என் மலர்tooltip icon

    தரவரிசை

    எஸ்.ஆர்.பாலாஜி இயக்கத்தில் விவேக் சேகர் - நேஹா சக்சேனா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நீ என்ன மாயம் செய்தாய்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் விவேக் சேகர் - நாயகி நேஹா சக்சேனா இருவரும் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். சிறு வயது முதலே இருவரும் அக்கா - தம்பி போல பழகி வருகிறார்கள். அதேநேரத்தில் நாயகனுக்கு நேஹா மீது ஒரு காதலும் இருக்கிறது. ஒரு கட்டத்தில் நேஹாவுக்கு திருமணம் செய்து வைக்க, அவர்களது வீட்டில் மாப்பிள்ளை தேடி வருகின்றனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடையும், விவேக் சேகர், திருமணமானால், நேஹா தன்னை விட்டு பிரிந்து போய் விடுவாள் என்பதற்காக திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்லி தன்னுடனேயே இருக்கும்படி சொல்கிறார். பின்னர் விவேக் சேகர் தனது வேலை காரணமாக அமெரிக்கா செல்கிறார். பல வருடங்கள் கழித்து இந்தியா வரும் விவேக் சேகர், நேஹாவை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து அவளது விலாசத்தை தேடி வருகிறார்.

    இந்நிலையில், நேஹா இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைக்க, அவளை பார்க்க அவளது வீட்டுக்குச் செல்கிறார். ஆனால் நேஹா முன்பு போல், விவேக்கிடம் பழகாமல் அவனிடம் இருந்து ஒதுங்கியே செல்கிறாள். நேஹாவுடன் அவளது வீட்டில் வேலைக்காரி மற்றும் வேலைக்காரியின் மகளும் தங்கியிருக்கின்றனர்.

    முன்புபோல்
    நேஹா தன்னிடம் பழகாததை எண்ணி, வேதனைப்படும் விவேக், அங்கிருந்து புறப்பட்டு செல்ல முடிவு செய்கிறார். இதுஒருபுறம் இருக்க விவேக்க பார்த்த உடனேயே வேலைக்காரியின் மகளுக்கு, விவேக் மீது ஒருதலைக் காதல் வந்துவிடுகிறது. இந்நிலையில், வேலைக்காரி தனது மகளுடன் வெளியூர் செல்வதாகக் கூறி, அன்று ஒருநாள் மட்டும் நேஹாவுக்கு துணையாக இருக்கும்படி கூறிவிட்டுச் செல்கிறாள்.

    அன்றைய நாள், அதிகளவில் மது உட்கொண்டுவிட்டு, மேலும் கையில் மதுவுடன் இருக்கும் நேஹா, தனது கையை அறுத்துக் கொள்ளப் போவதாக கூறுகிறாள். இதையடுத்து அவளிடமிருந்த கத்தியை விவேக் வாங்க முயற்சி செய்யும் போது, நேஹா மீது மது கொட்டிவிடுகிறது. இதையடுத்து அவளும் மதுபோதையில் மயக்கமடைகிறாள். விவேக் அவளது உடைகளை களைந்து, மதுவை துடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

    அடுத்த நாள் காலை துணியில்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடையும் நேஹா, என்ன செய்தார்? நேஹாவின் கணவர் என்ன ஆனார்? விவேக், நேஹாவின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தாரா? அல்லது நேஹாவுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நேஹா மீதான பாசத்துடனும், அவளை விட்டு பிரியக் கூடாது என்ற ஏக்கத்துடன் விவேக் சேகர் சிறப்பாக நடித்திருக்கிறார். யதார்த்தமான நடிப்புக்கு பதிலாக மிகையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாரோ என்ற நினைக்கும்படி நடித்திருக்கிறார். தனியாக வாழ்ந்து வரும் நேஹா, ஏக்கத்துடன், கவர்ச்சியிலும் கொஞ்சம் தூக்கலாகவே நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்தின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

    பாசம், காதல், கவர்ச்சி என அனைத்து பரிமாணங்களையும் சமமாக காட்டியிருக்கும் எஸ்.ஆர்.பாலாஜியின் இயக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும், திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். தேவையில்லாத காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.

    டேவிட் பரத் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கே நம்மை கொண்டு செல்கிறது. ரதன் சந்தவத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருப்பது படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `நீ என்ன மாயம் செய்தாய்' வாழ்க்கை போராட்டம்.
    பாண்டி அருணாச்சலம் இயக்கத்தில் கிஷோர் தேவ் - பாரத நாயுடு நடிப்பில் வெளியாகியிருக்கும் `நிரஞ்சனா' படத்தின் விமர்சனம்.
    நாயகன் கிஷோர் தேவ், மாவு கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். அதே நேரத்தில் தண்ணீர் கேன் போடுதல் உள்ளிட்ட பல வேலைகளையும் செய்து வருகிறார். நாயகி பாரத நாயுடு, அவளது பாட்டியின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருகிறாள். பாரத நாயுடுவின் பாட்டி மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அவர்களது கடைக்கு தண்ணீர் போட வருகிறார் கிஷோர். அதே நேரத்தில் கிஷோர் வேலை பார்க்கும் மாவு கடைக்கு நாயகி அடிக்கடி வருகிறாள்.   

    இவ்வாறாக இருவரது சந்திப்பும் நாளடைவில் காதலாக மாறுகிறது. இதையடுத்து கிஷோர் தேவ் - பாரத நாயுடு இடையேயான நெருக்கம் மேலும் அதிகமாக, இருவரும் முதல் முத்தம் ஒன்று கொடுக்க முடிவு செய்கின்றனர். அதனை ஒரு செல்பியாக பதிவு செய்ய வேண்டும் என்று நாயகி விரும்புகிறாள்.

    பாரத நாயடுவின் விருப்பத்தை நிறைவேற்ற, கிஷோர் தனது சக்திக்கு ஏற்ற மொபைல் ஒன்றை வாங்குகிறார். இதனை தனது பாரத நாயுடுவிடம் தெரிவித்து தயாராக இருக்கும்படி கூறிவிட்டு, அந்த மொபைலை எடுத்துக் கொண்டு அவரது வீட்டுக்கும் வருகிறார். பின்னர் தன்னைத் தானே செல்பியும் எடுத்துக் கொள்கிறார் கிஷோர்.

    பின்னர் தனது செல்பிகளை பார்க்கும் கிஷோருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது செல்பி போட்டோக்கள் அனைத்தும் தெளிவின்றி மங்கலாக இருக்கிறது. இதையடுத்து தமிழ் சினிமாவுக்கே உரித்தான ஸ்டைலில் மின்சாரம் விட்டு விட்டு எரிய, பேய் ஒன்று வருகிறது. அந்த பேய் தன்னை நிரஞ்சனா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கிஷோர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறது.

