அவர் தமிழ்நாடு முழுவதும் பிரசங்கம் செய்து வந்தார். தன்னுடைய இடத்திற்கு இந்தக் காடுகளை கடந்து சென்று கொண்டிருக்கும் போது களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழ் தன்னுடன் கொண்டு வந்த இரண்டு சிலைகளுடன் அவர் தூங்கி விட்டார்.

    கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் புதரின் பின்னால் ஒரு சிலையினை மறைத்து வைத்து விட்டார்கள். அருட்தந்தை ஒரு சிலை காணாமற் போய்விட்டதென்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு வருத்தத்துடன் இருப்பிடம் வந்தடைந்தார். முகாசபரூரை சேர்ந்த கச்சிரயார் என்ற ஜமீந்தார் ஒருவர் இருந்தார். அவருக்கு குழந்தை இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தார். ஒரு நாள் மரியாள் அவருடைய கனவில் தோன்றி "கச்சிரயார், நான் காட்டில் தனியாக இருக்கிறேன், நீ எனக்கு ஒரு தேவாலயத்தைக் கட்டினால், உனக்கு ஒரு குழந்தையை வரமாகத் தருகிறேன்" என்றார்.

    இதைச் சொல்லிவிட்டு அவர் மறைந்துவிட்டார். இதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், காட்டில் சிலையினை கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்கினார். அவர்கள் புதர்கள் மற்றும் மரங்களை வெட்டும் போது, ஒரு பெரிய புதருக்கு பின்னால் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிலை சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மக்கள் ஒரு சிறிய தேவாலயத்தை கட்டி அங்கு இந்த சிலையை வைத்து வழிபட தொடங்கினர்.

    சிறிது காலத்திற்குப் பிறகு அருட்தந்தை பெஸ்கி நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்து கோணங்குப்பம் வந்தடைந்தார் அங்கு தொலைந்துபோன மேரி மாதா சிலைக்கு சிறிய தேவாலயம் கட்டப்பட்டு இருந்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் கோணான்குப்பமே தான் வேலை செய்யும் இடம் என்று முடிவு செய்தார். இன்று உள்ள ஆலயத்தை கச்சிராயரின் உதவியுடன் கட்டினார். இதுவே அவர் கட்டிய முதல் வழிபாட்டுத் தலமாக இருந்தது. புதிய ஆலயத்தை கட்டி முடித்து அவர் சென்னை சென்று மணிலாவில் இருந்து ஒரு சிலை வாங்கி வருவதற்கு மைலாப்பூர் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டார். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் கன்னி மாதா தனது கைகளில் குழந்தை இயேசுவை கைகளில் வைத்துள்ள ஒரு மாதிரி உருவத்தை உருவாக்கினார். படம் இறுதியில் வந்தடைந்து தேவாலயத்தில் அமைக்கப்பட்டு இன்றளவும் உள்ளது.

    வீரமாமுனிவரின் திருவுருவச் சிலை மரத்தாலான மற்றும் பிரகாசமான வண்ணங்களில் வரையப்பட்ட 10 அடி (3.0 மீ) உயர சிலை பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்திருச்சபையின் மரியாதைக்குரிய விதமாக பெஸ்கி அவரது படைப்புகளில் மிகப்பெரிய மிகவும் புகழ்பெற்ற தமிழ் கவிதைத் தேம்பாவணியை 1726 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார். 1728 - 1729 ஆம் ஆண்டு மதுரையில் நடத்திய தமிழ் மாநாடு அவரது தமிழ்ப் பணிக்கு ஒப்புதல் அளித்து பொது நன்மைக்காக அது வெளியிடப்பட்டது.

    அமைவிடம்

    உளுந்தூர்பேட்டையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கோணான்குப்பம் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம், முகாசபரூருக்கு அருகிலுள்ளது.
    உறையூர் வெக்காளியம்மன் கோவில் அர்த்தமண்டபம் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பக்கர்கள் மூலஸ்தானத்தை தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
    திருச்சி உறையூர் வெக்காளியம்மான் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் மூலஸ்தானம் மற்றும் அர்த்தமண்டபம் 1993-ம் ஆண்டு செங்கல் மூலம் கட்டப்பட்டன. தற்போது ரூ.15 கோடியே 20 லட்சம் செலவில் கருங்கற்களால் அர்த்தமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் கடந்த மாதம் பாலாலயம் மேற்கொள்ளப்பட்டு மூலவர் அம்மன் மரக்கதவுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