    இதனால் அதிர்ச்சியடையும், கிஷோர், அடுத்ததாக என்ன செய்தார்? அந்த நிரஞ்சனா யார்? நிரஞ்சனாவுக்கும் - கிஷோருக்கும் என்ன சம்பந்தம்? நிரஞ்சனாவை கிஷோர் உண்மையாகவே காதலித்தாரா? உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர் கிஷோர் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி பாரத நாயுடுவின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. இருவருக்கும் இடையே ஒரு பட்டும் படாத காதல் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற துணை கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

    கிஷோர் தேவ் - பாரத நாயுடு இடையேயான காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பாண்டி அருணாச்சலம் பேயை காட்டுவதில் சொதப்பி இருக்கிறார். பேயை பார்த்தால் ஒருவித பயம் வர வேண்டும். நிரஞ்சனா பேயை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    சதீஷின் பின்னணி இசைக்கு பேய் வரும் காட்சிகள் ஈடுகொடுக்கும்படியாக இல்லை. பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. செல்வகுமார் சுப்பைய்யாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சுமார் ரகம் தான்.

    மொத்தத்தில் `நிரஞ்சனா' சிரிப்பு பேய்.
    கல்யாண் கிருஷ்ண குரசலா இயக்கத்தில் நாகர்ஜுனா - ரம்யா கிருஷ்ணன் - லாவண்யா திரிபாதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `சோக்காலி மைனர்' படத்தின் விமர்சனம்.
    கணவன் - மனைவியான நாகர்ஜுனாவும், ரம்யா கிருஷ்ணனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கோபியர் கொஞ்சும் ரமணா என்பதற்கு நாகர்ஜுனா தான் உதாரணம் என்று சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஒரு ப்ளே பாயாகவே வாழ்ந்து வரும் நாகர்ஜுனா திடீரென சாலை விபத்து ஒன்றில் இறந்து விடுகிறார்.

    இந்நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். தனது மகனை அப்பாவை போல இல்லாமல், பெண்கள் வாடையே இல்லாமல் வளர்த்து வருகிறார். பெண்களின் பழக்கமே இல்லாமல் அப்பாவுக்கு அப்படியே எதிர்மறையாக வளரும் மகன், பெரிய ஆளாக மாறும் போது, பார்ப்பதற்கு நாகர்ஜுனா ஜாடையிலேயே இருக்கிறார்.

    இதையடுத்து, அமெரிக்காவில் வேலை பார்த்து வரும், மகன் நாகர்ஜுனாவுக்கு, லாவண்யா திரிவாதியை திருமணம் செய்து வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இவ்வாறாக திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகியும் இருவருக்கும் இடையே எந்தவித காதலோ, உறவோ ஏற்படவில்லை. மேலும் இருவரும் ஒருவரையொருவர் விட்டு பிரியவும் முடிவு செய்கின்றனர். இதையடுத்து இந்தியா வரும் மகன் நாகர்ஜுனா தனது முடிவை ரம்யா கிருஷ்ணனிடம் தெரிவிக்கிறார்.

    ரம்யா கிருஷ்ணன் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றும் முடியாததால், தனக்காக ஒரு வாரம் ஒன்றாக சேர்ந்து வாழும்படி கூறுகிறார். ரம்யா கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டு இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். அப்பாவுக்கு நேர் எதிராக மகன் வளர்ந்திருப்பதை பார்த்து வருத்தப்படும் ரம்யா கிருஷ்ணன், தனது கணவர் படத்தின் முன்பு கண்கலங்க, எம தர்மன், அப்பா நாகர்ஜுனாவை பூலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார். இவ்வாறாக பூலோகம் வரும் அப்பா நாகர்ஜுனா, ரம்யா கிருஷ்ணன் கண்ணுக்கு மட்டுமே தெரிரிகிறார்.

    பூலோகித்திற்கு வந்த அப்பா நாகர்ஜுனா, தனது மகன் நாகர்ஜுனா உடலில் புகுந்து தனது மகனையும் - மருமகளையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? இருவரும் இணைந்தார்களா? அதற்கிடையே அவரது அப்பாவின் சாவில் மர்மம் இருப்பது மகன் நாகர்ஜுனாவுக்கு தெரிய வர அதனை கண்டுபிடித்து, தனது அப்பாவை கொன்றவர்களை பழிவாங்கினாரா? மீண்டும் லாவண்யாவுடன் இணைந்து புது வாழ்க்கையை ஆரம்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாகர்ஜுனா தனது அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். குறிப்பாக அப்பா நாகர்ஜுனாவின் கதாபாத்திரம் வரும் இடங்களில் கலகலப்புக்கு பஞ்சமில்லை. அப்பா - மகன் என இரு கதாபாத்திரத்திலும் நாகர்ஜுனாவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது.

    ரம்யா கிருஷ்ணன் மனைவியாகவும், அம்மாவாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பா நாகர்ஜுனாவை பெண்களிடம் இருந்து தடுக்கும் விதத்திலும், மகன் நாகர்ஜுனாவை பெண்களுடன் பழக விடாமல் நடித்திருப்பதிலும், ஆவியாக வரும் நாகர்ஜுனாவுடனான உரையாடலிலும் ரம்யா கிருஷ்ணன் ரசிக்க வைக்கிறார்.

    லாவண்யா திரிபாதி கதைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சிக்கும் பஞ்சம் வைக்கவில்லை. சிறப்பு தோற்றத்தில் வரும் அனுஷ்கா காட்சிக்கு ஏற்ப நடித்துவிட்டு சென்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதையின் போக்குக்கு ஏற்ப ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

    இயக்கத்தை பொறுத்தவரையில் கல்யாண் கிருஷ்ண குரசலா
     ஒரு குடும்பக் கதையை கலகப்புடன் இயக்கியிருக்கிறார். அப்பா நாகர்ஜுனாவை பெண்களுக்கு பிடித்தவராகவும், வேட்டி, கண்ணாடி என கெத்தாகவும் காட்டியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. அப்பா - மகன் என இருவருக்குமான வேறுபாட்டையும் சிறப்பாக காட்டியிருக்கிறார். திரைக்கதை ரசிக்கும்படியாக இருந்தாலும், அப்பா நாகர்ஜுனா மீண்டும் பூவுலகம் வருதல் போன்ற காட்சிகள் ஏற்புடையதாக இல்லை என்று தான் கூற வேண்டும்.

    அனூப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.

    மொத்தத்தில் `சோக்காலி மைனர்' கலகலப்பு.
    ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா - ரெஜினா - ஐஸ்வர்யா ராஜேஷ் - பிரணிதா - அதிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் விமர்சனம்.
    அதர்வாவின் அப்பா தீவிர ஜெமினிகணேஷன் ரசிகர் என்பதால், தனது மகனுக்கு ஜெமினிகணேஷன் என்றே பெயர் வைக்கிறார். அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மதுரையில் இருக்கும் ரெஜினாவிடம் தனது திருமணவிழா அழைப்பிதழை கொடுப்பதற்காக அதர்வா மதுரைக்கு செல்கிறார். ரெஜினினாவின் வீட்டிற்கு சென்ற அதர்வாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரெஜினா அங்கு இல்லை. ரெஜினாவின் வீடு யாரும் பயன்படுத்தாததால் குப்பையாக கிடக்கிறது.

    இதையடுத்து அந்த வீட்டின் மாடியில் இருக்கும் சூரியிடம், ரெஜினா குறித்து அதர்வா கேட்கிறார். சூரி ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாக அங்கு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் அதர்வாவை வைத்து அன்றைய நாளை ஓட்டி விடலாம் என்று திட்டம் போடும் சூரி, அதர்வாவை ரெஜினா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.



    போகும் வழியில், ரெஜினாவை எப்படி தெரியும் என்று சூரி கேட்க, ரெஜினா தனது முன்னாள் காதலி என்று அதர்வா கூறுகிறார். மேலும் ரெஜினாவுடனான காதல் குறித்த முழு விவரத்தையும் சொல்கிறார். இந்நிலையில், தனது மற்ற காதல் பற்றியும், காதலிகள் பற்றியும் கூற, தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு கடுப்பாகும் சூரி என்ன செய்கிறார்? அதர்வா தனது முன்னாள் காதலிகளான  ரெஜினா, அதிதி, பிரணிதா உள்ளிட்டாரை சந்தித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அதர்வா வழக்கமான, தனது ஈர்ப்பான நடிப்பினால் அனைவரையும் கவர்கிறார். அனைத்து நடிகைகளுமே அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறார்கள். யாருடன் ஜோடி சேர்ந்தாலும் அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறது. காதல் காட்சிகளிலும், சூரியுடனான காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அதர்வா முதன்முறையாக காமெடி கலந்த கதையை முயற்சி செய்திருக்கிறார்.



    ரெஜினா தமிழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது பேச்சும், செய்கைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. பிரணிதாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதீதி - அதர்வாவுடனான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. சூரி காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்றபடி மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, டி.சிவா உள்ளிட்டோரும் கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

    அதர்வாவின் தந்தை ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால் தான் அதர்வாவுக்கு ஜெமினிகணேசன் என்று பெயர் வைத்தார். ஆனால் அந்த பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் படி நாயகனின் காதல் இருக்கிறதோ என்று ரசிகர்கள் யோசித்தாலும், திரைக்கதையின் போக்கு ஏற்ப ஓடம் இளவரசு அவ்வாறு இயக்கியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதி முழுவதும் சிரிப்பு மழை பொழிகிறது.

    டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இமான் ஆட்டம்போட வைத்திருக்கிறார். ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.

    மொத்தத்தில் `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' காதல் கலகலப்பு
    எஸ்.அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில் அஸ்வின் - சுவாதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `திரி' படத்தின் விமர்சனம்.
    நாயகன் அஸ்வின் கல்லூரி ஒன்றில் இறுதிஆண்டு படித்து வருகிறார். அஸ்வினின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒழுக்கம் வாழ்க்கைக்கு முக்கியம். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை பின்பற்ற வேண்டும் என்பது ஜெயப்பிரகாஷின் கொள்கை. அதன்படியே மகன் அஸ்வின் மற்றும் மகளை வளர்த்திருக்கிறார்.

    அஸ்வின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் நாயகியான சுவாதி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். வெகு நாட்களாக இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்தாலும், உள்மனதிற்குள் காதலும் இருக்கிறது. ஆனால் அந்த காதலை ஒருவொருக்கொருவர் வெளிப்படுத்தாமல் பழகி வருகின்றனர்.



    இந்நிலையில், அஸ்வின் பைக்கில் செல்லும் போது எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விடுகிறது. இதையடுத்து காரை விட்டு இறங்கிய அர்ஜய் தகாத வார்த்தைகளால் அஸ்வினை திட்ட, அஸ்வின் அவரை அடித்து விடுகிறார். இதையடுத்து அர்ஜயிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து இருவரும் சென்றுவிடுகின்றனர்.

    இதையடுத்து தனது இறுதிஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அஸ்வினின் சான்றிதழில் அவரது ஒழுக்கத்திற்கு குறை இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. கல்லூரியில் எந்த பிரச்சனையிலும் சிக்காத அஸ்வின், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் முறையிடுகிறார். அப்போது தான் கல்லூரியின் தலைவரான ஏ.எல்.அழகப்பனின் மகன் தான் அர்ஜய் என்பது தெரிய வருகிறது. அஸ்வினை பழிவாங்குவதற்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்த அர்ஜய், அஸ்வினின் அப்பாவுக்கு முக்கியமாக கருதப்படும் ஒழுக்கத்தின் மூலமாக பழிவாங்கி விடுகிறார்.



    தனது தந்தைக்கு தெரியாமல் எப்படியாவது இந்த சான்றிதழை மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். அதற்காக ஏ.எல்.அழகப்பனை சந்திக்கிறார். அரசியல், கட்டப்பஞ்சாயத்து என பல தொழில்களில் ஈடுபட்டு வரும் அழகப்பன் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில், அவரை சந்திக்க வரும் அஸ்வினை தனது ஆட்களை வைத்து சரமாரியாக அடித்து விடுகிறார்.

    இதனால் கோபமடையும் அஸ்வின், இதற்கு காரணமான அர்ஜயை பழிவாங்க முடிவு செய்கிறார். மேலும் தனது சான்றிதழில் தனது ஒழுக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட கரையை துடைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். அழகப்பனின் அரசியல் கனவையும் தகர்க்க முடிவு செய்யும் அஸ்வின் முன்னெடுக்கும் போராட்டமே படத்தின் மீதிக்கதை.



    அஸ்வின் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் இளைஞனாகவும், தந்தைக்கு பாத்திரமான மகனாகவும் அவரது நடிப்பு சிறப்பு. நட்பு, காதல், சண்டை என அனைத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. சுவாதி ஒரு செய்தியாளராக, எதற்கும் பயப்படாத ஒரு இளம் பெண்ணாக துடிப்புடன் நடித்திருக்கிறார். அவருக்கே உண்டான குறும்புடனும், ரசிக்க வைக்கும் சிரிப்புடனும் ரசிகர்களை கவர்கிறார்.