    அர்த்தமண்டப பணிகளுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கருங்கல் கொண்டுவரப்பட்டு கடந்த ஒரு வருடமாக கோவில் அலுவலகம் பின்புறத்தில் நடந்து வருகிறது. அர்த்தமண்டபம் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பக்கர்கள் மூலஸ்தானத்தை தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த பணிகள் அடுத்த 45 நாட்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பக்தர்கள் உற்சவ அம்மனை வழிபட்டு கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    இந்த மலை உச்சியை அடைய, செங்குத்தான பாறை மற்றும் பாறைகளால் ஆன படி, ஏணிப்படி, கரடு முரடான பாதை என சுமார் 5 கிலோமீட்டா் தொலைவுக்கு மலை ஏற வேண்டும்.
    கயிலாயத்தில் வீற்றிருந்த பார்வதிதேவி, சிவபெருமானிடம், `பூமியில் பிறந்த மனிதா்கள், அறம், பொருள், இன்பம், வீடுபேறு அடைய சிறந்த தலம் ஏதும் உள்ளதா?' என்று கேட்டாள். அதன்படி சிவபெருமான் கைகாட்டிய மலையே, `பர்வதமலை.'

    இதையடுத்து பார்வதி தேவி இந்த மலைக்கு வந்து தவம் செய்து இறைவனின் அருளைப் பெற்றாள். பார்வதி தவம் புரிந்ததாலேயே இது `பார்வதிமலை' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் `பர்வதமலை' என்றானதாக சொல்கிறார்கள். இங்குள்ள அம்பாள், `பிரம்மராம்பிகை' என்ற பெயருடன் வீற்றிருக்கிறாள்.

    இந்த மலையின் சிறப்பைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி என்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது, பா்வதமலை.

    சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த மலையின், செங்குத்தான பாறைகளின் உச்சியில் கோவில் அமைந்துள்ளது.

    கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் தென்பகுதிக்கு வந்தபோது, அவரது காலடி பட்ட முதல் இடம் இது என்று சொல்லப் படுகிறது.

    ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது, அதில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதியே இந்த பா்வதமலை என்ற நம்பிக்கையும் உள்ளது. இதற்குச் சான்றாக, இங்கே ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்திருக்கின்றன.

    கயிலாய மலையை தரிசிக்க இயலாதவா்கள், இந்த மலையை தரிசித்து வழிபட்டாலே அந்தப் பலனை அடைந்துவிட முடியும்.

    இந்த மலை உச்சியை அடைய, செங்குத்தான பாறை மற்றும் பாறைகளால் ஆன படி, ஏணிப்படி, கரடு முரடான பாதை என சுமார் 5 கிலோமீட்டா் தொலைவுக்கு மலை ஏற வேண்டும்.

    இந்த ஆலயத்திற்கு கதவுகளே கிடையாது. கோவிலுக்கு அர்ச்சகரும் இல்லை. இங்குள்ள பிரம்மராம்பிகை பேரழகுடன் வீற்றிருப்பதைக் காணலாம்.

    மலை உச்சியில் மிகப்பெரிய திரிசூலம் ஒன்று உள்ளது.

    மலையின் அடிவாரத்தில் பச்சையம்மன் கோவில் இருக்கிறது. இதன் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளி அம்பிகையை வழிபடுகிறார்கள்.

    சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடிப்பதினெட்டு, கார்த்திகை தீபம் போன்றவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தீபம் ஏற்றி ஒருநாள் அபிஷேக, ஆராதனை செய்தால் வருடம் முழுவதும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.

    பர்வதமலையில் அமர்ந்து தியானம் செய்தால், அவா்களுக்கு அம்பிகை ஞானத்தை வழங்குவாள்.