    அர்ஜய் குறைவான காட்சிகளிலே வந்தாலும், தன்னை தாக்கிய ஒருவனை பழிவாங்கும் வில்லன் கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ் தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு ஆசிரியருக்குண்டான மரியாதையுடனும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் விதத்திலும் அவரது நடிப்பு சிறப்பு. ஒரு ரவுடி, அரசியல்வாதிக்கு உண்டான கெத்துடன் ஏ.எல்.அழகப்பன் கதைக்கு ஏற்ப முக்கிய காட்சியில் வந்து செல்கிறார். மற்றபடி கருணாகரன், டேனியல், செண்ட்ராயன், அனுபமா குமார் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.



    அப்பா - மகன் இருவருக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பை சிறப்பாக சொல்லியிருக்கும் எஸ்.அசோக் அமிர்தராஜுக்கு பாராட்டுக்கள். ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து வரும் ஒரு இளைஞன் அவனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையை சிறப்பாக கூறியிருக்கிறார். கல்வி முக்கியம், கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவற்றை நல்ல உதாரணத்துடன் எடுத்துரைத்திருக்கிறார்.

    அதுமட்டுமல்லாமல் விலைபோகும் பொருளாக கல்வி மாறிவருவதாகவும், கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு யாரிடம் இருக்கக் கூடாதோ, அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கியிருக்கிறார். எனினும் படத்தின் திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அதேநேரத்தில் படத்தில் ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு இருக்கும் தொடர்பு, ரசிகர்கள் மத்தியில் ஏற்கும்படியாக இல்லை.

    அஜிஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது. கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `திரி' கல்வியின் குறி.
    அன்பழகன் இயக்கத்தில் சந்திரன் - ஆனந்தி - சினிஜெயந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் `ரூபாய்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் சந்திரன் மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன் தேனியில் இருந்து சென்னைக்கு லாரியில் பூ லோடு ஏற்றி வருகின்றனர். லாரிக்கு தவணை கட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதால், தேனி திரும்பும் வேளையில் ஏதாவது லோடு கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வரும் சினிஜெயந்த், வீடு மாற்றிப் போவதற்காக அங்குள்ள லாரி ஓட்டுநர்களிடம் சவாரிக்காக பேசி வருகிறார். அவர்கள் அனைவரும் அதிக தொகை கேட்க, குறைவான தொகைக்கு வருவதாக சந்திரன் கூற அவரை கூட்டிச் செல்கிறார்.

    அந்த பகுதிக்கு சென்ற பிறகு தான் சினிஜெயந்த் குறித்து தெரிய வருகிறது. சினிஜெயந்த், அவரது பகுதியில் இருக்கும் அனைவரிடமும் பணம் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்து வருகிறார். சினிஜெயந்த்தை பார்த்தாலே பணம் கேட்பார் என்று அனைவரும் பறந்து விடுகிறார்கள். இந்நிலையில், சினிஜெயந்துக்கு பணம் கொடுப்பதும், உண்டியலில் பணம் போடுவதும் ஒன்று தான் என்னும் அளவுக்கு அவரைப் பற்றி அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ஆனந்தியை பார்க்கும் சந்திரனுக்கு முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் வந்துவிடுகிறது.



    இதைகேட்ட கிஷோர், சந்திரனிடம் இந்த சவாரி வேண்டாம், திரும்பிப் போகலாம் என்று கூறுகிறார். ஆனால், ஆனந்தி மீதுள்ள காதலால் கிஷோரை சமாளித்து கூட்டிச் செல்கிறார். மறுபுறத்தில் ஹரிஷ் உத்தமன், வங்கி ஒன்றுக்கு, கீழே வாடகைக்கு வீடு எடுத்து, அந்த வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார். அவரை போலீசார் துரத்திச் செல்வதால், அந்த பணத்தை சந்திரனின் லாரியில் வீசிவிட்டு தப்பித்துச் செல்கிறார்.

    இதனிடையே வெகுநேரமாகியும், சினிஜெயந்துக்கு வீடு கிடைக்காததால், கோபமடையும் கிஷோர், சினிஜெயந்திடம் சண்டை பிடிக்கிறார். அவர்களது சண்டையில், லாரியில் இருக்கும் பொருட்களை இருவரும் தூக்கி வீசுகின்றனர். அப்போது பணம் இருக்கும் அந்த பையையும் தூக்கி வீச, பணம் வெளியே வருகிறது. அவ்வுளவு பணத்தை பார்த்த சினிஜெயந்த்துக்கு அதிர்ச்சியில் இதயமே நின்று விடுகிறது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அனைவரும் ஒன்றாகி விடுகின்றனர். மேலும் அந்த பணத்தை ஜாலியாக செலவு செய்து வருகின்றனர்.



    இந்நிலையில், பணத்தை தேடி செல்லும் ஹரிஷ் உத்தமன் அதற்காக, பல பேரை கொலையும் செய்கிறார். இந்நிலையில், ஹரிஷ் உத்தமனிடமிருந்து, சந்திரன், கிஷோர் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பித்தார்களா? சந்திரன், ஆனந்தியிடம் தனது காதலை வெளிப்படுத்தினாரா? சந்திரனின் காதலுக்கு சினிஜெயந்த் பச்சை கொடி காட்டினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    லாரி ஓட்டுநராக சந்திரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், காதல் என்ற பெயரில் எல்லா நேரத்திலும் சிரித்துக் கொண்டு சமாளிப்பது ரசிகர்களுக்கு ஒருவித முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமான நேரத்திலும் காதல் என்ற பெயரில் அவர் செய்யும் காதல் கடுப்பை கிளப்பும்படி இருக்கிறது.



    கயல் ஆனந்தி இதற்கு முன்பு நடித்த படங்களைப் போல இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மேக்கப் ஏதுமின்றி நடித்திருப்பது சிறப்புக்குரியது. பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமால் விலகியிருந்த சினிஜெயந்த், இந்த படத்தின் மூலம் ரிஎன்ட்ரி ஆகியிருக்கிறார். அவரது பாணியில் கதைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருப்பது சிறப்பு.

    குறைவான காட்சிகளில் வந்திருந்தாலும் ஹரீஷ் உத்தமன் மிரட்டியிருக்கிறார். அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சந்திரனின் நண்பனாக வரும் கிஷோர் ரவிச்சந்திரனின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.