    இங்கு விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பவுர்ணமி நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 300 கிலோ அரிசி சாதத்தில் சுந்தரேசுவரருக்கு அபிஷேகம் நடந்தது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
    ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவன் கோவில்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேசுவரருக்கு சுமார் 300 கிலோ அரிசியில் சாதம் தயாரிக்கப்பட்டது. அதனை உச்சிக்கால பூஜையின் போது சுவாமிக்கு அபிஷேகம் செய்து படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து சுந்தரேசுவருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் அனைவருக்கும் 50 கிலோவில் தயாரிக்கப்பட்ட தயிர் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் சுவாமிக்கு படைக்கப்பட்ட உணவை இன்று(வியாழக்கிழமை) எடுத்து அவை வைகை ஆற்றில் கரைக்கப்படும். அதனை ஆற்றில் உள்ள ஜீவராசிகள் உட்கொள்வதாக ஐதீகம். இதற்கிடையில் மீனாட்சி அம்மனுக்கு மாலையில் சாந்தாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவில்களான சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், மேலூர் திருவாதவூர் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    அதே போன்று இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் மதுரை தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள பால்சுவை கண்ட சிவபெருமான் கோவில், சோழவந்தான் புட்டு விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. வசதியான நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் முடிவு செய்யப்படும்.
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. கோட்டயத்தைச் சேர்ந்த வாசுதேவன் பட்டத்திரி தலைமையில் நடக்கும் பூஜைகளைத் தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு, செய்ய வேண்டிய பரிகார பூஜைகள் குறித்து முதலில் திட்டமிடப்படுகிறது.

    பின்னர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக 3 நாட்கள் தேர்வு செய்யப்படும். பின்னர் அரசுக்கு வசதியான நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் முடிவு செய்யப்படும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருட சேவை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இரவு 7 மணியில் 9 மணிவரை கருட சேவை (தங்கக் கருட வாகன வீதி உலா) நடந்தது.

    உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீசுதர்சன மகா மந்திரத்தை தானே ஜபிப்பதும், மற்றவர் ஜபிக்கக் கேட்பதும், சுதர்சன யாகம் நடக்குமிடத்தில் இருப்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடியது.
    சுதர்சன சக்கர யந்திர அமைப்பு இரு வகையானது. செப்புத் தகட்டில் வரி வடிவிலேயே முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்புகளில் ஸ்ரீசுதர்சன வடிவை வழிபடலாம். இது ஒரு முறை. இன்னொன்று சக்கரத்தில் ஸ்ரீசுதர்சனரின் வடிவை உள்ளடக்கிய விக் கிரக ஆராதனை வழிபாடு.

    இந்த இரண்டு வகைகளிலும் சுதர்சனரை வழிபட இயலாமல் போனால், சுதர்சனரை மனக் கண்ணில் இருத்தி, அவரின் பல்வேறு மந்திரங்களை தூய்மையான மனதுடன் சொல்லி வழிபடலாம். உடலும் உள்ளமும் சுத்தமான சூழ்நிலையில் இந்த மந்திரங்களை உச்சரிப்பது, நிறைவான பலனை அளிப்பதோடு மனதுக்கு அமைதியையும் கொடுக்கும்.

    பகவான் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக, சிலை வடிவம் தாங்கி இந்த பூலோகத்தில் தோன்றினார். விக்ரக வழிபாடு முறையில் பகவானை நன்கு அலங்கரித்து அவனது அற்புற அழகிலே லயித்து, அவனது ஆயிரத்தெட்டு நாமாக்களினால் அர்ச்சித்து, ஆராதித்து ஆத்ம சாந்தியைப் பெறுகிறார்கள்.
    அதுபோல், பகவான் மந்திர ரூபமாகவும், யந்திர ரூபமாகவும் உருவெடுத்தான். சிலை உருவை வீட்டில் வைத்து வழிபட இயலாதவர்களும் தன்னை வழிபட ஏதுவாக யந்திர உருவம் தாங்கினான் பகவான். அதனால், பக்தி சிரேஷ்டர்கள் பகவானை விக்ர ரூபமாகவும், மகா யந்திரத்தின் ரூபமாகவும், சாளக்கிராம ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.

    யந்திர பூஜையைக் கடைப்பிடிப்போர், ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தத்துவத்தை மகா யந்திரங்களில் தியானித்து வழிபடுகிறார்கள். மனதைச் செலுத்தி, அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை முதலியவற்றால் வழிபட்டு பயன் பெறுகிறார்கள். மகாசுதர்சன யந்திரத்தை முறையாக வழிபடுவோர், எவ்விதமான இன்னல்களுமற்று, சகல சவுபாக்கியங்களுடன், இன்பமாக வாழ்கிறார்கள். ஸ்ரீசுதர்சன உபாசனை வீரம் அளிப்பது. தீர்க்க முடியாத நோய்களும், சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும்.