    சாட்டை படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வெற்றி பெற்ற இயக்குநர் அன்பழகன், இந்த படத்தில் அந்த வெற்றி என்னும் கனியை பறிக்க தவறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். பணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாதது. அதற்கான போராட்டத்தில், ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகள், அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதை ஒரு காதலுடன் கூறியிருக்கிறார். இதில் காதலுக்கான திரைக்தையை அமைப்பதில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

    டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். வி.இளையராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது.

    மொத்தத்தில் `ரூபாய்' கொஞ்சமாவது கொடுத்திருக்கலாம்.
    பென்னி தாமஸ் இயக்கத்தில் பிரஜின் - கலா கல்யாணி நடிப்பில் வெளியாகி இருக்கும் `எங்கேயும் நான் இருப்பேன்' படத்தின் விமர்சனம்.
    தாய், தந்தையை இழந்த பிரஜின் மற்றும் அவரது நண்பர் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். பிரஜின் வளையல் உள்ளிட்ட பெண்கள் விரும்பும் அழகு சாதனப் பொருட்களை விற்று வருகிறார். அவரது நண்பர் பன்றி பண்ணை ஒன்றில் வேலை செய்து வருகிறார். தாய் மீது அதீத அன்பு வைத்திருந்த பிரஜினின் நண்பனுக்கு, தனது தாய் தன்னுடன் வந்து பேசுவது போன்ற ஒரு மாயை தோன்றும்.

    பிரஜினின் அன்பால் பின்னாளில் தனது தாயின் நினைவின்றி, மாயையை மறந்து வாழ்ந்து வருகிறான். இதில் பிரஜின், நாயகியான கலா கல்யாணியை காதலித்து வருகிறார். கல்யாணியும், பிரஜினை காதலிக்கிறாள். கல்யாணிக்கு நான்கு அண்ணன்கள் உள்ளனர். கல்யாணியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரஜினை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.



    இதனிடையே, பிரஜின் - கல்யாணி இருவரும் ஊர் சுற்றிவருவதை பார்த்த, கல்யாணியின் அண்ணன்களுக்கு கோபம் வர, கல்யாணி முன்பாகவே பிரஜினை அடித்து தூக்கில் தொங்க விட்டுவிடுகின்றனர். மேலும் கொலை பழியை பிரஜினின் நண்பன் மீது சுமத்திவிடுகின்றனர். உண்மையை கல்யாணி வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கூறிவிடுகின்றனர்.

    இவ்வாறாக பிரஜினை இழந்த அவரது நண்பன், தினசரி வாழ்க்கையை கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறான். இந்நிலையில், அவனது அம்மா பேசியது போல, பிரஜினும் மாயை தோற்றத்தில் அவனிடம் பேசுவது போல அவனுக்கு தோன்றுகிறது. அவனும் பிரஜினுடன் பேச, கல்யாணி தன்னிடம் பேசாமல் இருப்பதாக பிரஜின் கூறுகிறார்.



    இதையடுத்து, பிரஜின், கல்யாணியை அழைப்பதாக பிரஜினின் நண்பன் கல்யாணியிடம் வந்து கூற, செய்வதறியாது விழிக்கும் கல்யாணி என்ன செய்தாள்? பிரஜினை கொன்றது அவளது அண்ணன் தான் என்ற உண்மையை ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தினாளா? பிரஜினின் நண்பன் மீதான பழிக்கு விடை கிடைத்ததா?  கல்யாணியின் அண்ணன்கனை பிரஜினின் நண்பன் பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காதல் செய்யும் கிராமத்து இளைஞனாக பிரஜின் சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய படங்களை போல இப்படத்திலும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. கலா கல்யாணி கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பிரஜினின் நண்பன், கல்யாணியின் அண்ணன்கள் என அனைவரும் கதைக்கு ஏற்ப நடித்திருப்பது சிறப்பு.



    புதுமையான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் பென்னி தாமஸின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு வித்தியாசமான கதையை, கிராமத்து கதைக்களத்தில் சிறப்பாக இயக்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். குறிப்பாக கல்யாணியின் அண்ணன்களின் கதாபாத்திரங்கள், திடீர் திடீரென மாறுவது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

    அப்சல் யூசுப், இ.எஸ்.ராமின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. சாலியின் ஒளிப்பதிவில் கிராமத்தின் பின்னணி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `எங்கேயும் நான் இருப்பேன்' வேகம் குறைவுதான்.
    ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - கயல் ஆனந்தி - சரவணன் நடிப்பில் வெளியாகியிருக்கும் `பண்டிகை' படத்தின் விமர்சனம்.
    சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த கிருஷ்ணாவை, அவரது உறவினர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறார். தொடக்கத்தில் அங்கு அடிதடியில் ஈடுபடும் கிருஷ்ணா, பெரியவனாக ஆன பின்னர் அடிதடிகளை விட்டுவிட்டு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கிருஷ்ணாவின் நண்பரான பிளாக் பாண்டியும் அதே ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கயல் ஆனந்தியை பார்க்கும் கிருஷ்ணாவுக்கு அவள் மீது காதல் வருகிறது. அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணா ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

    இதுஒருபுறம் இருக்க வீடியோ கேம்ஸ் கடை வைத்திருக்கும் சரவணன் சூதாட்டத்தில் அதீத ஈடுபாடுடன் இருக்கிறார். அந்த ஈடுபாட்டின் காரணமாக மதுசூதனன் நடத்தும் கிரிக்கெட் சூதாட்ட குழுவில் இணைந்து சூதாடி வருகிறார். மேலும் சூதாட்டத்தின் மூலம் தனது வீடு மற்றும் சொத்து அனைத்தையும் இழந்து விடுகிறார். இதனால் அவரது மனைவியும், அவரை விட்டுச் செல்கிறார். இதையடுத்து விட்டதை பிடிக்க சரவணன் தொடர்ந்து முயற்சி செய்து வரும் வேளையில், கிருஷ்ணாவை சந்திக்கிறார். அதுவும் கிருஷ்ணா ஒருவரை சரமாரியாக அடித்து துவம்சம் செய்யும் போது அவரை சந்திக்கிறார்.



    இதையடுத்து கிருஷ்ணாவிடம் இங்கு செய்யும் சண்டையை தன்னுடன் வந்து ஒரு இடத்தில் சண்டை செய்தால் இருவருக்கும் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். முதலில் சரவணனின் அழைப்பை ஏற்காத கிருஷ்ணா, தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் தேவைப்படுவதால், அந்த சண்டையில் பங்கேற்க ஒத்துக் கொள்கிறார்.