    போர்முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதே, தமது லட்சியமாகக் கொண்ட வீரவாழ்வு வாழ்ந்த பல மாமன்னர்கள், சுதர்சன உபாசனை செய்தவர்களாகவே இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தினசரி அதிகாலையில் குளித்து முடித்து, தூய்மையுடன், நித்திய கர்மாக்களை முடித்து விட்டு, ஸ்ரீசுதர்சன யந்திரம் முன் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீசுதர்சனரை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஸ்ரீசுதர்சன அஷ்டோத்தரம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

    இவ்விதமான விரத வழிபாட்டினால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். வாழ்க்கையில் எந்த விதமான கஷ்டமும் ஏற்படாது. எடுத்த காரியம் யாவிலும் வெற்றி கிடைக்கும். ஆபத்துகளிலிருந்து விடுபடுவதும், தீராத நோய்கள் நீங்குவதும், சத்ரு நாசமும், சர்வஜன வசியமும், இஷ்ட காரிய சித்தியும் இந்த வழிபாட்டினால் ஏற்படும்.

    இதைப்போலவே, பக்தி சிரத்தையுடன் சுத்தமான இடத்திலோ அல்லது பூஜை அறையிலோ அமர்ந்து, ஒரு பஞ்சபாத்திரத்தில் உள்ள புனித நீரில் சில துளசி தளங்களைச் சேர்த்து, வலது கரத்தால் மூடிக்கொண்டு, வலிமை மிக்க சுதர்சன மகா மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறைக்கு மேல் ஜபித்து பகவான் மீது நம்பிக்கை கொண்டு தீர்த்தத்தை நோயுற்றவர்களுக்குக் கொடுத்தால் நோய் தீர்வதை காணலாம்.

    ஸ்ரீசுதர்சன மகாமந்திரம் சர்வ வல்லமை பெற்றது. உடனே பலன் தரக்கூடியது. எனவே தக்க பெரியோர்களிடம் உபதேசம் பெற்று, அங்க நியாச, கர நியாச, தியான முறைக ளோடுசரியான உச்சரிப்புடன் முறைப்படி ஜபிக்க வேண்டியது அவசியம்.

    ஸ்ரீசுதர்சன மகா மந்திரத்தை தானே ஜபிப்பதும், மற்றவர் ஜபிக்கக் கேட்பதும், சுதர்சன யாகம் நடக்குமிடத்தில் இருப்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடியது.
    யாகத்துக்குரிய திரவியங்களைக் கொடுக்கலாம். இயலாதவர்கள் பொருளாகவோ, பணமாகேவா யாகத்துரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் மிகுந்த புண்ணியம் தரும். ஏராளமான நற்பலன்களையும் அளிக்கும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    திருமலை :

    திருப்பதியில் தரிசனம் செய்ய நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டோக்கன் நாளை மறுதினம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகிற 25ந் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது எனவே பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.300 கட்டணத்தில் ஏற்கனவே 8 ஆயிரம் டிக்கெட் வெளியிடப்பட்டது. தற்போது அது 10 ஆயிரம் டிக்கெட்டாகவும் இலவச தரிசனத்தில் வெளியிடப்பட்ட 8 ஆயிரம் டோக்கன் தற்போது 12 ஆயிரம் டோக்கனாகவும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 27,878 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,741 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    சப்த கன்னிகள் பூஜையை தொடர்ந்து 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சமுத்திர அபிஷேகமும், சமுத்திரத்தை நோக்கி ஆரத்தி வழிபாடும் நடந்தது.
    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆரத்தி வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 5 மணிக்கு கடற்கரையில் அமைந்துள்ள பரசு ராம விநாயகா் கோவில் முன்பு பக்தா்கள் சங்கமித்தனர். தொடர்ந்து மாதா, பிதா, குரு வேண்டல், குலதேவதை, இஷ்ட தேவதை, கிராம தேவதை வேண்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் சப்த கன்னிகள் பூஜையை தொடர்ந்து 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சமுத்திர அபிஷேகமும், சமுத்திரத்தை நோக்கி ஆரத்தி வழிபாடும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி நடந்த அன்னாபிஷேகத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ஐப்பசி பவுர்ணமியான நேற்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி சாதம் வடிக்கப்பட்டு சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு காய்கனிகளால் அலங்காரம் செய்யப்படும்.

    அதன்படி திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவிலில் உள்ள சிவ லிங்கங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சாமிக்கு அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது.

    அந்த சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ராஜகோபுரம் முன்பும், அம்மணி அம்மன் கோபுரம் முன்பும் காத்திருந்தனர்.

    இதற்கிடையில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை திருவண்ணாமலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கோபுரங்கள் முன் நனைந்தவாறு பக்தர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து 6 மணிக்கு பின்னர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நீண்ட வரிசையில் நின்று அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    ×