    சூதாட்டத்தில் ஈடுபடுவோர், அதில் இருந்து வெளியேறி விடக்கூடாது என்பதற்காக மதுசூதனன் தெரு சண்டை (STREET FIGHT) ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சண்டை போடுபவர்களை வைத்து சூதாட்டம் நடத்தப்படுகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத  இடத்தில் இந்த சண்டை நடத்தப்படுகிறது.



    முதலில் பங்கேற்ற சிறிய சிறிய சண்டைகளில் கிருஷ்ணா வெற்றி பெற்றதை அடுத்து, பெரிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதில் கிருஷ்ணா தோல்வியடைவார் என்று பெட் கட்டுகின்றனர். ஆனால் அந்த போட்டியிலும் கிருஷ்ணா வெற்றி பெற்றதால், அருள்தாஸிடம் கடன் வாங்கும், சரவணன் தான் கட்டிய பணத்தை இழந்து விட, தனக்கு தரவேண்டிய பணம் வரவில்லையென்றால் சரவணணை கொன்றுவிடுவதாக அருள்தாஸ் மிரட்டுகிறார்.

    இந்நிலையில், மதுசூதனனிடம் வேலை பார்க்கும் நிதின் சத்யா, சூதாட்டம் என்ற பெயரில், மதுசூதனன் அனைவரையும் ஏமாற்றி வருவதாகக் கூறுகிறார். சரவணனன் சூதாட்டத்தின் மூலம் பணத்தை இழக்கவில்லை என்றும், ஏமாற்றப்பட்டார் என்பதையும் சொன்னவுடன், சரவணன் தான் இழந்த பணத்தை அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று நினைக்கிறார். இதையடுத்து நிதின் சத்யா பணம் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்று கூற, அந்த பணத்தை எடுப்பதற்கு தான் திட்டம் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.



    முதலில் இந்த திட்டத்திற்கு சரவணன் ஒப்புதல் தெரிவித்தாலும், கிருஷ்ணா மறுப்பு தெரிவிக்கிறார். இதையடுத்து அவர்களது நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு துணைபோகிறார். பின்பு திட்டமிட்டபடி மதுசூதனனிடம் இருந்து பணத்தை திருடினார்களா? மதுசூதனன் இவர்களை என்ன செய்தார்? மதுசூதனனடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? கிருஷ்ணா, ஆனந்தியின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கிருஷ்ணா, இப்படத்தின் மூலமும் அதனை நிரூபித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை வராத தெரு சண்டையை மையமாக வைத்து இப்படத்தில் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக கிருஷ்ணா அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு இளைஞனாக சண்டையில் தனது கோபத்தை காட்டுவதிலும், கயல் ஆனந்தியிடம் தனது காதலை வெளிப்படுத்துவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.



    கயல் ஆனந்தி மற்ற படங்களைப் போல இந்த படத்திலும் தனது நடிப்பின் மூலம் வரவேற்பை பெற்றிருக்கிறார். திரையில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சரவணன் படம் முழுக்க வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கே அச்சாணியாக விளங்குகிறது. சூதாட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் போதும், அதில் தனது சொத்துக்களை இழந்து பின்னர், அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் சரவணின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறார். ஒரு சூதாட்டக்காரராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது.

    வஞ்சகம், வேஷம் என சூதாட்டத் தளபதியாக மதுசூதனின் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனது கதாபாத்திரம் குறித்து பேசவைக்கும் அருள்தாஸ், இந்த படத்திலும் அனைவரையும் கவரும்படி நடித்திருக்கிறார். காமெடியில் பிளாக் பாண்டி படம் முழுக்க வந்தாலும், அவரது காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. குறைவான காட்சியில் வந்தாலும், கருணாஸ் அனைவரையும் எதிர்பாராத சிரிப்புக்கு ஆளாக்குகிறார். நிதின் சத்யா, அர்ஜய், சண்முகராஜன் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.



    தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத ஸ்ட்ரீட் சண்டையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஃபெரோஸ். குறிப்பாக இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும்படியாக படத்தை இயக்கி இருப்பது படத்திற்கு பலம். சூதாட்டம், சண்டை, காதல் என அனைத்தையும் ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். அதற்கேற்றாற் போல், திரைக்கதையை அமைத்திருப்பது படத்தை ரசித்து பார்க்கும் படி இருக்கிறது.

    ஆர்.எச்.விக்ரமின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. அர்வியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சியில் விளையாடியிருக்கிறார்.

    மொத்தத்தில் `பண்டிகை' கொண்டாட்டம்.
    ஜி.ஏ.சோமசுந்தரா இயக்கத்தில் சந்த்ரு சீனு - நித்யா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `காதல் காலம்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் சந்த்ரு சீனு வேலையில்லாமல் ஊர் சுற்றி வரும் கிராமத்து இளைஞனாக வலம் வருகிறார். அந்த கிராமத்தில் பேசப்படும் நபராக இருக்கும் சந்த்ருவின் அப்பா. அவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை சந்த்ரு ஊர்சுற்றியே செலவு செய்து வருகிறார். எதன் மீதும் அதிக ஈடுபாடு கிடையாத சந்த்ரு கார், பைக்கே கதியென இருக்கிறார்.

    சந்த்ரு எந்த தவறு செய்தாலும், அதற்கு அவரது தந்தை அவருக்கு ஆதரவாகவே பேசுவது, நாயகனுக்கு வாழைப்பழத்தை உறித்து வாயில் ஊட்டுவது போல இருக்கிறது. இந்நிலையில், சந்த்ரு நாயகி நித்யா ஷெட்டியை சந்திக்கிறார். நித்யாவை சந்தித்த முதல் தருணத்திலேயே சந்த்ருவுக்கு அவர் மீது காதல் வந்து விடுகிறது. கண்டிப்பான குடும்பத்தைச் சேர்ந்த நித்யா, அவரை காதலிக்க மறுக்கிறார்.



    கல்லூரி செல்லும் நித்யாவிடம், அவரது தந்தை காதல் உள்ளிட்ட எந்த வலையிலும் சிக்கிவிடக் கூடாது என்று கண்டிப்பாக வளர்த்திருக்கிறார். இதனால் சந்த்ருவின் காதலை ஏற்க மறுக்கும் நித்யாவை, தினமும் சந்த்ரு பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். ஒருகட்டத்தில், அவர் செய்த தவறுகள் அனைத்தையும் கூறி, அவளுக்காக இனிமேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளிக்கிறார்.

    சந்த்ருவின் பேச்சைக் கேட்டு, நித்யாவும் அவரை காதலிக்க சம்மதம் தெரிவிக்கிறார். இவ்வாறாக சந்தோஷமாக இருவரும் காதலித்து வரும் நிலையில், இவர்களது காதல் நித்யாவின் தந்தைக்கு தெரிய வர, இவர்களது காதலுக்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.



    இதையடுத்து நித்யாவே உயிரென இருக்கும் சந்த்ரு, அவரை கரம் பிடித்தாரா? இவர்களது காதலுக்கு நித்யாவின் தந்தை பச்சைக் கொடி காட்டினாரா? அதற்காக சந்த்ரு என்ன செய்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    தந்தையின் காசை செலவு செய்வதில் பொறுப்பின்றியும், காதல் காட்சிகளிலும் சந்த்ரு சிறப்பாக நடித்திருக்கிறார். நித்யா ஷெட்டி அழகாகவும், பொறுமையாகவும் காட்சிக்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.



    படத்தின் இயக்குநரான ஜி.ஏ.சோமசுந்தரா, காதல் காட்சிகளை மட்டுமே பெரும் பகுதியாக எடுத்திருக்கிறார். இது ரசிகர்களிடையே ஒருவிதமான முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதை என்ற ஒன்றை இயக்குநர் மறந்துவிட்டார் என்பது போல காட்சிகள் கோர்க்கப்பட்டுள்ளன. இதுவே படத்திற்கு பெரிய மைனஸ்.

    எஸ்.ஜெயநாதனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு ரசிக்கும்படி இருக்கிறது. விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `காதல் காலம்' காதல் மட்டுமே.
    ஜான் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹாலண்டு, ராபர்ட் டவுனி, மைக்கேல் ஹீட்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' படத்தின் விமர்சனம்.
    கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் ஸ்பைடர் மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோசுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. அந்த படத்தின் தொடர்ச்சியாக `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' உருவாகியிருக்கிறது.

    அந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை போலீசில் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார்.



    இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சப்ளை செய்வது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார் பீட்டர் பார்க்கர்.

    அப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.



    ஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு சூட்டை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.

    ஸ்பைடர் மேன் சூட் இல்லாமல், கடத்தல் கும்பலை எப்படி முறியடித்தார்? அவருக்கு மீண்டும் சூட் கிடைத்ததா? அவஞ்சர்ஸ் குழுவில் இடம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    முந்தைய பாகங்களில் நடித்திருந்த ஸ்பைடர் மேன் போல, இந்த பாகத்தில் நடித்திருக்கும் டாம் ஹோலண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பள்ளி செல்லும் ஒரு இளைஞனுக்கு உண்டான துடிப்புடனும், காதல், சண்டை, நகைச்சுவை என அனைத்து பரிணாமங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

    ஐயர்ன் மேனாக வரும் ராபர்ட் டவுனி எப்போதும் போல ஒரு சூப்பர் ஹீரோவுக்கு உண்டான கெத்துடன் வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. முன்னாள் பேட்மேனான மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்திருப்பது படத்திற்கு ப்ளஸ். ஜேக்கப் பேட்டலான் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. முக்கியமான காட்சியிலும் காமெடி செய்து சிரிக்க வைக்கும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மற்றபடி ஜான் பேவ்ரியூ, செண்டயா, டொனால்டு க்ளோவர், டைன் டேலி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.



    சூப்பர் ஹீரோக்கள் படங்களிலேயே ஸ்பைர் மேன் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஹீரோக்களை வைத்து வந்து கொண்டிருக்கும் படங்களில், ஏலிகன்களின் வருகையால் ஏற்பட்ட பிரச்சனையால் கிளம்பும் புதிய பிரச்சனையை ஸ்பைடர் மேன் எப்படி முறியடிக்கிறார் என்பதை திரைக்கதையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். சூப்பர் ஹீரோ படங்கள் பெரும்பாலும் அதிகளில் சீரியசாக இருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்களை பெருமளவில் சிரிக்க வைப்பது சிறப்பு. குறிப்பாக தமிழ் டப்பிங்கும், அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் ரசிக்கும் படி இருக்கிறது.

    மைக்கேல் ஜியேசினோவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். சால்வடோர் டோடினோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' காமெடி சீரியஸ்
    ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி - அத்னான் சித்திக் - சாஜல் அலி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள `மாம்' படத்தின் விமர்சனம்.
    டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார் ஸ்ரீதேவி. அத்னான் சித்திக் ஸ்ரீதேவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இதில் முதல் மனைவிக்கு பிறந்த மகள் தான் சாஜல் அலி. சாஜலும் ஸ்ரீதேவி வேலை பார்க்கும்  பள்ளியிலேயே படிக்கிறாள். ஸ்ரீதேவிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எனினும் சாஜல் அலியை, தன் மகளாக பார்க்கிறார் ஸ்ரீதேவி. ஆனால் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள சாஜல் அலி மறுக்கிறாள். மாறாக ஸ்ரீதேவியை மேம் என்றே அழைக்கிறாள்.

    இவ்வாறாக நாட்கள் மெல்ல கடந்து செல்ல, தன்னுடன் படிக்கும் தோழியின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சாஜல் அலி செல்கிறாள். இந்நேரம் பார்த்து வேலை விஷயமாக அத்னான் சித்திக் வெளியூர் சென்று விடுகிறார். இரவு வெகு நேரமாகியும் சாஜல் வராததால் ஸ்ரீதேவி நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்க்க, சாஜல் அங்கு இல்லை. சாஜலுடன் படிக்கும் சக மாணவன், அவனது நண்பர்கள் இணைந்து சாஜலை கடத்திக் கொண்டு போய் கற்பழித்து விடுகின்றனர்.



    இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நவாசுதீன் சித்திக் வருகிறார். அவரது பிரயாசையின் பேரில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றாவாளிகள் அனைவரும் இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

    தன்னை இந்த நிலைமைக்கு ஆழ்த்தியவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியவில்லையே என்று சாஜல் மனக் கஷ்டத்தில் குமுறுகிறாள். மகளின் இந்த நிலைமையை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்ரீதேவி, குற்றவாளிகளை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். அதன்படி துப்பறிவாளரான அக்‌ஷய் கண்ணாவின் உதவியுடன், குற்றவாளிகளை ஸ்ரீதேவி எப்படி பழிவாங்குகிறார்? எந்த மாதிரியான அவர்களுக்கு தண்டனை வழங்கினார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? சாஜல் அலி, ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொண்டாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் ஒரு தாயாகவே வாழ்ந்திருக்கிறார் ஸ்ரீதேவி. பள்ளியில் ஆசிரியராகவும், வீட்டில் அம்மா, மனைவி என ஒரு குடும்ப பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பழிவாங்குவதிலும், அதற்கான முடிவுகளை எடுப்பதிலும் ஸ்ரீதேவியின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

    பாகிஸ்தானின் பிரபல நடிகரான அத்னான் சித்திக் ஒரு தந்தையாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் ஓட்டத்திற்கே அச்சாணியான சாஜல் அலி, ஸ்ரீதேவியை எதிர்க்கும் மகளாகவும், தனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தால் மனம் குறுகி கஷ்டப்படுவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாகிஸ்தானச் சேர்ந்த இவரை திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது.



    நவாசுதீன் சித்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக, தான் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்கிறார். அதேநேரத்தில் குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அவர் எடுக்கும் முயற்சியும் சிறப்பாக உள்ளது. அக்‌ஷய் கண்ணா படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து சென்றாலும், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக அவரது வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

    டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன காலத்தில், பெண்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவது அவர்களுக்கு பாதுகாப்பாக அமையாது. எந்த நேரத்திலும் பெண்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சந்தர்பங்கள் உருவாகலாம். இவ்வாறு பெண்களுக்கு இளைக்கப்படும் குற்றச் செயல்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது. மேலும் அத்தகைய நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்.



    இவ்வாறு ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குற்றச் செயலுக்கு ஆளாக்கப்பட்டால், அந்த குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும். அந்த பெண்ணின் குடும்பத்தார் எந்தளவுக்கு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை படத்தின் மூலமாக விளக்கியிருக்கும் ரவி உதயவாரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் படத்தை பார்க்க, ஒரு ஆவணப்படத்தை பார்த்த அனுபவமே இருக்கிறது. அந்தளவுக்கு படத்தின் திரைக்கதை மெல்ல செல்கிறது. மற்றபடி படம் ஒரு நல்ல செய்தியை எடுத்துரைக்கிறது.

    இவ்வாறாக மெதுவாக நகரும் திரைக்கதையை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பார்க்கும் போது, பொறுமையாக பார்க்க முடிகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.

    மொத்தத்தில் `மாம்' பொறுமையானவள்.
    டிரான்ஸ்பார்மர்ஸ் பட வரிசையில் 5-வது பாகமாக வெளிவந்திருக்கும் ‘டிராஸ்பார்மர்ஸ் - தி லாஸ்ட் நைட்’ படத்தின் விமர்சனம்
    கடந்த பாகத்தில் பூமியில் ஆட்டோ போட்ஸ் டிரான்ஸ்பார்மர்களின் கூட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தி வந்த ஆப்டிமைஸ் பிரைம் தன்னுடைய உலகமான சைபர் டிரானுக்கு திரும்புவதோடு படம் முடிந்தது. இந்த பாகத்தில் தன்னுடைய உலகத்தை அடையும் ஆப்டிமைஸ் பிரைம் அது சின்னாபின்னமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறது.

    அப்போது சைபர் டிரானில் குயின்டெஷாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஆப்டிமைஸ் உள்ளிட்ட டிரான்ஸ்பார்களுக்கெல்லாம் தான்தான் படைப்பாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது குயின்டெஷா. சைபர் டிரானின் அழிவுக்கு அவள்தான் காரணம் என்று கோபப்பட்டு குயின்டெஷாவை தாக்குகிறது ஆப்டிமைஸ். ஆனால், ஆப்டிமைசை குயின்டெஷா தன் வசப்படுத்துவிடுகிறது.



    சைபர் டிரானின் அழிவுக்கு ஆப்டிமைஸ்தான் காரணம் என்று அதன்மீது குற்றமும் சுமத்துகிறது. குயின்டெஷா தன் வசம் இருந்த படைப்பின் சக்தியான கோலை 12 காவல் தளபதிகள் திருடி பூமியில் மறைத்துவிட்டதாகவும், அதை அவர்கள் ஒரு மனிதனிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறது. அந்த கோல் இருந்தால்தான் சைபர் டிரானுக்கு மீண்டும் உயிர் கொடுக்கமுடியும் என்றும், அதை தன்னிடம் வந்து ஒப்படைத்தால் உன்னுடைய தவறை திருத்திக் கொள்ளுமாறும் ஆப்டிமைஸிடம் கூறுகிறது.

    ஆப்டிமைசும் குயின்டெஷாவின் உத்தரவுக்கு செவி சாய்க்கிறது. இதற்குள், பூமியில் குயின்டெஷாவிடமிருந்து திருடிக் கொண்டுவரப்பட்ட கோலின் ஒரு பகுதி நாயகன் மார்க் வால்பர்க்குக்கு கிடைக்கிறது. அதன் சக்தி தெரியாமல் சாதாரணமான ஒரு பொருளாகவே அதை வைத்து இருக்கிறார்.



    அதே நேரத்தில் ஆட்டோ போட்ஸுக்கு எதிரான டிசப்டிகான்ஸ் டிரான்ஸ்பார்மர்ஸ்களின் தலைவனான மெகா ட்ரான், அந்த கோலை எப்படியாவது தங்கள் வசமாக்கி பூமியை அழிக்க திட்டம் தீட்டுகின்றனர். இறுதியில், அந்த கோல் யார் கைவசம் கிடைத்தது? ஆப்டிமைஸ் அந்த கோலை காப்பாற்றி தன்னுடைய உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    மைக்கேல் பே இயக்கியிருக்கும் இந்த பாகத்திலும் இயந்திர டைனோசர்கள் மற்றும் இயந்திர டிராகன்களுடனான சண்டை காட்சிகள் விறுவிறுப்புக்கும், பிரம்மாண்டத்திற்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்திருக்கிறது. இந்த காட்சிகளை 3டியில் பார்க்கும்போது ரொம்பவும் சிறப்பாக இருக்கிறது.



    குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் பம்பிள் பீ கதாநாயகனை காப்பாற்றும் காட்சி பிரமிக்க வைக்கிறது. ஆக்ஷன் மட்டுமில்லாமல் டிரான்ஸ்பார்மர் செய்யும் காமெடிகளும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. அதை தமிழாக்கம் செய்தவிதம் தமிழ்பட ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கிறது.

    இயந்திர மனிதர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் ரொம்பவும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள். கடந்த பாகத்தைப்போலவே இந்த பாகத்தின் நீளமும் ரசிகர்களுக்கு சற்று சலிப்பை கொடுத்திருக்கிறது. மற்றபடி, ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்த படம் நிறைவை தரும் என்பது உண்மை.

    மொத்தத்தில் ‘டிரான்ஸ்பார்மர்: தி லாஸ்ட் நைட்’ அதிரடி
    ×